குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

மேலும் ஐந்தாண்டுகளுக்குத் தோற்பதா இல்லையா? அரசியல் கட்டுரைகள் - நிலாந்தன்

19.07.2020.....“உங்கள் சப்பாத்துப் பிய்ந்துபோனால், அதனைத் தைப்பதற்கு நீங்கள் திறமை மிக்க ஒரு சப்பாத்துத் தைப்பவனையே தேடுகின்றீர்கள். உங்களுக்குச் சுகவீனம் ஏற்பட்டால் சிகிச்சைக்காக நகரிலே மிகச் சிறந்த மருத்துவரையே நாடுகிறீர்கள். ஆனால், எல்லாக் கலைகளிலும் மேலான அரசாட்சிக் கலையைப் பொருத்தவரையில், அதற்குச் சற்றும் தகுதியோ திறமையோ அற்ற மோசடிக் கூட்டமொன்றையே நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள். “ -பிளேட்டோ

வடக்கில் வசிக்கும் ஒரு தமிழ் மனநல மருத்துவர் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன் என்னிடம் கேட்டார் எங்களுடைய அரசியல் தமிழ்நாட்டு அரசியலை போல மாறிவிட்டதா ? என்று அவர் ஏன் அப்படி கேட்டார்? ஈழத்தமிழர்களின் அரசியல் சீரியசானது ; போராட்ட பாரம்பரியத்துக்கு உரியது ஆனால் தமிழகத்தில் இருப்பது ஒரு தேர்தல் மைய அரசியல் என்ற அர்த்தத்திலா?

ஆனால் திராவிட பாரம்பரியத்தில் வந்த தமிழ்நாட்டின் அரசியல் இந்தியாவின் ஏனைய மாநிலங்களோடு ஒப்பிடுகையில் சில விடயங்களில் முன்னோக்கிச் சிந்திப்பதாக அமைந்திருப்பதை விமர்சகர்கள் சுட்டிக் காட்டுவது உண்டு. குறிப்பாக மத அடிப்படைவாதத்திற்கு எதிராக மக்கள் ஆணை வழங்கிய ஒரு மாநிலம் அது. எனினும் அங்கு இருக்கக்கூடிய சாதிக்கொரு கட்சி; ;சமயத்துக்கு ஒரு கட்சி ; காசு குடுத்து வாக்கை வாங்குவது ; குடிக்கக் கொடுத்து வாக்கை வாங்குவது ; வேட்பாளர்களை மிரட்டி போட்டியிலிருந்து விலகச் செய்வது ; ஊழல் ; மோசடி போன்ற இன்னோரன்ன அம்சங்களை கவனத்தில் கொண்டே மேற்படி மனநல மருத்துவர் அவ்வாறு கூறி இருந்திருக்கக்கூடும். ஆனால் இம்முறை நாடாளுமன்றத் தேர்தல் களத்தை பார்க்கும் பொழுது நமது நிலைமை அப்படி ஒன்றும் சீரியசாக இல்லை என்றே கூற வேண்டியிருக்கிறது.

ஈழத்தமிழ் அரசியல் ஒப்பீட்டளவில் அதிகம்  அக்கறையாக (சீரியசுசாக) இருந்ததற்கு காரணம் என்ன?

விடை மிகவும் எளிமையானது. எல்லாருக்கும் தெரிந்தது. ஆயுதப் போராட்டம் தான் அதற்கு காரணம். கிட்டத்தட்ட 38 ஆண்டுகள் ஆயுதப் போராட்டமே தமிழ் அரசியலின் பிரதான நீரோட்டமாக இருந்தது. ஆயுதப் போராட்டம் என்று சொன்னால் அது உயிர்கள் சம்பந்தப்பட்டது. உயிர்களைக் கொடுப்பது ; உயிர்களை எடுப்பது. எனவே அது ஆகக் கூடிய பட்சம் சீரியஸ் ஆனதாக இருந்தது. ஆனால் கடந்த 11 ஆண்டுகளாக ஈழத்தமிழ் அரசியலானது அந்தத் தடத்தில் இருந்து விலகத் தொடங்கி விட்டது.

2009 இற்கு முன்பு அரசியலில் அர்ப்பணிப்பு தியாகம் வீரம் என்பனவே முதன்மைத் தகுதிகளாக இருந்தன. ஆனால் இப்பொழுது களவு ; சூது ; கயமை ; பொய் ; நடிப்பு ; பிழைப்பு; முகமூடி ; வேஷம் போன்ற சகல துர்குணங்களும் அரசியலுக்கு வரத் தேவையான தகுதிகளாகி விடடனவா?

ஆனால் எந்த மிதவாதத்தை பின்தள்ளிவிட்டு ஆயுதப்போராட்டம் அரங்கில் முன்னிலைக்கு வந்ததோ அதே மிதவாதம் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் மறுபடியும் முன் நிலைக்கு வந்திருக்கிறது. உலகம் முழுவதையும் திரும்பிப் பார்க்க வைத்த ஓர் ஆயுதப் போராட்டத்தை நடத்திய மக்கள் அதன் தாக்கத்திலிருந்து முழுமையாக விடுபடாத ஒரு கூட்டு உளவியலோடு காணப்படுகிறார்கள். அதனால் மிதவாத அரசியலையும் ஆயுதப் போராட்டத்தின் அளவுகோல்களால் நிறுக்கிறார்களா ?

இது தவறு. ஆயுதப் போராட்ட ஒழுக்கமும் மிதவாத அரசியல் ஒழுக்கமும் ஒன்றல்ல. இரண்டும் இரு வேறு ஒழுக்கங்கள்.

போராட்டத்தின் தொடர்ச்சியாக மிதவாத அரசியலை எந்தளவு தூரத்திற்கு முன்னெடுக்கலாம்? ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க உதாரணங்கள் பல உண்டு. ஆயுதப் போராட்டத்தை தேர்தல் மைய அரசியலுக்கு மொழிபெயர்ப்பதில் எல்லாச் சமூகங்களும் வெற்றி பெற்றுள்ளன என்று கூறமுடியாது. லத்தீன் அமெரிக்காவின் இடதுசாரி பண்புடைய ஆயுதப் போராட்டங்கள் சில தோற்கடிக்கப்பட்ட பின் அவற்றின் தொடர்ச்சியாக வெளிவந்த மிதவாத அரசியலானது லத்தீன் அமெரிக்காவின் ஒரு புதிய மிதவாதப் போக்கைக் தோற்றுவித்தது. இலங்கைத் தீவிலும் ஜேவிபியின் ஆயுதக் கிளர்ச்சி நசுக்கப்பட்ட பின் அதன் தொடர்ச்சியாக மேலெழுந்த மிதவாத ஜேவிபியானது இரண்டு பெரிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக ஒரு மூன்றாவது தரப்பாக மேலெழுந்தது. குறிப்பாக அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையின் கீழ் அது கிட்டத்தட்ட 6 லட்சம் வாக்குகளை திரட்டும் அளவுக்கு வளர்ச்சி பெற்றது.

தமிழ் அரசியல் பரப்பில் புலிகளல்லாத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த சுமார் இரு தசாப்த காலத்தில் மிதவாத அரசியலில் ஓரளவுக்கு தம்மை நிலை நிறுத்தியிருக்கிறார்கள் ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தொடர்ச்சியாக எந்த ஒரு தரப்பும் இன்று வரையிலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தேர்தல் வெற்றிகளைப் பெற்றிருக்கவில்லை. குறிப்பாக 2010 ஆம் ஆண்டு கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய கஜேந்திரகுமார் கஜேந்திரன் பத்மினி சிதம்பரநாதன் அணியானது இன்று வரையிலும் திருப்பகரமான தேர்தல் வெற்றிகளை பெற்றிருக்கவில்லை. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது ஒரு சிறு அலையை அவர்கள் தோற்றுவித்தார்கள். ஆனால் அச்சிறு அலையை ஒரு பேரலையாக மாற்ற அவர்களால் முடியுமா முடியாதா என்பதனை இம்முறை தேர்தல் நிரூபித்துக் காட்டும்.

கயேந்திரகுமாரின் அணிக்கு வெளியே புனர்வாழ்வு பெற்ற புலிகள் இயக்கத்தவர்கள் புதிய கட்சிகளை உருவாக்கியிருக்கிறார்கள். இப்பொழுது காலைக்கதிர் ஆசிரியராக இருக்கும் வித்தியாதரன் தலைமையில் ஒரு கட்சி உருவாக்கப்பட்டது. ஆனால் அது திருப்பகரமான வெற்றிகளை பெறத் தவறிவிட்டது. இந்தப் போக்கின் ஆகப் பிந்திய வடிவமாக விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை என்று ஒரு சுயேட்சை குழு இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறது.

இவ்வாறு புலிகள் இயக்கத்தின் வாரிசுகளாக அல்லது கொள்கை தொடர்ச்சிகளாக மேலெழுந்த கட்சிகளோ அல்லது சுயேட்சைக் குழுக்களோ தமிழ் வாக்காளர்கள் மத்தியில் எவ்வளவு தூரம் ஆகப்பிந்திய தாக்கத்தைச் செலுத்த முடியும் என்பதனை இம்முறை தேர்தல் களம் நிரூபித்துக் காட்டும்.

குறிப்பாக விக்னேஸ்வரனின் கட்சிகளின் கூட்டில் புலிகள் இயக்கத்தின் முன்னாள் திருகோணமலை அரசியல் பொறுப்பாளர் அந்த மாவட்டத்திலேயே தேர்தல் கேட்கிறார். இப்பொழுது கூட்டமைப்பின் தலைவராக காணப்படும் சம்பந்தரை 2001 இல் தேர்தலில் வெற்றி பெற வைத்தவர் என்று அவர் கருதப்படுகிகிறது. 2001இல் சம்பந்தரை வெற்றி பெற வைத்த ஒரு முன்னாள் புலிகள் இயக்க பிரமுகர் இம்முறை அதே மாவட்டத்தில் சம்பந்தரோடு போட்டியிடுகிறார்

இவ்வாறு ஆயுதப் போராட்டத்தின் வாரிசுகளாக அல்லது நேரடியான தொடர்ச்சியாக அல்லது கொள்கைத் தொடர்ச்சிகளாகத் தம்மைக் கருதும் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் கடந்த 11 ஆண்டு கால அனுபவத்தில் இருந்து கற்றுக்கொண்டவற்றின் அடிப்படையில் தமது தேர்தல் வியூகங்களை வகுத்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ஏனெனில் கடந்த 11 ஆண்டுகளாக கூட்டமைப்பு தன்னை புலிகளின் வாரிசு போல காட்டிக் கொண்டது. இப்பொழுது அதன் பிரதானிகள் அவ்வாறு இல்லை என்று கூறக்கூடும். ஆனால் கூட்டமைப்பைப் பற்றிய சாதாரண ஜனங்களின் கருத்து அப்படித்தான் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. அதை உருவாக்கியது புலிகள் இயக்கமே என்ற ஓர் அபிப்பிராயம் நன்கு ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. அது சரியா பிழையா என்ற விவாதத்தில் இறங்குவது இக்கட்டுரையின் நோக்கமன்று. அது தனியாக ஆராயப்பட வேண்டும். ஆனால் பொது அபிப்பிராயம் அப்படித்தான் இருக்கிறது.

அப்படி என்றால் அந்த இயக்கத்தால் உருவாக்கப்பட்டது என்று நம்பப்படும் ஒரு மிதவாத கட்சிக்கு வாக்குகளை அள்ளிக் கொடுத்த மக்கள் அந்த இயக்கத்தின் கொள்கைத் தொடர்ச்சியாக தன்னைக் கருதும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஏன் வாக்குகளை அள்ளிக் கொடுக்க வில்லை? அல்லது அந்த இயக்கத்தின் போராளிகளாக இருந்து புனர்வாழ்வு பெற்ற பின் அரசியலுக்கு வந்த கட்சிக்கு ஏன் வாக்குகளை அள்ளிக் கொடுக்கவில்லை?

போராளிகளின் வேலை போராடுவது. அவர்களுக்கு போராடத் தெரியும். ஆனால் மிதவாத அரசியலை நடத்தத் தெரியாது. மிதவாதிகளின் வேலை அரசியல் பேசுவது. போராளிகளால் வெற்றிகரமாக அரசியல் செய்ய முடியாது என்று தமிழ் வாக்காளர்கள் நம்புகிறார்களா?

அல்லது கூட்டமைப்பின் ஒரு பகுதியினரும் பொதுமக்களில் ஒரு பகுதியினரும் குற்றம்சாட்டுவதைப் போல முன்னாள் புலிகள் இயக்கத்தவர்கள் புனர்வாழ்வு பெற்ற பின் இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வு கட்டமைப்பினால் இயக்கப்படுகிறார்கள் எனவே அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை சிதைப்பதற்காக களமிறக்க்கப்படுகிறார்கள் என்று தமிழ் வாக்காளர்கள் நம்புகிறார்களா?

அல்லது தமிழ் மக்கள் இனியும் ஒரு போரை விரும்பவில்லை. மாறாக இப்போது இருக்கும் வாழ்க்கையைப் பாதுகாக்க விரும்புகிறார்கள். இப்போது இருக்கும் நிலைமைகளோடு தங்களை சுதாகரித்துக் கொள்ள விரும்புகிறார்கள். அதனால் இப்போது இருக்கும் நிலைமைகளோடு தன்னை சுதாகரித்துக் கொள்ளும் கட்சிகளுக்கு வாக்களிக்கிறார்கள். அதேசமயம் தொடர்ந்தும் போராடக் கேட்கும் ஒரு அரசியலைப் முன்னெடுக்கும் காட்சிகளை அவர்கள் தெரிவு செய்ய விரும்பவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?

அல்லது ஆயுதப் போராட்டத்தின் விளைவுகளை வாக்கு வேட்டை அரசியலுக்கேற்ப மொழிபெயர்க்க மேற்படி கட்சிகளால் முடியவில்லையா ? இதை இன்னும் ஆழமாக சொன்னால் ஆயுதப் போராட்டத்தின் சீரியஸான பண்புகளில் இருந்து மிதவாத அரசியலை அணுகும் பொழுது அந்த அரசியலுக்குரிய களவு ; சூது ; நெளிவு சுளிவுகளை அவர்களால் கற்றுக் கொள்ள முடியவில்லையா ? நேர்மையாக இருப்பவர்கள் அல்லது அர்ப்பணிப்போடு சிந்திப்பவர்கள் மிதவாத அரசியலில் தங்களை சுதாரித்துக் கொள்ள முடியவில்லையா?

எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது. கஜேந்திரகுமாரின் அணி முன்னைய தேர்தல்களில் தோல்வியுற்ற பொழுது லண்டனில் வசிக்கும் ஓர் ஊடகவியலாளர் முகநூலில் ஒரு குறிப்பை எழுதி இருந்தார். அதிகம் நேர்மையாக இருப்பவர்கள் தேர்தல் அரசியலில் வெற்றி பெறு முடியவில்லை என்ற தொனிப்பட.

கடந்த ஆண்டு தமிழ் மக்கள் தேசியக் கூடடணியின் தலைவர் விக்னேஸ்வரன் ஒரு சந்திப்பின் போது கூறினார் “சாக்கடையில் இறங்கி விட்டோம் இனி நிலைமைகளை எதிர்கொள்வோம்” என்ற தொனிப்பட

அப்படி என்றால் தேர்தல் மைய அரசியல் எனப்படுவது அதிகபட்சம் நேர்மையற்றவர்களின் அரசியலா? உலகம் முழுவதும் நேர்மையற்றவர்கள் தான் தேர்தல்களில் வெற்றி பெறுகிறார்களா ? அப்படி என்றால் நேர்மையானவர்கள் தேர்தல் களத்தில் வெற்றி பெறுவதற்கான வழி என்ன ? இன்னும் கூர்மையாக கேட்டால் யோக்கியர்களும் நேர்மையானவர்களும் தேர்தல் களத்தில் தங்களை எப்படி நிரூபிப்பது? அல்லது தமிழ் வாக்காளர்கள் யோக்கியர்களையும் நீதிமான்களையும் நேர்மையானவர்களையும் எப்பொழுது கண்டு பிடிக்கப் போகிறார்கள் ?