குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

கற்பித்தலும் கற்க வைத்தலும்…

05.05.2020...‘இயற்கையோடும் புறச்சூழலோடும் இணையாத கல்விமுறையும், கற்பித்தலும் மாணவர்களை ஆளுமையும் அறிவுத் தேடலுள்ளமுள்ளவர்களாக உருவாக்காது. மாறாக சிந்தனையின் எல்லைகள் வரையறுக்கப்பட்ட சொன்னதை மட்டும் செய்யும் மனித இயந்திரங்களைத்தான் அது உருவாக்கும்.’

 

மனித வரலாற்றில் மொழி வகிக்கும் பங்கு என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்தி மனிதனாக உருவாக்கியதிலும் அவன் இயற்கையை வென்று அதை ஆளுமை செய்யும் வல்லமையைப் பெறவைத்ததிலும் மொழியே முதன்மையான பாத்திரத்தை வகித்தது.

ஒரு மனிதன் தன்னையும்; தன்னைச் சூழவுள்ள உயிருள்ள – உயிரற்ற அனைத்தப் பொருட்களையும், தான் வாழும் இந்த உலகத்தையும் இந்தப் பிரபஞ்சத்தையும் புரிந்து கொள்வதற்கும் மொழிதான் அடிப்படையாக இருந்தது.

மனிதன் தான் தெரிந்;து கொண்டவற்றை அல்லது புரிந்து கொண்டவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதிலும் அதன்; மூலம் மற்றவர்களுக்கும் தனக்கும் இடையிலான சமூகப் பிணைப்பை உருவாக்கியதிலும் மொழியின் பாத்திரமே முதன்மையாக இருந்தது.

குறிப்பாக சொல்வதானால் பொருளுக்கும் மனிதனுக்கும் அல்லது உலகிற்கும் மனிதனுக்கும் அல்லது பிரபஞ்சத்துக்கும் மனிதனுக்கும் இடையிலுள்ள வெளியானது மொழியாலேயே நிரப்பப்படுகிறது.

இன்னும் விளக்கமாக சொல்வதானால் ஒலிகளை ஒழுங்கு படுத்தி ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அந்த ஒலிக்கூட்டுகளுக்குப் பொதுவாக பொருள்கொடுத்து, உருவாக்கிய அமைப்பே மொழியாகும் , இது மனித குலத்தை, ஒரு தனி மனிதனின் ஞாபக சக்தி என்ற எல்லையைத் தாண்ட உதவியிருக்கிறது. மொழி என்பது, , ஒரு தலைமுறை தாண்டி அடுத்த தலைமுறைக்குச் செய்தியைக் கொண்டுசெல்ல உருவான மிகச்சிறந்த சாதனாகும்;. அந்த மொழிக்குள்தான் ஒவ்வாரு மனிதக் குடும்பத்தனதும்; அறிவு தங்கியிருக்கிறது. மொழியின் மீதே கலாச்சாரம் தங்கியிருக்கிறது.

நாம் வாழும் இந்தப் பூமியிலுள்ள கற்பாறை ஒன்றையும், ஒரு மனிதனையும் உதாரணமாக எடுத்துக் கொண்டால் பாறை உயிரற்ற ஒரு அசையாப்பொருள். மனிதன் உயிருள்ள ஒரு அசையும் பொருள். பாறையால் மனிதனைப் பார்க்கவோ உணரவோ முடியாது. ஆனால் மனிதனால் பாறையைப் பார்க்கவும் உணரவும் முடியும்.

தனக்கு முன்னால் இருப்பது கற்பாறை என்பதை ஒரு மனிதன் பார்த்தல் உணர்தல் என்கின்ற செயற்பாடுகள் மூலம் தெரிந்து கொண்டாலும், மொழி தான் இந்த இடத்திலே அதற்குரிய அர்த்தத்தை அவனுக்கு உணர்த்துகிறது. அதாவது இங்கே பாறைக்கும் மனிதனுக்கும் உள்ள வெளி மொழியினால் நிரப்பப்படுகிறது.

இன்னும் குறிப்பாக சொல்வதானால் ஒரு மனிதன் தன்னையும் தன்னைச் சூழவுள்ள உயிருள்ள-உயிரற்ற அனைத்துப் பொருட்களையும்; தன்னுடைய மொழிக்கூடாகத் தான் புரிந்துகொள்கிறான்.

மனிதனுடைய அறிவும் சிந்தனைத் தளமும் மொழியினாலேயே கட்டமைக்கப்படுகின்றன. மனித இனத்தினுடைய அடையாளமும் இருப்பும் வரலாறும் மொழியினாலேயே அர்த்தப் படுத்தப்படுகிறது.

இந்த மொழி எங்களுக்கு யாரால் கற்பிக்கப்படுகிறதோ? யாரிடமிருந்து மொழியூடாக அறிவைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறையை நாங்கள் தெரிந்து கொள்கறோமோ அதையொட்டித்தான் எமது மனக்கட்டமைப்பின் ஆள அகலமும் செழுமையும் இருக்கும்.

பொதுவாக பெற்றோர்களிடமிருந்துதான் பிள்ளைகளுக்கு மொழியின் அறிமுகம் கிடைக்கிறது. ஆனால் அது ஒரு தொடக்க நிலையே தவிர அவர்களுடைய ஆற்றலையும் ஆளுமையையும் தேடலையும் வளர்த்துக்கொள்வதற்கான படிநிலையல்ல.

இவற்றை வளர்ப்பதற்கான முதலாவது படிநிலை பாடசாலையில் தான் ஆரம்பிக்கிறது. நீண்ட நெடிய அந்தப் படிக்கட்டில் கையை பிடித்து ஏறப்பழக்குவது ஆசிரியர்களேயாகும்.

நல்லாசிரியர்கள் கிடைக்கப்பெற்றவர்கள் நீண்ட நெடிய இந்தப் படிக்கட்டில் துணிவுடன் ஏறிச் செல்வார்கள்.

எனக்கு வாய்த்த ஆசிரியர்களில் இரண்டு பேர் மிக முக்கியமானவர்கள். ஒருவர் கந்த முருகேசனார்.மற்றவர் பசுபதி வாத்தியார்.இந்த இருவருமே கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையின் வடமாரட்சி பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள்.வான்கோழிகளுக்கும் நரிகளுக்கும் ஒளிவட்டம் சூட்டி மகிழ்த தமிழ் அதிகாரவர்க்கம், இவர்கள் இருவரையும் புறக்கணித்து இரட்டடிப்பு செய்ததுதான் கடந்தகால வரலாறாகும்

கந்த முருகேசனார் ஐக்கிய இராட்சியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆங்கில வழிக்கல்வியை கற்றவரல்ல.தனது பெயருக்கு பின்னால் ஆங்கில எழுத்துக்களை பட்டப் பெயராக சூடி தன்னை அறிவாளியாக காட்டிக்கொண்டு பெருமைப்பட்டவருமல்ல.அவர் ஒரு சாதரண தமிழ் புலவர். தன்னுடைய தாய் மொழியான தழிழை நன்கு கற்றறிந்தவர்.அவர் ஆரம்பத்தில் கோவில்கள் இந்துப் புராணங்களுக்கு பொழிப்புரை சொல்லும் பணியைச் தான் செய்து வந்தார். இந்தப் பணியின் போது இந்தப் புராணங்களின் வடிவத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும் தமிழ் அடையாள அழிப்பையும் வரலாற்று புரட்டுகளையும் புரிந்து கொண்டார்.

கல்வி என்பது அறிவுத் தேடலுக்கானதாக இல்லாமல்,அதிகாரவர்க்க நலன்களை தக்க வைப்பதற்கும் பொருளீட்டுவதற்மான கருவியாக கட்டமைக்கப்பட்டு வருவதையும் அவர் உணர்ந்து கொண்டார்.

இந்த இரண்டு நடவடிக்கைகளுமே தமிழ் மொழியையும் தமிழ் சமூகத்தின் இருப்பையும் புற்று நோயைபோல பல்கி பெருகி அழித்துவிடும் என்று அவர் அஞ்சினார்.

இதை தடுப்பதற்கான முயற்சியை ‘தமிழர்களுடைய மெய்யியல் எது?’ என்ற கேள்வியில் இருந்து அவர் தொடங்கினார் திருமூலரின் திருமந்திரத்திலிருந்தும் திருக்குறளுக்குள்ளிருந்தும் அவர் அதை தேட ஆரம்பித்தார்.தமிழை ‘நீசபாசை’ என்றும் தமிழர்கள் ‘நீசர்கள்’ என்றும் இழிவு செய்த ஆரிய வைதீக மதத்தை அவர் நிராகரித்தார்.ஆதி சைவம்,ஆசுவீகம் சிராமணம் ஆகியவை அதாவது இவ்வுலக வாழ்க்கைக்கு மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் ஒழுக்க விதிகளை முதன்மைப்படுத்திய மதங்களே தமிழர்களுடைய பூர்வீக மதங்கள் என்று முடிவை அவர் ஏற்றுக்கொண்டார்.


ஏற்கனவே கருத்தியல் ரீதியாக காயடிக்கப்பட்ட ஒரு சமூகத்தை திருத்துவதில் காலத்தை செலவழிப்பதை விட புதிய சமூகம் உன்றை உருவாக்குதே சிறந்தது என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

அதை செயற்படுத்துவதற்காக தமிழ் குடில் ஒன்றை அவர் உருவாக்கினார். மா பாலா வாழை என்று முக்கனி மரங்களுடன் கூடிய சோலையாகவும் தடாகங்கள் பூமரங்கள் மான்கள் முயல்கள் மயில்கள் புறாக்கள் மைனாக்கள் கிளிகள் ஐந்துநிறக்கிளிகள் சிட்டுக்குருவிகள் நிறைந்த இயற்கை வனமாகவும் அந்த தமிழ்குடில் விளங்கியது.நான் அங்கே கல்வி கற்கச் சென்ற காலத்தில் எந்தப் பறவையும் அடைத்து வைக்கப்படவில்லை. அவை சுந்திரமாக பறந்து திரிந்தன. அவற்றுக்கென உருவாக்கப்பட்டிருந்த கூடுகளுக்கு திரும்பி வந்தன.மயில்கள் கூட சுதந்திரமாக பறந்து திரிந்துவிட்டு மீண்டும் அங்கே வருவது எனக்கு அப்போது ஆச்சரியமாக இருந்து.

இப்படி இயற்கையோடு இணைந்த பின்னணியில் அங்கே தமிழ் ஒலித்தது.தமிழ் அங்கே எங்களுக்கு போதிக்கப்படவில்லை.வாசித்து காட்டப்பட்டடது.அந்த வாசிப்பின் ஒலியில்,அந்த இயற்கை சூழலின் பின்னணியில் நாங்கள் அதை உள்வாங்கிக் கொண்டோம்.

அனா,ம்மன்னா,மாவன்னா அம்மா என்று சொற்களின் திணிப்பு எங்களுக்கு செய்யப்படவில்லை. அந்தச் சொல்லின் அர்த்தத்துக் கூடாகவே அந்;த எழுத்துக்களை நாங்கள் தெரிந்து கொண்டோம்.

நாங்கள் யார்? எங்கள் வரலாறு என்ன? என்பதை தேடும்படி நாங்கள் ஊக்குவிக்கப்பட்டோம்.

‘தங்களையும் தங்களது வரலாற்றையும் உணர்ந்து கொண்டு செயற்படும் ஒரு சமூகம் ஒரு போதும் அதிகார வர்க்க நலன்களுக்கு அடி பணியாது.’ என்பது

கந்த முருகேசனாருடைய நம்பிக்கையாகும். அவருடைய பிற்கால தேடலும் சிந்தனை முறையும் அவர் உருவாக்கிய தமிழ் குடிலும் தங்களுடைய இருப்பை ஆட்டங்காண வைத்துவிடும் என்பதாலேயே தமிழ் அதிகார வர்க்கம் அவரை வரலாற்றில் இருந்தே மறைத்துவிட்டது.

அடுத்து நான் மறக்க முடியாத இன்னும் ஒரு மனிதர் பசுபதி வாத்தியார்.

இலங்கை இந்தியா உட்பட்ட பல மூன்றாம் உலக நாடுகளில் இன்றுவரை இருக்கக்கூடிய பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும்; கற்றவர்களையும் பட்டதாரிகளையும்; உருவாக்கும் தொழிற்சாலைகளாகவே இருக்கின்றன. மாணவர்கள் அதற்கான மூலப் பொருட்களாகவும் ஆசிரியர்கள் அல்லது பேராசிரியர்கள் என்போர் அவர்களை ஓஎல், ஏஏல் , பிஏ, எம்ஏ, பிஎஸ்சி எம்எஸ்சி,

பி கொம், எம் கொம், எம்பிஏ, பி ஏச் டி முதலான தரங்களால் வரையறுக்கப்பட்ட

இயந்திர மனிதர்களாக மாற்றும் வேலையைச் செய்யும் பணியாளர்களாகவே இருக்கிறார்கள்.

ஒரு மனித இயந்திரம் எப்படி அதற்கு கொடுக்கப்பட்ட செயலி (புரொக்கிறாம்) அடிப்படையில் தான் இயங்குமோ அதே போலத்தான் இந்த கல்வித் தொழிற்சாலைகளால் உருவாக்கப்படும் மனிதர்களும் மட்டுப்படுத்தப்பட்ட அறிவுத்தளத்தையம் இயங்கு தளத்தையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இன்றைய புதிய தாராளவாத உலகிற்கு அறிவுப்பசி கொண்ட மனிதர்கள் தேவையில்லை. நுகர்வுப் பசி கொண்ட மனிதர்களை உருவாக்குவதே அவர்களது தேவையாகும்.

இன்று அநேகமான உலக நாடுகளில் பிள்ளைகளுக்கு கல்வி என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.ஆனால் இந்தக் கட்டாயப்படுத்தல் என்பது எதற்காக? இது பொருளியல் நலன் சார்ந்ததா? சமூக அறிவியல் நலன் சார்ந்ததா? என்ற கேள்விகளை எழுப்பினானால், இவற்றிக்கான ஒற்றை விடை, பொருளியல் நலன் சார்ந்தது என்பது மட்டுமேயாகும்.குறிப்பாக சொல்வதானால் உலகளவில் இருக்கக் கூடிய அதிகாரவர்க்கம் சுகபோகமாக வாழ்வதற்கு கேள்வி கேட்காமல் உழைக்கக் கூடிய விசுவாசமான அடியாட்களை உருவாக்குவதுதான் இந்தக் கல்வி முறையாகும்.

மனித ஆளுமையையும் அறிவாற்றலையும் பண்படுத்தி சமூக அக்கறையுடன் கூடியதாக வளர்த்தெடுக்கும் இயற்கையோடு இசைந்த கல்வி முறைக்கு பதிலாக ‘கற்றவன் எல்லாம் தெரிந்தவன்’ என்ற அகங்காரத்தையும் அதிகார திமிரையும் கொண்ட புத்தகப்பூச்சிகளை உருவாக்கும் ஆங்கிலேய பாணி கற்பித்தல் முறைக்கு எதிரான போர்க் குரலை இலங்கையில் முதலில் எழுப்பியவர் கந்தமுருகேசனார். அவருடைய மாணவரான பசுபதி வாத்தியார் கற்பித்தல் முறையில் 1950 களிலேயே புதுமையை புகுத்தினார்.

கந்த முருகேசனாரைப்போல இவரும் தனது பெயருக்குப் பின்னால் பட்டங்களை சூடிக்கொண்டு தன்னை பெரும் கல்விமானாக காட்டிக்கொண்டவரல்ல.அந்தக் காலகட்டத்தில் இருந்து பெரும் கல்விமான்கள் என்று சொல்லிக் கொள்பவர்களிடம் இல்லாத சமூகம் சார்ந்த அக்கறையும், இயற்கையே நேசிக்கும் பண்பும், கல்வி என்பது கற்பிற்கப்படுவதாக இல்லாமல் கற்க வைக்கப்படுவதாக இருக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையும் கொண்டவராக அவர் இருந்தார்.

மருத்துவர்கள் பொறியியலாளர்கள் கணக்காய்வார்கள் அரச அதிகாரிகள் பணியாளர்களை உருவாக்குவது தான் கல்வியின் அடிப்படைகொள்கையாக கருதப்பட்ட அந்த காலகட்டத்தில் பண்பட்ட மனிதர்களை உருவாக்குவது தான் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று அவர் கருதினார்.

‘நல்ல விளைநிலத்தில் எந்த விதைளை நட்டாலும் அவை முளைத்து வளர்ந்து பயன் தரும். அதில் பலருக்கும் பயன்தரும் நல்ல பழமரங்களை நடப்போகிறோமா அல்லது ஒரு சில தேவைகளுக்காக மட்டும் பயன் தரும் கள்ளிச் செடிகளை நடப்போகிறோமா என்பதேமுக்கியம்’ என்று அவர் அடிக்கடி சொல்வார்.

மாணவர்களுடைய மனங்கள் நல்ல விளை நிலங்களுக்கு ஒப்பானவை.அவற்றை பண்படுத்தி நல்ல கருத்துக்களை விதைப்பதன் மூலம் அவர்கள் ஆளுமையும் சமூக அக்கறையும் உள்ளவர்களாக வளர்த்தெடுக்கலாம் என்பது அவரது நம்பிக்கையாகும்.

அதேநேரம் மாணவர்களுடைய மனங்களில் சாதி பிரதேசம் உயர்வு தாழ்வு போன்ற தீய கருத்துக்களை விதைத்தால் அவர்கள் எதிர்காலத்தில் சுயநலவாதிகளாகவும், பிழைப்புவாதிகளாகவும் இருப்பார்கள் என்றும் அவர்களிடம் சமூக அக்கறையும் ஆளுமையும் இல்லாமல் போய் விடும் என்றும் அவர் அஞ்சினார்.

குழந்தைகளுக்கு ‘ஏடு தொடக்குதல்’ என்ற பெயரில் சரஸ்வதி பூசையன்று ஒரு தட்டில் நெல்லைக் கொட்டி அதில் கையை பிடித்து ‘அ’ என்று எழுதிவிட்டு பின்னர் அனா,ஆவன்னா,இனா, என்று எழுதுமாறு நிர்பந்தித்து எழுத பழக்கிய காலத்தில் பசுபதி வாத்தியார் இந்த நிர்பந்தத்தில் அல்லது கட்டாய கற்பித்தில் இருந்து எங்களை மீட்டு, எங்கள் எண்ணப்படி எங்கள் மனம் போன போக்கில் எங்களது சிலேட்டுகளில் கிறுக்க வைத்தார்.அதே நேரம் ‘என்னடா சிலேட்டில் கிறுக்குகிறாய்’ என்று எங்களுக்கு அடித்த வாத்தியார்களும் அந்தக்காலத்தில் இருந்தார்கள்.

மொழியியலில் ஒரு சொல் அல்லது ஒரு சொற்தொடர் பிற சொற்களின்றியோ, அல்லது பிற சொற்தொடர்களின்றியோ நிலைக்க முடியாது.

அதாவது ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு வாக்கியமும் மற்றொன்றில் தொக்கி நிற்கும் அல்லது தங்கிநிற்கும் தன்மையைக் கொண்டுள்ளது. மற்றதினால் விளக்கம் கொடுக்கப்படுவதற்கு ஏற்றதாகவும் இருக்கிறது. குறிப்பாக சொல்வதானால் ஒவ்வொரு சொல்லும் அல்லது சொற் தொடரும் அவற்றோடு சம்பந்தப்பட்ட வேறு சொற்களாலும் சொற் தொடர்களாலுமே அர்த்தப்படுத்தப்படுகின்றன.

உதாரணமாக பிரான்சில் ‘இறங்கிவிட்டார்’ என்ற சொல் இங்குள்ளவர்களால் பாவிக்கப்படுகிறது. இலங்கை அல்லது இந்தியாவில் உள்ளவர்களுக்கு இதன் அர்த்தம் புரியாது.அவர் மரத்தில் இருந்து இறங்கிவிட்டாரா? ஏன்மரத்தில் ஏறினார்? என்ற கேள்விகள் அவர்களுக்கு எழும்.உண்மையில் ‘இறங்கிவிட்டார்’ என்று குறிப்பிடப்படும் மனிதர் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர்.வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்பதையே ‘இறங்கிவிட்டார்’ என்ற சொல்குறிக்கிறது. இங்கே இறங்கிவிட்டார் என்ற சொல் பல சொற்களின் கூட்டால் அமைந்த சொற்றொடர்களாலே அர்த்தப்படுத்தப்படுகிறது.இந்த அர்த்தப்படுத்தல் இல்லாமல் எழுத்தில் எழுதிவிட்டால் அதை வாசிக்க முடியுமே தவிர விளங்கிக்கொள்ள முடியாது.

இது மொழியியல் ஆய்வுகள் வளர்ச்சிபெற்ற நவீனகாலவரையாகும். இதை 50 களிலேயே பசுபதி வாத்தியார் அறிந்து வைத்திருந்தது, எனக்கு இன்றும் ஆச்சரியமூட்டும் விடயமாக இருக்கிறது.

அவர் கரும்பலகையில் படங்களை கீறிவிட்டு, அவை என்ன என்று எங்களை சொல்ல வைத்தார்.நாங்கள் சரியாக சொல்லாவிட்டால் அதை திருத்தினார்.அந்த படங்களும் அவற்றை குறிப்பிடும் சொற்களுக்கு உரிய அர்த்தத்தை நாங்கள் தெரிந்து கொணட பின்பே அவற்றை குறிப்பிடும் எழுத்துக்களை எழுதப் பழக்கினார்.

அதிலும் எங்களது கிறுக்கல்களில் இருந்தே எங்களது எழுத்து பாடத்தை நடத்தினார்.

எழுத்து பாடம் என்பதை அ னாவில் இருந்து ஆரம்பிக்காமல் முதலில் ட பிறகு ட,ப,ம,ழ,ர,ச,க என்ற இலகுவாக எழுதுக் கூடிய விதத்தில் அவர் எங்களை பயிற்றுவித்தார்.

அவரது கையால் எழுதி வைத்த கல்வி குறிப்பில் …

‘குழந்தைகளுக்கு எழுத்துப் பயிற்சி கொடுக்க முன்னர் கரும்பலகை யவதானமுண்டாக்க படங்களைக் கீறி, அவைகளின் பெயரை வினவி ஒருவாறு அவதானமுண்டாக்க வேண்டும்.

பின் மாணவர் மனக்கலக்கமடையாத வகையில் எழுத்துக்களின் பெயர் சொல்லாதபடி எழுத்துக்களை பகுதி பகுதியாக எழுதிக்காட்டி எழுதுவிக்க வேண்டும்.முதலில் 1 எழுதபயிற்றிய பின ‘;ட’ எழுதப்பயிற்ற வேண்டும்.பின் ப,ம,ழ,ர,ச,க,த,எ எழுதப்பழக்க வேண்டும்.இவ்வகை எழுத்துக்களின் பயிற்சியில் மாணவர்கள் தேர்ந்துவிட்டார்கள் எனக்கண்ட பின்னர் ழ,த,ங,ஞ,ன,ல,வ,ள,ற,ய, ஆ,இ,ஊ,ஐ,ஓ இவைகளை பகுதிபகுதியாக முதலெழுதிய நிரைப்;படி பயிற்றிய பின்னர் அவருக்கு ‘க்’ வரியை (மெய்யெழுத்து) வரிவடிவில் எழுதுவித்து பெயர் சொல்லுவிக்க வேண்டும்…என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மாணவர்கள் மீது கல்வியை திணிக்காமல் அவர்கள் விரும்பிக் கற்கும் விதத்தில் கற்பித்தல் முறையை அந்தக்காலத்தில் அவர் உருவாக்கியது உண்மையிலேயே போற்றப்பட வேண்டிய ஒன்றாகும்.பிரான்சிலே தற்போது பிரெஞ்சு மொழியில் கல்வி கற்கும் எனது பேரப்பிள்ளைகள் இதையொத்த ஒரு கல்விமுறையில் கல்வி கற்விகற்பதை பார்க்கும் போது பசுபதி வாத்தியாரை நினைத்து பெருமிதம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

மாணவர்களின் கல்வித்தரத்தை நூற்றுக்கு எத்தனை என்று புள்ளிகளை வைத்து அளவீடு செய்து அதிக புள்ளி எடுத்தவர்களை ‘கெட்டிக்காரர்கள்;’ என்றும் குறைந்த புள்ளி எடுத்தவர்களை ‘மொக்கர்கள்;’ என்றும் அடையாளப்படுத்தி பிள்ளைகளிடையே உயர்வு தாழ்வு சிக்கலை உருவாக்கும் அக்கால கல்வி சமூக அமைப்பில், அதற்கு மாற்றாக படிக்கும் மாணவர்கள் படிக்காத மாணவர்கள் என்று பாராபட்சம் காட்டாமல், படிக்காத மாணவர்கள் அப்படி இருப்பதற்கு காரணம் என்ன என்பதை கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய முயன்றவர் அவர்.

பரீட்சைக்கு புள்ளி வழங்குவதற்கு பதிலாக குழந்தைகள் விரும்பும் படங்களை வரைந்து கொடுத்து அதன் மூலமாக மேலும் மேலும் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியவர் அவர்.

அதே போல பாடசாலையில் தோட்டம் செய்வது, வேலிக்கு கதியால் நடுவது, சுற்றாடலை சுத்தமாக வைத்திருப்பது எல்லாம் வேண்டாத வேலைகள் என்று அன்றைய ஆசிரியர் குழாம் நினைத்திருந்த காலகட்டத்தில் பசுபதி வாத்தியார் வீடு வீடாக சென்று பூவரசு கிளுவை கதியால்கள் மாங்கன்றுகள் மரக்கறி கன்றுகள் என்பவற்றை சேகரித்து மாட்டு வண்டியில் ஏற்றி வந்து நட்டார்.

ஒவ்வாரு நாளைக்கு ஒவ்வாரு வகுப்பாக அழைத்துச் சென்று பயிர் வைப்பது கதியால் நடுவது தண்ணீர் ஊற்றுவது என்று பல்வேறு சூழல் சார்ந்த வேலைகளை தானும் இணைந்து செய்வார்.இதுவும் கல்விச் செயற்பாட்டில் ஒரு அங்கம் என்று அவர் கருதினார்.

அப்போது ‘ மண்ணை கொத்தி பதப்படுத்தி பயிர் வைத்து விட்டால் மட்டும் போதாது.அதற்கு தினசரி தண்ணீர்; ஊற்றவேண்டும்,இயற்கை உரம் போட வேண்டும்.அப்பாபோதான் அது செழித்து வளர்ந்து பலன் தரும். அதே போலத்தான் மாணவர்களும் புத்தகத்தையும் சிலேட்டையும் எடுத்துக்கொண்டு பள்ளிக் கூடத்துக்கு வந்துவிட்டால் மட்டும் போதாது தினசரி பள்ளிக் கூடத்திலும் வீட்டிலும்; படிக்க வேண்டும்.நல்ல பழக்கங்களை பழக வேண்டும்.அப்போது தான் நீங்கள் அறிவுள்ள நல்ல பிள்ளைகளாக உருவாவீர்கள்’ என்று அவர் சொல்வார்.

இப்படிப்பட்ட அற்புதமான மனிதரை சமூக அக்கறையுள்ள நல்லாசிரியரை நமது தமிழ் சமூகம் கண்டுகொள்ளாமல் விட்டது கொடுமையிலும் கொடுமையானது. ஒருவேளை தனது பெயருக்கப் பின்னால் பிஏ,எம்ஏ, பிஏச்டி என்று பட்டங்களை அவர் சூடியிருந்தால் வலிந்து அழைத்து ஒளிவட்டம் சூட்டியிருப்பார்களோ என்னமோ?

‘கற்றவர்கள் எல்லாம் அனைத்தும் தெரிந்த அறிவாளிகளல்ல.

அறிவாளிகள் எல்லாம் கற்றலோடு மட்டும் நின்றவர்களல்ல’