குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 9 ம் திகதி வியாழக் கிழமை .

காதலும் வன்முறையும்: நிகழ்வுகளும் புனைவும். நன்றி அம்ருசா

19.06.2020....நடைமுறை செத்து விட்டது” எனவும் ”நடப்பியல் பாணி எழுத்தின் காலம் முடிந்து விட்டது” எனவும் 20 ஆண்டுகளுக்கு முன்பு தீவிரமாக உச்சரிக்கப் பட்டதைப் பலரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்த உச்சரிப்பின் ஓங்காரம் கேட்டுப் பல எழுத்தாளர்கள் மிரண்டு போய் எழுத்துப் பயணத்தில் எந்தத் திசையில் தொடர்வது எனத் திகைத்து நின்றார்கள்.

நேர்கோட்டுக் கதைசொல்லலில் தான் யதார்த்தம் உருவாக்கப் படுவதாக நம்பி அதைக் கைவிட்டு நேர்கோடற்ற எழுத்து பாணியை முயன்று பார்த்தனர். அம்முயற்சி கைகூடாத நிலையில் எழுதுவதையே நிறுத்தி விட்டு ஓய்வில் போய்விட்டார்கள். இன்னும் சிலரோ, அ-புனைவு எழுத்தாளர்களாக மாறிப் போனார்கள்.

 

நாடகத்துறைச் செயல்பாட்டாளர்கள் தான் நடப்பியல் பாணியின் மீது விமரிசனங்களை முன் வைத்தவர்கள் என்பது உலக இலக்கிய வர்லாறு. யதார்த்தம் அல்லது நடப்பியல் பாணி நாடகங்களின் நோக்கம் கேள்விகளற்ற ஏற்பு மனநிலையையே உருவாக்கும் என்ற விமரி சனங்களை முன் வைத்த பெர்ட்டோல்ட் ப்ரெக்ட் முதன்மையாக அறியப்படுவது நாடகக்காரராக என்பதை இங்கே நினைத்துக் கொண்டால் நான் சொல்வதை விளங்கிக் கொள்ளலாம்.  தங்கள் கருத்தை வலிமையான மொழிப் பயன்பாட்டின் வழி நிலைநிறுத்த முயலும் ஆதிக்கக் கருத்தியலாளர்களுக்கே நடப்பியல் உதவும் என்பது அதன் பலவீனமான பக்கம் என்பதை மறுப்பதற்கில்லை. அதன் மறுதலையாக பாதிக்கப் படுபவர்கள் பக்கம் நிற்கும் பலமும் அதற்கு உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கவனமான எழுத்து ஏற்படுத்தும் குற்றவு ணர்வின் வழி மனச்சாட்சியைத் தட்டி எழுப்பும் சாத்தியங்களும் அதற்கு உண்டு. இந்தச் சாத்தியத்தைத் தனது தொடக்க நாவலான கோவேறு கழுதைகள் வழிப் பலமாக நிரூபித்தவர் எழுத்தாளர் இமையம். அவரது  ஆறுமுகம், செடல் ஆகிய நாவல்களில் இடம் பெறும் பாத்திரங்களை வாசிக்கும் வாசக மனமும் கூட அவை முன் வைக்கும் உண்மைகளைக் கண்டு பதற்றப்படையாமல் இருக்காது. அந்தப் பாத்திரங்களின் வாழ்நிலைக்கு மேலான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தால் குற்றவுணர்வால் தாக்கப்படுவதும், அதே நிலையில் இருந்தால் “என்னை ஒத்த மனிதர்களின் வாழ்நிலைக்கு என்ன காரணம்” எனத் தேடுவதும், “அதற்கான காரணம் இந்த சமூகத்தின் அமைப்பும், நம்பிக்கைகளும், அவற்றை நிலைபெறச் செய்யப்பாடுபடும் மனிதர்களும்” என்ற புரிதலை உண்டாக்குவதையும் அப்படைப்புகளுக்குள்ளேயே சாத்தியமாக் கியிருக்கிறார் இமையம். அவரது நாவல்களைப் படித்தபோது உண்டான பதற்றங்களையெல்லாம் தாண்டிய- வாசக மனத்தை உலுக்கும் கதையாக அவர் அண்மையில் எழுதிய பெத்தவன் கதையைக் கருதுகிறேன். எனக்கு மட்டுமல்ல; சமகாலப் பிரக்ஞையுள்ள ஒவ்வொரு வாசகருக்குள்ளும் அப்படித் தோன்றும்படி அந்தக் கதை செய்துள்ளது என்பதை அந்தக் கதை பெற்றுள்ள கவனத்தின் வழி அறியலாம்.

அக்டோபர் மாத உயிர்மையில் அச்சான பெத்தவன் கதையை வாசித்து முடிக்கும்போது, தமிழ் அச்சு ஊடகங்களில் கௌரவக் கொலைகள் எனத் தலைப்பிட்டு எழுதப் பெற்ற செய்திக் கட்டுரைகள் முதலில் நினைவுக்கு வரக்கூடும். நடப்பியல் எழுத்தின் மிக முக்கியமான கூறு சரியான செய்திக் கட்டுரையைப் போல உண்மையைப் பளிச்செனச் சொல்வது தான். ஆனால் புனைகதை ஆசிரியன், செய்திக் கட்டுரையாசிரியன் அல்ல. அவனது எழுத்து முறை நேர்க்காட்சி வருணனை அல்ல; மனதில் அலையும் நினைவுகளைப் பதிவு செய்வது. மனக்காட்சிப் பதிவுகளை விவரிப்பதின் வழியே தான் புனைவுத் தன்மையை உருவாக்க முடியும். அப்படி உருவாக்கும்போது கட்டுரையின் கூறுகள் காணாமல் போய் புனைகதை உயிர் பெறும். பல கட்டுரைகளை உயிர்ப்பிப்பதன் வழி நடப்பியல் எழுத்தின் பலமான பக்கங்களை வலிமைப் படுத்துவதில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுவருபவர் இமையம் என்பதை அவரது சிறுகதைகள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றன.

இமையத்தின் கதையை வாசித்த பின்  ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு இமையத்தின் ஊரான விருத்தாசலம் பகுதியில் ஆலம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்பட்ட கண்ணகியும் முருகேசனும் நினைவுக்கு வந்தார்கள். வன்னியர் சாதியைச் சேர்ந்த கண்ணகி, தலித்தான முருகேசனைக் காதலித்து வெற்றிகரமாக வாழ்கிறாள் என்று பாராட்டுவதற்காக ஊடகங்கள் பரப்புரை செய்யவில்லை. காதலித்த பின், அதற்குக் குறுக்கீடாக இருந்த குடும்பம் மற்றும் சாதித் தடைகளை மீறிக் கலப்புத் திருமணம் செய்து கொண்டதால் தற்கொலை செய்து கொள்ள நேர்ந்தது என்பதற்காகவே அந்தப் பெயர்கள் ஊடகங்களின் பரப்புரையில் இடம் பெற்றன. கலப்புத் திருமணம்  செய்து கொண்ட அவர்களைக் கொலை செய்ததற்காக- தற்கொலைக்குத் தூண்டியதற்காக யாரும் தண்டிக்கப்படவில்லை. தண்டிக்கப்படாத நிலையில் கலப்புத் திருமணங்களுக்கு நெருக்கடி கொடுத்து தற்கொலைக்குத் தூண்டிக் கொலை செய்த சாதியின் இருப்பு கேள்விக்கு அப்பாற்பட்டதாக ஆக்கப்பெற்றது. அப்படி ஆக்கப்பெற்ற கொலைகளைக் கௌரவக் கொலைகள் எனப் பெயரிட்டு அழைத்ததன் மூலம் சமூக அங்கீகாரமும் தரப்பெற்றது.

மதிப்பிற்கான கொலைகளைச்சாதிய சமூகம் அங்கீகரிக்கலாம். ஆனால் தனியொரு மனிதனாக - பிறப்பு அடிப்படையில் மனிதர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகள் எதுவுமில்லை என நம்பும் அறிவைப் பெற்ற ஒருவனால் அங்கீகரிக்க முடியாது. தன் காலத்தின் மீது தொடர்ந்து கேள்விகளையும் விமரிசனங்களையும் வைக்கும் எழுத்தாளன் நிச்சயம் அங்கீகரிக்கவே மாட்டான். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வை ஏற்றுக் கொள்ளாமல் தவித்த இமையத்தின் மனம்- அடியாழத்தில் போட்டுக் கொதிநிலையில் வைத்திருந்த அந்நிகழ்வையொத்த நிகழ்வுகள் பலப்பலவாய் நிகழ்வதைப் பார்த்தபின் அதனைக் கதையின் கருவாக ஆக்கி எழுதிப் பார்த்தது. பெத்தவன் போன்ற ஆகச் சிறந்த கதையின் உருவாக்கம் இப்படித்தான் நிகழ்கிறது. நடக்கும் நிகழ்வுகளைப் பதிவு செய்வது நடப்பியலின் வேலை அல்ல; நடப்புகளில் எவை தொன்மங்களாக ஆகின்றன என்பதைத் தேடிப் பிடித்துப் பிரித்துக் காட்டுவதே ஆகச் சிறந்த நடப்பியல் எழுத்தின் அடையாளம்.இமையத் தின் கதையில் கண்ணகி- முருகேசன் கொலை நிகழ்வு அப்படியே பதிவு செய்யப்படவில்லை என்பதைவிடக்  கொலை செய்யப்பட்டவர்களின் குரலாகப் பதிவு செய்யவில்லை என்பதை முக்கியமாக நினைக்கிறேன். தன் மகளைக் கொல்லும்படி தூண்டிய ஆதிக்கசாதிப் பெருமைக் கெதிராகத் தன்னைக் கொலை செய்து கொண்ட தந்தையின் கோணத்தில் எழுதப் பெற்றிருந்தது. சாதி அமைப்பு தனது இருப்புக்காகக்கொலை களைத் தூண்டிக் கொண்டிருக்கிறது. அந்தக் கொலை அதனை மீறுபவர்களை நோக்கியது மட்டுமல்ல; அதனை ஏற்றுக் கொண்டவர்களையும் பழிவாங்கும் குருட்டுத்தனம் கொண்டது என்பதை இமையத்தின் கதை உணர்த்தியது. அந்தக் கதை உருவாக்கிய குற்றவுணர்வுத் தூண்டலில் உயிர்மைக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டு விட்டு அமைதியானேன். வாசகனாக அதைத் தானே செய்ய முடியும் எனச் சமாதானமும் செய்து கொண்டேன்.

அந்தச் சமாதானம் ஆழ்ந்து அமுங்கிப் போவதற்குள் தர்மபுரி மாவட்டத்தில் தலைவிரித்தாடியுள்ள வன்முறை பற்றிய செய்திகளும், உண்மை அறியும் குழுக்களின் அறிக்கைகளும் தூக்கத்தைக் கலைத்துக் கொண்டே இருக்கின்றன. இந்த வன்முறைகளுக்கான தொடக்கப்புள்ளியாகச் சொல்லப்படுவது காதலும் கல்வியும் தான்.  இமையத்தின் கதையில் இடம் பெற்றுள்ளதைப் போன்றதொரு காதல் நிகழ்வு தான். நாயக்கன் கொட்டாய்க் கிராமம் நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசனும் செல்லன்கொட்டாயைச் சேர்ந்த திவ்யாவும் கல்லூரியில் படிக்கும்போதே காதலித்துக் குடும்பத்தினர் மற்றும் ஊராரின் தடைகளை மீறித் திருமணம் செய்துள்ளனர். தங்கள் சாதியைச் சேர்ந்த திவ்யா, தங்களைவிடக் கீழான படிநிலையில் இருக்கும் சாதியைச் சேர்ந்த ஆணுடன் நடத்தப் போகும் திருமண வாழ்க்கையைத் தொடர விடக்கூடாது எனக் கருதிய ஆதிக்க சாதியினரின் மனம், அமைப்பாகத் திரண்டு எல்லாவகை நெருக்கடிகளையும் கொடுத்துள்ளது. அந்த நெருக்கடியின் முதல் பலியாகத் தங்கள் சாதியைச்சேர்ந்த பெண்ணின் தந்தையான நாகராயைக் கொன்றுள்ளது. அந்தப் பிணத்தையே மூலதனமாக்கிச் சாதி ஆதிக்க வெறியைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

நாயக்கன் கொட்டாய் என்னும் கிராமத்தை மையப் படுத்திய அந்த வன்முறை அதன் அருகில் இருக்கும் அண்ணாநகர், கொண்டாம்பள்ளி போன்ற கிராமங்களில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மனிதர்களையும் பதம் பார்த்திருக்கிறது. அரசு அமைத்த குழுவின் அறிக்கையின் மதிப்பே 4 கோடி ரூபாய் எனப் பத்திரிகைச் செய்திகள் சொல்கின்றன. 268 வீடுகள் நாசமாக்கப் பட்டுள்ளன. தொலைக்காட்சிப் பெட்டிகள், நான்கு சக்கர, இருசக்கர வாகனங்கள், தகவல் தொடர்புக் கருவிகள் எனக் குறி வைத்து நொறுக்கப்பட்டுள்ளன. குடிசை வீடுகளை விட்டு விட்டு காங்கிரீட் வீடுகளை நொறுக்குவதும் வசதியான வாழ்க்கையின் அடையாளங்களாகக் கருதப்படும் பொருட்களைச் சிதைப்பதும் காதலுக்கு எதிரான வெளிப்பாடுகள் மட்டுமல்ல; அடிமைகளாய் இருந்தவர்கள் அந்த அடையாளங்களைத் துறந்து புதுவகை அடையாளத்தோடு உரிமைகள் பெற்றவர்களாக வலம் வருவதைத் தாங்கிக் கொள்ள முடியாத ஆதிக்க மனத்தின் வெளிப்பாடு என்பதை இந்த அறிக்கைகள் காட்டுகின்றன.

தமிழகப் பரப்பில் அட்டவணைச் சாதியினர் மீது வன்முறையைச் செலுத்தும் பல்வேறு ஆதிக்க சாதியினரும் பொருளாதார அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை ஒத்தவர்களாகவே வாழ்கின்றனர். சொந்தமாக நிலபுலன்கள் இல்லாமல், மழைக்கும் காற்றுக்கும் ஒண்டிக் கொள்ளத் தேவையான காங்கிரீட் வீடுகள் இல்லா மல் ஓலைக்குடிசைகளில் வாழ்பவர்களாகவே உள்ளனர். ஆனாலும் அவர்களின் மனத்தில் சாதியடுக்கில் மேல்த ட்டில் இருப்பதாக நம்பும் மனநிலை இருக்கிறது. தங்களைக் கண்டால் ஒதுங்கி நின்று வணக்கம் சொல்லி அடிமை யாகப் பாவனை செய்ய வேண்டும் என நினைக்கிறது. செய்யும் வேலைக்கு அப்போதே சம்பளத்தைப் பெற்றுவிடும் சூழலுக்கு மாறாகச் சமூகக் கடமைகளை ஆற்ற வேண்டியவர்களாக ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பை இப்போ தைய தலைமுறை தரத் தயாரில்லை என்பதுதான் முரண்பாட்டின் தொடக்கம். அந்தத் தொடக்கத்தை– எதிர்ப்பு மனநிலையை முளையிலே யே கிள்ளி எறிந்து விட வேண்டும் என நினைக்கிறது ஆதிக்க மனம். அந்த மனத்தின் கட்டுப்பாட்டுக்குள் இனியும் இருக்க முடியாது; இருக்க வேண்டிய அவசியமில்லை; இருக்கவே கூடாது என்ற முடிவுடன் புதிய தடங்களில் பயணிக்கிறது விடுதலை மனம். ஆதிக்க மனத்திற்கும் விடுதலை மனத்திற்கும் இடையே நடக்கும் இந்த போர்வெல்ல வேண்டியது எது? என்பதைத் தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்திய சமூகம்.

ஒடுக்கப்படுதலுக்கெதிராக விடுதலையை முன் வைக்கும் புதுவகை நம்பிக்கையை உருவாக்கித் தரும் என்ற நம்பிக்கையில் தான் இங்கு மேற்கத்தியக் கல்விமுறை அறிமுகம் ஆனது. மேற்கத்தியக் கல்வி முறையின் வடிவத்தை மட்டும் உள்வாங்கிக் கொண்டு, அதன் உள்ளடக் கத்தைத் தள்ளி வைத்த இந்திய சமூகம் இங்கும் இல்லாமல் அங்குமில்லாமல் தவித்துக் கொண்டிருப்பதின் வெளிப்பாடுகள் தான் இந்த சாதிய வன்முறைகள். சட்டத்தின் முன்– அரசு அதிகாரத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என்பதைவிட, பாதிக்கப்பட்டவர்கள் அதிக ஆதரவைப் பெற வேண்டியவர்கள் என்பதுதான் மேற்கத்தியக் கல்விமுறையின்- அதன் அரசு வடிவமான சனநாயகத்தின் உள்ளடக்கம். பொதுவெளிக்கான இந்த உள்ளடக்கத்தோடு, தனிமனிதர்களின் குடும்ப வெளிக்கு அது தந்த உள்ளடக்கம் தான் காதல் திருமணங்கள்  என்பதையும் நமது சமூகம் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் வெற்றுக் கூச்சலாகக் காதலையும் சனநாயகத்தையும் பாராட்டிப் பேசிக் கொண்டே அவற்றுக்கு எதிரான இயக்கத்தையும் நடத்திக் கொண்டிருக்கிறது  நமது சமூகம் .

இந்த இடத்தில் வேறொன்றைச் சுட்டிக் காட்டத் தோன்றுகிறது. காதல் என்ற வார்த்தையும், அதன் உணர்வுகள் சார்ந்த துணை வார்த்தை களும் இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் ஆகப்பழையவை என்றாலும், இருபதாம் நூற்றாண்டில் இருக்கும் அர்த்தத்தில் அவை அதற்கு முன்பு இருந்ததில்லை என்றே தோன்றுகிறது. சாதிய சமூகமாகக் கட்டமைக்கப்பட்ட இந்திய சமூக வாழ்க்கையை எழுதிக் காட்டிய நமது இலக்கியங்களும் உரைகளும் அது தந்த எல்லைக்குள்ளான மன ஈர்ப்புகளையே சரியான காதல் எனப் பேசின. அவ்வாறில்லா தனவற்றைப் பெருந்திணையாகவும் கைக்கிளையாகவும் தான் பேசிப் புறக்கணித்தன. ஒத்த கிழவனும் கிழத்தியுமான என்பதில் குடிமையில் ஒத்திருப்பதையே முதன்மைக் கட்டுப்பாடாக நினைத்திருந்தன. அத்தோடு இந்திய மொழிகளில் இடம் பெற்ற காதல் என்பது ஓர்

ஆணும் பெண்ணும் இணைவதற்கான முதல் படி  மட்டுமே.

இதற்கு முற்றிலும் எதிரானது  ஐரோப்பிய அறிவின் வழி அறிமுகமான காதல் என்பதை நாம் இன்னும் விளங்கிக் கொள்ளவில்லை. ஐரோப்பிய வாழ்க்கையில் ஐரோப்பிய மொழிகளில் காதல் என்ற பதத்தின் இயக்கம் சேர்தல் மட்டுமல்ல; அதாவது திருமணத்திற்கான முதல்படி மட்டுமல்ல  பிரிந்து வாழ்வதற்கும் அதுதான் முதல் படி என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கடந்த ஓராண்டாக நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக் கிறேன். எனது முகநூல் வட்டத்தில் இருக்கும் எனது மாணவிகளின் புகைப்படங்களையும் mதன்விவரங்களையும் பார்க்கும்போது இந்திய மனிதனாகக் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருக்கிறது. பதினெட்டு வயதைத் தாண்டிய ஒவ்வொருத்தியும் ஒரு ஆணுடன் காதலில் இருப்பதை மறைக்காமல்  குறிப்பிட்டிருக்கிறாள். பல்கலைக்கழகத் திற்கு வெளியே சந்திக்கும்போது அந்த ஆடவ னைத் தனது காதலனாக அறிமுகம் செய்யவும் தயங்குவதில்லை. அப்படி அறிமுகம் செய்தவுடன் தன் அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவன் அளிக்கும் முத்தத்தை என் முன் னால் ஏற்றுக் கொள்ளவும் மறுப்பதில்லை. தன் காதலைக் குடும்பத்தாருக்கும் ஆசிரியருக்கும் மறைக்காமல் சொல்லி வாழும் சமூகத்தில் காதல் சேர்வதற்கான முதல் படியாக இருக்கிறது என்பதோடு தேவைப்பட்டால் பிரிந்து  விடும் வாய்ப்பையும் வழங்கவே செய்கிறது. ஒரே வீட்டிற்குள் இருக்கும் தனித்தனி அறைகளில் தங்க ளின் உடைமைகளோடு வசிக்கும் அவர்கள் சேர்ந்திருக்கிறார்களா? தனித்தனியாக வாழ்கிறார்களா? என்பதை மற்றவர்கள் விளக்க முடியாது என்றே நினைக்கிறேன். அந்த வீட்டின் வாடகையை இருவரும் பகிர்ந்து கொள் கிறார்கள். மின்சாரக் கட்டணத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அடுப்படி, குளியலறை என ஒவ்வொன் றையும் பகிர்ந்து கொள்கிறார்கள். தங்களுக்குத் தேவையான உணவுப் பண்டங்களை வாங்கி வந்து அங்கிருக்கும் ஒரெ அடுப்பில் சூடு செய்து தனித்தனியாகச் சாப்பிடுகிறார்கள். சில நேரம் சேர்ந்து சாப்பிடுகிறார்கள். அதேபோல் தனித்தனி அறையில் இருக்கும் இருவரும் தேவைப்பட்டால் ஒரே படுக்கையில் சேர்ந்தும் படுத்தும் கொள்கிறார் கள்.

இப்படிச் சொன்னவுடன் ஆண்- பெண் உறவை ஐரோப்பிய சமூகம் துடைத்துப் போடும் காகிதமாக நினைக் கிறது எனத் தூற்றும் வேலையில் பலர் இறங்கி விடும் வாய்ப்புகள் உண்டு. சேர்ந்ததற்காகக் குதூகலம் கொள் வதும் பிரிந்ததற்காகத் துயரம் கொள்வதும் அவர்களிடம் இருக் கவே செய்கிறது. ஆனால் சேர்தலின் குதூகலமும் பிரிவின் துயரமும் நிரந்தரமாக கருதப்படுவதில்லை என்பதுதான் மிக முக்கியம். அதன் காரணமாக வாழ்க்கை யே முடிந்து விட்டதாக நினைத்து விடுவதில்லை, ஒன்றின் முடிவில் இன்னொன்று இருப்பதாக நினைக்கும் ஐரோ ப்பிய மனம், ஒரு காதல் வாழ்வின் சேர்மானம்,விலகலைச் சந்திக்கும்போது, அது அடுத்த சேர்தலுக்கான ஆரம் பம் என நினைக்கவும் செய்கிறது  என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் புரிதல் இல்லாத இந்தியர்கள் காதலை ஒற்றைப் பரிமாணத்தில் புரிந்து கொண்டு அதற்குள் மாட்டிக் கொண்டதாக நினைத்து அல்லாடு பவர் களாகவும் இருக்கிறார்கள். இது நிற்க.

காதல் வழியாக உருவாக்கப்படும் புதுவகைக் குடும்ப அமைப்புகளுக்கான சட்டப்பாதுகாப்பையும் தனி மனிதர்களுக்கான உரிமைகளையும் உத்தாரம் செய்ய வேண்டிய இந்திய அரசும் அதன் அமைப்புகளான மக்கள் பிரதிநிதித்துவ மன்றங்களும், துணை அமைப்புகளான காவல் துறை, நீதிமன்றம் போன்றனவும் பொறுப்பிலிருந்து தவறி பெருங்கூட்டத்தைக் கூட்டிப் பயமுறுத்தும் மூடர்களைக் கண்டு அச்சம் கொண்டு நிற்கின்றன. இவற்றைக் கண்காணிப்பு செய்ய வேண்டிய ஊடகங்களோ பெரும் முதலாளிகளின் வணிகப் பண்டங்களாகக் கருத்துக்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றன. இருப்பைத் தக்க வைக்கும் பண்டங்களே விலைபோகும் சரக்குகள் என்பதால் அவற்றை உற்பத்தி செய்வதில் கவனம் கொள்கின்றன.  மாற்றம் பெற்ற சமூகத்தில் இந்திய மனிதர்களுக்கான பாதுகாப்பை அரசாங்கத்திடம் எதிர்பார்த்துத் தோற்றுப் போன தனிமனிதர்கள் திகைத்துப் போய் நிற்கிறார்கள்.  திகைப்பின் முடிவில் தங்களுக்கான பாதுகாப்பை சாதி அமைப்புகளே வழங்கும் என்ற நம்பிக்கையில் முன்னோக்கி ஓரடி எடுத்து வைத்தவர்கள் திரும்பவும் இரண்டு அடிகளைப் பின்னோக்கி நகர்த்த வேண்டிய வர்களாக  ஆகிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய பின்னோக்கிய நகர்வுகள் எல்லாவகைச் சீர்திருத்தங்களுக்கும்- குறிப்பாகப் பொருளாதாரத் தளத்தில் நடத்த நினைக்கும் பாய்ச்சலுக்குப் பெருந்தடை என்பதைக் கூட நமது அரசுகளும் ஆட்சியாளர்களும் புரிந்து கொள்ளாமல் இருக்கி றார்கள் என்பதுதான் விநோதம்.

அந்த வன்முறை ஏதோ இங்குமங்குமாக நடந்து கொண்டிருக்கும் கவனப்படுத்தத் தேவையில்லாத ஒன்று என்ற நிலையிலிருந்து மாறிக் கொண்டிருக்கிறது. மேற்கத்தியக் கல்வியும் சனநாயக நடைமுறைகளும் தந்த அறிவு வெளிச்சத்தில் பிறப்பு அடிப்படையில் மனிதர்களைப் பிரித்துப் பார்ப்பதும், கீழானவர்கள்  மேலானவர்கள் என அடையாளப் படுத்துவதும் அறியாமையின் வெளிப்பாடு என ஓரடி முன்னோக்கி நகர்ந்திருந்தது இந்தியச் சமூகம். தீண்டாமை ஒரு பெரும்பாவம் எனப் பாடமாக அல்லாமல் பக்குவப்பட வேண்டிய மனங்களில் பதித்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகவே பாடப்புத்தகங்களில் அச்சிடப்பட்டுள்ளன ஆனால் நடக்கும் இந்தச் சம்பவங்கள் தமிழ்ச் சமூகத்தில் புரையோடிக் கொண்டிருக்கும் தீமையின் குறியீடாகவும், மனதில் உறைந்து விரியும் தொன்மமாகவும் சாதி ஆதிக்கம் இருக்கிறது என்பதைத் திரும்பத் திரும்ப உறுதி செய்து கொண்டே இருக்கின்றன.