குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, கார்த்திகை(நளி) 25 ம் திகதி புதன் கிழமை .

இந்து மதம் பெயர் வந்தது எப்படி? யாழ்ப்பான சமயப் பெரியார் இலக்கிய கலாநிதி பண்டிதர் மு. கந்தையாபிள்ளை!

07.11.2020...'இந்து என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்' என்றொரு காச்டாக் சமூகவலைத் தளங்களில் சுழன்றுக்கொண்டிருந்தது. அப்படி தங்களை பெருமையாக அழைத்துக்கொள்வோர் பலருக்கும் பிரிட்டிச் என்றால் மூக்கு வேர்க்கும் , கண்கள் சிவக்கும். 'மெக்காலே கொண்டு வந்த கல்வி' என்றால் மிசனரி, ஆபிரகாமிய சதி, கிருத்துவ கைக்கூலி என வார்த்தைகள் சரளமாக வந்து கொட்டும். ஆனால் ஆங்கிலேயன் வைத்த 'இந்து' எனும் சொல்லாடல் மட்டும் இனிக்கும், ஒலிக்கும், பெருமையாக இருக்கும். 

இப்பதிவில் இந்து மதம் எப்படி வந்தது? குறித்த கருத்தினை அக்காலத்திய சைவ - வைணவ சமயத்தவர்கள் எங்ஙனம் கூறுகிறார்கள் என பார்ப்போம்.

யாழ்ப்பான சமயப் பெரியார் இலக்கிய கலாநிதி பண்டிதர் மு. கந்தையா பிள்ளை அவர்கள் அவர்தம் ‘சனாதன சைவ சமயம்’ என்னும் நூலில் இவ்வாறு விளக்குகின்றார்:

“சைவ சமயமும் இந்து சமயமும் ஒன்றல்ல. சைவம் தான் தமிழரின் சமயம். அது அனாதியான இயல்புச் சமயம்.

அதற்கெதிர் சமீபகாலத்தவரால் புதுப்படையலாகப் புனையப் பெற்ற சாரமற்ற சப்பைக்கட்டுச் சமயம் 'இந்து சமயம்'. இது தாங்கும் ‘இந்து’ என்ற சொல்லே தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் அந்நியம். அச்சொல்லுக்குச் சமய சார்பான அர்த்தமோ அதைவிட அந்நியம். பாரசீகமொழி அகராதி அத்தாட்சி ஆக உள்ள உண்மை இது.”

ஆனால் சைவத்திற்கு அந்நியமாகிப் போன தமிழரே இன்று சைவ சமயத்தை இந்து மதமாக மயக்க அறிவில் காணுகின்றனர். இந்நிலை மாற வேண்டுமானால், ஆங்கிலேயரின் காலனித்துவ ஆட்சியில் ‘இந்து மதம்’ என்ற ஒரு பெயரை ஆங்கிலேயர் பயன்படுத்திய  காரணத்தையும் அச்சொல் குறிக்கும் பொருளையும் தமிழர் அறிய வேண்டும்.

இதனை 'இந்து மதம் எங்கே போகிறது’ என்ற நூலில் (பக். 331) ‘கிந்து மதம்’ என்ற பெயர் ஏற்பட காரணம் என்னவென்பதை வேத, வைணவ நெறியில் பழுத்தப் பழமாகிய அக்னிஹோத்ரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் கீழ்காணுமாறு விளக்கிச் சொல்கிறார்,

“சிந்து நதிக்கரைக்காரன் என்ற அடிப்படையிலேதான் நம்மை ZINDOO என எழுதினான் வெள்ளைக்காரன். இது உமக்கு எப்படித் தெரியும் என்று நீர் கேட்கலாம்.  நான் அந்த பிரிட்டிச் டாக்குமென்ட்டை பார்த்திருக்கிறேன், படித்திருக்கிறேன். கும்பகோணத்தில் காவிரிக்கரையோரத்தில் எல்லாம் விளையும். அங்கே காவிரியின் மடியில் அறிவு விளையும், ஞானம் விளையும் ஓர் இடம் இருந்தது. அதுதான் என் ஆசுதானத்தில் திவானாக இருந்தவர். அவர் பதவிக் காலத்தில் பிரிட்டிச் இராயாங்கத்தோடு தொடர்பு கொண்டிருந்தவர். அந்த இரகுநாதராவ் திவான் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் கும்பகோணத்தில் காவிரிக் கரையோரத்தில் ஒரு லைப்ரரியை ஆரம்பித்தார். அங்கே தான் பிரிட்டிசாரின் டாக்குமென்ட்களையும் பார்த்தேன். முதலில் நம்மைப்பற்றி ZINDOO என்று எழுதி வைத்திருந்தவன், காலப் போக்கில் இந்த உச்சரிப்பை மாற்றி Hindu என்று உச்சரித்தான்.  அவன் உச்சரித்ததையெல்லாம் படிப்படியாக அவனது டாக்குமென்ட்களில் பதிவும் செய்து வைத்தான்.  இப்போது ZINDOO என்பது Hindu ஆகிவிட்டது.

ஆக, இப்போது நாம் நம்மை அழைத்துக் கொள்ளும் நமது மதத்தின் பெயரான ‘கிந்து’ என்ற பெயர் நாம் சூட்டிக் கொண்டதல்ல. நமக்கு அந்நியன் சூட்டிய பெயர். அதைத்தான் நாம் இன்று சூட்டிக் கொண்டிருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால், இது Christian சூட்டிய பெயர்.  நம்மையெல்லாம் என்ன சொல்லி அழைப்பது என்று தெரியாமல் வெள்ளைக்கார Christian கண்டுபிடித்த, கண்டுகூட பிடிக்கவில்லை, தன் வாய்க்கு வசதியாக வந்ததை உச்சரித்ததைத் தான் நாம் இன்று நமக்கான அடையாளமாக சுமந்து கொண்டிருக்கிறோம்.”

இதனை தொடர்ந்து பேராசிரியர் கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் வரைந்த ‘தமிழர் சமயம்’ (1940-ம் ஆண்டு பதிப்பு) என்ற நூலில் ‘இந்து

மதம் ஒரு மதமன்று’ என்ற  கருத்தையும் காண்போம்:

“உலகத்தில் மதங்களுக்குப் பெயர் வழிபடும் தெய்வத்தை வைத்தாவது, சமயத் தலைவன் பெயரைத் தழுவியாவது, பிரமாண நூல்களைப் பொறுத்தாவது அமைவதேயன்றி மக்களினத்தின் பெயரால் அமைவதில்லை. வழிபடுங்கடவுளின் பெயர் சிவமாயின் அம்மதம் சைவமெனப்படும். தெய்வத்தின் பெயர் விச்ணுவாயின் அம்மதம் வைணவம் எனப்படும். கிறிசுது மதமும் முகம்மதிய மதமும் புத்தமதமும், சைனமதமும் சமயத்தலைவர்கள் பெயரால் ஏற்பட்டவை. செராசுடிரிய மதமும் கன்பூசிய மதமும் அத்தகையனவே, வைதிகம், சுமார்த்தம் என்னும் மதங்கள், வேதம் இசுமிருதி முதலிய பிரமாண நூல்களின் பெயர் பெற்றன. இந்து மதம் என்ற சொல் கடவுள், ஆசிரியன், பிரமாண நூல் என்பவற்றுள் எதன் பெயரையுஞ் சார்ந்ததாக தெரியவில்லை. சிந்து நதிக்கரையில் இருந்தவர்களை கிந்து என்று பாரசீகர் அழைத்தனர். அவர்களை இந்துக்கள் என்று கிரேக்கர்கள் கூறினர். இந்துக்கள் என்ற பெயரிலிருந்தே இந்தியா என்ற பெயர் ஏற்பட்டது.

இந்திய நாட்டில் உள்ள பூர்வீக மக்கள் ஐரோப்பா கண்டத்தாரால் இந்துக்கள் என்று அழைக்கப் பட்டனர். இந்துக்களுள் பல மதங்கள் இருப்பதை அறியாத மேலை நாட்டினர் இந்துக்கள் எல்லாருக்கும் ஒரு மதம் இருப்பதாக எண்ணி இந்துமதம் என்ற பெயரைத் தோற்றுவித்தனர். இந்து மதம் என்ற பெயர் தமிழிலாவது வடமொழியிலாவது உள்ள பண்டைய நூல்களில் கிடையாது. தற்காலத்தில் வடமொழி வேதத்தை பிரமாணமாக கொண்ட வைதீகர்கள் தங்கள் மதமே இந்து மதம் என்று பேசுபவராய் மதமே இந்திய நாட்டிலுள்ள எல்லா மக்களுக்கும் உரிய மதம் என்று நிலைநாட்ட முன்வந்துள்ளார்கள். ஆங்கில மதம் , சப்பானியமதம் அமெரிக்க மதம் என்று மதங்கள் இருக்குமாயின் இந்துமதம் என்ற ஒன்றும் உண்டெனலாம்.அவை இல்லாததால் இந்து மதம் என்ற ஒரு மதமும் கிடையாது. இந்திய மதங்கள் பல. அவற்றுள் சைவம் வைணவம் போன்றவை இரு மதங்கள் என்பதே பொருந்தும்.

வேதவாக்யங்களுக்கு சைவத்திற்கும் வைணவத்திற்கும் ஏற்றமுறையில் பொருள்கொள்ளுதல் என்பது பைபிளுக்கும் குரானுக்கும் சைவ வைணவ பொருள் கொள்ளுதல் போலாகும். வேதத்திலும் உபநிடதத்திலும் சிற்சில இடங்களில் சைவ வைணவ கருத்துக்கள் காணப்படுவதால் அவற்றை முழுமையாக பிரமாணமாக கொள்ளுதல் பொருத்தமின்றாம். சைவ சிறப்பு பிரமாண  நூல்களாகிய பன்னிரு திருமுறைகள், சிவாகமங்கள், சாத்திர நூல்கள் போன்றவற்றிற்கு மாறுபாடில்லாத வடநூற் பகுதிகளே தழுவத்தக்கன என்று சில ஆண்டுகளுக்கு முன் கூடிய சைவமாநாடு தீர்மானித்ததை காண்க." இவ்வாறு அவர் கூறுகிறார்.

இதுவரையில் ‘இந்து மதம்’ என்ற சொற்றொடர் தோன்றிய வரலாற்றை விளக்கியதில் அப்பெயரில் தனி ஒரு மதம் ஏதும் இல்லை என்பதை அறியலாம். இன்றோ ஆங்கிலேயர் பொருள்படுத்திக் கொண்டபடி ‘இந்து மதம்’ என்று சொல்லப் படுவது சுமார்த்த மதத்தையும் அதனைச் சார்ந்த வர்ணாசிரம நெறிகளையும் முந்நிலைப் படுத்திக் குறிக்கவே பயன்படுத்தப் படுகின்றது என்பதை தமிழர் புரிந்து கொள்ள வேண்டும்.