குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆனி(இரட்டை) 2 ம் திகதி செவ்வாய் கிழமை .

சித்த மருத்துவ அறிவியல் பகுதி 1, சித்த மருத்துவ அறிவியல் பகுதி 2.சித்த மருத்துவ அறிவியல் பகுதி 3

12.05.2020...தொடர்..சித்த மருத்துவம் என்பது அறிவியல் முறையா என்று கேட்பதே ஒரு அறியாமைதான்.

சித்த மருத்துவம் பற்றி நக்கலும், கேலியும் செய்யும் இந்த அதி மேதாவிகளின் முரண் இவைகள்தான்.

தண்ணீர் என்று சொன்னால் பழமை வாதம், அறிவியலற்றது. அதையே H2O அதாவது 2 பங்கு கைட்ரயன் ஒக்சியன் ஒரு பங்கு என்றால் அது அறிவியல்.

இதுதான் இவர்கள் அடிப்படை வாதம். அதாவது ஒரு பொருளின் உள்ளீடுகள் என்ன என்பதை ஆங்கிலத்தில் கூறினால் அது விஞ்ஞானம்.

அதே போல இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இதை சுக்கு என்றால் பழமை வாதம், அறிவியலற்றது. Dried Ginger என்று ஆங்கிலத்தில் சொன்னால் அது விஞ்ஞானம், அறிவியல், நாகரிகம்.

இதைப் போகிற போக்கில்

சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை

சுப்பிரமணியருக்கு(முருகனுக்கு) மிஞ்சிய கடவுளும் இல்லை

என்று சுக்கு ஒரு சிறந்த மருந்து என்றும் சுப்பிரமணியர் எனும் முருகன் மிகச் சிறந்த தலைமை சித்தர் என்றும் கூறி வைத்தனர்.

அதே போல மருத்துவக் குணங்கள் கொண்ட தாவரங்களைத்தான் மூலிகைகள் என்று அழைக்கிறோம். ஒரு தாவரத்தின் தமிழ்ப் பெயர் சொன்னால் அது பழமை வாதம், அறிவியலற்றது. அதையே Botanical Names எனப்படும் தாவரவியல் பெயர்களில் அழைத்தால் அது விஞ்ஞானம்.

H2O என்பது அறிவியல் என்று இவர்கள் கருதும் போது சித்தர்களுக்கு இது கூடத் தெரிந்திருக்கவில்லையா எனும் கேள்வி எழுவதன் பின்னணிதான் சித்த மருத்துவம் அறிவியலற்றது என்று பலர் பிதற்றுவதைப் பற்பலர் நம்புவதற்குக் காரணம்.

அணுவைப் பிளந்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள்

என்று ஒளவையார் திருக்குறளின் பெருமை கூறுகிறார்.

அதாவது Atom எனும் அணு பிளக்கப்படக் கூடியது எனும் அறிவு, ஒரு திருக்குறளுக்கு எடுத்துக் காட்டாகக் கூறும் போதே விளையாட்டாக Atom Fusion னைக் குறிப்பிடும் அளவுக்கு ஒரு பெண் தமிழ்ப் புலவர் காலத்தில் இருந்துள்ளது.

அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது

அதாவது Universe எனும் அண்டமும், Human Physical body எனும் நம் உடலும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது, ஒரே பொருட்களை, இயங்கும் தன்மை கொண்டது என்கின்றனர் சித்த பெருமக்கள் .

இது அறிவியல் அல்ல, கவிதை என்பார்கள் இந்த அறிவியலாளர்கள் .

தண்ணீர் என்பது குடிநீர் / குளிக்கும் நீர் என்றுதான் இந்த அறிவியல் யுகத்திலும் நம்மில் பெரும்பாலனவர்க்குத் தெரிந்திருக்கிறது.

ஆனால் சித்த மருத்துவத்தில் இந்த H2O என்பது தண்ணீர் மட்டுமல்ல மருந்தும் கூட.!

ஒரு குவளை (டம்ளர்) தண்ணீரை அல்லது ஒரு லிட்டர் தண்ணீரை எட்டுப் பங்காக சுருக்கினால் அது நோய் நீக்கும் மருந்தாகிறது என்கிறது சித்த மருத்துவம்.

அதாவது ஒரு லிட்டர் தண்ணீரை 125 மில்லி லிட்டர் ஆகும் வரை கொதிக்க வைத்துச் சுருக்குவது.

இதையே ஒன் லிட்டர் டிரிங்கிங் வாட்டரை இத்தனை டிகிரி சென்டி கிரேடில் இவ்வளவு நேரம் பாயில் செஞ்சு டிரிங்குங்க(ஒரு அளவு நதுாய்மையான நீரை இத்தனை பாகை அளவில், இவ்வளவு நேரம் வென்னீரை  ஆறவைத்து குடியுங்கள்) என்றால் அது அறிவியல், விஞ்ஞானம். இடைச்செருகலாக இது தான் பெரிய அறிவும்: நலன் பழக்கமும் இதனை  மனிதர் இழந்தமை பெரிய தவறு!

அதுமட்டுமல்ல, தண்ணீரை என்ன என்ன பாத்திரங்களில் அதாவது மண், வெங்கலம், தாமிரம், இரும்பு உள்ளிட்ட கொதிக்க வைத்தால் என்ன பலன்கள், என்ன என்ன மரத்தின் விறகுகளைப் பயன்படுத்தி எரித்தால் என்ன பலனாக அந்தத் தண்ணீர் நமக்குக் கிடைக்கும் என்றும் சித்தர் பெருமக்கள் செய்து, விளக்கமாக எழுதியும் வைத்துள்ளனர்.

Food poison என்று சொல்லப்படும் உணவு நஞ்சு என்ன என்ன பாத்திரங்களைப் பயன் படுத்தினால், என்ன என்ன உணவுப் பொருட்களோடு என்ன என்ன சேர்த்தால் அது உணவு இல்லையெனில் நஞ்சாக ஆகிவிடும் என்றும் கூறியிருக்கின்றனர்.

தண்ணீர், மூலிகைகள், வெப்பம்(ரெம்பரேச்சர்), அணு, உடல், மனம், பேரண்ட அறிவியல், இயங்கியல் தெரியாமலா இத்தனை விரிவான ஒரு சித்தர் அறிவியல் சிறந்து விளங்கியிருக்க முடியும்?,!

தொடர்ந்து சித்தர் அறிவியலை அறிவோம்.

- வளர்மெய்யறிவான்

சித்த மருத்துவ அறிவியல் - பகுதி 2.

சித்தர்கள் என்றாலே ஏதோ மறைசெயல்(மேயி)க் செய்பவர்கள், சாகாமல் இப்போதும் வாழ்பவர்கள், சாபமிடுவார்கள், துறவறம் பூண்டு காட்டுக்குள் வாழ்பவர்கள் என்றெல்லாம் பல கதைகள் உலவுகின்றன என நண்பர் ஒருவர் தனது பதிவில் கவலையோடு குறிப்பிட்டிருந்ததை வாசிக்க நேர்ந்தது.

மனிதர்கள் தாங்கள் அறியாததைக் , காணாததை, ஆனால் இருக்கிறது என்று நம்புவதை அது நன்மை செய்தால் கடவுள் என்றும், தீமை செய்தால் பேயென்றும் சாத்தான் என்றும் துாய்மைப்படுத்தியும் (புனிதப்படுத்தியும்), அச்சம் கொண்டு வாழ்வதும் அறியாமையின் இயல்பு.

அந்த அறியாமையை அறிவு கொண்டு ஆய்ந்து அகற்றுவதற்குப் பதிலாக அதை மூடநம்பிக்கை, மூடநம்பிக்கை, நம்பாதே என்று சொல்லி மனிதர்களை அவை பற்றி சிந்திக்கவே விடாமல் திசை திருப்பி விடுவதையே பகுத்தறிவு என்று பெயரிட்டுக் கொள்கிறார்கள் சிலர்.

ஒன்றை ஆய்ந்து அது உண்மையா பொய்யா அல்லது பொய்போலத் தெரியும் உண்மையா அல்லது உண்மை போலத் தெரியும் பொய்யா என ஒருவரை ஆராயக் கற்றுக் கொடுத்து அவர் சுதந்திரமாக முடிவெடுக்க விடுவதே உண்மையான பகுத்தறிவாகவும் இருக்கும், ஞானமாகவும் (அறிவாகவும்) இருக்க முடியும்.

சித்தர்கள் 100 ஆண்டுகள் வாழ்ந்தார்களா பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார்களா இல்லை இன்னும் வாழ்கிறார்களா, மறைசெயல்(மேயிக்) செய்தார்களா என்றெல்லாம் ஆய்வதும் நம்புவதும் நம்பாமல் இருப்பதும் ஒருபுறம் இருக்கட்டும். பிறகு அதுபற்றிப் பார்க்கலாம்.

காரணம், சித்தர்களைப் பற்றி அறியும் தொடர் இது, கற்பனைக் கதைகளை, குழந்தைகளிடம் கூறப்படும் பேய்க் கதைகள் பற்றிய தொடர் அல்ல இது.

முதலில், சித்தர்களை மனிதர்களாக, மிக இயல்பாக நாம் பார்ப்போம். கடவுளாக, மறைசெயல்(மேயிக்) செய்பவராகவெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. அவர்கள் ஒரு போதும் எங்களை அப்படிப் பார், இப்படிப் பார் என்று சொன்னதில்லை.

மனிதர்கள் என்று சொல்லும் போது சித்தர்களிடம், சராசரி மனிதர்கள் அறிந்திராத பல கூடுதல் அறிதல்கள், சிறப்பு அறிதல்கள் இருந்தன என்பதையும், அந்த அறிதல்களின் அளவை IQ வோ வேறு ஏதோ Q வோ ... அதை உங்கள் அறிவியல் கருவிகளைக் கொண்டு ஆய்ந்து பார்த்தாலும் பிற மனிதர்களிடைவிடக் கூடுதலாகவே இருக்கும்.

சித்தர் என்று ஒருவரை அழைக்க ஏதேனும் தகுதி உள்ளதா?

இணை முனைவர், முனைவர் (Assistant Professor, Professor) என்று ஒரு மனிதரை அழைக்கவே PhD எனும் ஆய்வுக் கல்வி முடிப்பது அவசியப்படும்போது சித்தர் என்று ஒரு மனிதரை அழைக்க எத்தனை பல்லாயிரம் தகுதிகள் தேவை ?

சித்தர்களின் அடையாளமாக ஆதாரபூர்வமாக இன்றும் நிலைத்திருப்பது சித்தர் பாடல்கள் எனும் Documental Evidences.

கிடைக்கப்பெற்ற அந்த ஆவணங்களின் அடிப்படையில் சித்தர்களின் பாடல் வடிவிலான ஆவணங்கள் 1. மருத்துவம் 2. ஞானம்(அறிவு) ஆகிய இரு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளன .

இவற்றில் மருத்துவம் எனும்போது சோதிடம் எனும் கோள்களியல் (Astronomy) , ஐம்பூதம் எனும்   நிலம், நீர், தீ(நெருப்பு), காற்று, விண்.(ஆகாயம்) ஆகியவற்றின் அறிவியல் (Science), இரசவாதம் எனும் Alchemy, மூலிகைத் தாவரங்கள் பற்றிய Botany, உடலியல் பற்றிய அறிவு Anatomy என, இரணசிகிச்சை எனும் Suregery , நாடி பிடித்தே நோய்க் குறி அறிதல், நோய்க்குறி அறியும் பிற முறைகள் Diagnosis Technics உள்பட அனைத்தும் அறிந்தும் இதையெல்லாம்விட நோய் தணிக்கத் தேவைப்படும் மருந்தறிந்து தயாரித்துக் கொடுத்தல், உணவு முறை அறிதல் என அனைத்தறிவும் அவசியம்.

நோயைச் சோதித்தறிய சித்த மருத்துவத்தில் எட்டு வகையான முறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. அவையாவன, நாடி (Pulse), நா (Tounge), மொழி (Language), உடற்கழிவு(குடற்கழிவு) மலம் (Stool), உணர்வு .....பரிசம்  (Touching), நிறம் (Colour), விழி (Eyes), சிறுநீர் (Urine) போன்ற Test பரிசேர்தனைகளைப் பின்பற்றியுள்ளனர்.

மேலும் மனிதர்களுக்கு நோய் வந்து தடுப்பதைவிடவும் வராமல் தவிர்க்கவும் சிந்தித்து அவர்கள் கண்டறிந்த முறையே "உணவே மருந்து. மருந்தே உணவு" வாழ்வியல் முறை.

சித்தர்கள் துறவறம் மேற்கொண்டு காடுகளில் திரிந்தவர்கள் என்பது சரியான செய்தி அல்ல.

அவர்கள் மக்களோடு மக்களாக வாழ்ந்தவர்கள், குடும்ப வாழ்க்கை வாழ்ந்தவர்கள், நல்ல நலமான குழந்தைகள் பிறக்க உணவில் இருந்து உடலுறவு முறைகள் வரை ஆய்ந்து முறைகள் வகுத்த நிபுணர்களாக ....Genius களாகவே இருந்துள்ளனர்.

இந்தத் தகுதிகளோடு, அறிவோடு வாழ்ந்த அவர்கள் எங்கே மறை செயற்பாடு(மேயிக்) செய்து, துறவறம் பூண்டு, கஞ்சாக்குடி சாமியார்கள் வேடம் அணிந்து திரிந்திருக்க முடியும். அப்படி அவர்களை நினைப்பதே அறிவிலிகளின் அரைக்கால் புத்தி.

- தொடர்ந்து ... அறிவோம் சித்தர்களின் பேரறிவியலை.

-வளர்மெய்யறிவான்


சித்த மருத்துவப் பேரறிவியல் - பகுதி 3 .

பாலியல்(செக்சு(ஸ்) பிரச்சனைகளுக்கு மட்டும்தான் சித்த மருத்துவம் எனத் திட்டமிட்டு செய்யப்பட்ட பரப்புரை. !

தொடக்கத்தில் சித்த மருத்துவ அறிவியல் என்றே தலைப்பிட்டேன், மூன்றாவது பகுதியிலேயே என்னையுமறியாமல் பேரறிவியல் என்று மாறிவிட்டது. உண்மைதானே.

சரி அடுத்து கருவிற்கு (பாடத்திற்கு.....சப்ஜெக்டுக்கு) வருவோம்.

சித்தர்கள் பற்றியும், சித்த மருத்துவம் பற்றியும் மேற்கொள்ளப்படும் தவறான பரப்புரைகளுக்குக் காரணம் ஆங்கில மருந்துக் கம்பெனிகளும், மருத்துவர்கள் மட்டுமல்ல. அது அவர்களின் வணிக உத்தி.

ஆனால் சித்த மருத்துவத்தின் இன்றைய இழி நிலைக்கு 99 சதவீதக் காரணம் வேறு யாருமல்ல சித்த மருத்துவர்கள் மட்டுமே என உறுதியாகச் சொல்லலாம்.(இடைச்செருகல் இதைநான் முழுமையாக  ஆதரிக்கின்றேன்.) 199 சதவீதம் ஆங்கில மருத்துவ உலகமே காரணம் எனவும் கூறலாம்.

இந்தக் காரணங்கள் பற்றி தனிப் பகுதியில் பார்ப்போம்.

சித்தர்கள், ஒரு குழந்தை பிறப்பதற்கு முந்தைய ஆண் பெண் உடல் ரீதியான வழிகாட்டுதல்களில் தொடங்கி இறப்பு வரை உடல் மருத்துவம் தொட்டு இறப்பும் இறப்பை அணுகுவதற்குமான ஞான மார்க்கமாக உயிர் சார்ந்த அறிதலைப் புரிதலை, உயிர் அறிவிலையும் ஆய்ந்து அதிலும் வெற்றி கண்டுள்ளனர்.

உடல் சார்ந்த மருத்துவ அறிவியலை சித்த மருத்துவம் என்றும் அதன் தொடர்ச்சியை மெய்ஞானம் (மெய் = உடல், ஞானம் = அறிவு, மெய் மற்றொரு பொருள் = உண்மை (ஞானம்)) என்றும் வகைப்படுத்தினர்.

ஒரு குழந்தை பிறப்பு எப்படி நிகழ்கிறது, சில குழந்தைகள் ஏன் உடல் ஊனம், உடல்சார் பிறவிக் கோளாறுகளுடன் பிறக்கின்றன, ஏன் சிலர் மாற்றுப் பாலினமாகப் பிறக்கிறார்கள் என்றும் சித்தர்கள் தங்கள் ஆய்வுக் குறிப்புகளாக எழுதிச் சென்றுள்ளதுடன் அதற்கான தீர்வு, வாழ்வியல் பழக்க வழக்கங்கள் என்ன பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கின்றனர்.

அந்தத் தீர்வுகளில் மிக முக்கியமானவை உணவு முறைகளும், மூச்சுப் பயிற்சிகளும் . சமஸ்கிருத ஆரியம் இதையும் களவாண்டு "பிராணாயாமம்" என்று பெயரிட்டு மார்க்கெட்டிங் (சந்தைப்படுத்தி  வணிகம்) செய்துவிட்டது தனி வரலாறு.

ஆண் பெண் உடல் சேர்க்கையின் போது ஓடும் மூச்சு ஓட்டத்தைக் கொண்டே பிறப்பது ஆணா பெண்ணா எனத் தீர்மானிக்க இயலும் என்ற சித்தர்களின் ஆய்வு மருத்துவ உலகில், உலக மருத்துவத்தில் இதுவரை எவருமே சாதித்திராத ஒரு பெரும் ஆய்வு.

மேலை நாடுகளாக இருந்திருந்தால் இக் கண்டுபிடிப்புகளை விஞ்ஞான உலகம் மேலும் ஆய்ந்து உலகத் தரமாக்கியிருப்பார்கள். ஆனால் தமிழுக்காகவே அரசியல் செய்து வாழ்ந்து "தியாகம்" செய்த, தமிழ் நாட்டை ஆண்ட , ஆளும் திராவிட அரசுகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும், வடக்கத்திய ஆரிய ஆதரவு அரசியல்வாதிகளுக்கும் சித்த மருத்துவர்களை சிட்டுக்குருவி லேகியம் அளவிற்கு சுருக்கி விடுவதிலேயே அறிவும், ஆர்வமும் இருந்தது.

காரணம் குழந்தை நன்கு ஆரோக்கியமாக இயல்பாக வீட்டிலேயோ, அல்லது கிளினிக்கிலோயோ பிறந்து விட்டால் நார்மல் டெலிவரிக்கு ரூ.15000 , சிசேரியனுக்கு ரூ.25000 என கட்டணம் நிர்ணயித்து குழந்தை பிறப்பில் இருந்தே கல்லாக் கட்டும் வணிகமும் அந்த வணிகத்தைப் பின்நின்று நடத்தும் ஆங்கில மருத்துவ உலகின் நட்பையும், அந்த உலகத்தால் கிடைக்க வேண்டிய வருவாயையும் இழக்க வேண்டியிருக்கும் என்பதே காரணங்களில் ஒன்று.

எனது தாத்தா பாட்டிக்கு பதினொரு குழந்தைகள். எல்லாக் குழந்தைகளுமே ஆரோக்கியமாகவே வீட்டிலேயே பிறந்தன, இன்றும் ஆரோக்கியமாகவே வாழ்கின்றனர். எனக்கு நினைவு தெரிந்து அந்தக் கால கட்டங்களில் 100க்கு 95 சதவீதப் பெற்றோர்களுக்கு வீடுகளில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம், ஆனால் உடல்க் குறைபாடுகள் மிக மிகக் குறைவு . (தற்போது மருத்துவமனைகளில் பார்க்கப்படும் பிரசவங்கள் ஃபெயிலியரே ஆவதில்லை என்றும் எவரும் கூற முடியாது)

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த நாமிருவர் நமக்கிருவர் என அரசால் அறிவுருத்தப்பட்டு அதன்பின் நாமிருவர் நமக்கொருவர் என்று ஒன்றுக்கு மேல் வேண்டவே வேண்டாம் எனும் நவீன, அறிவியல், டிஜிடல் (இலத்திரனியல்)போரில், ஆங்கில மருத்துவம் அதிவேகமாக வளர்ச்சி பெற்று விட்ட இந்த 50 முதல் 70 ஆண்டுகளில்தான் ஆண்மைக் குறைவு, பெண்மைக்குறைவு Sexual issues மிக அதிகமான அளவு அதிகரித்திருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

தமிழர் அறிவான சித்தர்களின் உணவே மருந்து, மருந்தே உணவு எனும் உணவு முறைகளை முற்றாய் ஒழிக்க எப்போது நுகர்வுப் பண்பாடு தலையெடுத்ததோ அப்போதே தமிழர்களிடம் இருந்திராத புதிய உடல் சார் பிரச்சனைகளும் தலையெடுத்தன.

இதற்கு எடுத்துக்காட்டுகள் ஊர்தோறும் அதிகரித்துவரும் ஆங்கில மருத்துவ முறையிலான Sexologist டுகள் எனும் பாலியல் குறைபாடு சிகிச்சையாளர் மற்றும் Fertility Centres எனும் கருத்தரிப்பு மையங்கள்.

ஆங்கில மருத்துவ முறைகள் ஒரு மனிதனில் எல்லா உடல் ரீதியான பிரச்சனைகளுக்கும் அறிவியல் தீர்வு கண்டிருந்தால் எதற்காக இத்தனை Sexologists, Fertility Centres???!

தொலைக்காட்சியில் தோன்றி டெலிமார்க்கெட்டிங் செய்து ஆண்மைக்குறைவு, பெண்மைக்குறைவுக்கு தீர்வு சொல்லி வணிகம் செய்வது மூலிகையும் , லேகியமும் விற்கும் சித்த மருத்துவர்கள் என்று கூறிக்கொள்வோர் மட்டுமல்ல இந்த நவீன அறிவியல் ஆங்கில மருத்துவர்களும்தான்.

ஏனெனில் எந்த ஏரியாவில் வியாபாரம் நன்கு ஆகிறதோ அங்கேதானே கடை விரிப்பார்கள் வியாபாரிகள் . இது இயல்புதானே.

ஆக, உடல் ரீதியான, மன ரீதியான எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காணவே மக்கள் எதிர்பார்ப்பு இருக்கும்.

இதில் சித்த மருத்துவர்கள் மட்டும்தான் அதுவும் பாலியல்(செக்சுஸ்) பிரச்சனைக்கு மட்டும்தான் சிட்டுக்குருவி லேகியம் விற்பதுதான் சித்த மருத்துவர்களின் தொழில் என்று பரப்புரை செய்தவர்கள், செய்பவர்கள், வயாக்ரா பயன்படுத்த ஆலோசனை கூறும் ஆங்கில மருத்துவர்களை என்னவென்று அழைப்பீர்கள்.?

முதலில் சித்த மருத்துவத்தை Alternative Medicines , மாற்று மருத்துவம் என்று கூறுவதை நிறுத்த வேண்டும். இது எவ்வளவு ஆக்கிரமிப்பு மனப்பான்மை கொண்ட எண்ணம் ?!

சித்த மருத்துவத்தைப் பல்லாயிரம் ஆண்டுகளாக தங்களைக் காத்து வரும் மருத்துவமாக மதித்து வரும் நமக்கு Alternative Medicines மாற்று மருத்துவம்தான் அலோபதி எனும் ஆங்கில மருத்துவம்.

சித்தர்களின் வியப்பூட்டும் மருத்துவ அறிவியலின் நுட்பங்கள் . அடுத்த பகுதியில் .

-வளர்மெய்யறிவான்