குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

வில்விழா வரலாற்றில்_தமிழர்களின்_காதலர் நாள்.

14.02.2020....வில்விழா ! வரலாற்றில்_தமிழர்களின்_காதலர்_நாள்  3

பண்டைய தமிழகத்தில், காதல் திருவிழா உண்மைக் காதலையும் காதலரையும் போற்றிக் கொண்டாடிய திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. அத்திருவிழா தமிழர் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டது. காதலும் வீரமும் தமிழர் பண்பாடு என்பதனால், தமிழர்தம் மறத்தையும் காதல் அறத்தையும் இணைத்து உலகுக்கு உணர்த்தும் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டுள்ளது.

காதல் விழா, காமவேள் கையிலுள்ள கரும்பு வில்லைக் குறிக்கும் விதத்தில், அவ் வில்விழா என்றும் அழைக்கப்பட்டுள்ளது.

சிறந்த புகழுக்குரிய சோழ மன்னர்களில் கரிகால் சோழனும் ஒருவன். அவனின் ஆட்சிக்கு உட்பட்ட #பூம்புகார் பெருநகரில் வில்விழா நடந்தது என்று ஆதிமந்தி கூறும் கூற்றுக்கு சான்றுகள் எதுவும் தேவையில்லை.

விழா ஏற்பாடுகள்

காதல் விழாவின் போது நடைபெற்ற ஏற்பாடுகளை #மணிமேகலை பட்டியலிட்டு காட்டுகிறது. அது, விழா நடத்தும் மன்னனுக்கும் மக்களுக்கும் அவ்விழாவில் இருந்த ஈடுபாட்டை உரைப்பதாக அமைந்துள்ளது.

காதலர் தங்குமிடம்

விழாவிற்குச் செல்லும் காதலர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட இடத்திற்குப் பொதுப்பெயராக, "மூதூர்ப் பொழில்" என்று பெயரிடப் பட்டிருந்தது. அவ்விடத்திற்கு, "இளவந்திகை" என்னும், சிறப்புப் பெயரும் இடப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இளவேனில்

இலக்கியத்தில் காதல் தலைவியர், தங்கள் காதல் தலைவனைக் காதலித்து விரும்பியது போலவே இளவேனிலும் அவர்களைக் காதலால் விரும்புகின்றது என்ற கற்பனை இடம்பெற்றுள்ளது. எவ்வாறென்றால், காதலரைக் கூடிக் களித்து மகிழும் மகளிர், தங்கள் காதல் தலைவனை அணைத்த கை நெகிழ்ந்து விடாமல் பின்னிக் கிடக்கச் செய்வதே இளவேனில் தான் என்பர். தம்மை விரும்பும் நல்லவராகிய காதல் தலைவர்க்கு தாம் நல்லவர் ஆனது போல, காதல் திருவிழாவின் வரவை எதிர் நோக்கி காத்திருக்கும் காதலர்க்கும் இளவேனில் நல்லையே என்று கலித்தொகை பாராட்டுகிறது.

விழா_பரம்பல்

இந்திர விழாவைக் காமதேவன் விழா என்றும், வில் விழா என்றும், வேனில் விழா என்றும் கொண்டாடப்பட்ட காதல் திருவிழா, பூம்புகார்ப் பட்டினத்தில் மட்டும் கொண்டாடப் படவில்லை. தமிழ்க் கூடல் நகரமாகிய மதுரை மாநகரிலும் கொண்டாடப்பட்டது மதுரைப் பட்டணத்தில் நிகழ்ந்த வில்விழாவைச் சிலப்பதிகாரம் குறிப்பிடப்படுகிறது.

காதல் திருவிழாவின் போது, பங்குனித் திங்களைப் பனி அரசாளும் என்று கூறப் பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. புகார் நகரத்தில் திருவிழா நடைபெற்ற அதே நாளில் கூடல் மாநகரமும் விழாக் கோலம் கொண்டிருந்தது என்று அறியப்படுவதனால், காதலர்த் திருவிழா தமிழகம் முழுமைக்கும் பொதுவானது என்றே குறிப்பிட வேண்டும்.

பழங்கதைகளின்படி தன் நகரத்தில் காதல் தெய்வத் திருவிழா கொண்டாட அருள் செய்ய வேண்டும் என்று இந்திரனை வேண்டினான் சோழன். அவனின் வேண்டுகோளை ஏற்ற இந்திரன், அதற்கு உடன்பட்டான். அந்நாள் தொடங்கி காவிரிப்பூம் பட்டினத்தில் காதல் திருவிழா நடைபெற்று வந்துள்ளது.

காதல் தேவனை வணங்கும் பெண்கள் வினையின் காரணமாகவும் போரின் காரணமாகவும் பிரிந்திருக்கும் காதலரை மீண்டும் கூடி இன்பமடைய வேண்டும் என விரும்பும் பெண்கள், தங்கள் காதல்தேவனை வணங்கி, "காமன் திருநாளில், அவரும் அவருக்குத் துணையான நானும் சேர்ந்திருந்து மகிழ்ந்துகளிக்க அருள் செய்ய வேண்டும்" என்று வேண்டுகின்றனர்.

கடற்கோள்

இத்துணைச் சிறப்புகளுடன் கொண்டாடப்பட்ட காதல் தேவனின் திருவிழா நின்றுவிட்டதை அறிந்து கோபம் கொண்ட இந்திரன், சாபம் இடுகின்றான். அதனால், பூம்புகார் துறைமுகப் பட்டினத்தைக் கடல் கொண்டது என்று நாட்டார் பழங்கதைகள் கூறுகின்றன.

கரிகால் வளவனின் மகன் சோழன் நெடுமுடிக் கிள்ளி கடைச் சங்க காலத்தில் சோழ அரசில் வீற்றிருந்த சோழன்நெடுமுடிக் கிள்ளி, தன் குழந்தையைத் தவற விட்டுவிடுகிறான்! தன் குழந்தையைக் காணாமல் குழந்தையைத்தேடிக் கண்டு பிடிப்பதில் அதிக நாட்களாக ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அதனாலும், குழந்தையைக் காணவில்லையே என்ற ஏக்கத்தினாலும் ஆண்டுதோறும் நடத்த வேண்டிய காமதேவன் விழா நடைபெறவேண்டியதையும் மறந்தான்.

தன்னைக் குறித்து எடுக்கப்பெற்ற விழாவானது தடைப்பட்டதால் கோபமுற்ற இந்திரன் சாபமிட்டதால், புகார் நகரைக் கடல் கொண்டது என்று, மேகலாதெய்வம் கூறியதாகவும் அதை, அறவணடிகள் மணிமேகலைக்குக் கூறியதாகச் சீத்தலைச் சாத்தனார் கூறுகிறார். நெடுமுடிக் கிள்ளிக்குப் பின் காதலர் திருவிழா நின்றுவிட்டதாகத் தெரிகிறது. என்றாலும், தமிழகத்தின் தென்பகுதிகளில், குறிப்பாக,சோழமண்டலத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் காமனுக்குக் கோயில் இருப்பதைக் காணலாம். ஆண்டு தோறும் மாசித் திங்களின் போதில், காமன் விழா சீறோடும் சிறப்போடும் நடைபெற்றுக் கொண்டு தானிருக்கிறது.

பூம்புகார் பெருநகரப் பட்டினம் கடலால் சூழப்பட்டு கடலுக்கு இரையானாலும் காமதேவனுக்காக எடுக்கப்படும் விழா நின்றுவிடவில்லை.

இன்றைய காதலர் நாள்

பழந்தமிழின் தொன்மையை ஆராய்ந்து கொண்டிருக்கும் அறிஞர் பெருமக்களில் ஒருவரான பேராசிரியர் கே. உலகநாதன், தமிழ் மொழியின் தொன்மை வடிவமாகிய சுமேரு இலக்கியத்திலும் இந்திர விழா பற்றிய குறிப்புகள் காணப் படுவதாகக் கூறியுள்ளார். அவரின் குறிப்புகளைக் கொண்டு பார்க்கும் போது, தமிழகம், " வில்விழா - உலகில் நடக்கும் காதல் திருவிழா அனைத்திற்கும் மூலமாகவும் முன்னோடியாகவும் விளங்கிற்று" என்று கூறலாம்.

காதல் தமிழர்களின் அனைத்து காவியங்களிலும் பெரும் அங்கம் வகிக்கிறது. காதல் இங்கு சாதியும் மதமும் உருவாகும் முன்பே தோன்றியது..