குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

வேப்பிலை, மஞ்சள், கோமியம், நாட்டு மாட்டுச் சாண கலவை கிருமிநாசினியா? தீயநுண்மிகள் பற்றி அறிவோம்.

30.03.2020 தமிழ் உலகின் மூத்த மொழி. இலக்கியங்களில் செழித்த மொழி. கணிதத்தின் தரத்தையும் மிஞ்சும் திருக்குறளைத் தந்த மொழி. எத்தனை கலைகள், எத்தனை மர, கருங்கல், உலோக சிலைகள், வானுயர கோபுரங்களைக் கொண்ட கோவில்கள், என் முன்னோர்களின் அறிவையும் ஆற்றலையும் அங்குக் காணலாம். கோயில்கள் பல தொழில் நுட்பத்தின் கண்காட்சி. ஆனால் கோவிலைச் சரியாகப் பார்ப்பவர்கள் நம்மில் சிலர் தான்.

மஞ்சள் காமாலை போன்ற கொடிய நோய்களுக்கு மருந்து தந்து உலகைக் காத்த என் முன்னோர்களை நினைத்துப் பெருமையடைந்த நான்,

"வேப்பிலை, மஞ்சள், கோமியம், நாட்டு மாட்டுச் சாணம் கலந்த கலவை ஒரு கிருமிநாசினி" என ஏன் மக்கள் பயன்படுத்துவதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. மூடநம்பிக்கையாகத்தான் இதனைப் பார்க்கின்றேன்.

கிருமிநாசினிகள் பூஞ்சைகள், பாக்டீரியா மற்றும் வைரசுகளைக் கொல்ல வல்லது. எப்படி இவற்றைக் கொல்கின்றது என்பதைப் பார்ப்போம்.

சில பாக்டீரியாக்கள் வெளிப் புறத்தில் ஒருவகையான சவ்வைக் கொண்டது. சில பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் வெளிப் புறத்தில் நல்ல தடிமனான சுவரைக் கொண்டது. வைரசு வெளிப்புறத்தில் பல புரத கட்டமைப்பைக் கொண்டது.

கோடி கோடியாகப் பாக்டீரியாக்கள் உள்ளன. கோடி கோடியாகப் பூஞ்சைகள் மற்றும் வைரசுகளும் உள்ளன. இவை அனைத்தையும் கொல்ல வல்லமை படைத்தது

இந்த கிருமிநாசினிகள். கிருமிநாசினிகள் பல வகைகள் உள்ளது. உங்கள் வசதிக்காக இவற்றை இரண்டாகப் பிரித்து விளக்குகின்றேன்.

ஒன்று சாராயத்தை அடிப்படையாகக் கொண்டது.. இரண்டு சோப்பை அடிப்படையாகக் கொண்டது.... இவை இரண்டிலும் OH-, H+, போன்ற அயினிகளை உமிழவல்ல பொருட்களை அல்லது குளோரின், அயோடின், புரோமின், அல்லது குளோரோகெசிடின் (chlorhexidine) போன்ற வேதிப்பொருட்களில் ஒன்றே அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவையே இருக்கும்.

இவை பூஞ்சைகள், பாக்டீரியா மற்றும் வைரசுகளின் வெளிப்புற மற்றும் உட்புற அமைப்புக்களை ஒரு நிமிடத்தில் குலைக்கவல்லது. இந்த வேதிப்பொஸ்ருட்களால் உருக்குலைக்கப்பட்ட நுண்ணுயிரிகளால் உயிர்வாழமுடியாது. காரணம் இந்த நுண்ணுயிரிகளில் உள்ள புரதம், கொழுப்பு மற்றும் மரபணுக்களை இந்த வேதிப்பொருட்கள் சிதைக்கின்றன. நம் கைகளில் மேல் உள்ளது தோல். இந்த தோலின் மேல் அடுக்கு இறந்த செற்களின் தொகுப்பு. எனவே இந்த வேதிப் பொருட்களால் நமக்குப் பாதிப்பில்லை. இவை நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.

வேப்பிலை, மஞ்சள், கோமியம், நாட்டு மாட்டுச் சாணம் கலந்த கலவை ஒரு கிருமிநாசினி இல்லை. இதனைப் பயன்படுத்துவதால் பயன் எதுவும் இல்லை. கரோனாவைரசு பரவிவரும் இந்த வேளையில் இதனை நம்பி உயிரைப் பணயம் வைக்கக்கூடாது.

மாறாக மாட்டுச் சாணம் டெட்டனஸ் என்ற நோயை உண்டுபண்ணும் பக்டிரியாவின் இருப்பிடம். இதனை கையால் தொடுவதையே அபாயம் என்பதை உணரவேண்டும்.

ஆனால் நுண்ணுயிரியால் படித்தவர்களில் பலரும் கூட மாட்டுச் சாணத்தைக் கிருமிநாசினி என வாதாடுவதைப் பார்த்திருக்கிறேன். என்னத்த சொல்ல... படித்த மற்றும் நிரூபிக்கப்பட்ட உண்மைகளைவிட இந்த வகை மூடநம்பிக்கைகளைப் படித்த அறிவாளிகளும் நம்புகின்றனர்.

மாட்டுச் சாணத்தில் கோடான கோடி பூஞ்சைகள், பாக்டீரியா மற்றும் வைரசுகளும் உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து உங்களைக் காப்பாற்றாது. நிச்சயம் உங்களுக்குப் பல தொல்லைகளைத்தான் தரும்.

தெளிந்த தமிழ் சமுதாயத்தில் இப்படி ஒரு மூடநம்பிக்கையை எந்த கயவர்கள் எற்றிவிட்டார்கள் எனத் தெரியவில்லை. நம்மை வாழவைக்க இதனை அவர்கள் செய்யவில்லை.. நம்மை அழிக்கவே இந்த மூடநம்பிக்கையை நம்மிடம் ஏற்றியுள்ளார்கள் அந்த அற்பர்கள்.

மேலும் மஞ்சள் மற்றும் வேப்பிலையில் கிருமிநாசினிகளின் பண்பு சற்றுள்ளது என்பதில் ஐயமில்லை. ஆனால். இதனை வைத்து கை கழுவினால் அனைத்து நுண்ணுயிரிகளும் அழிக்கப்படுமா? எனப் பார்ப்போமா?

மஞ்சளில் கர்குமின் (Curcumin) என்ற வேதிப்பொருளும்; வேப்பிலையில் அசாடைரடின் (Azadirachtin) என்ற வேதிப்பொருளும்

கிருமிநாசினிகளின் பண்பு சற்றுள்ளது என்பதில் உண்மை. இவை இரண்டும் அனைத்து நுண்ணுயிரிகளையும் அழிக்கும் வல்லமை படைத்ததா என்றால் இல்லை என்பது என் பதில்.

சில பாட்டிரியாக்களையும் ஒரு சில பூஞ்சைகளையும் தான் இந்த அசாடைரடின் மற்றும் கர்குமின்-களால் அழிக்கமுடியும். பெரும்பாலான வைரசுகளில் இந்த பொருட்களின் ஆற்றல் அறியப்படவில்லை. நான் சொல்லுவது என்னவென்றால் மிகச் சில நுண்ணுயிரிகளை மட்டுமே இந்த பொருட்களால் அழிக்கமுடியும். அனைத்து நுண்ணுயிரிகளையும் இதனால் அழிக்கமுடியாது. மேலும் இந்த பொருட்கள் நுண்ணுயிரிகளை அழிக்க அதிக நேரத்தை எடுத்துக்கொள்கின்றன. ஒரு நிமிடத்தில் அத்தனை நுண்ணுயிரிகளையும் அழிக்கவேண்டும். ஒரு முறை கை கழுவ அதிக நேரம் எடுத்துக் கொள்ள முடியாது. விரைவாகச் செயல்படும் பொருட்களையே கிருமிநாசினிகளாகப் பயன் படுத்தமுடியும்.

மஞ்சளில் உள்ள கர்குமின் புற்றுநோய்க்கான நல்ல மருந்து. வேப்பிலையில் உள்ள அசாடைரடின் ஒரு சிறந்த பூச்சிக் கொல்லி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இவை நல்ல கிருமிநாசினிகள் என்பது உண்மையில்லை.

வேப்பிலை ஒரு சிறந்த பூச்சிக் கொல்லி எனத் தூத்துக்குடியைச் சார்ந்த ஒருவருக்குத் தெரிய, அவர் வேப்பிலையை நிரைய பறித்து பின் அரைத்து ஒரு பெரிய சொம்பு நிறையக் குடிக்க, அவர் உயிர் உடலைவிட்டுப் பிரிந்தது.. வேப்பிலை நல்லது தான். அதைச் சரியாகத் தெரிந்து பயன்படுத்தவேண்டும்.

Dr.S. Sudhakar