குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

நரகத்தீ கணவாய் ( Hell fire pass )(மரண இரயில் பாதையில் தமிழர் கண்ணீர், மறைந்து போன மரணங்கள்)

நரகத்தீ கணவாய் ( Hell fire pass )

(மரண இரயில் பாதையில் தமிழர் கண்ணீர், மறைந்து போன மரணங்கள்)

மனித வரலாற்றில் ஒரு கொடிய முயற்சியாக ஜப்பானியரின் Burma - Siam Railway திட்டம் கருதப்படுகிறது .இதுவே பின்னர் மரண தொடருந்துப்பாதை(இரயில் பாதை) என வர்ணிக்கப்பட்டது .

இரண்டாம் உலகப்போர் காலத்தில் யப்பானியர் தாய்லாந்தில் இருந்து பர்மாவுக்கு தொடருந்துப் பாதை அமைக்கும் திட்டத்தை முன்வைத்தனர். இதில் தாய்லாந்தின் காஞ்சனாபுரி மாநிலத்தில் பெருங்காடுகளின் நடுவே பெரும் மலைக்குன்றுதான் நரகத் தீ கணவாய் என அழைக்கப்படுகிறது . இந்த மலையைக் குடைந்து பாதையமைப்பதில் பல இடர்ப்பாடுகள் இருந்தன. ஆயினும் அதிகமான தொழிலாளர்களை பலியிட்டதன் மூலம் யப்பானியர் திட்டத்தை நிறைவு செய்தனர். பிரித்தானியர் தாய்லாந்து பர்மா இரயில் பாதைத் திட்டத்தை நிறைவு செய்ய 72 மாதங்களை நிர்ணயித்திருந்தனர். ஆனால் பிரித்தானி யரை தோற்கடித்த பின்னர் யப்பானியர்கள் 14 மாதங்களில் அத்திட்டத்தை நிறைவு செய்தனர். இது எப்படி சாத்தியமாகியது ?

இத்திட்டத்திற்காக 330000 தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். அவர்களில் 60,000போர்க் கைதிகள் அடிமைகளாகப் பயன்படுத்தப்பட்டனர் .மலேசியாவில் றப்பர் தோட்டங்களில் தொழில் புரிந்த இந்தியர்களிடம் (பெரும்பாலானவர்கள் தமிழர்கள்) ஆசை வார்த்தைகள் கூறப்பட்டு ஆட் பிடிக்கத் தொடங்கினர். அதிக சம்பளம் , நல்ல உணவு , சுகாதார மானதங்குமிடம் என்பதோடு மட்டுமல்லாமல் புதிதாகப் போடப்படும் இரயில் பாதை மூலமாக நீங்கள் இந்தியா போய் வரலாம் என்றார்கள். திருமணமான இளம் குடும்பத்தினருக்கு தனியான தங்குமிடம் தரப்படும் என்றார்கள். சிலர் நம்பினர். குடும்பமாக வண்டியேறினர் .பலர் கட்டாயத்தின் பேரில் பிடித்துச் செல்லப்பட்டனர். இன்னும் சில வீடுகளில் ஆண்களுக்கு பெண் வேடமிட்டுப்பாதுகாத்தனர். உண்மை தெரிய வர ஆண்களுடன் பெண்களும் பிடிக்கப்பட்டனர்.

பொய்களைக் கூறி அழைத்துவரப்பட்ட சுமார் 2 இலட்சம் தொழிலாளர்கள் .60,000 போர்க் கைதிகள் . 60 000 யப்பானிய பொறியிலாளர்களுடன் 1942 .06. 22 நாளன்று பாதைமைக்கும் பணி ஆரம்பமானது . நரகத்தீகணவாய் பகுதியில் வேலைகள் தொடங்கி 6 வாரங்களில் மட்டுமே 68 தொழிலாளர்கள் அடித்துக் கொல்லப்பட்டார்கள். அவ்வாறாயின் 416 K M நீளமான பாதைப் பணிகளில் எத்தனை மரணங்கள் நிகழக்கூடும். கொடிய நோய்கள் , பட்டினி , சித்திரவதை என மனித உயிர்கள் பலியாகிக் கொண்டிருந்தன. இறப்பவர்கள் ஒரு குழியில் போடப்படுவார்கள். பின்னர் மறுகுழியென மரணக்குழிகளும் அதிகரித்துக் கொண்டே சென்றன.

மரண ஓலங்கள் காடுகளின் நடுவே நிசப்தமாகிப் போகின.

பசியில் வாடிய தொழிலாளர்களை நன்றாக வேலை செய்யவில்லையென்று கைகளைக்கட்டி அடித்தார்கள். தலையை துண்டித்து கொலை செய்தார்கள் . பலர் இருட்டு நில அறைக்குள் போடப்பட்டு உணவு நீர் கொடுக் காமல் கொல்லப்பட்டார்கள்.

இவ்வாறு பல கொடுமைகளை நிகழ்த்தியே யப்பானியர்கள் 416 KM நீளமான தொடருந்துப் பாதையை 680 பாலங்கள் கட்டியதன் மூலமாக 1943. 10. 17 ஆம் நாளன்று நிறைவுக்கு கொண்டு வந்தார்கள்.

இது ஒரு வரலாற்று சாதனையல்ல. வரலாற்று சோகம். இவ்வாறு இரத்தத்தாலும் கண்ணீராலும் கட்டப்பட்ட இந்தப் பாதையை சில மாதங்களிலேயே இங்கிலாந்து விண்ணுந்துகள் குண்டு வீசி தகர்த்தெறிந்தன. பின்னர் யப்பானும் 2 ம் உலகப்போரில் தோல்வியுற்றது.

இந்தப் பாதையமைப்புக்காக மலேசியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சுமார் ஒரு இலட்சம் தமிழர்களில் ஏறக்குறைய 10,000 பேர் மட்டுமே மலேசியாவுக்கு திரும்பச் சென்றார்கள் எனக்கணிக்கப்படுகிறது. மிகுதி 90,000 தமிழர்களும் தாய்லாந்து , பர்மா மரணக்குழிகளுக்குள் மௌனமாக்கப்பட்டார்கள்.

இந்த மரண இரயில் பாதைத் திட்டத்தில் கொல்லப்பட்ட போர்க்கைதி

களுக்கு நினைவுத் தூபிகள் , கல்லறை கள் கட்டப்பட்டு ஆண்டுதோறும் நினைவு கூரப்படுகின்றனர். ஆனால் பெருமளவு கொல்லப்பட்ட தமிழர்களின் வரலாறு மறைக்கப்படவும் மறக்கப்படவும் காலம் சதி செய்கிறதா ..?இந்த வரலாறு தொடர்பான பல ஆங்கில நூல்கள், திரைப்படங்கள் பல வெளி வந்துள்ளன .அவை அடிமையாக்கப்பட்ட போர்க் கைதிகள் பற்றியே அதிகம் பேசுகின்றன. பெருமளவில் பலியான தொழிலாளர்கள் பற்றி அதிகம் பேசாமல் விட்டுச் செல்கின்றமை துரதிஷ்டமே ...

குறிப்பு..

யப்பானியர் மிகப் பெரும் மனிதப் பேரவலங்களை நிகழ்த்தியே இந்தப் பாதையை அமைத்ததால் அவை தொடர்பான முழு ஆவணங்களையும் அழித்து விட்டனர். அதனால் பூரணமான தரவுகளைப் பெற முடியாது. நேச நாடுகளின் புலனாய்வு அறிக்கைகளில்

மனித வள எண்ணிக்கையில் மாறுபாடுகள் இருக்கலாம்.


அருந்தவராயா .க

17.04.2020

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், வெளிப்புறம் மற்றும் இயற்கை