குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

பேராசிரியர் கைலாசபதி மாதம் பதிவு -20குரு தட்சனை பேராசிரியர் கைலாசபதி நினைவுகள் 20.04.2020

05.12.2017 அன்று பேராசிரியர் பேராசிரியர் கைலாசபதி பற்றி பேராசிரியர் மெளனகுரு முகநூலில் எழுதியது

குரு தட்சனை பேராசிரியர் கைலாசபதி நினைவுகள்......  20.04.2020

சொந்தப்பட்டறிவின்னுாடாக (அனுபவத்தினூடாகச்) சில குறிப்புகள்

பேராசிரியர் கைலாசபதி நினைவுப் பேருரையினை ஆயத்தப் படுத்திக் கோன்டிருக்கிறேன்

அவருடைய நினைவுகள் மனதை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன

அவர் பலரை விமர்சித்தவர் பலரால் விமர்சிக்கப்பட்டவர்அவருடனான எனது தொடர்பு 1961 இல் பேராதனைப் பல்கலைக கழகத்தில் ஆரம்பமாகிறது அது அவர் இறக்கும் வரை தொடர்ந்தது.

 

மாணவப்பருவத்தில் அவர் எமக்கு ஆசிரியரானார்.

எம்மை வாசிக்க வைத்தார்.

யோசிக்க வைத்தார்

அவருடனான எனது உறவை

குரு தட்சணை

எனும் தலைப்பில் பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினேன்

அதுவோர் நீண்ட கட்டுரை

அவர் நினைவாக இரண்டு பகுதிகளாக அதனை வெளியிடுகிறேன்

நேரமும் ஆர்வமும் இருப்போர் வாசித்துக்கொள்ளுங்கள்

மௌனகுரு

1960ம் ஆண்டு எனது 17வது வயதில் நான் எழுதி அனுப்பிய சிறுகதை ஒன்று தினகரன் ஞாயிறு வார மலரில் படங்களுடன் வெளியாகியிருந்தது.

அச்சிறு கதையின் பெயர்

'சமரச பூமி'

எந்தவித சிபாரிசுமில்லாமல் தினகரனில் அதனை வெளியிட்டவர் அன்றைய தினகரன் ஆசிரியராக இருந்த பேராசிரியர் கைலாசபதி என்பதனைப் பின்னர் தான் அறிந்து கொண்டேன.

தினகரனில் அவர் எழுத்தாளர்களை குறிப்பாக இளம் எழுத்தாளர்களைத் தரம் கண்டு ஊக்குவிப்பதை அன்று பல எழுத்தாளர்கள் பேசிக் கொண்டனர்.

அந்தக்கதையின் கருப்பொருள் சமுகத்தில் நிலவும் சாதிகொடுமையாகும்

1961ம் ஆண்டு எனக்குப் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கிடைத்தது.

பேராசிரியர் கைலாசபதி விரிவுரையாளராக நியமனம் பெற்று வந்துள்ளார் என்பதனை அங்கு அறிந்து கொண்டேன்.

'பத்மாவதி வரலாறு(சரித்திரம்')

கற்பிக்க வகுப்புக்கு அவர் வந்தார்.

சிவந்த நிறம,

; திடகாத்திரமான தோற்றம்

பரந்த முகம்

தடித்த மூக்குக் கண்ணாடி

, எவரையும் ஊடுருவிப் பார்க்கும் கூர்மையான பார்வை,

முகத்தில் ஒரு புன்முறுவல்-

அவருடைய முதல் தோற்றம் இவ்வாறுதான் எனக்குள் பதிந்தது.

முதலாவது விரிவுரையிலேயே அவர் மாணவர்கள் மனங்களைக் கவர்ந்துவிட்டார்.

விரிவுரை முடிந்ததும் வகுப்புக்குச் சமூகமளித்திருந்த மாணவர்கள் பெயர்களை வாசித்துக் கொண்டு வந்தார்

'மௌனகுரு'

என் பெயர் வாசிக்கப்பட்டது.

நான் எழுந்து நின்றேன்.

என்னை உற்றுப் பார்த்தார்

.'சமரச பூமி?

' வினாத் தொனியோடு என்னிடம் கேட்டார்

. நான்

'ஆம்'என்ற பாவனையில் அசைத்தேன்.

அவருடைய தடித்த கண்ணாடிக்கூடாக அவரின் கூர்மையான கண்கள் என்னை ஊடுருவதாக உணர்ந்தேன்


இப்படித்தான் பேராசிரியர் கைலாசபதியின் நேரடி அறிமுகம் எனக்கு முதலிற் கிடைத்தது.

அன்று ஆரம்பித்த அந்த உறவு அவர் இறக்கும் வரை இருநிலம் பிளந்து ஆழ வேரேடி இருந்தது

என் வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் அவர் என்னருகில் இருந்தார்

முதலாம் ஆண்டில் நான் தமிழ், பொருளியல், வரலாறு ஆகிய பாடங்களைத் தெரிவு செய்திருந்தேன்.

முதலாம் ஆண்டில்ல் தமிழ் வகுப்பில் மாதவையரின் பத்மாவதி வரலாற்றையும்(சரித்திரத்தையும்) சாத்தனாரின் மணிமேகலையையும் கைலாசபதி எங்களுக்குக் கற்பித்தார்.

ஒன்று நாவல்,

மற்றது காவியம்

முன்னது நவீனயுகப் பின்னணியில் எழுந்தது

பின்னையது பௌத்தமதப் பின்னணியில் எழுந்தது.

ஒன்று புதியது மற்றையது பழையது.

பழைய இலக்கியங்களிலும் நவீன இலக்கியங்களிலும் அவர் பாண்டித்தியமுடையவராய் இருந்தார் என்பதனை நாங்கள் மிகப் பின்னால் தான் அறிந்து கொண்டேம்

. அப்பாண்டித்தியத்தின் வீச்சுகள் எம்மேலும் விழுந்தன.

பழமையையும் புதுமையையும் அவர் கற்பித்த பாங்கு எங்களுக்கு மிகப் புதுமையாக இருந்தது.

மணிமேகலை கற்பிக்கையில் வெறும் இலக்கியமாக அதனைச் சுவையோடு கற்பிப்பதுடன் அதன் காலப் பின்னணி, அதனோடு எழுந்த காவியமான சிலப்பதிகாரத்திற்கும் அதற்குமிடையேயான ஒப்பீடு, பிற்காலத்தில் எழுந்த காவியங்களிலிருந்து அது மாறுபடும் தன்மை, பௌத்த மதம் கூறும் ஏனைய காப்பியங்களுடனான அதன் ஒப்பீடு, மணிமேகலை பற்றிய விமர்சனம் என அவரது விரிவுரை பரந்து விரிந்து அகன்று அகன்று செல்லும்

இன்று நினைத்துப் பார்க்கும் போது

ஒரு காவியத்தை ரசித்தல,;

பிற காவியங்களுடன் அதனை ஒப்பிடல்,

அக் காவியத்தை விமர்சித்தல்

என்ற மூன்று அடிப்படைகளில் எமக்குக் கற்பித்தார் என்பது தெளிவாகின்றது.

விரிவுரைகள் மூலம் நாம் அறியாத திசைகளுக்கெல்லாம் அழைத்துச் செல்வார்.

புதிய புதிய விடயங்களை, நூல்களை, ஆசிரியர்களை அறிமுகம் செய்வார்.

எளிமை, ஒழுங்கு, அழகு, சிந்தனைத் தூண்டல், இரசனை என்பன அவரது விரிவுரைகளில் நிரம்பி வழியும்.

பத்மாவதி சரித்திரமும் அவ்வாறே. நூலின் தோற்றப் பின்னணி, அதற்கும் ஏனைய நாவல்களுக்குமுள்ள வேறுபாடு, அதன் சமூகப் பரிமாணம் என்பவற்றுடன் நாவல் ரசனையும் கற்பிக்கப்படும். அவரிடம் விரிவுரைகள் கேட்டவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

கைலாசபதி அழகியலை விட்டு விட்டு சமூகப் பின்னணிக்கு மாத்திரம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று அவரைக் குற்றம் சாட்டுவது சில விமர்சகர்களின் வாய்ப்பாடாகி விட்டது.

ஆனால் அவரிடம் கற்றவர்கட்குத் தெரியும் ஒரு காவியத்தின் அழகியலையும் ஒரு நாவலின் அழகியலையும் அவர் எவ்வாறு கற்பித்தார் என்று.


அவர் விரிவுரைகளை வியப்புடன் செவிமடுப்போம்.

விரிவுரைகள் முடிய அது பற்றி உரையாடுவோம்

விரிவுரைகள் முடிய உசாத்துணை நூல்கள் ஒரு பட்டியல் தருவார்.

வாசிக்கும்படி தூண்டுவார்.

வாசித்தோமா என்று அறிய வினாக்களை வினவுவார்.

நிறைய வாசிக்க வேண்டும் என்பதில் மிகக் கறாராகவும் கண்டிப்பாகவும் செயற்பட்டார்

நாமும் நூல்களைத் தேடித் தேடி வாசிக்கவும் அவை பற்றி உரையாடவும் ஆரம்பித்தோம்

அவர் விரிவுரைகள் பிரபல்யம் பெற்றன.

தமிழை ஒரு பாடமாக எடுக்காத மாணவர்கள் கூட அவர் விரிவுரைகளுக்கு வர ஆரம்பித்தனர்.

பல்கலைக்கழகம் செல்வதற்கு முன்னரேயே எம்மிடம் வாசிப்புப் பழக்கம் இருந்தது.

அன்று மட்டக்களப்பில் நிறையக் கிடைத்த திராவிட, திராவிட முன்னேற்ற கழக நூல்கள், அண்ணாதுரை, கருணாநிதி, பாரதிதாசன் எழுத்துக்கள் எனக்கு மிகப் பரிச்சயமாயிருந்தன. சீhதிருத்தக் கருத்துக்களும் தமிழ் உணர்வும் நிரம்பப் பெற்ற இளைஞர்களுள் நானும் ஒருவனாயிருந்தேன்.

ஆனால் கைலாசபதி ஆற்றுப்படுத்திய நூல்களை வாசிக்க வாசிக்க எனக்குப் புது விடயங்கள் புலனாகின.

புது உலகங்கள் தெரிந்தன.

இந்தச் சந்தர்ப்பத்திலேதான் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் கதை, கவிதைப் போட்டியொன்றி;னை நடத்தியது.

கவிதையின் தலைப்பு

'பட்டப்பகலில் பாவலர்க்குத் தோன்றுவது'.

அந்தத் தலைப்பிலே பாரதிதாசன் பாணியில் நான் கனவு காண்பதாகவும் அக்கனவில் தமிழர்கள் தனி நாடமைத்து தனிப்படை வைத்து புலிக்கொடியோடு எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும், பேதமற்ற சமதர்ம அரசு நடத்துகிற குமரி நாட்டைக் கண்டு வருவதாகவும் எழுதியிருந்தேன்.

அக்கவிதைக்கு எனக்கு முதற் பரிசு கிடைத்தது.

இரண்டாம் பரிசு மலைநாட்டுத் தமிழர்கள் பற்றி எழுதிய செ.யோகநாதனுக்குக் கிடைத்தது.

அக்கவிதைத் தெரிவுக்கு நடுவர்களாக பேராசிரியர் கணபதிப்பிள்ளை, ஆ.வேலுப்பிள்ளை, கைலாசபதி ஆகியோர் பணியாற்றினர்.

தமிழ்ச் சங்க விழாக் கவியரங்கில் அந்நீண்ட கவிதையை உணர்ச்சி பாவத்துடன் நான் படித்த போது மாணவர்கள் மத்தியில் பலத்த கைதட்டல் கிடைத்தது.

விழா முடிய மாணவர்கள் பாராட்டினர் விரிவுரையாளர்களும் பாராட்டினர்

கைலாசபதி அருகில் வந்தார்

'தமிழரசு-சமதர்ம அரசு'

என்று தனக்கே உரிய சிரிப்புடன் என்தோளில் தட்டிவிட்டுச் சென்றமை இப்போதும் பசுமையாக நெஞ்சில் நிற்கிறது.

தமிழ்ச் சிறப்புப் பாட நெறியை 1962ம் ஆண்டில் நான் தேர்ந்தெடுத்தேன்.

வகுப்பில் ஆறு பேர்கள் இருந்ததாக நினைவு(ஞாபகம்.)

பேராசிரியர்களான கணபதிப்பிள்ளை

செல்வனாயகம்,

வித்தியானந்தன்,

வேலுப்பிள்ளை,

கைலாசபதி

சதாசிவம்

ஆகியோருடன் நெருக்கமாகப் பழகும் சந்தர்ப்பத்தினை இச்சிறப்புப் பாடநெறி ஏற்படுத்திக் கொடுத்தது

எங்களுக்குக் கைலாசபதி,

பாரதிதாசனின் பாண்டியன்பரிசு,

நெடுல்வாடை

, சீவகசிந்தாமணி

கற்பித்ததுடன் திராவிடர் நாகரிகமும் கற்பித்தார்.

பாரதிதாசனில் முழுகிப்போய்க்; கிடந்த எனக்கு பாரதிதாசனின் பலவீனங்களும் புரிய வந்தன.

நெடுநல்வாடை சங்க இலக்கியமான பத்துப் பாட்டில் ஒரு முக்கிய நெடும் பாடல்

குளிர் காலத்தின் பின்னணியுடன் அப்பாடல் ஆரம்பமாகிறது. நெடுநல்வாடையினை அவர் அன்று படிப்பித்தவிதம் ஒரு சிறந்த குறும்படம் பார்ப்பது போல அமைந்திருந்தது.

அவரிடம் திராவிடர் நாகரிகம் படித்த போதுதான் தமிழரின் பூர்வீகம், அவ்வினத்தின் பரப்பு என்பன தெரிய வந்தன.

கோசாம்பி, இராகுல்யிய சாங்கிருத்யாயன் முதலிய அறிஞர்களின் நூல்களின் அறிமுகம் கிடைத்தது.

சட்டோபாத்யாயவின் 'உலோகாயுதம்' அப்போது பிரபலமான நூல்.

உலோகாயுதம் எனும் நூல் அன்றைய பழமைவாத சிந்தனைகளைப் புரட்டி; போடட நூல்.

வரலெற்றியல்(சரித்திரவியல்) பொருள் முதல் வாதப் பார்வையில் இந்தியாவின் புராதன வரலாற்றை, வேதங்களை அறிமுகப்படுத்தும் நூல்.

இந்த நூலின் தாக்கத்தினால் தான் பேராசிரியர் கணபதிப்பிள்ளை முருகன் பற்றி ஒரு கட்டுரை எழுதினார்.

விஞ்ஞான பூர்வமான அக்கட்டுரை பழமைவாதிகள் பலரின் கடும் எதிர்ப்பிற்குள்ளானது.

விபுலானந்த அடிகள் போட்ட அத்திவாரத்தில் பிரான்சு(ஸ்) கிங்சு(ஸ்)பெரி, பேராசிரியர் கணபதிப்பிள்ளை, செல்வநாயகம் போன்றோர் கட்டியெழுப்பிய தமிழ்ச் சிந்தனை மரபு விஞ்ஞான ரீதியாகத் தமிழை அனுகும் பண்பு கொண்டிருந்தது.

சைவமும் தமிழுமின்று கற்று வைத்திருந்த நாம்

சமணமும் தமிழும்,

பௌத்தமும் தமிழும்,

இசு(ஸ்)லாமும் தமிழும்,

கிறிசு(ஸ்)தவமும் தமிழும்

, நவீனத்துவமும் தமிழும்

என்று பரந்த நோக்கில் தமிழை அணுகினோம்.

உணர்வு நிலையினின்று மாறி அறிவு நிலையில் எதையும் அணுகும் பண்பினை கைலாசபதி எங்களுக்குக் கற்றுத் தந்தார்.

எதற்கும் ஒரு மெய்யியல்(தத்துவப்) பின்னணி உண்டு.

அது உழைக்கும் மக்கள் நலன் சார்ந்ததா? உழைக்காது உண்டு களித்திருப்போர் நலன் சார்ந்ததா? என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும் என்பார்.

எப்படி அதைக் கண்டு பிடிப்பது?

புரியாத வயது அது, ஆனால் அறிய வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்த வயது.

அப்போதுதான் அவரது புகழ் பெற்ற மூன்று கட்டுரைகள் பல்கலைக்கழகச் சஞ்சிகைகளில் வெளியாயின.

ஒன்று 'நாடும் நாயன்மாரும்' என்ற பல்லவர் காலம் பற்றிய கட்டுரை.

அதிலே சமணருக்கும் சைவருக்குமிடையே நடைபெற்ற சமயப் போர், சமூக அடித்தளத்தில் வணிகருக்கும் நிலவுடமையாளருக்கும் நடைபெற்ற வர்க்கப் போரே என்பதனை இலக்கிய ஆதாரங்களுடன் எளிமையாகவும், சுவையாகவும் விளக்கியிருந்தார்.

சாதாரண மக்களான பறையரையும், வேடரையும், வண்ணாரையும், பரதவரையும் தம்முடன் போரில் இணைக்க நிலவுடமையாளர் செய்த முயற்சிகளை அதில் அம்பலப்படுத்தியிருந்தார்.

அடுத்து

'பேரரசும் பெருந்தத்துவமும்' என்ற கட்டுரை.

முன்னையதன் தொடர்ச்சி

இது. சாதாரண மக்களையும் தம்முடன் இணைத்துக் கொண்டு வணிகருக்கும் சமணருக்கும் எதிராக வண்முறையாகக் கூடப் போராடி வெற்றி பெற்ற சைவம், எவ்வாறு ஒரு தத்துவமாக முகிழ்த்தது என்றும் தத்துவ முகிழ்ப்பில் மக்களை சுரண்டி வளர்ந்த சோழப் பேரரசுக்கு அது உறுதுணையாக இருந்தது என்றும் விளக்கி போராட்டத்தில் தனக்குதவிய மக்களை அது எவ்வாறு சமூகத்தில் தள்ளி வைத';தது என்பதனைத் தோலுரித்துக் காட்டியிருந்தார்.

மற்றக் கட்டுரை

'தெய்வமென்பதோர் சித்தமுண்டாகி' எனும் கட்டுரையாகும்

. இனக்குழுத் தெய்வமாகவும், சிந்து வெளியில் யோகியாகவும் இருந்த சிவபெருமான் எவ்வாறு வேதங்களுக்குள் உள்ளிலுக்கப்பட்டு பசுபதியாகவும், அர்த்தநாரீசு(ஸ்)வரனாகவும் மாறி ஆடும் பிரானாக வளர்ந்தார் என்பதனை வரலாற்று ரீதியாக சமூகவளர்ச்சி ரீதியாக, பரிணாம ரீதியாக விளக்கும் கட்டுரை அது.

சிவனைப் புறநிலையில் நின்று ஆய்வு செய்த கட்டுரை அது.

இம்மூன்று கட்டுரைகளும் பல்கலைக்கழக வட்டாரத்தில் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தின. விரிவுரையாளர்கள் சிலர் வகுப்பில் அக்கட்டுரைகளைக் காரசாரமாக விமர்சித்தனர். மாணவர்கள் மத்தியில் இரு பிரிவு. ஒன்று ஆதரிக்கும் பிரிவு மற்றது எதிர்க்கும் பிரிவு. சிலர் மௌனம் சாதித்தனர்.

கைலாசபதி பல்கலைக்கழக மட்டத்திலும் வெளியுலகிலும் கண்டனத்திற்கும் பாராட்டிற்குமான ஒரு எழுத்தாளரானார்.

அன்று தொட்டு இன்று வரை ஒருசாராரால் கண்டிக்கவும் மறுசாராரால் பாராட்டவும் பெறுகிறார். அவர் இறந்த பிறகும் அந்நிலை மாறவில்லை.

அவர் கண்டிக்கப்படுவதற்கும் இன்னொரு வகையிற் தூற்றப்படுவதற்குமான காரணம் அவர் ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட பல கொள்கைகளைக் கேள்விக்குள்ளாக்கியமையே.

பின் நவீனத் துவ வாதிகள் என்று கூறும் மறு வாசிப்பு, கட்டவிழ்ப்பு என்பனவற்றை 1960களில் வேறொரு வகையில் தமிழ் இலக்கியப் பரப்பில் அவர் செய்தமைதான் அவர் புகழுக்கும், இகழ்வுக்கும் காரணங்களாயின.

எடுத்துக்கொண்ட பொருளை, கூற வந்த விடயத்தை தர்க்க ரீதியாக ஆதாரங்களுடன் நிறுவுவது ஆய்வாளர் பணி. இப்பண்பு அவரது ஆய்வுக் கட்டுரைகளில் தொட்ட இடமெல்லாம் மணக்கும். நாங்களும் புதிய வழிகளிற் சிந்திக்கத் தொடங்கினோம். புதிய சிந்தனைகளுக்குப் பரிச்சயமானோம்.

இளம் விரிவுரையாளரான கைலாசபதி அன்று விஜயவர்த்தனா மண்டபத்தில் ஒரு அறையில் தங்கியிருந்தார்.

அவருடன் இளம் விரிவுரையாளர் பாலகிருஷ்ணனும் (பின்னாளில் கலைப் பீடாதிபதி யாழ்ப்பாணம், பேராசி;ரியர்) தங்கியிருந்தார்.

இருவரும் நெருக்கமான நண்பர்கள். இடதுசாரிகளாயினும் இரு வேறு அணியினர்.

அடிக்கடி மாணவர்களாகிய நாம் அவர்களைக் காணச் செல்வோம். அவர்களுடனான உரையாடல்கள் நாம் அறியாத இன்னொரு உலகைக் காட்டியது.


சமூகப் பிரக்ஞை,

அடிமட்ட மக்கள்,

தொழிலாளர் வர்க்கம்,

தேசியம்,

சர்வ தேசியம்,


அமெரிக்க ஏகாதிபத்தியம்,

அதற்கெதிராக வியட்நாம் மக்கள் நடத்தும் வீரம் செறிந்த போராட்டம்

சோசலிசம், கம்யூனிசம்,

பொருள் முதல்வாதம் என்ற புதிய விடயங்களும், பதங்களும் எமக்கு அறிமுகமாயின.

சோசலிச வகுப்புகளுக்கு எம்மை கைலாசபதி அறிமுகப்படுத்தினார். சிங்கள மாணவர்கள் பலர் அறிமுகமாகினர்.

சிங்களத்திலும், தமிழிலும் சோசலிச சித்தாந்த வகுப்புகள் நடைபெற்றன. விரிவுரையாளர்கள் சில விரிவுரைகள் நடத்தினர். கைலாசபதி தமிழில் சில விரிவுரைகள் நடத்தினார்.

அங்கு பெற்ற தத்துவ பேதம், உலகப் பார்வை என்பன என் குறுகிய சிந்தனைகளைத் தகர்த்து எறிந்தது.

மானுட நேயத்தை விஞ்ஞான பூர்வமாக அறிந்து கொண்டோம்.;

ஏனைய மாணவர்கள் கழியாட்ட விழாக்களில் ஈடுபட சோசலிச வகுப்பில் இணைந்த மாணவர்களான நாம் அருகிலுள்ள ஏழைத் தோட்டத் தொழிலாளர்கள் வாழ் குடிசைகளுக்குச் சென்று அப்பிள்ளைகளுக்குக் கல்வி பயிற்றினோம்.

கைலாசபதி எமது இச் செயற்பாடுகளுக்கு ஊக்கமும் உதவியுமளித்தார்.

முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை எமக்கு அறிமுகப்படுத்தியவர் கைலாசபதிதான். 1962ல் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒரு பெரிய மாநாட்டினையும், பருத்தித்துறையில் யாழ்ப்பாணச் சுவாமியாரின் நினைவையும் கொண்டாடியது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த பல இளைஞர்கள் அதனைப் பார்க்கச் சென்றிருந்தனர். நானும் ஒருவனாகச் சென்றிருந்தேன்.

யாழ்ப்பாணச் சுவாமி பற்றிய கவியரங்கில் என்னையும் கைலாசபதி சேர்த்திருந்தார்.

யாழ்ப்பாண பட்டறிவு(அனுபவம்) புதுமையாக இருந்தது. முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாடு யாழ்ப்பாணத்திலும், யாழ்ப்பாணச் சாமியார் கவியரங்கு பருத்தித்துறையிலும் நடைபெற்றது.

மாநாட்டில் முதல் நாள் இரவில் மாநாடு நடைபெறும் மண்டபம் சென்றோம்.

நாம் முன்னரேயே படித்துத் தெரிந்து வைத்திருந்த புகழ் பெற்ற எழுத்தாளர்களான

இளங்கீரன், டானியல், டொமினிக் யீவா, நீர்வை பொன்னையன், பிரேம்யி, சிவத்தம்பி, இரகுநாதன், சில்லையூர் செல்வராசன், காவலூர் இராசதுரை, அ.ந.கந்தசாமி, சோமகாந்தன்(ஈழத்து சோமு), பத்மா, சொக்கன், நந்தி முதலாம் எழுத்தாளர்களை அங்குதான் நான் முதலிற் சந்தித்தேன்

. எல்லோரும் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்

. மடுதோண்டுவார் சிலர்,

கம்புகள் நடுவோர் சிலர்,

தோரணம் கட்டுவோர் சிலர்

எனப் புகழ் பெற்ற எழுத்தாளர்களெல்லாம் தொழிலாளர்களாக வேலை செய்தமை என்னை வியப்பில் ஆழ்த்தியது.

கூடவே கைலாசபதியும் கம்புகள் தடிகளைச் சுமந்து வந்து கொண்டிருந்தார். கூட பேராசிரியர் வித்தியானந்தனும்.

எல்லோரையும் எங்களுக்குக் கைலாசபதி அறிமுகம் செய்து வைத்தார். உறவுகளை ஏற்படுத்தினார். அந்த உறவுகள் நீண்ட காலம் வரை தொடர்ந்தன.

மறு நாள் விழாவில் பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பேராசிரியர் வித்தியானந்தன், கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் பேசினார்கள். மாணவர்களாகிய எங்களுக்கு மகா மகிழ்ச்சி.

பல புதியவர்களுடன் உறவுகள் ஏற்பட்டன

. பருத்தித்துறையில் கவியரங்கு கவிஞர் யாழ்ப்பாணன் வீட்டில் விருந்து. வரதர், சிற்பி ஏ.ரி.பொன்னுத்துரை போன்றோர் அங்குதான் அறிமுகமாகினர். ஓர் எழுத்து இயக்கத்துக்குள் அன்று எம்மை இழுத்துவிட்டார்.

அவ்வெழுத்தியக்கம் சென்று தேய்ந்து ஓய்ந்தமை தனியாக எழுதப்பட வேண்டியது.

எழுத்தை சமுதாய மாற்றத்திற்கு முக்கியமாக அடிமட்ட மக்களின் விடுதலைக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற போதனைகளை நாம் அங்கு கற்றுக் கொண்டோம்.


பேராசிரியர் வித்தியானந்தம் 1962ல் கர்ணன் போர் எனும் வடமோடி நாடகத்தைத் தயாரித்தார்.


சரத்சந்திராவின் 'மனமே' நாடகத்திற்கு நிகராக ஒரு நாடகம் தயாரிப்பதே வித்தியானந்தன் நோக்கு


. மட்டக்களப்பில் ஆடப்பட்ட ஒரு கூத்தைச் சுருக்கும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டது.


ஏட்டிலிருந்து அதனைச் சுருக்க வேண்டும். அப்போதெல்லாம் கைலாசபதி என்னை


'சாமிநாதக் குஞ்சே'


என்றுதான் பகிடியாகக் கூப்பிடுவார்.


அந்நாடகத்தில் நான் கர்ணனாக நடித்தேன். கைலாசபதியும், சிவத்தம்பியும் அந்நாடகத்திற்கான இணைத்தயாரிப்பாளர்கள்.


அருச்சுனன் விட்ட பாணத்தினால் அனைத்து ஆயுதங்களையும் இழந்து கர்ணன் வில்லோடு தனியாகப் போர்கக்ளத்தில் நிற்கிறான்


. நான் ஒத்திகையில் வித்தியானந்தனும், சிவத்தம்பியும் சொன்னபடி செய்தேன்.


கைலாசபதி தனியாக என்னை அழைத்து கர்ணன் பற்றிய கதைகளையும்,


அவன் மனப் போராட்டங்களையும் விளக்கினார்.


சிதம்பர இரகுநாதன் எழுதிய


'வென்றிலன் என்றபோதும்'


என்ற சிறுகதையை வாசிக்கத் தந்தார்.


வில்லைச் சும்மா வைத்துக் கொண்டிராமல் அதன் நாணைச் சுண்டியபடி ஏக்கமும், தோல்வியும், கோபமும், அவமானமும் நிறைந்த முகத்துடன் நின்று பார்'


என்றார்.


அப்படியே செய்தேன்.


அக்காட்சி நாடகத்தில் மிகுந்த வரவேற்புப் பெற்றது.


கர்ணன் போர் நாடக ஒத்திகைக்கு ஒழுங்காகக் கைலாசபதி வருவார்.


வித்தியானந்தன் வராத வேளைகளில் அவரே ஒத்திகைக்குப் பொறுப்பு (சிவத்தம்பி கொழும்பிலிருந்து வாரந்தோறும் வருவார்.


அவரது உறவும் நாடகத்தை உருவாக்க அவர் உதவிய முறையும் தனியாக எழுதப்பட வேண்டிய ஒன்று)


கர்ணன் போர் வெற்றிக்குக் காரணமான பலருள் கைலாசபதியும் ஒருவரென்பது வெளியே தெரியாத செய்தி.


1963,64களில் கைலாசபதி கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக இலண்டன், பெர்மிங்காம் போய்விடுகிறார்


; அவருடன் கடிதத் தொடர்புகள் மாத்திரமே இருந்தன. தனது பல்கலைக்கழக வாழ்வு பற்றியும் பேராசிரியர் தோம்சன் பற்றியும் அங்கு நடைபெற்ற அறிவார்ந்த உரையாடல்கள் பற்றியும் எழுதுவார்


சீனாவில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்ட காலம் அவை.


சீனாவின் கலாசாரப் புரட்சி உலகை உலுக்கிக் கொண்டிருந்த காலம்.


மாசேதுங்கின் சிந்தனைகள் பழமையில் வாழ்ந்த சீனாவை புதிய காலத்திற்குள்(யுகத்திற்குள்) கொண்டு சென்று கொண்டிருந்த காலம்


தான் பெர்மிங்காமில் சந்தித்த அறிவாளிகள், சீனத் தோழர்கள், உலகின் புரட்சிகரப் போராட்ட வீரர்கள் பற்றி எல்லாம் எழுதுவார்.


இலங்கையில் அடக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான எழுத்துக்கள் தோன்ற வேண்டும் என்றெல்லாம் எனக்கும் என்னோடு உடன் பயின்ற மாணவருக்கும் எழுதுவார்.


அவரது ஒவ்வொரு கடிதமும் பல விடயங்களைக் கூறும் புதிய தகவல்களைத் தரும். மேலும் வாசிக்க உற்சாகப்படுத்தும் எழுதத் தூண்டும்.