குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

நிலாந்தன் கவிதைகள் பற்றிய குறிப்புக்கள் சுயாந்தன்

03.05. 2020 ஏற்கனவே நிலாந்தன் பற்றிப் பல தடவைகள் எழுதியுள்ளேன். அவரது கவிதைகள் பற்றியே அதிகம் குறிப்பிட்டுள்ளேன். நிலாந்தன் உண்மையில் ஒரு நல்ல அரசியல் எழுத்தாளர். அவருடைய எழுத்தில் மிகப் பழுத்த சித்தாந்தங்கள் குடியிருக்கும். அவரது ஓவியங்களும் அப்படித்தான். அவர் நம் தமிழ் மக்களின் யதார்த்தத்தைப் பற்றித் தொடர்ந்து எழுதுபவர். மக்களைத் தீண்டி விட்டுக் குளிர் காய்பவர் அல்ல. சமூகத்தைச் சிந்திக்குமாறு சொல்லி அறைகூவலிடுபவர். இன்னும் வெகுசனப்படாத அவரது எழுத்துக்கள் கவித்துவம் மிக்கவை. மத நல்லிணக்கம் மூலம் இன ஒற்றுமை கட்டியெழுப்பப் பட வேண்டும் என்று எழுத்துக்களால் தொடர்ந்து ஈடுபடுபவர்.  என்போன்ற பலருக்கு அவர் முன்மாதிரியானவர். அவரைப் பற்றி என்னுடைய சொற்ப நண்பர்களிடம் கூறியிருக்கிறேன். அவர்களும் நிலாந்தனின் எழுத்தையும் அரசியல் ஞானத்தையும் வியந்து கூறியிருக்கிறார்கள். கூடவே நிலாந்தன் நல்லதொரு பேச்சாளர் என்பதையும் கூறுவார்கள். அவரது பேச்சுக்கள் அசலாக யாழ்ப்பாணத்து பாசையால் ஆனது.  தீவிரமான தமிழ்த்தேசிய வாதியான நிலாந்தன் வன்னிப்பகுதிக்குள்  இடம்பெயர்ந்து அலைந்த காலங்களில் அந்த வன்னி நிலம் பற்றி விபரமான வர்ணனைகளைக் கவிதையில் எழுதியுள்ளார். ஏராளமான எழுத்தாளர்களையும் முன்னோடிகளையும் வாசிப்பில் கடந்து வந்திருக்கிறேன். ஆனால் நிலாந்தன் அந்தக் கடத்தல்களுக்கு அப்பாற்பட்டவர். அவரைப் பற்றி வருடா வருடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்.

நிலாந்தன்

2000 ஆம் ஆண்டு எசு.வி. இராயதுரையின் பதிப்புரையுடன் வெளிவந்த மண்பட்டினங்கள், 2002 ஆம் ஆண்டு வெளியான யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பாணமே, வன்னி மான்மியம் மற்றும் எழுநா வெளியீடாக 2013 ஆம் ஆண்டு வெளிவந்த யுகபுராணம் என்பன நிலாந்தனின் குறிப்பிடத்தக்க கவிதை ஆக்கங்களாகும். இதில் வன்னி மான்மியம் தொகுப்பில் மண்பட்டினங்கள் இடம்பெற்றுள்ளது. இவை பரிசோதனைக் கவிதைகள் என்றே கூறவேண்டும்.


இலங்கையின் போர்காலங்களில் வடபகுதி பல சமர்களைக் கண்டுள்ளது. குறிப்பாகத் தீவிரமான சமர்கள் வன்னிக்குள் தான் இடம்பெற்றன. எனக்கு நினைவு தெரிந்த அய்ந்து வயதில் யெயசிக்குறு போர் தொடங்கியது. மிக நீண்ட காலம் நீடித்த போர் என்று இதையே இங்கு கூறுவார்கள். பறண் நட்டகல் பகுதியில் இராணுவ அணி ஒன்றை எதிர்கொண்ட புலிகள் அங்கு பல படையினரைச் சுட்டுக் கொன்றதும் பாரியபோர் தொடங்கியது என்றும் கூறுவர். அப்போது தரையிலிருந்து இருநூறடி உயரத்தில்தான் படையினரின் வானுார்திகள்               ( கெலிகொப்டர்கள்) பறந்து சென்று ஆயுத விநியோகங்களையும் தாக்குதல்களையும் மேற்கொள்ளும். இந்த வானுார்திகள் (கெலிகொப்டர்) ஒலிகள் எங்கள் யாரையும் தூங்கவிட்டதே இல்லை. இப்போதும் அதனை நினைப்பதுண்டு. நிலாந்தன் மண்பட்டினங்கள் என்று குறிப்பிடுவது நிரந்தரமற்ற யுத்த நகரங்களைத்தான். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா என்று தமது சொத்துக்களை விட்டுவிட்டு நகரும் மக்களுக்கு அவை உண்மையில் மண்பட்டினங்கள்தான். ஒரு கட்டத்தில் அந்த மண்பட்டினங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையற்றுப் போகிறது. நகரங்களை மண்பட்டினங்கள் என்று கூறும் கவிஞனுக்கு அந்த மண்பட்டினங்களின் அப்பாலுள்ள கடல்மீது அபாரமான நம்பிக்கை கருக்கொள்கிறது. எல்லா நிச்சயமின்மைக்கும் பின்னால் ஏக நிச்சயமாகக் கடல் நிற்கிறது. அந்தக் கடலுக்கு யுத்தமும் சமாதானமும் தெரியாது. அந்தக் கடலின் முன்னால் மக்கள் கட்டும் நகரத்துக்குக் கடலை உறவாக இருக்கச் சொல்கிறார் கவிஞர். காடும் கடலும் அநாதரவானவர்களை எப்போதும் அரவணைத்து அடைக்கலம் வழங்கும் வல்லமை கொண்டவை. அதனால்தான் அவற்றைக் கருவாகக் கொண்டு எழுதும் படைப்புக்கள் பிரமிக்க வைக்கின்றன.


"மனிதர்களை விட மூத்ததும்

பெரியதுமான கடல்

எதனாலும் காயப்படாமல்

எல்லா நிச்சயமின்மைகளின் பின்னாலும்

ஏக நிச்சயமாக.


அது ஒரு தேவதையைப் போல

அழகிய கடல்

ஒரு முனிவரைப் போல

அமைதியானது

வானத்தின் நீலமெல்லாம் கரைந்து

கடலானது போல நிறம்.


மனிதர்கள் வருகிறார்கள் போகிறார்கள்

நகரங்கள் கட்டப்படும் இடிக்கப்படும்

ஆனால் கடல்

வருவதில்லை போவதுமில்லை

போரோ சமாதானமோ

எதுவும் அதைத் தீண்டுவதில்லை"


மண்பட்டினங்கள் என்பது ஒரு நாடகத் தொனியில் அமைந்த கவிதை என்றே கூறவேண்டும். பழைய தசு(ஸ்)யுக்களின் வரலாற்றை இதற்குள் இணைத்து வரலாறு வழிவந்த படையெடுப்புக்களால் சின்னாபின்னமானவர்களின் சிறுபான்மைக்குரலை இக்கவிதைகளில் கவிஞர் கூறுகிறார். கவிதையின் குறிப்பில் அது எழுதப்பட்ட  இடம் கொந்தக்காரன்குளம் என்று இருந்தது. சமீபத்திய இரண்டு வருடங்களாக நான் அங்குதான் பணியாற்றி வருகிறேன். யெயசிக்குரு போர் தொடங்கிய போது இராணுவம் முன்னகர்ந்த இடங்களில் இது பிரதானமானது. இங்கிருந்து மக்கள் பனங்காமம், மல்லாவி என்று இடம்பெயர்ந்து சென்றனர். நாங்கள் முள்ளிக்குளம் பகுதியில் பெருங்குளத்தை அண்டிய பகுதியில் இருநூற்றுக்கு மேற்பட்ட மக்களோடு அகதிகளானோம்.


00


வன்னி மான்மியம் தொகுப்பிலுள்ள மடுவுக்கு போதல் தொடர்பான பயணக் குறிப்புகள் ஒரு துன்பியல் பயணத்தை நிகர்த்த ஞாபகங்களைக் கொண்டவை. மடு செல்வதற்கு நான்கு பாதைகள் உள்ளன. அதில் ஒன்று நட்டாங்கண்டல் காட்டுப்பாதை. அதனை ஒட்டிய பகுதிகளில்தான் பண்டார வன்னியன் என்ற வீரனின் பிறந்தகம் உள்ளது. நட்டாங்கண்டலில் இருந்து மடுவுக்குப் போதல் என்பது மிகுந்த காட்டுவழிப் பயணம். மிகப்பெரிய பாலை மரங்களும் இடைவிட்டு வீதியின் மருங்குகளால் ஓடும் காட்டாறும் பெரும் மருத மரங்களும் என்று பரந்த இயற்கையைத் தாண்டியே செல்ல வேண்டும். வன்னிக் காடுகளில் காட்டுக் கோழிகள் அதிகமுண்டு. அதன் இறைச்சி அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது என்பதனால் அதனைப் பிடிப்பதற்குப் பலர் முயற்சிப்பர். அது காட்டோடு காடாகச் சென்று மறைந்துவிடும் விந்தை மிக்கது.  நிலாந்தன் இந்தப் பயணத்துக்குத் தொடக்கமாக மனம் காட்டுக்கோழியாகப் பறக்கும் என்றுதான் தொடங்குகிறார்.



வன்னி மான்மியம் என்ற தொகுப்பினை ஒரு பரிசோதனைக் கூடம் என்றே சொல்வேன். இதற்குள் வரலாறு, நாடகம், பயணக்குறிப்புகள், கதைகள், கவிதைகள், நினைவுக் குறிப்புகள், கட்டுரைகள் என்று பலவும் உலா வருகின்றன. இந்த முயற்சி நமது இலக்கிய முன்னோடிகளான நகுலன், பிரமிள் முதலானோர் கைக்கொண்டது. இது அரசியல் கையறுநிலையைச் சொல்வதற்கு உபயோகிக்கப்பட்டுள்ளது என்பதன் மூலம்தான் நிலாந்தன் தன்னை ஒரு சிறந்த கவிஞர் என்று நிறுவுகிறார்.


"வெற்றிக்கும் தோல்விக்கும்

இலையுதிர் காலத்துக்கும்

சாட்சியவள்

முற்றுகைகள் தோறும்

பிரகாசித்தாள்

மூன்று நூற்றாண்டுகளாய்

ஆறுகளின் தாகமாய்

அகதிகளின் அழுகையாய் பெருமூச்சாய்

காடுகளில்

காணாமல் போன எல்லா

வேட்டைக்காரரிற்கும் தாயாய்

காடுகளை மீட்டு வரும்

வீர வாளின் கூராய்

காடுகளின் கேந்திரத்தே

வீற்றிருக்கின்றாள்

நிச்சலனமாக"


00


போர்கள் தொடர்பாக போர் நிகழ்வுக்கு அப்பால் இருப்பவர்கள் எழுதும் மிகையான ஆக்கங்களே அநேகமாகப் புகழ்பெற்றுள்ளன. நிலாந்தனின் எழுத்துக்கள் யுத்தத்துக்குள் இருந்தே எழுதப்பட்டவை. அதனால் அவர் இங்குள்ள மரபார்ந்த நம்பிக்கைகளைக் குறியீடாக்கினார். வன்னியில் தாய்த்தெய்வ வழிபாடு மிகத் தொன்மையானது. அதன் ஒரு குறியீடுதான் மத்திய வன்னியிலுள்ள பாலியம்மன். இதனை ஒரு காவல் தெய்வம் என்றே மக்கள் கருதுகின்றனர். கேரளத்திலுள்ள நீலியும் யட்சியும் போல. பாலியம்மன் பள்ளு என்பது நிலாந்தனின் பரிசோதனைக் கவிதையில் முக்கியமான இடம் என்றே கூறுவேன்.


பாலி ஆறு நகர்கிறது.


வன்னிப் பெருநிலப்பரப்பில் வளமுண்டாக்கிப் பாய்கின்ற பாலி ஆற்றுத் தீரங்களின் முக்கியத்துவத்தையும் அதன் இயற்கைக் காட்சிகளையும் பற்றிச் சில இலங்கைக் கவிஞர்கள் கவிதைகளாகவும், குறிப்புகளாகவும் எழுதியுள்ளனர்.

1. வ.ஐ.ச.ஜெயபாலன்.

2. நிலாந்தன்.

3. கருணாகரன்.

ஆகிய மூவரும் இதில் பிரதானமானவர்கள்.


பாலி ஆற்றின் தீரங்கள் எந்தவொரு கோடையிலும் பாய்ந்து சென்று வன்னி நிலத்தைப் பசுமைபெறச் செய்கின்றது. மூன்று மாவட்டங்களுக்கு (வவுனியா- முல்லைத்தீவு- மன்னார்) பாலி ஆற்றின் நீர் பாய்ந்து இறுதியில் கடலில் சேர்கிறது. அது கடலில் சேரும் வரையும் இந்நிலத்தை அதிகம் செழிப்புறவே செய்கிறது. குறிப்பாக வவுனிக்குளத்துக்கான பிரதான நீர்மூலம் பாலியாறு ஆகும். இதற்கு நன்றிக்கடனாகவே இக்குளத்துக்கு அருகில் 'பாலிநகர்' என்ற பெயரில் ஒரு ஊரும் உள்ளது. பாலி ஆறு பாய்ந்து செல்கின்ற இடம் முழுமையும் சைவக் கோயில்களும், தாமரைக் குளங்களும், முதுமருத மரங்களும், பனைகளும், வளர்பாலைகளும் செழிப்புடன் தம்மை வளர்த்தோங்கி நிற்கின்றது. பறவைகளின், நாரைகளின் எச்சங்கள் ஆற்றின் தீரங்களில் உள்ள பச்சை மரங்களை வெண்மையாக்கியுள்ளது. உயிர்களின் இராஜாங்கம் ஒன்றை சு(ஸ்)தாபித்துக் கொண்டே தன்னை கடலில் மாய்க்கிறது பாலி.


''நித்திலம் சந்தனம் அகிலோடு மணிகள் பங்கயத்தடம் நிறைப்பவந் திழிவது பாலி'' என்று பெரியபுராணத்தில் குறிப்பிடப்படும் பாலி ஆறு தமிழகத்தில் பாய்ந்து அங்குள்ள நிலங்களை வளமூட்டும் பாலாறாக இருக்க வேண்டும். அல்லது பாலித்தல் என்கிற சொல் குறிப்பிடும் காப்பாற்றுதல் என்ற சொல்விளக்கத்துக்காகவும்  இப்பெயர் மருவியிருக்கலாம். (அதாவது வறண்ட நிலங்களைச் செழிப்பாக்கி அருள் பாலிக்கும் என்ற பொருளாக...)


1. பாலி ஆறு நகர்கிறது.


ஆங்காங்கே நாணல்

அடங்காமல் காற்றோடு

இரகசியம் பேசி

ஏதேதோ சலசலக்கும்.

எண்ணற்ற வகைப் பறவை

எழுப்பும் சங்கீதங்கள்.

துள்ளி விழுந்து

‘துழும்’ என்னும் வரால்மீன்கள்.

என்றாலும் அமைதியை

ஏதோ பராமரிக்கும்

அந்த வளைவை அடுத்து

கருங்கல் மறைப்பில்

அடர்ந்துள்ள நாணல் அருகே

மணற் கரையில் இரு மருங்கும்

ஓங்கி முகடு கட்டி

ஒளி வடிக்கும்

மருத மர நிழலில்

எங்கள் கிராமத்து

எழில் மிகுந்த சிறு பெண்கள்

அக்குவேறு ஆணிவேறாய்

ஊரின் புதினங்கள்

ஒவ்வொன்றாய் ஆராய்ந்து

சிரித்து

கேலி செய்து

சினந்து

வாய்ச்சண்டை யிட்டு

துவைத்து

நீராடிக் களிக்கின்றார்

ஆனாலும்

அமைதியாய்

பாலி ஆறு நகர்கிறது.


(-வ.ஐ.ச.ஜெயபாலன்.)


2. பாலியம்மன் பள்ளு.


மின்மினிப் பூச்சிகளைச் சூடிய

முதுபாலை மரத்தின்

கீழிருக்கிறேன்

முன்னால்

வவுனிக்குளம்

எல்லாளன் கட்டியதென்று

சொல்லுகிறார்கள்.

கனகராயன் குளத்தில்

மழை பெய்தால்

வவுனிக்குளம் நிரம்புமாம்

வவுனிக்குளம் நிரம்பினால்

பாலியாறு பெருகுமாம்

பாலியாறு பெருகினால்

பாலியம்மன் உருக்கொள்வாள்

பாலியம்மன் உருக்கொண்டால்

படை திரளும்

படை பெருகும்

போர் மூளும்.


00


வவுனிக்குளத்துக்கு

எத்தனை வயதிருக்கும்?

தெரியாது.

சிலசமயம்

குளத்து மேட்டை மேவியெழும்

முதுமரங்களுக்குத் தெரிந்திருக்கும்.

அவற்றின்

வேர்களை அரித்தோடும்

பாலியாற்றுக்குத் தெரிந்திருக்கும்

நிச்சயமாக

பாலியம்மனுக்குத் தெரிந்திருக்கும்.

அவள் தானே

எல்லாளன் படைதிரட்ட

தேர்க்கொடியிலேறி அமர்ந்தாள்.

இப்பொழுதும் கேட்கிறது

கொலுசுச் சத்தம்

இப்பொழுதும் கேட்கிறது

உடுக்கினிசை

பாலியம்மன் ஆடுகிறாள்

உருவேற உருவேற

பாலியாறு பெருகியோடுகிறது

தொட்டாச்சிணுங்கி வெளி முழுதும்

நெல் மணிகள்

பாலியாற்றின் தீரமெல்லாம்

படை வீரர்

எல்லாளன் படை கொண்டு வருகிறான்

கெமுனுவின் நகரை நோக்கி

கெமுனுவுக்கு நித்திரையில்லை

உடுக்கும் கொலுசும்

இதயத்தைப் பிளப்பது போலிருக்கிறது

எங்கே துயில்வது?

கால்களை மேலும் மேலும் மடக்கி

கெமுனு

துயிலாதே புரள்கிறான்

எல்லாளன் படை

வருகிறது.


-நிலாந்தன்


இந்தக் கவிதைகளில் விழிக்கப்படும் நிலையில் அந்த ஆறு இன்று இல்லை. அதிகம் சிதிலமாக்கப்பட்டுள்ளது. மணல், மரம் என்று பாலி ஆறு பிரசவித்த பிள்ளைகள் தொடர்ந்தும்  களவாடப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது.


00


மேற்குறித்த மூன்று கவிதைத் தொகுப்புக்களும் 2009 க்கு முன்பு நிலாந்தனால் எழுதப்பட்டவை. யுகபுராணம் என்பது 2012 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. இது 2009 இறுதி யுத்தத்தின் வர்ணனைகளையும் இழப்புக்களையும் சிறந்த முறையில் கவிதையாக எழுதப்பட்டுள்ள தொகுப்பு எனலாம் யுகபுராணம் தோற்கடிக்கப்பட்டவர்களின், அங்கீகரிக்கப்படாதவர்களின் வலி என்றுகூடச் சொல்லலாம். இலங்கையில் யுத்தத்தின் பின்பு எழுதப்பட்ட சிறந்த கவிதைகளை நான் இருவரின் வரிகள் மூலமாகக் கண்டறிந்துள்ளேன். ஒருவர் கருணாகரன். மற்றவர் நிலாந்தன். யுகபுராணம் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. நிறைவேறாத பெருங்கனவின் பெருமூச்சை இப்படிக் கூறுகிறார்.


"மழைக் குருவியின்

குளிர்ந்த பாரமற்ற குரல்

வீரர்களைப் புதைத்த காட்டில் சலித்தலைகிறது.

ஈமத்தாழியுட்

கார்த்திகை நிலவு

ஒழியூறிக்கிடக்கிறது.

வழிபாடில்லை

வணக்கப்பாடலும் இல்லை

நாயகர் இல்லை

பேருரை இல்லை

நனைந்த காற்றில்

உருகிக் கரையும்

தீச்சுடர் வாசமும் இல்லை.

பெயர்க்கப்பட்டது நடுகல் துயிலாதலைகிறது

பெருங்கனவு.

இரும்பு வணிகர்

உலவும் காட்டில்

பூத்திருக்கிறது

கார்த்திகைப்பூ"


00


"கடலம்மா… நீயே சொல்

குமுதினி ஏன் பிந்தி வந்தாள்?"  என்ற கவிதையின் மூலம் குமுதினிப் படகுப் படுகொலையைப் பற்றி உருக்கமாக எழுதி தமிழ்க் கவிதை வாசகர்களிடம் பெரும் கவனம் பெற்றவர் நிலாந்தன். அப்போதிருந்து இப்போதுவரை கடல் அவருக்கு ஒரு குறியீடு. ஒன்று கடல் அன்னையாக, அல்லது உறவாக, அல்லது உத்தரிப்பின் சாட்சியாக. கடலம்மா கவிதையில் ஒரு வரி ஞாபகம் உண்டு.

"இனிவருங் கல்லறைகள்

வெறும்

இழப்புக்களின் நினைவல்ல,

எமது

இலட்சியங்களின் நினைவாகட்டும்" இது 1985 இல் எழுதப்பட்டது. இழப்புக்களை இலட்சியமாகப் பார்க்கும் தைரியம் இதில் தெரிகிறது. யுகபுராணத்தில் உத்திரித்த கடல் பகுதியில் இப்படிச் சொல்கிறார்.

"காலாற முடியாக் காலமொன்றின் கடைசிக் கவிதையை கடல் மணலில் எழுதினேன் நான்" இந்தக் கவிதை கையறு நிலையின் புதிய ஏற்பாடு என்றே நினைக்கின்றேன். மொழி ஒருவனுக்கு வாய்த்து விட்டது என்றால் அவன் அதனை வைத்துக் கவிதைகளில் சித்துக்களை நிகழ்த்தலாம். ரணங்களை மனதில் ஆணி போல ஏற்றிவிடலாம். இதற்கு நிலாந்தன் ஒரு உதாரணம். பழைய மண்பட்டினங்கள் சொல்லும் வீர வரலாறுகள் இல்லை. பழைய வன்னி மான்மியம் கூறும் கொட்டைப்பாக்கா வாடா என்ற தைரியம் இல்லை. உத்தரித்த கடலின் சப்தம்தான் தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறது. கைவிடப்பட்ட பிணங்களும் திரவியங்களும் எரிந்து உருவாகிய புகை ஒரு தலை முறையின் நினைவுகளின் மீது நினைவாகப் படிந்தது. மிகச்சிறந்த யுத்தகாலக் கவிதைகளுக்கு நிலாந்தனின் கவிதைகள் நல்ல உதாரணம். அவரது யுகபுராணம் பாராட்டத்தக்க மொழியால் ஆனது.




நிலாந்தனின் கவிதைகள் சில:


1) மடுவுக்குப் போதல்: பயணக்குறிப்புகள்.


- நிலாந்தன்.


1.

காலை 8-00 மணி


நட்டாங்கண்டல் காடு

காட்டுவாசம் நாசியுள் நிறைகையில்

மனம்

காட்டுக் கோழியாய்ப் பறக்கும்

பாதையினிரு மருங்கிலும்

ராங்கிகள் உழுத வயலாய்

இறந்த காடு

யாரும் நடாத மரங்கள்

யாரும் நீர்விடாத புல்வெளிகள்

யாருக்கும் திறைகொடாத காடு

ஒரு காலம்

கைலாய வன்னியனின்

கம்பீரம் கண்டு

கர்வமுற்றிருந்த காடு

பிறகொருநாள்

பண்டார வன்னியனின்

யானைகள் பிளிறும் போது

புளகாங்கிதமுற்ற காடு

இன்று

யாரோ ஒரு சூனியக்காரியின்

கண்பட்டுக் கருகியது போல

சோகமாய் நின்றது.


2.

காலை 9-00 மணி


வற்றிய பறங்கியாற்றின்

பாறைத் தொடரின் மீதிருக்கிறேன்

ஆற்றின் புராதன வளைவுகளிற்கப்பால்

எங்கேயோதான்

அந்த அரண்மனையிருக்கிறது

பண்டாரவன்னியன் கட்டியது

ஆறு துயிலும் இரவில்

அரசர்கள் காலாற நடக்கும் போது

சருகுகள் நொறுங்குமரவம் கேட்பதாக

வேவு வீரர்கள் கூறுகிறார்கள்

பாதி புதைந்த அரண்மனையின்

சிதிலங்களினடியில்

மறைத்து வைக்கப்பட்டிருக்கும்

பண்டாரவன்னியனின் வாளை எடுக்க

யாரோ ஒர வீரன் வருவானென்று

ஆறும் காடும் காத்திருப்பதாக

ஒரு வேட்டைப்பாடல் கூறுகிறது.


3.


ஒரு கோடையிரவில்

சுடலைக் குருவி

மரணத்தை முன்னறிவித்து

பெருமூச்செறிந்த பிறகு

ராங்கிகள் உறுமியபடி

காட்டினுள் புகுந்தன

காடு பயந்து

வேட்டைத் தடங்களை மூடியது

வேட்டைக்காரர் அகதிகளாயினர்

குளங்கள் உடைப்பெடுத்து

வீணே ஆற்றில் போய் வீழ்ந்தன

ஆறு சினந்து

சிப்பியாற்றுக் கழிமுகத்தில்

போய்க் குதித்தது

பிறகெலாம்

பண்டாரவன்னியன்

காலாற நடவாதே விட்டான்

பறவைகள்

காடு மாறிப் போயின

கைவிடப்பட்ட சேனைப் புலங்களில்

கால் நடைகள் காடேகின

இடிந்த அரண்மனை மேட்டில்

வன்னியரின் வீரவாள்

துருவேறிக் கிடந்தது

வேவு வீரர்கள் மட்டும்

துயிலுமாற்றின்

மருதமர மறைவில்

துயிலா துலவினர்.


4.

பகல் 11-00 மணி


போர்(யுத்த) முன்னரங்காகிய காடு

எரிந்த காவலரண்கள்

வாய்பிளந்த

ஏவு தளங்கள்

நாயாற்றில்

அவர்களே கட்டி

அவர்களே தகர்த்த

பெரிய இரும்புப் பாலம்

ஏதோ ஒரு இடுகாட்டை நோக்கியெம்மை

மயக்கி அழைத்துச் செல்வன போன்ற

விநியோக வழிகள்

அச்சத்திலிருந்து முற்றாக விடுபடாத

காடு

நெட்டுயிர்த்தது

ராங்கிகள் போய் விட்;டன

மழைக் குளிரில் சிலிர்த்து நின்ற

மரங்களில் மோதியபடி

ராங்கிகள் ஓடித் தப்பின

திறைகொடா அரசனின் வாள்

நிலவொளியில்

திசைகளை வென்று யொலித்தது

ஆறு

கனவு காணத் தொடங்கியது

காடு மகிழ்ந்து

வேட்டைத் தடங்களைப் புதுப்பிக்கலானது.


5.

பகல் 12-00 மணி.


ராங்கிகள் புதைந்த காட்டின்

வேர்கள் இடறும்

வழி நெடுக

காடுகளின் சூரியன்

உருகி வழிகிறான்

மடுமாதா

மருதமர நிழலில்

காட்டின் ஒளியாய்

மிளிர்கிறாள்

திறைகொடாக் காட்டின்

மூர்த்தமவள்

ஆறு கண்ட கனவு அவள்

நிழலற்ற வழிகளில் வரும்

பயணிகளின் ஆறுதலுமவள்

ராங்கிகள் அவளை உறுமிக் கடந்தன

பீரங்கிகள்

அவளது பிரகாரத்தில் வெடித்தன

குருதி சிந்தி

விழிகளில் தெறித்தது

நரிகள் ஊளையிட்டு

இரவுகளைப் பகைவரிடம் கையளித்தன

அவள் அசையவில்லை

ஒரு முதுமரம் போலே

அமைதியாயிருந்தாள்

வெற்றிக்கும் தோல்விக்கும்

இலையுதிர் காலத்துக்கும்

சாட்சியவள்

முற்றுகைகள் தோறும்

பிரகாசித்தாள்

மூன்று நூற்றாண்டுகளாய்

ஆறுகளின் தாகமாய்

அகதிகளின் அழுகையாய் பெருமூச்சாய்

காடுகளில்

காணாமல் போன எல்லா

வேட்டைக்காரரிற்கும் தாயாய்

காடுகளை மீட்டு வரும்

வீர வாளின் கூராய்

காடுகளின் கேந்திரத்தே

வீற்றிருக்கின்றான்

நிச்சலனமாக.


( ஒரு படை நடவடிக்கையின் பின் நட்டாங்கண்டல் காட்டுப் பாதையூடாக மடுக் கோவிலுக்குப் போன பயணக் குறிப்புக்கள்.

வன்னி மான்மியம் நூலிலிருந்து. )


2) யுகபுராணம்.


1


அது ஒரு யுகமுடிவு

பருவம் தப்பிப் பெய்தது மழை

இளவயதினர்

முறைமாறித் திருமணம் புரிந்தனர்.


பூமியின் யௌவனம் தீர்ந்து

ரிஷிபத்தினிகள்

தவம் செய்யக் காட்டுக்குப் போயினர்.


கள்ளத் தீர்க்கதரிசிகளே எங்குமெழுந்து

கட்டுக்கதைகளை தெருத்தெருவாக

விற்றுத்திரிந்தனர்.


சப்த ரிஷிகளை ஏற்றிச் செல்ல

ஒரு சிறு படகு

பாற்கடலில் வரும் வரும் என்று

சொன்னதெல்லாம் பொய்.


அதிசயங்கள் அற்புதங்களுக்காக

காத்திருந்த காலமெல்லாம் வீண்.



கண்ணியமில்லாத யுத்தம்


தலைப்பிள்ளைகளைக் கேட்டது

மரணம்

பதுங்குழியின் படிக்கட்டில்

ஒரு கடன்காரனைப்போலக்காத்திருந்தது


பராக்கிரமசாலிகளின் புஜங்கள்

குற்றவுணர்ச்சியால் இளைத்துப்போயின

கள்ளத் தீர்க்க தரிசிகளும் கலையாடிகளும்

ஏற்கனவே சரணடைந்து விட்டார்கள்

நன்றியுள்ள ஜனங்களோவெனில்

பீரங்க்கித் தீனிகளாய் ஆனார்கள்

ரத்தத்தால் சிந்திப்பவர்கள் மட்டும்

சரணடையாதே தனித்து நின்றார்கள்


ஓர் அழகிய வீரயுகம்

அதன் புதிரான வீரத்தோடும்

நிகரற்ற தியாகத்தோடும்

கடற்கரைச் சேற்றில் புதைந்து மறைந்தது.


2


வற்றிய குளத்தில் அலைகரையில்

வராத காலங்களுக்காக

வாடியிருக்கும் ஒற்றைக் கொக்கா

நான்

அலைகரையில்

நாகமுறையும் முதுமரவேர்களை விடவும்

மூத்தவனன்றோ?


கைவிடப்பட்ட கிராமங்களின்

நாயகன் நானே

கூரையற்ற தலைநகரத்தின்

பெரு வணிகனும் நானே


இறந்து போன யுகமொன்றின்

இரங்கற்பா பாடவந்தேன்

பிறக்கப்போகும் யுகமொன்றின்

பெருங்கதையை கூறவந்தேன்

கட்டியக்காரனும் நானே


யுகசக்தி

எனது புஜங்களில் இறங்கினாள்

யுகமாயை

எனது வயதுகளை மீட்கிறாள்.


எங்கேயென் யாகசாலை

எங்கேயென் யாகக் குதிரை


இனி

எனது நாட்களே வரும்.

கிருஷ்ணா !

உனது புல்லாங்குழலை

எனக்குத்தா.


00


கவிதையில் குறிப்பிடப்படும் மத்திய வன்னியின் சில பகுதிகளுக்குச் சென்ற வருடம் பயணித்த போது எடுத்த புகைப்படங்கள்.


கனகராயன் ஆறு



பண்டாரவன்னியன் சிலை

கற்சிலைமடு



பண்டாரவன்னியன் நடுகல்

கற்சிலைமடு



வவுனிக்குளம்



பாலியாறு ஓரம்





 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.