குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

எட்டு கழுத்துக்களை அறுத்தவன்

28.03.2020 அன்று இரவு வேலை. இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் ஆறு மணி செய்திகளை record பண்ணி, நான் குறிப்பெடுத்துக்கொண்டிருக்க –குகநாதன் ஐயா வேலைக்கு வந்த வீச்சில் தனது மிக முக்கிய பணியில் தீவிரமாக இருந்தார். மேசையின் மையத்தில் வெத்திலைச்சரையை விரித்து வைத்து சீவல், சுண்ணாம்பு சமேதராக கணக்கான கலவைகளை உறுதி செய்து ருசித்து ருசித்து அரைத்துக்கொண்டிருந்தார். அதன்பிறகு, அன்றைய இரவுக்கான செய்திமீன் பிடிப்பதற்கு ஆயத்தமானார்.

வழக்கம்போல சுழற்றிக்கொண்டிருந்த தொலைபேசி அழைப்பு ஒன்றில் பேசிக்கொண்டிருந்தவர், திடீரென படுவேகமாக குறிப்பெடுத்தார். குரலில் ஆச்சரிய தொனிகள் வேறு அடிக்கடி கேட்டது. வாயில் போட்டிருந்த வெத்திலையை துப்பி, மேசையின் ஓரத்தில் ஒரு பேப்பரில் உருட்டி வைத்துவிட்டார். இதனால், அந்தப்பக்கம் திரும்பி, என்னதான் கதைக்கிறார் என்று ஒற்றுக்கேட்கவும் அரியண்டமாக இருந்தது.

சடாரென தொலைபேசியை வைத்துவிட்டு, அதுவரைக்கும் குறிப்பெடுத்துக்கொண்டிருந்த பேப்பர் துண்டையும் எடுத்துக்கொண்டு வித்தி அண்ணையின் மேசைக்கு ஓடினார். மேசையின் ஒரு பக்கத்திலிருந்து அடுத்த பக்கத்தக்கு தாவி பாதி சாச்டாங்கமாக மேசையில் கிடந்து, ஏதோ குசுகுசுத்தார்.

முக்கியமான செய்தி என்று ஓரளவுக்கு விளங்கியது. ஆனால், என்ன செய்தி என்று புரியவில்லை.

நடுநிசி நெருங்க நெருங்க, வித்தி அண்ணையும் அறம் புறமாக தொலைபேசியிலேயே பிஸியாக இருந்தார். வழமையாக சாப்பிடுவதற்காக போகும் நேரமும் கடந்துவிட்டது. இனிச்சரிவாரது என்று, வித்தி அண்ணையின் மேசைக்கு போய், செய்தி கொப்பியை பார்த்தேன்.

மிருசுவில் படுகொலை….!!

2000 ஆம் ஆண்டு இறுதி. ஆனையிறவு படைத்தளம் கைப்பற்றப்பட்ட பின்னர், நாகர்கோவிலில் நிலைகொண்டிருந்த இராணுவத்திளத்தின் மீது விடுதலைப்புலிகளின் அணிகள் தொடர்தாக்குதல்களை அதிகரித்திருந்த காலப்பகுதி. சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக அங்கு நிலைகொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தின் 53 ஆவது பிரிகேட் படையணி மீது விடுதலைப்புலிகளின் அணிகள் சோரன்பற்று, இயக்கச்சி மற்றும் ஆனையிறவிலிருந்து தொடர்ச்சியான தாக்குதல்கள் மேற்கொண்டு, இராணுவத்தை கிலிகொள்ள செய்த காலப்பகுதி. இதனால், ஏ-9 வீதிக்கு இருமருங்கிலுமுள்ள கிளாலி, எழுதுமட்டுவாழ் மற்றும் மிருசுவில் பிரதேச மக்களை கொடிகாமத்துக்கு அப்பால் இடம்பெயர்ந்து செல்லுமாறு விடுதலைப்புலிகளே அறிவித்திருந்தனர்.

இந்த அறிவிப்புக்கள் அப்போதெல்லாம் "எந்த நேரமும் யாழ்ப்பாணத்துக்கு அடி விழலாம்" - என்ற பலத்த எதிர்பார்ப்பையும், அதேவேளை தென்மராட்சி மக்களுக்கு மிகுந்த இடப்பெயர்வு சிக்கலையும் ஏற்படுத்தியிருந்தது. இடம்பெயர்ந்த தென்மராட்சி மக்கள் பலர் வடமராட்சிக்கும் சென்று தங்களது உறவினர்களின் வீடுகளின் தஞ்சம் புகுந்திருந்தனர்.

இவ்வாறு மிருசுவிலிருந்து இடம்பெயர்ந்து பருத்தித்துறைக்குக்போன சிலர், தாங்கள் விட்டுவந்த பொருட்களை எடுப்பதற்காக, மீண்டும் தங்கள் வீடுகளுக்கு சென்றிருந்தனர். இப்படி சென்றவர்களுக்கு இடம்பெற்ற கொடூர செய்தி ஒன்றுதான் வித்தி அண்ணையின் மேசையில் கிடந்தது.

அதாவது –

இராணுவ முன்னரங்குகளுக்கு அருகாமையிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள், தாங்கள் விட்டுவந்த பொருட்களை மீண்டும் போய், பகுதி பகுதியாக எடுத்துவருவது அக்காலப்பகுதியில் வழக்கமாக இருந்தது. சிலவேளைகளில், இராணுவத்தினரிடம் அனுமதி பெற்றுச்செல்வதும் பல நேரங்களில் மக்கள் தங்களுக்கு தெரிந்த குறுக்கு பாதைகளுக்குள்ளால் செல்வதும் வலு சகயம். அவ்வளவுக்கு துணிந்த கட்டைகள். சட்டம் போடுவதே தாங்கள் மீறுவதற்குத்தான் என்ற உண்மையை உறுதியாக நம்புகிறவர்கள்.

இவ்வாறு மிருசுவில் பிரதேசத்துக்கு சென்ற சிலர், ஒருமுறை -

தங்கள் வீட்டுக்கு அருகாமையிலிருந்த பற்றைக்காணியிலிருந்து துர்நாற்றம் வீசுவதை அவதானித்துள்ளனர். உடனே, அங்கு சென்ற குடும்பகுதர் ஒருவர், நாற்றம் வந்த இடத்தை தேடிச்சென்று ஒருவாறு கண்டுபிடித்துவிட்டார். இட்டு நிரப்பப்பட்டிருந்த குழி ஒன்றுக்கு அருகில் இரண்டு செருப்புகள் கிடந்தன. இரகசியமாக அந்த குழியை தோண்டி பார்த்தபோது, அங்கு சுமார் 18 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடலம் மஞ்சள் சல்வாருடன் புதைக்கப்பட்டிருந்ததை கண்டார். அதிர்ந்துவிட்டார்.

பார்த்த மனுசன் பேசாமல் வந்து இந்த தகவலை உரிய இடத்துக்கு தெரியப்படுத்தியிருக்கலாம். இந்தாள் அப்பாவித்தனமாகவோ - அதிர்ச்சியிலோ - போய் இராணுவத்திடமே முறையிட்டிருக்கிறார்.

இது எப்படி வெளியில் தெரியவந்தது என்று தகவலால் அதிர்ச்சியடைந்த இராணுவத்தினர், சட்டென சுதாரித்துக்கொண்டு “ஆமாம். விடுதலைப்புலிகளின் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்ட பெண் ஒருவரை நாங்கள்தான் யாரும் அடையாளம் காணாததால் வெறும் காணிக்குள் புதைத்தோம்” - என்று கூறி சமாளித்து அனுப்பிவிட்டார்கள்.

பருத்தித்துறைக்கு வந்த இவர், சடலம் குறித்த விடயத்தை தங்களுடன் இடம்பெயர்ந்த ஏனைய மக்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்.

அடுத்தவாரமே, மிருசிவிலுள்ள தங்கள் வீடுகளில் பொருட்களை எடுக்கப்போவதாக இராணுவத்திடம் காரணம்கூறிவிட்டு, சடலத்தை இனம்காணுவதற்காக முதல்போன குழுவினருடன் இன்னும் சிலரும் கூடச்சென்றிருந்தனர்.

இவர்களது மீள்வருகை இராணுவத்துக்கு மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்த, அன்றைய தினம் அவர்கள் அத்தனை பேரையும் சங்காரம் செய்ய முடிவெடுத்தார்கள்.

முன்னரங்கு தாண்டி, உள்ளே வந்தவுடன் அவரவரை தங்கள் வீடுகளுக்கு பொருட்களை எடுப்பதற்கு அனுமதித்துவிட்டு, இளம்பெண்ணின் சடலத்தை கண்டு தங்களிடம் வந்து கடந்தவாரம் முறையிட்டவரை முதலிலும் பின்னர் இரண்டு சிறுவர்கள் உட்பட மீதி ஐந்து பேருமாக எட்டு பேரையும் உடைகளை களைந்து வயரால் கழுத்தை கட்டி திருகி, பின் கழுத்தில் கத்தியால் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்திருக்கிறது இராணுவத்தின் இரத்த வெறியாட்டக்குழு ஒன்று.

அந்தப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து எல்லோரும் வெளியேறிவிட்டதால், மயான அமைதியாக கிடந்த அந்த இடத்தில், இவர்களின் சாக்குரல் எவருக்கும் கேட்கவில்லை.

அதன்பின்னர், தனியாக வீட்டில்நின்ற இன்னொருவரையும் இழுத்துச்சென்று, அவர் கட்டியிருந்த சரத்தை கழற்றி கண்களை கட்டிய இரண்டு இராணுவத்தினர், அவரை நிலத்தில் தூக்கி அடித்துள்ளார்கள். அந்த குடும்பசுதர் இராணுவத்தின் பிடியிலிருந்து தப்பியோடி ஒருவாறு பருத்தித்துறைக்கு வந்து நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

தன்னை இராணுவத்தினர் நடத்திக்கூட்டி சென்றபோது மலசலக்கூட குழி ஒன்றிலிருந்து முனகல் குரல்கள் கேட்டதாக அவர் கொடுத்த வாக்குமூலத்தை அடுத்து கா.து விசாரணைகள் ஆரம்பமாயின.

தப்பிவந்தவரின் பிரதான சாட்சியம் மிகவும் வலுவாக இருந்ததால் அடையாள அணிவகுப்பில் "சம்பந்தப்பட்ட சாத்தான்கள்" உடனடியாகவே இனம்காணப்பட்டார்கள்.

அவர்கள் யாருமல்ல –

சுனில் இரத்நாயக்க என்பவரது தலைமையிலான ஆழ ஊடுருவும் படையணினர்தான் இந்த படுகொலையை செய்தது என்பது நீதிமன்ற விசாரணையில் உறுதியானது. சுமார் ஐந்து படையினர் அடையாள அணிவகுப்பின்போது இனங்காட்டப்பட்டபோதும், தொடர்ச்சியாக இடம்பெற்ற விசாரணைகளில், நடைபெற்ற கொலை மீதான அவர்களின் பங்களிப்பு நிராகரிக்கப்பட்டது. சுனில் ரத்நாயக்க மாத்திரம் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம் நடந்து 15 ஆண்டுகளுக்கு பின்னர் - 2015 இல்- மரண தண்டனை அறிவிக்கப்பட்டது.

ஆனால் அன்றைக்கே சுனில் இரத்நாயக்கவுக்கு ஆதரவாக தென்னிலங்கையில் பெருங்கூட்டமொன்று கிளர்ந்தெழுந்தது.

தந்தையுடன் சென்ற இரண்டு சிறுவர்கள் உட்பட எட்டு பேரை ஈவிரக்கம் இல்லாமல் கழுத்தை சீவி எறிந்த இந்த சுனில் இரத்நாயக்க நாட்டை காப்பதற்காக புறப்பட்ட போராளி எனவும் இந்த போர்வீரனை மரணதண்டனை தீர்ப்பிலிருந்து காப்பாற்ற அனைத்து மக்களும் போராடவேண்டும் எனவும் முகப்புத்தகத்தில் தீவிரமான பிரச்சாரம் பிரச்சாரம் ஒன்றை முன்னெடுத்தது.

இந்தக்கொடூரனுக்குத்தான் இன்று "மாண்புமிகு சனாதிபதி" கோட்டாபய இராபச மன்னிப்பு அளித்து விடுதலை செய்திருக்கிறார். தான் சிங்களவர்களுக்கு மாத்திரமான சனாதிபதிதான் என்பதை தெளிவாக காண்பித்திருக்கிறார்.

(2015 ஆம் ஆண்டு முகநூலில் நான் எழுதிய பதிவு செம்மையாக்கப்பட்டு மீள்பிரசுரமாக்கப்பட்டிருக்கிறது)


ப. தெய்வீகன்

26 மார்ச், பிற்பகல் 1:55