குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

தமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்புத் தேவை. அரசியல் கட்டுரைகள் நிலாந்தன்.

17.10.2020.....கயேந்திரகுமார் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது இந்திய இலங்கை உடன்படிக்கை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் 13ஆவது திருத்தத்தை ஒரு தொடக்கமாக கருதவில்லை என்று கூறியிருக்கிறார்.இந்தியா தொடர்பான அக்கட்சியின் வெளியுறவுக் கொள்கையாக இதை எடுத்துக் கொள்ளலாமா ? அதாவது இந்திய இலங்கை உடன்படிக்கை எனப்படுவது இந்தியா அதன் பிராந்திய நலன் நோக்கு நிலையிலிருந்து இலங்கையோடு செய்துகொண்ட ஓர் உடன்படிக்கை. எனவே இப்பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக தாங்கள் இயங்கப்  போவதில்லை என்பதனை கயேந்திரகுமார்  நாடாளுமன்றத்தில் வைத்து தெளிவாக கூறியிருக்கிறார்.

விக்னேசுவரனின் நிலைப்பாடும் அப்படித்தான் என்று தெரிகிறது. ஆனால் அவர் பதின்மூன்றாவது திருத்தத்தை ஒரு தொடக்கமாக ஏற்றுக் கொள்வார் போலத் தெரிகிறது. அன்மையில் பாரதிய சனதாக் கட்சியின் தமிழ் நாட்டுக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஒரு மெய்நிகர் கருத்தரங்கில் விக்னேசுவரன் அதை குறிப்பிட்டிருக்கிறார்.  இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு எதிராக ஈழத்தமிழர்கள் சிந்திக்க மாட்டார்கள் என்ற தொனிப்பட அவர்  உரையாடி இருக்கிறார்.

இது விடயத்தில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன ? அக்கட்சி ஏறக்குறைய இந்தியாவின் பாதுகாப்பு நலன்களை மீறிச் சிந்திப்பதாக தெரியவில்லை. இந்தியா எம் பின்னால் நிற்கிறது என்று சம்பந்தர் கூறுவதன் அர்த்தம் அதுதான். இனப்பிரச்சினைக்கான தீர்வில் இந்தியா ஈழத்தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

மேற்கண்ட மூன்று நிலைப்பாடுகளையும் தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெரிகிறது. இந்தியாவின் பிராந்திய நலன்களை மீறி ஈழத்தமிழர்கள் செயற்பட மாட்டார்கள் என்பதனை மேற்கண்ட மூன்று தரப்புக்களும் உறுதிப்படுத்துகின்றன. ஆனால், ஒரு உச்சபட்ச தன்னாட்சியை ஈழத் தமிழர்கள் பெற்றுக்கொள்வதற்கு  இந்தியா இலங்கை அரசாங்கத்தின் மீது நிர்ப்பந்தங்களைப்  பிரயோகிக்க வேண்டும் என்று மேற்கண்ட மூன்று கட்சிகளும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கூறி வருகின்றன.

இது விடயத்தில் கயேந்திரகுமாருக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையில் ஒப்பீட்டளவில் ஒற்றுமைகள் அதிகம். கூட்டமைப்பு தமிழ் மக்களை ஒரு தேசமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதனை அதிகம் அழுத்தி கூறுவதில்லை. அதோடு  கடந்த ஐந்து ஆண்டுகளில் இரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து அவர்கள் உருவாக்க முற்பட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒரு முழுமையான சமசுடியை நோக்கியது அல்ல என்ற விமர்சனம் உண்டு. அவர்கள் சிங்கள மக்களுக்கு ஒன்றையும் தமிழ் மக்களுக்கு வேறு ஒன்றையும் கூறினார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு.

எனினும் இனப்பிரச்சினைக்கான தீர்வில் இந்தியாவின் வகிபாகம் தொடர்பில் மேற்கண்ட மூன்று தரப்புக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடுகள் இருப்பதாக தெரியவில்லை. அப்படி என்றால் மேற்கண்ட மூன்று தரப்புக்களும் தமிழ் மக்களுக்கான ஒரு பொதுவான வெளியுறவுக்கொள்கை தொடர்பில்  ஒன்றுபட்டு வேலை செய்தால் என்ன?

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின் விக்னேசுவரனை சந்தித்த சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் அவர் ஒரு கருத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். நடைமுறைகளை அடிப்படையாக கொண்டு நாங்கள் ஒன்றாக செயற்படலாம் என்பதே அது. திலீபனை நினைவுகூரும் நிலையில் அவ்வாறு ஒருநடைமுறை மையக் கூட்டு உருவாக்கப்பட்டது. இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும்  அக்கூட்டு உடையவில்லை. வெளி விவகாரம் போன்ற விடயங்களிலும் கட்சிகள் அது போன்ற ஆனால் உறுதியாக வடிவமைக்கப்பட்ட நிறுவனமயப்பட்ட ஒரு செயற்பாட்டுக்குப் போனால் என்ன?

கடந்தமாதம் ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் தலைவர் சுரேசுபிரேமச்சந்திரனும் இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.தமிழ்த் தரப்பு ஒரே குரலில் வெளித் தரப்புகளோடு பேச வேண்டும் என்று. அதற்கு வெளிவிவகாரக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்று.

ஆம் அவ்வாறு  சிந்தித்து செயற்பட வேண்டிய வேளை வந்துவிட்டது என்பதை அண்மைக்காலமாக இலங்கையில்  நடைபெற்று வரும் சம்பவங்கள் நிரூபித்திருக்கின்றன. கடந்த சில மாதங்களாக குறிப்பாக இராயபக்சக்கள் நாடாளுமன்றத்தைக்  கைப்பற்றியபின் இந்தியாவும் சீனாவும் அவர்களைத்  தமது செல்வாக்கு வளையத்துக்குள் கொண்டு வருவதற்காக அதிகப் பிரயத்தனம் எடுத்து வருகின்றன. இராயபக்சக்கள் சீனாவின் நண்பர்கள் என்பது வெளிப்படையான உண்மை. எனினும் அவர்கள் இந்தியாவை செங்குத்தாகப்  பகைக்க மாட்டார்கள்  என்று நம்பலாம்.

ஏனெனில் கடந்த 2015ஆம் ஆண்டு மஹிந்தவின் ஆட்சியை கவிழ்த்தது இந்தியாவும் தான் என்று இராயபக்சக்கள் வெளிப்படையாக குற்றஞ்சாட்டி இருக்கிறார்கள். எனவே அப்படி ஒரு நிலைமை இந்த முறையும் வரக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை அவர்களுடைய அணுகுமுறைகளில் இருக்கிறது. தவிர அதில் முன்னெச்சரிக்கை என்பதோடு வேறு ஒரு தந்திரமும் இருக்கிறது. என்னவெனில் இந்தியாவை நோக்கி சென்றால் இனப்பிரச்சினைக்கான தீர்வு பொறுத்து  தமிழ் மக்களுக்கு அதிகம் விட்டுக் கொடுக்க தேவையில்லை என்றும் அவர்கள் நம்புகிறார்கள். ஏனெனில் இந்தியா இன்று வரையிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வாக பதின்மூன்றாவது திருத்தத்தை தான் முன்வைத்து வருகிறது. ஆனால் கயேந்திரகுமாரும்  விக்னேஸ்வரனும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. கூட்டமைப்பும் இதுவிடயத்தில்  13 ஐக்  கடந்து போக வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறது. எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வை   இந்தியாவின் ஒத்துழைப்போடு 13ஆவது திருத்தத்திற்குள் பெட்டி கட்ட  வேண்டும் என்று இராயபக்சக்கள் சிந்திக்க முடியும்.

இதனால் ஈழத்தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை தொடர்ந்தும் முரண் நிலையிலேயே வைத்திருக்க அவர்களால் முடியும். இப்படிப் பார்த்தால் இந்தியாவை    பகைக்காத ஒரு வெளியுறவுக்கொள்கையை கடைப்பிடிப்பதன் மூலம் ராஜபக்ஷக்களுக்கு ஒரு கல்லில் மூன்று  மாங்காய்களை விழுத்தலாம். முதலாவது மாங்காய் தமது வம்ச ஆட்சியை பாதுகாத்துக் கொள்ளலாம். இரண்டாவது மாங்காய் தமிழ் மக்களை ஒப்பீட்டளவில் குறைந்தளவு தீர்வுக்குள் பெட்டி கட்டி விடலாம்.மூன்றாவது மாங்காய்  தமிழ் மக்களையும் இந்தியாவையும் தொடர்ந்தும் பகை நிலையில் வைத்திருக்கலாம். எனவே ராஜபக்சக்கள் இந்தியாவை பகைக்காத ஒரு வெளியுறவுக் கொள்கையைத்தான் பெரும்பாலும் கடைப்பிடிக்க  பார்ப்பார்கள்.

எனினும் கடந்த சில தினங்களாக  நடப்பவற்றை தொகுத்துப் பார்த்தால் அவர்களால் இந்தியாவை முழுமையாக திருப்திப்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் மே18 ஐ உடனடுத்து மே 23 ஆம் திகதி கோட்டாபய இராயபசவும் பிரதமர் மோடியும் தொலைபேசி மூலம் நடத்திய உரையாடலில் இலங்கைத் தீவின் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு  முனையத்தை  நிர்மாணிக்கும் வேலையை இந்தியாவிடம் தரப்போவதாக இலங்கை கோடி காட்டியது. ஆனால் பின்னர் அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. கோட்டாபய இராயபக்சவின் இந்திய பயணத்தின்  போதும் அண்மையில் மகிந்த இராயபக்சவும் மோடியும் கலந்து கொண்ட மெய்நிகர்   உச்சி மகாநாட்டின் போதும் இந்தியா இலங்கை தீவுக்கு நிதி உதவிகளை வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது. அதாவது சீனாவை போலவே இந்தியாவும் இலங்கைத் தீவை நிதி உதவிகளின் மூலம் தனது செல்வாக்கு வளையத்துக்குள் கொண்டு வர முயற்சிக்கிறதா?

இந்தோ பசுபிக் மூலோபாயமும் பட்டியும் பாதையும் மூலோபாயமும்

ஆனால் அந்த மெய்நிகர் உச்சி மாநாடு முடிந்து சில கிழமைகளுக்குள்ளேயே சீனாவின் உயர்மட்டத் தூதுக்குழு ஒன்று இலங்கைக்கு வந்தது. அவர்களும் புதிய நிதி உதவித் திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள் அதன்படி இலங்கைதீவை சர்வதேசக் கடன் பொறுப்புகளில் இருந்து விடுவிப்பதற்கான நீண்ட காலத் தவணை அடிப்படையிலான கடனுதவிகளை வழங்கப் போவதாக சீனா அறிவித்துள்ளது.அது மட்டுமல்ல யெனிவாவில் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைத் தீவை பாதுகாக்கப் போவதாகவும் சீனா அறிவித்திருக்கிறது.

இவ்வாறான ஒரு பின்னணியில் சீனத் தூதுக்குழுவின் பயணம் நிகழ்ந்த அதே காலப்பகுதியில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு துறை அதிகாரிகள் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு பயணம் செய்திருக்கிறார்கள். அதோடு  அமெரிக்க வெளியுறவுச் செயலர் விரைவில் இலங்கைக்கு வர இருக்கிறார். இங்கே அவர் அமெரிக்க மிலேனியம் சவால் நிதி உதவி திட்டம் குறித்து உரையாடுவார் என்று கூறப்படுகிறது.

மேற்கண்ட அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரியவரும். உலகின் மூன்று பேரரசுகளும் இலங்கைதீவை ஏதோ ஒரு விதத்தில் தமது   வியூகங்களுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றன. இந்தப் வியூகங்களின் ஒரு பகுதியாகவே அண்மையில் இலங்கைக்கான  அமெரிக்க தூதுவரும் சீனத் தூதுவரும் ஒருவர் மற்றவருக்கு எதிராக அறிக்கை விடும் நிலைமை தோன்றியது. இவ்வாறானதொரு பின்னணியில்தான் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தீவை தாங்கள் பாதுகாப்போம் என்று சீனா கூறியிருக்கிறது.அதாவது நீதிக்கான தமிழ் மக்களின் போராட்ட அரங்கொன்றில் சீனா நேரடியாக தலையிடப் போகிறது?

எனவே சிறிய இலங்கைத் தீவு எதிர்காலத்தில் பேரரசுகளின் குத்துச்சண்டை  களமாக  மாறக்கூடிய ஏது நிலைகள் அதிகரித்து வருகின்றன. இது ஒருவிதத்தில் தமிழ்மக்களுக்கு சாதகமானது. அப்படி என்றால் கொழும்பை கையாள்வது தான் பேரரசுகளின் முதலாவது தெரிவாக இருக்கும். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் கையாள முடியாத போது அவர்கள் தமிழ் மக்களை நோக்கி திரும்புவார்கள்.இராயிய சூழலில் பேரரசுகளை வெற்றிகரமாக கையாள்வதற்கு ஒரு தீர்க்கதரிசனம் மிக்க வெளியுறவுக் கொள்கை அவசியம். ஒரு வெளியுறவுக் கட்டமைப்பும் அவசியம். அந்த வெளியுறவுக்  கட்டமைப்பே வல்லரசுகளை அணுக வேண்டும். கையாள வேண்டும்.

மாறாக தமிழ் தேசிய கட்சிகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக வெளியரசுகளை அணுகக்கூடாது கடந்த 11 ஆண்டுகளாக யெனிவாவை கையாளும் விடயத்தில் தமிழ்த் தரப்புக்கள்  எப்படி ஒற்றுமையின்றி தனி ஓட்டம் ஓடி நிலைமைகளை வெற்றி கொள்ள முடியவில்லையோ அதுபோல இனிமேலும் சொதப்பலான சிதம்பலான ஒரு வெளியுறவுப் பொறிமுறை இருக்கக் கூடாது.எனவே இந்த நிலையியலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் பின்வரும் நடைமுறைகளை குறித்து சிந்திக்க வேண்டும்.

முதலாவது வெளியுறவுக் கொள்கை மையகூட்டு ஒன்றுக்குப் போக வேண்டும்.

இரண்டாவது பொருத்தமான வெளியுறவுக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு ஒரு சிந்தனைக் குழாமை உருவாக்கி அந்த வெளியுறவுக் கொள்கையை வடிவமைக்க வேண்டும்.

மூன்றாவது ஒரு வெளியுறவு  குழுவை உருவாக்க வேண்டும் அக்குழுவில் மக்கள் பிரதிநிதிகளும் தாயகத்திலும் தமிழகத்திலும் புலம்பெயர்ந்த தமிழ்  சமூகத்திலும் இருக்கக்கூடிய சிவில் சமூக பிரதிநிதிகளும்  புத்தியீவிகளும் இணைக்கப்பட வேண்டும்

இவ்வாறு ஒரு பொருத்தமான வெளியுறவு தரிசனத்தோடு உரிய பொறிமுறையும் இருந்தால்தான் இப்பொழுது பேரரசுகளின் விளையாட்டு மைதானமாக மாறியிருக்கும் இலங்கைத்தீவில் தமிழ் மக்களும் புகுந்து விளையாடலாம். தங்களுக்குரிய பொருத்தமான கௌரவமான நீதியான ஒரு தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம்