குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

மருத்துவ ஏடுகளைத் தமிழில் மொழிபெயர்த்த அமெரிக்கர்! மறுபக்கமாக தமிழர்களின் பாரம்பரிய மருத்துவம் தமிழ்

மக்களிடம்  அருகிப்போக  இதுவும் ஒரு காரணமாகியிருக்கலாம்! தமிழர் மாற்றான் மனைவியைக் கண்ட தும் தன்மனைவியைகைவிட்டமாதிரியா? 17.09.2020....அமெரிக்காவில் மாசெசூசெட்ஸ் எனும் மாநிலத்தில் பிறந்த டாக்டர் சாமுவேல் ஃபிஸ்க் கிரீன் (Dr. Samvel Fisk Green)), இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்திற்கு வந்து, தமிழராகவே மாறிப்போன ஓர் அமெரிக்கர்.

வில்லியம் இ கிரீன் எனும் தந்தைக்கும் ஜுலியா பிலிம்டன் எனும் தாய்க்கும் எட்டாவது பிள்ளையாக 10.10.1822-இல் பிறந்தவர். தொடக்கக் கல்வியைக் கற்கின்ற வரையில் திருச்சபைப் பணியில் ஊழியக்காரனாக வேண்டும் என்று விரும்பினார். ஆனால், நியூயார்க் மருத்துவக் கல்லூரி, ஒற்றைவழிப் பாதையாக இருந்த கிரீனின் வாழ்க்கையை, இரட்டைவழிப் பாதையாக மாற்றியது.

அமெரிக்க - இலங்கை திருச்சபை, 1847-ஆம் ஆண்டு திருச்சபைப் பணியை முதலாவதாகவும், மருத்துவப் பணியை இரண்டாவதாகவும் ஆக்கி, சாமுவேல் கிரீனைப் பட்டி கோட்டாவிற்கு அனுப்பியது. பட்டிகோட்டாவில் கிரீன் மருத்துவப் பணியை சமயப் பணியோடும் சேர்த்து நிகழ்த்தியதால், உள்ளூர் மக்கள் அவரிடம் வருவதைத் தவிர்த்தனர். எனவே, கிரீன் யாழ்ப்பாணத்திலுள்ள "மானிப்பாய்க்கு' வந்து, 1848-ஆம் ஆண்டு ஒரு பள்ளிக் கூடத்தையும் ஒரு மருத்துவமனையையும் நிறுவினார்.

சாமுவேல் கிரீன் உள்ளூர் மருத்துவர்களுக்கு தமிழிலேயே மருத்துவக் கல்வியைக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்தார். ஆங்கிலத்திலிருந்து நான்காயிரம் (4000) மருத்துவ ஏடுகளைத் தமிழில் மொழிபெயர்த்தார். இலங்கை, இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் காலனி நாடாக இருந்ததால், தொடக்கத்தில் அளித்துவந்த நிதியாதாரங்களுக்குத் தடை விதித்தது. அதனால், சிறிதும் தளர்வடையாத மருத்துவர் கிரீன், ஏறத்தாழ 60 மருத்துவர்களுக்குத் தமிழிலேயே பயிற்சி கொடுத்தார். ஆய்வுக் கட்டுரைகளைத் தாம் தமிழில் எழுதியதோடு, தமக்குக் கீழ் படிக்கும் மாணவர்களையும் தமிழிலேயே எழுதும்படிச் செய்தார். கிரீனுடைய அரும்பெரும் சேவைகளைக் கண்டு வியந்த ஆங்கிலேயே அரசு, தடை செய்திருந்த நிதியாதாரங்களை வழங்க வந்ததோடு அதனை இரட்டிப்பாகவும் ஆக்கியது. மேலும், யாழ்ப்பாணத்து மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகளைச் செய்து கொடுப்பதற்கும், துப்புரவுப்பணிக்கான ஏடுகளைத் தமிழாக்கம் செய்து தருவதற்கும் ஆங்கிலேய அரசு மருத்துவர் கீரீனை வேண்டிக் கொண்டது.

பாமர மக்களுக்கும் புரியும் வகையில் மருத்துவச் சொற்களை கிரீன் தமிழாக்கம் செய்து கொடுத்தார். அக்காலத்தில், யாழ்ப்பாணத்தில் காலரா நோய் பெருகியிருந்தது. கிரீன் காலரா நோய் வருவதைத் தடுப்பதற்குரிய வழிமுறைகளை எல்லாம் மக்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொன்னார். தம்மிடம் படித்த 60 மருத்துவ மாணவர்களையும் வெளிநாடுகளுக்குச் செல்லாமல், தாய் மண்ணிலேயே சேவை செய்யும்படி வற்புறுத்தினார்.

ஆகா, இவரும் தமிழர்தன்னே!

கிரீன் மொழிபெயர்த்த மருத்துவ நூல்கள்:

1. கட்டர் எழுதிய அனாட்டமி, பிசியாலஜி ஆரோக்கியம் (1857), 2. மான் செல்ஸ் எழுதிய ஆப்ஸ்ரிடிரிக்ஸ்-1857, 3. டுரைட்சின் "ச்ரஜரி;-1867, 4. கிரே எழுதிய அனாட்டமி-1872, 5. டால்டன்சின் "பிசியாலஜி'-1983 என்பன போன்ற எட்டு மருத்துவ நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கொண்டுவந்தார்.

தமிழின்பாலுள்ள பற்றினால் தம்முடைய பெயரையே "பச்சையப்பன்' என மாற்றிக் கொண்டார். மேலும் அவருடைய கல்லறையில், "தமிழ் மக்களின் மருத்துவப் பிரச்சாரகர்' (Medical Evangelist to the Tamils) எனப் பொறிக்கும்படி வேண்டிக்கொண்டாராம்.

1883-இல் அவரையும் காலரா நோய் பற்றியதால், இலங்கையை விட்டு அமெரிக்காவிற்குப் புறப்பட்டார். அப்படிப் புறப்படுவதற்கு முன்பு, மானிப்பாயிலுள்ள தம் சொத்துக்கள் அனைத்தும் மானிப்பாய் மருத்துவக் கல்லூரிக்கே சேர வேண்டும் என்று உயில் எழுதி வைத்துவிட்டுப் புறப்பட்ட கிரீன் (பச்சையப்பன்) 6.1.1884-இல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

அவர் நிறுவிய மருத்துவக் கல்லூரியின் 150ஆவது ஆண்டு விழாவை 1998-ஆம் ஆண்டு கொண்டாடிய யாழ்ப்பாணத்து மக்கள், மானிப்பாய் கல்லூரிக்கு "டாக்டர் சாமுவேல் கிரீன் மருத்துவக் கல்லூரி' என்றே பெயரிட்டுள்ளனர்.

மருத்துவக் கல்வியை மொழிபெயர்ப்பு செய்வதென்பது கடினமான செயலாகும். அதுவும் தமிழ் தெரியாத ஓர் அயல்நாட்டுக்காரர் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. அத்தகைய கடினமான பணியைச் செய்து வெற்றி கண்டவர் கிரீன். தமிழ்கூறும் நல்லுலகும் மருத்துவத் துறையும் அவரை, அவரது நினைவு நாளில் (6.1.15) நினைவுகூரக் கடமைப்பட்டிருக்கின்றன.

By பேராசிரியர் தி.இராசகோபாலன்

(பதிவிட்டவர் :

Nakkeeran Balasubramanyam)

மீள் பதிவு