உயிரீற்று புணர்ச்சி _
உயிர் முன் உயிர் புணர்தல், உயிர் முன் மெய் புணர்தல்
சொற்புணர்ச்சியில் நிலைமொழி வருமொழி என்பன பிரதான பிரிவுகளாகும். இரு சொற்கள் புணரும்போது அதில் முதலாவதாக வரும் சொல் நிலைமொழி என்றும் அதனைத் தொடர்ந்து வரும் சொல் வருமொழி என்றும் அழைக்கப்படும்( நிலைமொழி வருமொழி தொடர்பான விளக்கம் சொற்புணர்ச்சி வகைப்பாடு் ஒன்றில் வழங்கப்பட்டுள்ளது). நிலைமொழியின் இறுதியிலும் வருமொழியின் முதலிலும் வரும் சொற்களை அடிப்படையாகக் கொண்டு சொற்புணர்ச்சியை இன்னுமொரு வகையாக வகைப்படுத்தலாம் அவற்றை சற்று விரிவாக நோக்குவோம்.நிலைமொழி வருமொழி களை அடிப்படையாக கொண்டு சொற்புணர்ச்சி பிரதானமாக இரண்டு வகைப்படும்.
1. உயிரீற்றுப் புணர்ச்சி
¤ உயிர்முன் உயிர் புணர்தல்
¤ உயிர்முன் மெய் புணர்தல்
2. மெய்யீற்று புணர்ச்சி
¤ மெய் முன் உயிர் புணர்தல்
¤ மெய் முன் மெய் புணர்தல்
உயிரீற்றுப் புணர்ச்சி
நிலைமொழி ஈற்றில் (இறுதியில்) உயிர் எழுத்துக்களும் வருமொழி முதலில் உயிர் அல்லது மெய்யெழுத்து வந்து புணருமானால் அது உயிரீற்றுப் புணர்ச்சி எனப்படும். இது இரண்டு வகைப்படும்.
1. உயிர் முன் உயிர் புணர்தல்
2. உயிர் முன் மெய் புணர்தல்
உயிர் முன் உயிர் புணர்தல்
சொற்கள் புணரும்போது நிலைமொழி ஈற்றிலும் (இறுதியிலும்) வருமொழி முதலிலும் உயிர் எழுத்துக்கள் இடம் பெற்று வருதல் உயிர்முன் உயிர் புணர்தல் எனப்படும்
உதாரணம் :
1. பலா + இலை = பலாவிலை
2. மணி + ஓசை = மணியோசை
மேற்கண்ட இரு உதாரணங்களை நோக்கும்போது இங்கு சொற்புணர்ச்சியில் புதிதாக இரு எழுத்துக்கள் தோன்றியுள்ளதை அவதானிக்கலாம் அதாவது உதாரணம் ஒன்றில் வ் எழுத்தும் உதாரணம் இரண்டில் ய் எழுத்தும் தோன்றியுள்ளது.
இவ்வாறு உயிர் முன் உயிர் புணரும் சந்தர்ப்பங்களில் மெய்யெழுத்து தோன்றி புணர்ச்சி இடம்பெறும். இவ்வாறு தோன்றும் மெய்யெழுத்துக்கள் உடம்படுமெய் எனப்படும். உடம்படுமெய் தோன்றும் சந்தர்ப்பங்கள் பின்வருமாறு அமையும்
¤ நிலைமொழி ஈற்றில் இ,ஈ,ஐ ஆகிய உயிர் எழுத்துக்கள் வரின் உடம்படுமெய்யாக யகர மெய் (ய்) தோன்றும்.
பனி + இரவு = பனியிரவு
தீ + எரிந்தது = தீயெரிந்தது
கலை + இன்பம் = கலையின்பம்
¤ நிலைமொழி ஈற்றில் அ,ஆ,உ,ஊ,ஒ,ஓ,ஔ ஆகிய உயிரெழுத்துக்கள் வரின் உடம்படுமெய்யாக வகர மெய் (வ்) தோன்றும்.
பல + உயிர் = பலவுயிர்
விலா + எலும்பு = விலாவெலும்பு
திரு + அடி = திருவடி
பூ +அழகு = பூவழகு
கோ + இல் = கோவில்
¤ நிலைமொழி ஈற்றில் ஏ எனும்உயிர் எழுத்து வரின் உடம்படுமெய்யாக வகரமெய் அல்லது யகரமெய் தோன்றும்
தே + ஆரம் = தேவாரம்
உயிர் முன் மெய் புணர்தல்
சொற்கள் புணரும்போது நிலைமொழி ஈற்றில் (இறுதியில்) உயிர் எழுத்தும் வருமொழி முதலில் மெய்யெழுத்தும் இடம்பெற்றுவருதல் உயிர் முன் மெய் புணர்தல் எனப்படும்
உதாரணம்
01. வாழை +மரம் = வாழைமரம்
02. மா + கனி = மாங்கனி
உயிர்முன் மெய் புணர்தலின் போது மெய்யெழுத்துக்களான வல்லின மெல்லின இடையின மெய்கள் புணர்ந்து வருவதை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
¤ உயிர் முன் வல்லின மெய் புணர்தல்
உயிர் முன் வல்லினம் மெய் புணரும் சந்தர்ப்பங்களில் சில இடங்களில் வல்லினம் மிகுந்து வருவதை அவதானிக்கலாம் அதேபோல் சில இடங்களில் வல்லினம் மிகுந்து வராது.
வல்லினம் மிகுந்து வரும் சந்தர்ப்பங்கள்
சந்தர்ப்பம் 1
அ,இ,உ ஆகிய சுட்டு எழுத்துகள் எ என்ற வினா எழுத்து அந்த, இந்த, உந்த ஆகிய சுட்டுச் சொற்கள் எந்த என்ற வினாச்சொல் ஆகியவற்றை அடுத்து வரும் வல்லினம் மிகும்.
உதாரணம்
சந்தர்ப்பம் 2
இரண்டாம் நான்காம் வேற்றுமையுருபேற்ற பெயர்ச் சொற்களை அடுத்து வரும் வல்லினம் மிகும். இரண்டாம் வேற்றுமைக்குரிய உருபு ஐ , நான்காம் வேற்றுமைக்கு உரிய கு உருபு என்பவற்றை ஏற்ற பெயர்ச்சொற்களை அடுத்து வரும் வல்லினம் மிகுந்து காணப்படும்
உதாரணம்
சந்தர்ப்பம் 3
செய்ய எனும் வாய்ப்பாட்டு அகர ஈற்று வினையெச்சம், இகர ஈற்று வினையெச்சம் என்பவற்றை அடுத்து வரும் வல்லினம் மிகும்.வினைச் சொல்லை முடிக்கும் சொல்லாகக் கொண்டு வரும் எச்சவினைகளை வினையெச்சம் என்பர். அந்தவகையில் மேற்சொன்னது போல் அகர, இகர ஈற்று வினையெச்சங்களை அடுத்து வரும் வல்லினம் மிகுந்து காணப்படும்
உதாரணம்
சந்தர்ப்பம் 4
ஆகார ஈற்று எதிர்மறைப் பெயரெச்சத்தை அடுத்து வரும் வல்லினம் மிகும். பெயர்ச்சொல்லை முடிக்கும் சொல்லாகக் கொண்ட எச்ச வினைகள் பெயரெச்சம் எனப்படும். நிகழ்ச்சி நடவாமைக்குரிய எதிர்மறைப் பொருளில் வருதல் எதிர்மறை பெயரெச்சம் ஆகும். இவற்றில் ஆகாரம் நிலைமொழி இறுதி எழுத்தாகவும் வருமொழி முதலில் வல்லினம் வரும் சந்தர்ப்பங்களில் வல்லினம் மிகுந்து காணப்படும்
உதாரணம்
சந்தர்ப்பம் 5
அப்படி, இப்படி, எப்படி, இனி ஆகிய வினைகளை அடுத்து வரும் வல்லினம் மிகும்
உதாரணம்
சந்தர்ப்பம் 6
வன்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வரும் வல்லினம் மிகும்
உதாரணம்
பாட்டு + பாடு = பாட்டுப்பாடு
சந்தர்ப்பம் 7
வேற்றுமைத்தொகை சொற்களில் உயிரீற்றை அடுத்து வரும் வல்லினம் மிகும். அதாவது வேற்றுமை உருபுகள் மறைந்து வரும் தொகைச்சொற்கள் வேற்றுமைத் தொகை எனப்படும் இவற்றில் நிலைமொழி ஈற்றில் உயிர் எழுத்தும் வருமொழி முதலில் வல்லின எழுத்தும் வரும் சந்தர்ப்பத்தில் வல்லினம் மிகுந்து வரும்.
உதாரணம்
யானை + பாகன் = யானைப்பாகன்
குருவி + கூடு = குருவிக்கூடு
சந்தர்ப்பம் 8
வினைத்தொகை தவிர்ந்த ஏனைய தொகைச்சொற்களில் வல்லினம் மிகும்.
உதாரணம்
தீ + பெட்டி = தீப்பெட்டி
உழவு + தொழில் = உழவுத்தொழில்
வல்லினம் மிகா இடங்கள்
1. மூன்றாம் வேற்றுமை உருபுகளான ஒடு ஓடு, ஆறாம் வேற்றுமை உருபான அது, ஐந்தாம் வேற்றுமை சொல்லுருபுகளான நின்று இருந்து ஆகியவை நிலைமொழியின் இறுதியில் அமையப்பெற்று புணரும்போது வல்லினம் மிகுந்து வராது
உதாரணம்
1. மாணவரோடு + சென்றார் = மாணவரோடு சென்றார்
2. அவளது+ பேனா = அவளது பேனா
3. மைதானத்திலிருந்து + வெளியேறினார் = மைதானத்திலிருந்து வெளியேறினார்
2. அகரவீற்று பெயரைச்சங்களுக்குப் பின் வல்லினம் மிகாது. அதாவது நிலைமொழி ஈற்றில் அகரம் அமையப் பெற்று வரும் சந்தர்ப்பத்தில் வல்லினம் மிகாது
உதாரணம்
பெரிய + கண்கள் = பெரிய கண்கள்
3. வினைத்தொகையில் வல்லினம் மிகாது
உதாரணம்
ஊறு + காய் = ஊறுகாய்
ஏவு + கணை = ஏவுகணை
4. வன்றொடர்க் குற்றியலுகரமல்லாத உகரவீற்று வினையெச்சங்களின் பின் வல்லினம் மிகாது. அதாவது நிலைமொழியின் ஈற்றில் வன்றொடர்க் குற்றியலுகரம் அல்லாத உகரம் அமையப் பெற்று வரும் வினையெச்சங்களின் பின் வல்லினம் மிகுந்து வராது
உதாரணம்வந்து + சென்றான் = வந்து சென்றான்
சில விதிவிலக்குகள்
சில இடங்களில் வல்லினம் புணரும்போது வல்லினம் மிகாமல் வேறுவகையில் அமைந்து வந்திருப்பதைக் காணலாம்
1. மா + காய் = மாங்காய்
2. புளி + பழம் = புளியம்பழம்
உதாரணம் ஒன்றில் உயிர் முன் வல்லின மெய் புணரும்போது அதன் இன எழுத்து அமைந்து வந்திருப்பதை காணலாம்.
இரண்டாவது உதாரணத்தில் அம் சாரியை இடம்பெற்று வந்திருப்பதைக் காணலாம்.
உயிர் முன் மெல்லின / இடையின மெய் புணர்தல்.
அ,இ,,உ ஆகிய சுட்டெழுத்துக்களின் முன்னும், எ என்ற வினாவெழுத்தின் முன்னும் ஞ,ந,ம ஆகிய மெல்லின மெய்களும், வகர இடையின மெய்யும் வரும்போது அவ்வவ் எழுத்து மிகுந்து வருவதை காணலாம். அதேபோல் அ,ஆ,உ,எ எழுத்துக்களின் முன் யகர இடையினம் வந்தால் வகரம் மிகும்.
உதாரணம்
அ + ஞானம் = அஞ்ஞானம்
இ + நாள் = இந்நாள்
இ + மரம் = இம்மரம்
உ + வீடு = உவ்வீடு
எ + யானை = எவ்யானை
மேற்குறிப்பிட்ட சந்தர்ப்பங்கள் தவிர்ந்த ஏனைய எல்லா சந்தர்ப்பங்களிலும் இயல்பாகப் புணர்ந்து வரும்.