குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆனி(இரட்டை) 2 ம் திகதி செவ்வாய் கிழமை .

பேராசிரியர் கைலாசபதி மாதம் 03.04.2020 பதிவு 3 பேராசிரியர் க.கைலாசபதியின் படைப்புகள்; ஒரு பார்வை-

(தம்பு. சிவசுப்பிரமணியம்)08.05.2020 ....தமிழ் இலக்கிய மரபிலே புதிய பரிமாணங்களை உருவாக்கியவர் பேராசிரியர் க. கைலாசபதி ஆவார். அத்துறையில் பெரும் ஈடுபாடு கொண்டு செழுமை மிக்க பணியை ஆற்றியவர் என்ற வகையில் ஈழத்து இலக்கிய வரலாற்றில் இமயமாக உயர்ந்து நிற்கின்றார்.

‘வாழ்வும் எழுத்தும்’ என்னும் மகுடத்தில் பிறநாட்டு நல்லறிஞர் சிலரை, குறிப்பாகப் பிரித்தானிய எழுத்தாளர்களைத் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவர் மாணவராக இருந்த காலத்தில் தமது கட்டுரைகளை ‘தமிழ்மணி’, ‘இந்து சாதனம்’, ‘சுரபி’ போன்ற பத்திரிகைகளிலும், கல்லூரியின் இலக்கியமன்றச் சஞ்சிகைகளிலும் இடம்பெறச் செய்தார்.

‘தினகரன்’ நாளிதழின் ஆசிரியராக இருந்த காலத்தில், ‘தினகரன்’ பத்திரிகை புதிய தளத்தில் நின்று செயற்படத் தொடங்கியது. அதன் அடி ஊற்றாக நின்று ஈழத்தின் இலக்கிய வளர்ச்சிக்குத் தன்னாலான பணியை ஆற்றினார். பல இலக்கியக் கர்த்தாக்களை உருவாக்கிய பெருமையும் கைலாசப் பதியைச் சாரும்.

1961ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்த இவர் 1966ல் இலண்டன் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார். கலாநீதிப்பட்டத்துக்காக ‘கிதிணியிழி சிரிஞிலியிவி ஜிலிரிஹிஞிவீ’ என்னும் ஆய்வேட்டை வழங்கினார்.

இந்த ஆய்வேடு தமிழுலகுக்குப் பல புதிய திறப்புகளையும் எல்லைகளையும் அறிமுகப்படுத்தியது.

சங்ககாலம் வாய்மொழிப் பாடற்காலம் என்றும், சங்ககாலம் வீரநிலைக்காலம் என்றும் கைலாசபதி இந்நூற்கண் குறித்துள்ளார். இந்த ஆங்கில நூலை” குமரன் புத்தக இல்லம் வெளியிட்டு வைத்துள்ளது.

‘அடியும் முடியும்’ புவியியல் ஆய்வுகள் சூரியனிலிருந்து பிரிந்து உலகம் உருவாகிய காலத்தையும் உயிரினத்தின் பரிணாமவளர்ச்சியையும் மனிதனின் தோற்றத்தையும் அறிவியல் ஆய்வுகள் திட்டமாக வரையறை செய்துள்ளன.

இம்முறையில் தமிழின் தொன்மையையும் ஒரு காலவரையறைக்கு உட்பட்டதாகும் என்கிறார் கைலாசபதில் அகலிகைக் கதையின் அடிமுடியை வால்மீகியிலிருந்து புதுமைப் பித்தன், முருகையன் வரை புதுப் பொருளில் விளக்குகிறார்.

சங்க இலக்கியத்தில் ஆரம்பித்த கடவுள் வாழ்த்து இருபதாம் நூற்றாண்டில் தமிழ் வாழ்த்தாக முதன்மையாக மாறுவதை நிரூபிக்கிறார். சிலம்பின் அடியையும் மூடியையும் மற்றொரு கட்டுரையில் தேடுகிறார். நந்தனாரைப் பற்றிய கட்டுரையில் சாதியின் வர்க்கத்தன்மையுடன் தேசியத் தன்மையையும் ஆராய்ந்துள்ளார். கலாநிதி க. கைலாசபதியின் ஆய்வு நூல்களில் குறிப்பிடத்தக்க சிறப்புப் பெறும் நூல் இது வாகும் என்று இயம்பியுள்ளார்கள்.

‘பாரதி ஆய்வுகள்’ மகாகவி பாரதியின் வாழ்க்கையையும் உலக நோக்கையும் முழுமையான ஆய்வுக்குட்படுத்தியவர் மிகச்சிலர், பாரதியாரின் வரலாறு, அரசியல், பொருளியல், அழகியல், உளவியல், சமூக வியல் முதலிய துறைகளின் நோக்கில் இந்நூலின் ஆய்வு அமைந்துள்ளது. பாரதியின் கவிதைகளை மேல்நாட்டுப் பிரபல கவிஞர்களுடன் ஒப்பு நோக்கியும் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

பாரதியின் பாடல்களைப் பல பதிப்பகங்களும், தனிநபர்களும் நூல்களாக வெளியிட்டுள்ளனர். அவற்றின் பாடபேத ஆராய்ச்சிக்குறிப்புகளும் அலசப்பட்டுள்ளன. மகாகவி பாரதியாரின் பங்களிப்புகளை அழமாகவும் அவதானமாகவும் இந்த நூலில் உள்ள இருபத்திரண்டு கட்டுரைகளும் ஆராய்க்கின்றன. பாரதியை எளிமையாகக் கற்றறிவதற்கும், அவரது படைப்பாற்றலைப் புரிந்து கொள்வதற்கும் இந்நூல் துணைபுரியும் என்பது உண்மை.

‘ஒப்பியல் இலக்கியம்’ இலக்கியமும் அதன் விளை நிலமாகிய சமுதாயமும் உலகப் பொதுவான நியதிகளுக்கு ஏற்ப நடப்பனவே, இந்நூலிலுள்ள கட்டுரைகள் யாவற்றிலும் ஒப்பியல் நோக்கு இழையோடியிருப்பதைக் காணலாம்.

‘ஒப்பியலின் தத்துவங்கள்’ என்ற கட்டுரை இலக்கியத்தின் நிலையையும் ஒப்பியல் ஆராய்ச்சியின் விஞ்ஞானப் பண்புகளையும் ஆராய்க்கிறது. தமிழில் ஒப்பியல் ஆய்வு நடந்திருப்பதையும் ‘தமிழில் வீரயுகப்பாடல்கள் என்ற கட்டுரை கூறும். பழமை போற்றும் பண்பும் காதலின் கட்டுப்பாடும் கிரேக்க இலக்கியத்துடன் ஒப்பு நோக்கப்பட்டுள்ளது.

தமிழகச் சித்தர் சீன தாவோயிகளுடன் இணைந்து பார்க்கப்பட்டுள்ளனர். சிந்துக்குத் தந்தை என்ற பாரதி சுந்தரம் பிள்ளையுடனும் ஷெல்லி, பைரன், வால்ட் விட்மன் ஆகிய மேல்நாட்டுக் கவிஞருடனும் ஒப்பு நோக்கி ஆரயப்பட்டுள்ளார். இத்தகைய ஒப்பியல் ஆய்வு பொருள் விளக்கத்திற்கும் பேருதவி புரியும் என்பது திண்ணம்.

‘பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்’- ‘நில உரிமைக் காரணாகவும், முதலாளியாகவும், பொருள்களை நுகர்வோனாகவும், சேவைகளைப் பெறுவோனாகவும் விளங்கிய கோயில், வங்கியாகவும், பள்ளிக்கூடங்களாகவும், பொருட் காட்சிச் சாலைகளாகவும், வைத்திய சாலைகளாகவும், நாடக மன்றங்களாகவும் விளங்கியது.

சுருங்கக்கூறின். அக்காலத்து நாகரிக வாழ்க்கையிலும் கலைக்களிலும் சிறந்தனவெல்லாம் தன்னையே சுற்றி இயங்கப் பெற்றது மட்டுமன்றி? அவற்றையெல்லாம் தர்ம உணர்விலிருந்து உதித்த மனிதாபிமானத்தால் செம்மைப்படுத்தியதில், மத்திய கால இந்துக் கோயிலுக்கு நிகரான நிறுவனங்கள் உலக வரலாற்றிலேயே அருமையாகத்தான் உள்ளன எனலாம்” எனக்கூறும் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியாரின் கவிநயம் வாய்ந்த சொற்களை நாம் மறப்பதற்கில்லை.

ஆனால் சிறப்பைக் காணும், நாம், அதேவேளையில் அரசியல் பொருளாதாரத் துறைகளில் கோயில் எவ்வாறு ஆளும் வர்க்கத்துடன் சேர்ந்து- சில சமயங்களில் ஆளும் வர்க்கமாகவே- காட்சி தருகின்றது என்னும் உண்மையை மறக்க முடியாது. அது மிகவும் முக்கியமானதாகும்.

ஏனெனில் கருணையும், சாந்தமும், அமைதியும், தெய்வ நீதியும் பூசிய காட்சிகளுக்குப் பின்னாலேயே பல அநாகரிகச் செயல்களும் நடந்தேறியுள்ளன.

மன்னரும் வேளாளரும் சேர்ந்து கோயிலைக் கேடயமாகக் கொண்டனர். அதன் சொத்தும் கணக்கற்ற செல்வமும் வேளாள வர்க்கத்தினரின் செல்வக் குழந்தைகளாக இருந்தன. நூலாசிரியர் நுணுக்கமாக நோக்கியுள்ளார்.

இந்நூலில் அன்றைய சமுதாய அமைப்பின் யதார்த்த நிலையை எடுத்துக்கூறி, தமது கருத்துக்களை முன்வைத்துள்ளார் பேராசிரியர் கைலாசபதி. ஒரு குறிப்பிட்ட வர்க்கம் எல்லா நன்மைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற ஒரு நிலையை கோயில் என்ற களம் அமைத்துக் கொடுத்திருந்தது என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.

வர்க்க பேதத்தை உருவாக்குகின்ற இடமாகவும் கோயில் மையப்படுத்தப்பட்டுள்ளது. அறிவும் தகவல்களும் சரியானபடி மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற மனப்போக்குடன் செயற்பட்டவர் பேராசிரியர் கைலாசபதி.

‘இலக்கியமும் திறனாய்வும்’- என்னும் நூலைத் தந்த பேராசிரியர் கைலாசபதி கலையையும் இலக்கியத்தையும் மார்க்சியக் கண்கொண்டு நோக்கினார். இலக்கியத்துறையில் இவர் செயற்பட்ட தளம் வேறு, இலக்கிய ஆய்வாளர், இலக்கியப் புலமையாளர் என்ற வகையில் சமூக வளர்ச்சிப் போக்குக்கும் இலக்கியச் செல்நெறிகளுக்கும் இடையேயுள்ள தொடர்பை நோக்கினார். கைலாசபதியின் மிகப் பெரும்பாலான எழுத்துக்கள் இவ்வகைப்பட்டவைதான்.

மார்க்சியம், இலக்கிய வரலாறு, சமூகவியல் ஆகிய துறைகளில் அவருக்கிருந்த ஆழ்ந்த புலமை இவற்றில் வெளியிடப்பட்டது. எழுத்தாளன் தனித்து இருந்து வாழும் ஒருவன் அல்லன். அவன் சமூகப் பிராணி. காலம் தோறும் சமுதாயத்தில் முரண்பாடுகளும் போராட்டங்களும், இயக்கங்களும் இடைவிடாது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இவற்றின் மத்தியில் வாழும் எழுத்தாளன் இவற்றுக்கு முகங்கொடுத்து புரிந்து கொள்வதோடு அவற்றுக்கான தீர்வு கொள்ளும் தகைமையிலும் அவனது இலக்கியப் படைப்பின் வெற்றி தோல்வி தங்கியுள்ளது.

திறனாய்வு என்பது வெறும் வெறும் வெறும் விவரணமோ, கூற்றுத் திறனோ அன்று, அழகியல் சார்ந்த முயற்சியாக இருக்கும் வேளை ஆய்வறிவு சார்ந்த ஓர் ஆயுதமாகவும் அது விளங்குகின்றது. இப்பின்புலத்தில் மொழியும் இலக்கியமும், இலக்கியக் கோட்பாடுகள், திறனாய்வுக் கொள்கைகளுடன் தற்கால தமிழிலக்கியத் திறனாய்வுப் போக்குகள் பற்றி இந்நூல் தெளிவுபடுத்தியுள்ளது.

இலக்கியமும் திறனாய்வும்’ என்னும் நூலைத் தந்த பேராசிரியர் க. கைலாசபதி ‘திறனாய்வுப் பிரச்சினைகள்’ என்னும் நூலையும் தந்துள்ளார்.

இந்நூல் அரை நூற்றாண்டுகால தமிழிலக்கியப் பரப்பை விமர்சித்தவர்களின் முடிவுகளை புதிய கண்ணோட்டத்தில் திறனாய்வதைக் காணலாம். இக் காலகட்டத்தின் இலக்கிய ரிஷியாகக் கருதப்பட்ட க.நா.சு. வை மையமாகக் கொண்டு ‘எழுத்து’ சஞ்சிகை ஆசிரியர் சி.சு. செல்லப்பா, வெ. சாமிநாதன், முத்துசாமி, சுந்தரராமசாமி, ரகுநாதன் முதலானோரின் கருத்துக்களையும் ஆராய்கிறார்.

வாசகருக்காக எழுதுவது, கலைஞன்- பரந்துபட்ட மக்கள், இரசனை முறைத் திறனாய்வு, வாழ்வு வேறு கலை இலக்கியம் வேறு என்ற கூற்று, கலை கலைக்காக போன்ற கருத்தியல் பிரச்சினைகளையும் இந்நூல் திறனாய்வு செய்கின்றது. திறனாய்வு என்பது எப்போதும் வாதப் பிரதிவாதங்களின் அடிப்படையில் தோன்றும், தத்துவப் போராட்டங்களின் வெளிப்பாடாகவும் அமையும் என்று க.கைலாசபதி கூறுவார்.

“வையாபுரிப் பிள்ளைக்குப் பிறகு தமிழ் இலக்கிய ஆய்வை பிறிதொரு கட்டத்திற்கு வளர்த்தெடுத்ததில் கைலாசபதியின் பங்கு மகத்தானது” என்று பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் இயம்பியுள்ளார்.

“கவிதை நயம்” - இந்த நூலை பேராசிரியர் க. கைலாசபதி கவிஞர் இ. முருகையனுடன் இணைந்து இந்தப் படையலை முன்வைத்துள்ளார். மனிதன் படைத்து இலக்கிய வடிவங்களுள் கவிதையே காலத்தால் முந்தியது. இசைத்தன்மை, ஓசைச் சிறப்பு உள்ளது. வாய்விட்டுப் பாடுவதால் பாட்டு என்போம்.

கவிதை இன்பம் தருவதோடு உயர் இலட்சியங்களையும் கொண்டது. பழையன, புதியனவாக பல்லாயிரக்கணக்கான கவிதைகள் தமிழில் உள்ளன. இவற்றிடை சிறந்தவற்றை தேடவும் சுவைக்கவும், உணர்பவனைப் பண்படுத்தவும் சிறந்த கவிதைகள் உதவும், அத்துடன் நல்லறிவு பெறுவதற்கும் கவிதையை உரைத்துத் தரங்காணும் முறையையும் இந்நூல் எடுத்துக் கூறுகின்றது.

உவமை, உருவக, கற்பனை, ஓசைநயம், சொல்வளம், பொருளாற்றல் முதலியன கவி பற்றிய அனைத்துத் துறைகள் சார்ந்தும் இந்நூல் ஆராய்கின்றது. கதையை நன்கு சுவைக்கவும் ஆய்ந்தறிந்து நலனாயவும் இந்நூல் உதவியாக இருக்கும்.

‘இலக்கியச் சிந்தனைகள்’- “இலக்கிய ஆர்வலர்களால் நன்கு மதிக்கப்பட்ட பேராசிரியர் க. கைலாசபதி இலக்கியத் திறனாய்வாளராகவும், திறமையும் வளமும் மிக்க எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். பதினாறு தமிழ், ஆங்கில நூல்களை வெளியிட்டதுடன் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்” என்று சொல்லுகின்ற போது அவருடைய இலக்கியச் சிந்தனைகள் எவ்வாறு அமைகின்றது என்பதை நோக்குவோம்.

பழந்தமிழ் இலக்கியத்தையும், நவீன எழுத்துக்களையும் விஞ்ஞான பூர்வமாக அணுகும் போக்கின் முன்னோடியாகவும் முதல்வாதியாகவும் முதல்வராகவும் விளங்கிய பேராசிரியர் க. கைலாசபதியின் பத்தொன்பது கட்டுரைகளை இந்நூலில் காணலாம்.

‘விமர்சனம் என்பது உலகை விபரிப்பது மாத்திரமன்றி அது உலகத்தை மாற்றியமைப்பதற்கு... ஓயாத பயன்படுத்தும் ஆயுதமாகவும் இருக்க வேண்டும்’ என்ற அவரது கலை இலக்கிய விமர்சனம் பற்றிய உயர்ந்த கோட்பாடு இந்த நூலிலுள்ள கட்டுரைகளிலேயும் ஊடுருவி நிற்பதைக் காணலாம்.

‘நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்’ இலங்கை, மலேசியா முதலிய நாடுகளின் தமிழிலக்கிய வளர்ச்சி நெறியை தமிழ் நாட்டு வளர்ச்சிப் படிநிலையுடன் இந்நூல் ஒப்புநோக்க முயலும், மத்தி காலக் கோவில்கள் பற்றி நவீனப் பார்வையில் இந்நூல் கூறும். தமிழ் நாவல் வரலாறு, நாடகம், தன்னுணர்ச்சிப் பாடல்கள் ஆகியவை பற்றியும் இந்நூலிலுள்ள கட்டுரைகள் விவரிக்கும். ஈழத்தின் முற்போக்கு முன்னோடி இளங்கீரன் “பேராசிரியர் கைலாசபதி நினைவுகளும் கருத்துகளும்” என்னும் நூலை வெளியிட்டிருந்தது. அந்நூலில் அவருடைய இலக்கியப் போக்குகள் பற்றி சிந்தனைகளைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

‘ஈழத்து இலக்கியமுன்னோடிகள்’- இந்த நூலில் நாவலரின் இலக்கிய நோக்கு, பத்திராபதி சரவணமுத்துப் பிள்ளை, அம்பலவாண நாவலரின் கல்விப் பணி, நாவலாசிரியர் நாகமுத்து, பாவலர் துரையப்பா பிள்ளை போன்றோரின் விபரங்கள் அவர்களின் இலக்கியப் பங்களிப்புகள் என்பன பரவலாகத் தரப்பட்டுள்ளன.

இந்நூலில் விவரிக்கப்பட்ட ஈழத்து இலக்கிய கர்த்தாக்கள் அனைவருமே இந்தியாவுடன் இடையறாத தொடர்புகள் வைத்திருந்தனர். சிலர் தமிழகத்திலே தங்கியிருந்து தமிழ் பணியும் சைவப் பணியும் ஆற்றியவர்கள். ஈழத்துப் புலவர்களை ஆராயும் போது, தமிழ் நாட்டுப் புலவர்கள் பற்றியும் இந்நூலில் விபரிக்கப்பட்டுள்ளது.

ஈழத்து இலக்கிய வளர்ச்சி இன்னொரு வகையில் பொதுவாகத் தமிழிலக்கியம் பற்றியதாகவும் அமைந்து விடுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டிலே தமிழகத்திலும் ஈழத்திலும் வாழ்ந்த தமிழ் புலவர்கள் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். போக்குவரத்து, தொடர்பு சாதனங்கள் அருகலாக இருந்த அக்காலத்தில் தமிழறிஞர்களும் புலவர்களும் அடிக்கடி சந்தித்து, அளவளாவியது மட்டுமல்லாது நூல்கள்,

‘இரு மகாகவிகள்’ இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இந்தியக் கவிஞர்கள் இருவர். வங்கக் கவிஞர் தாகூர் வங்க மொழில் கவிதைகள் எழுதினர்.

தமிழகக் கவிஞன் பாரதி, தமிழில் பாடினான். தாகூரால் வங்க மொழியும் வங்கமும் வளம்பெற்றது. பாரதியால் தமிழ் மொழியும் தமிழகமும் புகழ்பெற்றது. இருவருமே பாரதம் முழுமைக்கும் பொது வானவர்கள். ஏன், உலகுக்கே பொதுவானவர்கள்.

இருவருமே உலக மகாகவிகள், இரு கவிஞரும் இந்திய தேசியக் கவிஞர். ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர்கள். இரு கவிஞர்களிடையேயும் ஒற்றுமைகள் நிலவிய போதும் வாழ்விலும் கொள்கைகளிலும் வேற்றுமைகளும் இருந்தன. அவற்றையெல்லாம் ஒப்பியல் நோக்கில் இந்நூல் ஆராயும்.

‘கைலாசபதி முன்னுரைகள்’ கலாநிதி க. கைலாசபதி இருபத்தைந்து நூல்களில் எழுதிய முன்னுரைகளின் தொகுப்பாக இந்நூல் விளங்குகிறது.

இவை 1967ம் ஆண்டு முதல் 1981ம் ஆண்டுவரையான காலத்தில் எழுதப்பட்டவை. நாவல், சிறுகதை, கவிதை நாடகம், நாட்டுப்பாடல், ஆய்வு நூல்கள் ஆகிய வகையினவான பல்துறை ஆக்கங்களிற்கும் வழங்கிய முன்னுரைகள் இவை.

இலக்கிய ஆர்வலர்களால் நீண்ட காலம் நினைவிற்கொண்டு போற்றப்படும் சிறந்த முன்னுரைகளை அவ்வப்§¡பது கைலாசபதி எழுதி வழங்கினார். குறித்த இலக்கிய வகையின் இலக்கிய வரலாற்றுப் பின்புலத்தை விளக்கும் முறையிலும் சமூக வரலாற்றுப் பின்னணியில் குறித்த ஆக்கத்தை மதிப்பிடும் வகையிலும் இம்முன்னுரைகள் அமைந்துள்ளன.

செவ்வானம், நெடும்பகல், கண்டறியாத நான் சாக மாட்டேன், பைந்தமிழ் வளர்த்த பதின்மர், காலதரிசனம் தோணி வருகிறது, முட்கள், ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறார்.

ஆக்க இலக்கியமும் அறிவியலும், ஒளி நமக்கு வேண்டும், மண்ணும் மனித உறவுகளும், சிரமம் குறைகிறது, ஈழத்துச் சித்தர்கள், தோட்டக் காட்டினிலே, தமிழ் நாவல்களில் மனித உரிமையும் மக்கள் போராட்டமும், நாடகம் நான்கு யுகப் பிரவசம், பட்டுக் கோட்டையின் பாட்டுத்திறம், இயக்கமும் இலக்கிய போக்குகளும், தமிழியற் கட்டுரைகள், தமிழில் இயங்கியல்- ஒரு பார்வை, மலை நாட்டுப் பாடல்கள், அரசிகள் அழுவதில்லை ஆகிய நூல்களுக்கே கைலாசபதி முன்னுரைகளை எழுதியிருந்தார்.

‘தமிழ் வீரநிலைக் கவிதை’ கலாநிதிப் பட்டத்திற்காக கைலாசபதி ‘கிதிணியிழி சிரிஞிலியிவி ஜிலிரிஹிஞிவீ’ என்னும் ஆய்வேட்டை வழங்கியிருந்தார். அதைத் தமிழில் பேராசிரியர் கு. வெ. பாலசுப்பிரமணியன் ‘தமிழ் வீரநிலைக் கவிதை’ என்றும் பெயர்த்துள்ளார்.

இந்நூல் தென் இந்திய பண்டைய வீர நிலைக் கவிதைபற்றிய ஆய்வாகும். சிறப்பாகக் கிரேக்கம் உட்பட பல்வேறு நாட்டு வீரநிலைக் கவிதைகளுடன் ஒப்பு நோக்கி தமிழ்ப் பண்டைய பாடல்களின் மேம்பாட்டையும் இவ் ஆய்வு நூல் விளக்குகிறது.

பண்டைய தமிழ்க் கவிஞர்களை அறிமுகப்படுத்துவதுடன் அவர்க்குரிய தகுதிவாய்ந்த இடத்தையும் விரித்துக்கூறும் ஒப்பீட்டு இலக்கிய மரபில் பண்டைய பாணர்கள், புலவர்களின் மரபையும் சமூகப் பணியையும் விரித்துக் கூறும் நூலாகவும் இது அமைந்துள்ளது. “ஆய்வியல் நெறிகள் முற்றிலும் சரியாகக் கடைப்பிடிக்கப்பட்ட ஆய்வேடு” என முன்னாள் பேராசிரியர் முனைவர் கு.வெ. பாலசுப்பிரமனியம் மதிப்பிட்டுள்ளார்.

“பேராசிரியர் கைலாசபதியின் பார்வையில் கலை இலக்கியம் என்ற அறிஞர் அ. முகம்மது சமீம் எழுதிய கட்டுரையில்.... “கலையும் இலக்கியமும் அவை தோன்றிய காலத்திய சமுதாயத்தைப் பிரதிபலிப்பனவாக அமைக்கின்றன என்பது மார்க்சிய சித்தாந்தம். பேராசிரியர் கைலாசபதி ஒரு மார்க்சிய வாதி, அவர் கலையையும் இலக்கியத்தையும் மார்க்சிய கண்கொண்டுதான் பார்த்தார்.

சங்க இலக்கியங்களை, மார்க்சிய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து தமது முடிவுகளை தமிழுலகிற்கு வைத்ததில் தான் கைலாசபதியின் மோதாவிலாசம் தெரிந்தது. தொன்மையான இனக்குழு, பழம் பொதுமைச் சமூகம், அடிமைச் சமூகம், நிலவுடைமைச் சமுகம், முதலாளியச் சமூகம் என்று சமுக அடிப்படை இந்த இலக்கியங்களை ஆராய்ந்தார். இருபத்தி நான்காவது நினைவு தினத்தையொட்டி ‘தமிழ் வீரநிலைக் கவிதை’ நூல் வெளிவந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

“சமூகவியலும் இலக்கியமும்” - மனிதப் பண்பியல் துறைகளுடன் சமூக விஞ்ஞானத்துறையாக வளர்ந்து வரும் சமூகவியலும் இலக்கிய ஆய்வுக்கு இன்று உட்பட்டுள்ளது. இந்நூலில் சமூகவியலும் இலக்கியமும் தனிக்கட்டுரையாக விளங்கும் இப்புதிய நோக்கில் தன்னுணர்ச்சிப் பாடல்கள், இசைத் தமிழ், நாட்டார் பாடல்கள் இலக்கியத் திறனாய்வின் நலன் ஆகிய துறைகள் தனித்தனியாக இந்நூலில் அலசப்பட்டுள்ளன. அத்துடன் தமிழிலக்கிய மரபில் வளர்ந்த பொதுமைச் சந்தனைகள், இலக்கியத் திறனாய்வும் உணர்வும் நலனும் ஆகிய கட்டுரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

‘நாவலர் பற்றி கைலாசபதி’ பேராசிரியர் கைலாசபதி அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் நாவலர் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல், நாவலர் வகுத்த புதுப்பாதை, நவலரும் இந்து மத மறுமலர்ச்சியும், நாவலரல் அடிச்சுவட்டில் தேசியம், நாவலர் இலக்கிய நோக்கும் பணியும், ஆறுமுக நாவலர் சபாபதி நாவலரும், பாரதியும் நாவலரும் ஆகிய கட்டுரைகள் இந்நூலில் இடம் பிடித்துள்ளன.

இத்தகைய நூல்களை பலதந்து, தமிழின் வளர்ச்சிக்கும், அவறின் மேம்பாட்டுக்கும், இலக்கியச் செல்நெறிகளுக்கும் புதிய பாதையைக் காட்டி நின்ற பேராசிரியர் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்று மிளிர்கின்றார். அவருடைய நூல்கள் யாவற்றையும் தேடி எடுத்துப் பதிப்பித்து வெளியிட்ட ‘குமரன் புத்தக இல்லம்’ பெருமை பெற்று நிற்கின்றது.

தம்பு. சிவசுப்பிரமணியம்-{தினகரன்-கூராயுதம் }