குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பேராசிரியர் கைலாசபதி மாதம் பதிவு -22 ,புதிய சனநாயக மக்கள் முன்னணி,கைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக.

(பகுதி-2) 30.04. 2012.......22.04.2020 “என்னிடம் கல்வி கற்ற மாணவர்களில் பெரும்பாலானோர் தம் கல்விச் செயற்பாட்டை சமுதாய முன்னேற்றம்-சமூக சேவையின் பாற்பட்டு செயலாற்றினர். ஆனால் கைலாசபதி தன் கல்விச்செயற்பாட்டை சமுதாயமாற்றம்-அடக்கி ஒடுக்கபபட்ட மக்களின் பாற்பட்டு செயலாற்றினார். நான் கல்லூரியில் கைலாசபதிக்கு கல்விப் பயிற்சிப் பட்டறை நடாத்தவில்லை. ஆர்வமான சிலவற்றை நெறிப்படு த்தினேன். அவ்வளவுதான். ஆனால் அவன், என்னை விட பலவற்றில் பல தடங்களை பதித்துள்ளான். அதன் ஓர் அங்கம் தான் யாழ்-பல்கலைக்கழகத்திற்கான உபவேந்தர் பதவி”. கைலாசபதிக்கு இப்பதவி கிடைத்த போது, ஆசிரியர் கார்த்திகேசன் அவர்கள் கைலாசபதி தன் மாணவன் என்ற ஆதங்கத்திலருந்து கூறிய வார்த்தைகள் இது.

கைலாசபதி யாழ்-பல்கலைக்கழகத்தில் மூன்று ஆண்டுகள் மாத்திரமே (74-77) உபவேந்தராக இருக்க முடிந்தது. இவர் இடதுசாரி ஐக்கியமுன்னணியின் ஊடாக தெரியப்பட, 77_ல் யூ.என்.பி. தமிழர் கூட்டணி ஐக்கியத்திற் கூடாக வித்தியானந்தன் தெரிவானார். கைலாசபதியின் 3-ஆண்டு காலம் பல்கலைக்கழகத்திற்குரிய பல அம்சங்களை யாழ் பல்கலைக்கழகம் கொண்டிருந்ததது. (இதை மறுப்போரும் உளர்) அதன் பின் தமிழ்த் தேசியத்தின்-புலிகளின் கூடாரமே. இது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் பலவுண்டு.

“யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு ஆண்டுகள் – முழுமையான சீரழிவு”:—-நட்சத்திரன் செவ்விந்தியன்

“கட்டுரையைப் படித்தபின் எனக்கு எழுந்த சந்தேகங்கள் சில”:—–தாமிரா மீனாசி

செவ்விந்தியன் குறிப்பிட்ட வெளிநாட்டார் பாராட்டிய தமிழ் அறிஞர்கள் தமிழரசுக் கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக யாழ்ப்பாண வளாகத்தின் தலைவர் பதவியை ஏற்றிருப்பார்களா? ( வித்தியானந்தன் உட்பட)

வளாகம் ஆரம்பிக்கப்பட்ட பின்பும் அது தமிழர் கூட்டணியின் தலைவர்களின் தொடர் தாக்குதலுக்கும் கண்டனத்திற்கும் ஆளாகிக் கொண்டிருந்ததே இதற்கு என்ன காரணம்..?

“கைலாசபதிக்கும் வித்தியானந்தனுக்கும் உள்ள திறமை வேறுபாட்டை சரியான ஆதாரங்களின்றி கணிப்பது நன்றெனப் படவில்லை. யாழ். பல்கலைக் கழகம் அதிக காலம் வித்தியானந்தனின் கட்டுப் பாட்டில் தான் இருந்தது. இந்தக் காலத்தில் தான் அது ஒரு செக்கண்டரி சு(ஸ்)கூலின் அடுத்த நிலை என்ற தரத்திற்கு மாற்றப் பட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது” —-இது தேசம் நெற்றில் யாழ் பல்கலைக் கழகம் பற்றி வந்த கட்டுரையும் பின்னோட்டமும்.

கைலாசபதியின் அரசியல் கருத்துக்கள்

கைலாசபதியின் எந்தக் கட்டுரைக்குள்ளும் சமூக-விஞ்ஞான அரசியல் கருத்துக்கள் பொதிந்திருக்கும். இருந்தும் தேசாபிமானி, தொழிலாளி போன்ற பத்திரிகைகளிலும் அரசியல் கட்டுரைகள் எழுதியதாக அறிய முடிகின்றது. ஆனால் 78-ற்கு பிற்பாடு, சண்முகதாசன் தலைமை நிராகரிக்கப்பட்டு, கம்யூனிசுட்கட்சி (இடது) வெளியிட்ட “செம்பதாகை” பத்திரிகையில் “சனமகன்” எனும் புனை பெயரில் எழுதுகின்றார். அத்தோடு அக்கட்சி வெளியிட்ட “ரெட்பனர்” பத்திரிகையிலும் சிறப்பு நிருபராக எழுதுகின்றார்.

கைலாசபதியின் அரசியல் கட்டுரைகள் அந்தந்தக் காலங்களில் கம்யூ. கட்சி கொண்டிருந்த கொள்கை-கோட்பாடுகளையே உள்ளடக்கியிருந்தது. பிரதிபலித்திருந்தது. இதில் தேசிய இனப்பிரச்சினையில் கட்சியின் தவறுகளையும் அவர் உள் வாங்கியிருந்தார். அதன் அடிப்படையில் பல கட்டுரைகளை எழுதியுமுள்ளார். இது தமிழ்த் தேசியம், தமிழ் இளைஞர்களின் போராட்டம், சுயநிர்ணய உரிமை பற்றியதாகும். இதில் மகாகவியோடும் முரண்படுகின்றார். இதை அவரின் நண்பரான கேசவன் “பாரதி முதல் கைலாசபதி வரை” என்ற நூலில் குறிப்பிடுகின்றார். ஆனால் இத் தவறுகளை சுயவிமர்சன ரீதியில் உள்வாங்கி செம்பதாகை (புதியபூமியிலும் என்றினைக்கின்றேன்) பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இக் கட்டுரைகள், இப் பத்திரிகையின் அக்கால வாசகர்களுக்கு மட்டுமே சென்றடைந்தது. ஏகப் பெரும்பான்மையானவர்களுக்கு சென்றடையவில்லை. இதைக் கவனத்தில் கொண்டு புதிய சனநாயகக் கட்சி மா.லெ. செம்பதாகை, ரெட்பனர், புதிய பூமியில் வந்த கைலாசாதியின் கட்டுரைகளை காலத்தின் தேவை கருதி வெளியிடவேண்டும். இது கைலாசபதி பற்றிய மதிப்பீட்டிற்கும் உதவியாக அமையும்.

கைலாசபதி மீதான அவதூறற்ற விமர்சனங்கள்

இதில் பலரால் முன் வைக்கப்படுவது கைலாசாதி புதுக் கவிதையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே. இது பற்றி கைலாசபதி சொல்வதையும் பார்ப்போம். “இலக்கியம் தோன்றிய காலம் முதல் திறனாய்வும், வாதங்களும் இருந்து வந்துள்ளபோதும், இந்நூற்றாண்டில் இருப்பதைப் போன்று பன்முகப்பட்ட காரசாரமான இலக்கியச் சர்ச்சைகள் இருந்தன என்பதற்கில்லை.”….

“இதிலொன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை! இலக்கியத்தை உள்ளடக்கும் கவியை எடுத்துக் கொண்டால் அதனது பண்பு, பணி ஆகியவற்றைப் பற்றிய கருத்துக்ககள் காலத்திற்கு காலம் மாற்றம் பெற்றிருப்பதை காண்கின்றோம். ஆன்ம ஈடேற்றம், நல்லொழுக்கம், குடியியல் உணர்வு, நாட்டு முன்னேற்றம் முதலிய பல்வேறு கருத்துப் படிவங்கள் காலத்திற்கு காலம் கல்வியின் குறிக்கோளாகக் கூறப்பட்டு வந்துள்ளன. பிளேட்டேவிலிருந்து பியோயே வரை….வரைவிலக்கணமும் விள்க்கமும் கூறி இருக்கின்றனர்”…..

“அறிவியலை ஆதாரமாய்க் கொள்ளும் நோக்குக் கொள்கையாளர் ” தருமமும், அர்த்தமும், காமமும் மோட்சமடைதலாகிய நான்கும் நூலால்; (இலக்கியத்தால்) எய்தும் பிரயோயனம் என்பர். ஆனால் அழகுச் சுவையையே இலக்கியத்தின் பிரதான நோக்கமாகக் கொள்வோர். “இலக்கியத்திற்குப் புறநோக்கம் எதுவும் .இல்லையென்றும் அது தன்னளவில் தானே நிறைவுடையதொன்று கலை கலைக்காகவே என்றும் உறுதியாகச் சொல்வர்”….

இதற்கு நேர்மாறான கருத்தோட்டமும் உண்டு. உதாரணம் தேடி வெகுதூரம் போகவேணடியதில்லை. பாஞ்சாலி சபதம் முகவுரையில் பாரதியார் எழுதினார் ; “எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொதுசனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய் மொழிக்கு புதிய உயிர் தருவோனாகின்றான். ஓரிரண்டு ஆண்டு நூற்பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லாருக்கும் விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்துதல் வேண்டும்”

இவைகளுக்கூடாக கைலாசபதி கலை இலக்கியம் பற்றி எதைத் தான் சொல்கின்றார். அதில் எப்பக்கம் நிற்கின்றார். என்பது பற்றி இன்னும் சில விடயங்களை மேலே பார்ப்போம். புதுமைப்பித்தன் கட்டுரைகள் எனும் நூலில் “சமயத்தையும் கடந்த கலை” என்ற கட்டுரையில் “இருதயத்தின் கனிவாக வெளிப்படும் இசை தான் கவிதை~யெனவும், கவிதையில் அமைப்பும் உணர்ச்சியும் தான் கவிதையின் உரைகல்” என்ற புதுமைப்பித்தனின் கோட்பாட்டை முற்று முழுதாக நிராகரிக்கும் கைலாசபதி, பாரதி சொல்கின்ற பல புதிய உயிர்தரும் பல விடயங்களோடு ஒன்றிணைகின்றார். அதுதான் ஆசிரியர் கார்த்திகேசன் சொல்லும் அவரின் கல்வி கலை-இலக்கியச் செயற்பாடு. அது சமுதாய மாற்றத்திற்கானது. அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கானதானதின் பக்கம் ஓலித்தது என்பதானது. இதனாலேயே இவரை “இழிசனர் இலக்கியவாதியென்றனர். வேளாள மார்க்சிஸவாதி” என்றனர்.

கைலாசபதி புதுக் கவிதை புனைவாளன் அல்ல. கலை-இலக்கியத்தை அதன் வடிவங்களை சமூக விஞ்ஞான—வரலாற்றுப் பொருள் முதல்வாத நோக்கில் ஆய்வு-விமர்சனம் என்பதற் கூடாக வகைப்படுத்தி எழுதியவர். இதில் புதுக் கவிதை என்பது பாரதி கண்டெடுத்த “வெகுசன அரசியல் இலக்கியமாக” பர்ணமிக்க வேண்டுமெனறார்.

இது நிற்க சிலர் ஆறுமுகநாவலர் திருக்குறளை இலக்கியமாக கணித்தார். க. நா. சுப்பிர்ணியம் போன்ற விமர்சகர்கள் திருக்குறள் இலக்கியமன்று, அறநூலே என்ற வாதத்தை முன்வைத்தனர். இதில் கைலாசபதி நாவலர் சொன்ன இலக்கியம் எனும் மரபிற்குள் இறுகினார் என்கின்றனர்.

(தொடரும்)