குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆவணி(மடங்கல்) 9 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

தைப்பொங்கல் வரலாறு தைப்பொங்கல் - ஒரு வரலாற்று நோக்கு பொ.விவேகானந்தன்.

02.01.2051-16.01.2020 ....நீண்ட வரலாற்றையும் காலவோட்டத்தோடு நெருங்கிப் பிணைந்த தனித்துவமான பண்பாட்டு நீட்சியையும் கொண்ட தமிழர், காலந்தோறும் பல்வேறு விழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர். அவற்றை வழிபாட்டு விழாக்கள், குடும்ப விழாக்கள், தொழில் விழாக்கள் என பருமட்டாகச் சில பகுப்புகளுக்குள் அடக்கலாம். ஓரினம் கொண்டாடிவருகின்ற அனைத்து விழாக்களுமே காலத்தின் வழியே நின்று நிலைத்து விடுவதில்லை. சில விழாக்கள் மறைந்துவிடக் கூடியவை, வேறு சில காலத்தை வென்று நிலைத்து நின்றுவிட வல்லவை.

 

இன்றைய காலத்தில் தமிழர் கொண்டாடி வருகின்ற தைப்பொங்கல் பன்னூறு ஆண்டுகளாகத் தமிழர் வாழ்வோடு நிலைத்து நிகழ்கின்ற விழாவாகச் சிறப்புற்றிருக்கின்றது. கதிரவனுக்கு நன்றியறிவித்து, உழவுத்தொழிலைச் சிறப்பிக்கும் விழாவாக மட்டுமன்றி, ஓரினத்தின் பண்பாட்டுக் கூறுகளையும் மரபுகளையும் மானுட விழுமியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது தைப்பொங்கல் விழா.

மானுடத்தின் வரலாற்றையும் வாழ்வையும் வடிவமைப்பதில் நிலவமைவு முதன்மை இடம் பெறுகின்றது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே நிலவமைப்பின் அடிப்படையில் தமது வாழ்வை நான்காக வகுத்து, ஒவ்வொன்றுக்குமான சிறப்புகளை வரையறுத்து அதற்கமைய வாழ்ந்தோர் தமிழர். இவ்வாறான நிலவகைப்பட்ட வாழ்விலிருந்தே தேவைக்கேற்ப, விழாக்களும் தோற்றம் கொள்கின்றன. நான்கு நிலத்து மக்களும் தமது அமைவுகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப, வேறுபட்ட விழாக்களையே கொண்டாடி வந்திருக்கின்றனர்.

பழந்தமிழர் வாழ்வு கொண்டாட்டங்களால் நிறைந்தது. ஆடுவோரும் பாடுவோரும் வாழ்வை அழகுமிக்கதாக்கினர். கூத்தர், பாணர், விறலியர் போன்ற இலக்கிய மாந்தரே இந்தக் கொண்டாடங்களுக்குச் சான்றாவர். ஒவ்வொரு நிலத்தவரும் பல்வகைப்பட்ட கூத்துகளை ஆடியுள்ளனர்.

நிலவமைவில் பொருளியல் வேறுபாடு:

மேற்குறித்த நில அமைவியல் வழி நின்றே தமிழரின் நிலவுடைமைச் சமூக வரலாறு தோற்றம் பெறுகின்றது. நிலவமைவைப் பொறுத்தே ஒரு சமூகத்தின் உறவுகள் வடிவமைக்கப்படுகின்றன வலிமை பெறுகின்றன. சமூக இருப்பின் தளமான பொருளாதார ஆக்கத்தையும் நிலவமைவே வடிவமைக்கின்றது.

"ஒரு சமூகத்தின் மேற்கட்டுமானத்தில் காணப்படும் பண்பாடு என்பது அடிக்கட்டுமானமான பொருளாதார உற்பத்தியைச் சார்ந்தே அமைகின்றது" என்கிறார் கார்ஸ் மார்க்ஸ். நால்வகை நிலத்தினுடைய பண்பாட்டு வேறுபாடுகளும் பொருளாதார வளர்ச்சியின் போக்குகளையே அடிப்படையாகக் கொண்டுள்ளன.

மலைகளைக் கொண்ட நிலவமைவான குறிஞ்சியும் மலைகளின் சாரல்களான காடுகளைக் கொண்ட முல்லை நிலமும் வேட்டை சமூக வாழ்வின் கூறுகளைக் கொண்டவையாக இருந்தன. அதேவேளை நிலவுடைமைச் சமூகத்தின் தொடக்கக் களங்களைக் கொண்டவையாகவும் இருந்தன. நெய்தல் நில மக்களின் பொருளாதார இருப்பு நிலத்தைச் சார்ந்திராது கடலைச் சார்ந்திருந்தது. இதுவே மாறுபட்ட பண்பாட்டு அடையாளங்களுக்குக் காரணமாயிற்று.

இந்நிலவமைவுகளில் மருதநிலமே வலிமையான நிலவுடைமைச் சமூகம் வேகமாக உருவாகவல்ல தளமாக இருந்தது. வரட்சியால் பெரிதும் அழிவுறும் நிலமாக இல்லாமலும் பரந்த விவசாய வயல்வெளிகளைக் கொண்ட தளமாகவும் இது அமைந்தது. நேர்த்தியான குடும்பக் கட்டமைப்பும் தலைமைத்துவத் தோற்றமும் இங்குதான் தோன்றியது என்பர். மக்கள் பாதுகாப்பாக வாழ வல்லதாகவும் தேவைகளை எளிதில் நிறைவேற்றக் கூடிய இடமாகவும் மருதம் அமைந்திருந்தது. மக்களின் வாழ்க்கை முறைரய மேலாண்மையை நோக்கி நகர்த்திய சமூகமாகவே மருதச் சமூகம் அடையாளம் காணப்படுகின்றது. இந்த நகர்வுகளின் வழியே நகர், நகரம், நகரியம் நாகரிகம் என்ற சொற்கள் தோன்றியதாகக் கூறுவர்.

ஒவ்வொரு நிலத்திலும் உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. உற்பத்திகள் வழியே அறுவடை முடிந்து, விளைந்த பொருட்கள் வீடு வரும் நாட்களை மகிழ்வோடு கொண்டாடியிருக்கின்றனர். ஏனைய மூன்று நிலத்தோருக்கும் தலைமை நிலமாகவே மருதம் திகழ்ந்தது. தமிழ் நிலத்தின் பெரும் பரப்பு மருதநிலமாகவே இருந்தது. விவசாயம் சார்ந்த உற்பத்தி முறைக்கு அமைவாகவும் இருந்தது. இதன்வழியே தமிழ்ச் சமூகம் வேளாண்மை சார்ந்த நிலவுடைமைச் சமூகமாக உருப்பெற்றது.

விவசாய நிலங்களின் பண்பாடு மற்ற திணைக்குரிய சிறுபான்மை நிலப்பகுதிகளிலும் தாக்கம் செலுத்தியது. எனவே மருதத்திணையில் அறுவடைக்காலக் கொண்டாட்டங்கள் மற்ற திணை சார்ந்த மக்களிடம் பரவியது. இதனால் மருதநில மக்களின் அறுவடைக் கொண்டாட்டமான பொங்கல் விழா காலவோட்டத்தில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பண்பாட்டின் அடையாளமாக மாறியது. இப்பொங்கல் விழாவுடன் தொடர்புடைய பண்பாட்டுக் கூறுகள் தமிழர்களின் அடையாளங்களாக நிலைபெற்றன.

பொங்கல் விழாவின் தோற்றம்:

உழவு:

வேட்டைச் சமூக வாழ்வின் முடிவாகவும் வேளாண்மைச் சமூக வாழ்வின் தொடக்கமாகவும் அமைந்த காலமே மானுடத்தை வாழ்வியல் மேன்மையை நோக்கி நகர்த்திய காலமாகும். நீர்நிலையருகே நிரந்தரமாகத் தங்கி, உழவுத் தொழிலில் ஈடுபடத் தொடங்கிய மாந்தர் இயற்கை இடர், பிறவுயிரிகள் ஏற்படுத்திய தடைகளைக் கடந்தே விளைவுகளைப் பெற்றனர். நீண்டதும் கடுமையானதுமான உழைப்புக்குப் பின்னர் உழவின் பயனை வீட்டுக்கு எடுத்துவரும் வேளையில் மகிழ்ச்சி இயல்பாகவே ஏற்படும். அந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்துக்கு வித்திடும். பொங்கல் என்ற அறுவடைத் திருநாளுக்கு இந்த மகிழ்வே வித்தாக இருந்திருக்க வேண்டும்.

உழவுத்தொழில் சிறு பயிர் உற்பத்தியிலிருந்து வளர்ச்சி பெற்று, மாரிகால மழையை நம்பிய பெரும்பயிர்ச்செய்கையாக மாற்றம் கண்ட காலத்தில் நெல் பயிரிடல் முதன்மைத் தொழிலாக வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆவணியில் விதைத்த விதை பயிராகி தைமாதத்தில் அறுவடைக்காகக் காத்திருக்கும். தன்னிறைவுக்கு அப்பால் பிறருக்கும் வழங்கும் வணிகத்தன்மையோடு உழவுத் தொழில் மேன்மை பெறத் தொடங்கிய காலத்தில் உழவைப் போற்றும் விழா மற்றுமொரு வடிவத்தைக் கொண்டிருக்க வாய்ப்பு உண்டு.

உற்பத்திப் பொருட்களை வணிகம் செய்வதன் வாயிலாக பிற தேவைகளையும் நிறைவேற்றி மகிழும் காலமும் இதுவே என்பதால் இந்த அறுவடைக்காலம் கொண்டாட்ட காலமாகவே இருந்திருக்க வேண்டும்.

ஆனால் அறுவடைக்காலத்தில் புத்தரிசி இட்டு மக்கள் பொங்கல் கொண்டாடினர் என்பதற்குச் சங்க இலக்கியத்தில் எவ்வகைச் சான்றுகளும் இல்லை. அறுவடை சிறப்பாக நடைபெற்று, தாம் விரும்பியவை நிறைவேற வேண்டும் என பெண்கள் தை மாதத்தில் நோன்பு இருந்தார்கள் எனச் சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.

தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணையும் “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகையும் “தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறும் “தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையும் கூறுகின்றன.

வானவியல்:

ஆங்கில நாட்காட்டிக்கு அமைய ஜனவரி 14ம் நாள் தமிழ் நாட்காட்டியின்படி தை முதல்நாள் ஆகும். கதிரவனைச் சுற்றும் பூமின் நீள்வட்டப் பாதையில் கதிரவன் வடக்கு நோக்கி நகரத் தொடங்குவதைப் போன்ற நிலையில் பூமி தன் சுற்றுவட்டத்துக்குள் நகர்கின்றது. இதனை சூரியத் தோற்ற நகர்ச்சி என்பர். தை முதல் ஏற்படும் தோற்ற நகர்ச்சி ஆனி மாதம் வரை இருக்கும் இதை வட செலவு என்பர். வடமொழி உத்தர அயனம் எனப்படும். ஆடி மாதம் முதல் மார்கழி வரை தென்படும் தோற்ற நகர்ச்சியைத் தென் செலவு (தக்கண அயனம்) என்பர். தென் செலவில் இருந்து கதிரவத் தோற்ற நகர்ச்சி வட செலவுக்குள் நுழையும் நாளே தமிழர் நாட்காட்டிக்கமைய தை முதல் நாளாகும்.


இரவும் பகலும் எப்போதும் ஒத்த நேரங்களைக் கொண்டிருப்பதில்லை. ஆண்டில் இரு நாட்கள் மட்டும் இரவும் பகலும் ஒத்த நேரத்தைக் கொண்டிருக்கும். இதை தமிழர் ஒக்க நாட்கள் என அழைக்கின்றனர்.  மார்ச் 22 இல் இரவும் பகலும் 12 மணி நேரத்தைக் கொண்டிருப்பதைப் போல, செப்டெம்பர் 22ம் நாளும் கொண்டிருக்கும். மார்ச் 23 வசந்தகாலத்தில் தொடக்கமாக (ளுpசiபெ நஙரiழெஒ) அமைகின்றது. செம்ரெம்பர் 23 இலையுதிர்காலத்தின் தொடக்கமாக (யரவரஅn நஙரiழெஒ) அமைகின்றது.

இதைப் போன்றே ஓராண்டில் அதிக நீளமான இரவைக் கொண்ட நாள் ஒன்றும் அதிக நீனமான பகலைக் கொண்ட நாள் ஒன்றும் உள்ளன. டிசம்பர் 22 நீளமான இரவைக் கொண்ட நாளாகவும் ஆனி 22 மிக நீளமான பகலைக் கொண்ட நாளாகவும் உள்ளன. பனிகாலத்தைக் கொண்ட நீண்ட இரவு குறைத் தொடங்குவதால் இதைப் தமிழர் பனி முடங்கல் என்பர். கடும் வெயிலைக் கொண்ட வேனில் காலத்தின் பகல் நேரம் குறையத் தொடங்குவதால் ஆனி 23ம் நாளை வேனில் முடங்கல் என்பர்.

மேற்குறித்த இந்த நான்கு நாட்களுமே நான்கு காலத்தினதும் தொடக்கங்களாக இருக்கின்றன. அத்தோடு பலவினத்தவிரின் ஆண்டுத் தொடக்கங்களாகவும் இவை இருக்கின்றன.

பூமி தன் உருட்டம் (self-rotation) வலயம் (revolution) என்ற இரு இயக்கங்கள் போக, கிறுவாட்டம் (gyration) என்ற இயக்கத்தையும் கொண்டிருக்கின்றது. இந்த இயக்கங்கள் நீள்வட்டப்பாதையில் சுற்றும் பூமியை என்றும் ஒரே மாதிரியாக இயங்க விடுவதில்லை. நீண்டகால ஒழுங்கில் மேற்கூறிய நான்கு நாட்களிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இந்த இயக்கங்களை அடிப்படையாக் கொண்டு கணிக்கும் முறைக்கு சக அயன முறை (Sayana method) என இந்தியர் பெயர் வைத்திருக்கின்றனர். இந்த முற்செலவத்தைப் பொருட்படுத்தாமல் காலம் கணிக்கும் முறைக்கு; முறைக்கு நில்லாயன அயன முறை (Nirayana method) என்று பெயர். மேலை நாட்டவர் சக அயன முறையைப் (Sayana method) பின்பற்றியே காலத்தைக் கணிக்கின்றனர். இந்த முறைக்கமைய எப்போதுமே நீண்ட இரவு டிசம்பர் 22ம் நாளில் இருந்ததும் இல்லை. நீண்டகாலத்தின் பின் இருக்கப் போவதும் இல்லை. பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேறு நாட்களில் இருந்திருக்கும் என்கிறது அறிவியல்.சில ஆய்வாளர்களின் கருத்துக்கு அமைய,  பனி முடங்கல் என அழைக்கப்படும் இரவு கூடிய இறுதிநாள் ஜனவரி 14 அல்லது 15 நாளிலே முன்பு நடைபெற்றிருக்க வேண்டும் என்கின்றனர் சிலர். குளிர் தரும் இரவுப்பொழுது குறையத் தொடங்குகின்ற, பனி முடங்கல் எனப்படும் அந்த நாளை தமிழர் பொங்கலாகக் கொண்டாடத் தொடங்கியிருப்பர் என்கின்றது இந்த ஆய்வு. தெற்கு நோக்கிச் சென்று குளிர் தந்த கதிரவன் இனி வடக்கு நோக்கிச் சென்று வெய்யில் தரப் போகின்றான், அவனுக்கு நன்றி கூறுவோம் எனத் தோன்றியதே தைப்பொங்கல் என மேலும் கூறுகின்றது இந்த ஆய்வு. இதுவே பண்டைத் தமிழரின் ஆண்டுத் தொடக்கமாகும் என்பதையும் இது குறிப்பிடத் தவறவில்லை.

பொங்கலின் தோற்றமும் ஊரக ஒருமைப்பாடும்

தைப்பொங்கல் விழாவின் தோற்றம் குறித்து பல்வகைக் கருத்துகள் கூறப்பட்டாலும் வேறு பெயர்களிலும் வடிவங்களிலும் இந்த விழா நீண்டகாலமாகவே கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றது எனக் கருத இடமுண்டு.

சமூகப் பொருண்மை மிக்க விழாக்களின் வேர்கள் பாமரர்களை அதிகமாகக் கொண்ட ஊரக வாழ்க்கைமுறைகளிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஊரும் உறவுமாய் நெருங்கி வாழும் கிராமத்தோர், சமூக ஒருமைப்பாட்டையும் ஒருமித்த இலக்குகளையும் கொண்டதாக விழாக்களை உருவாக்கினர். இவர்களே குடும்ப விழாக்களைக் கூட ஊர் கூடி நடத்தும் விழாக்களாகக் கொண்டாடியோர் ஆவர். விழைவுற்று நிகழ்த்துவது விழா என வேர்ச்சொல் ஆய்;வாளர் கூறுவர். கிராமத்தார் எப்போதுமே விழைவுகளால் உந்தப்பட்டவர்கள் என்பதை நாட்டுப்புற இலக்கியங்கள் கூறுகின்றன. பொங்கல் விழாவும் ஊரக வாழ்வியலின் பொதுமைச் சிறப்புகளைக் கொண்டதாக அவர்களாலேயே வடிவமைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். வேதகால வழிபாட்டு நெறிகளை அறிந்திராத பாமர மக்கள், குழுக்களாக வழிபடும் கிராமியத் தெய்வ வழிபாடுகளை விடுத்து, அனைவருக்கும் பொதுவான கதிரவனுக்கு நன்றி செலுத்துவதைப் பொதுப் பண்பாகக் கொண்டிருக்க வாய்ப்புகள் உண்டு.

பொங்கல் விழா வெளிப்படுத்தும் உயர் கூறுகள் ஊரக வாழ்வியலுக்கே உரியவை. நகர மாந்தரால் வகுக்கப்பட முடியாத தனித்துவங்கள் பொங்கல் விழாவிலே உண்டு.

சங்க இலக்கியங்கள் உட்பட பல பெரும்பாலான ஏட்டு இலக்கியங்கள், நாட்டுப்புற வாழ்வியலை பெரிதும் பிரதிபலிக்கவில்லை என்பது உண்மையே. வேந்தரையும் கடவுளரையும் பாடுபொருளாகக் கொண்ட இலக்கியங்கள் பாரம மக்களின் வாழ்வைப் பதிவு செய்யத் தவறியிருக்கின்றன என்ற குற்றச்சாட்டு தமிழ் இலக்கியங்களுக்கு உண்டு. ஆனால் உழவுத்தொழில் குறித்து பல குறிப்புகளைச் சங்க இலக்கியங்கள் தருகின்றன. ஏறு தழுவுதல் குறித்தும் பல செய்திகள் சங்க் இலக்கியங்களில் உள்ளன.

இவ்வகையில் பாமர மக்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த பொங்கல் போன்ற பல ஊரக மக்களின் விழாக்களை ஏட்டு இலக்கியங்கள் கண்டுகொள்ளவில்லை. அவ்வாறே ஊரக அளவில் நடைபெற்று வந்த பொங்கல் விழாவும் இலக்கியங்களில் வேறு பதிவுகளிலும் இடம் பெறாது போயிருக்கலாம்.

பொங்கல் பற்றிய வரலாற்றுச் சான்றுகள்:

பழங்காலப் பெண்கள் தைமாதத்தில் நோன்பிருந்த செய்திகளை சங்க இலக்கியங்கள் சில குறிப்பிட்டிருக்கின்றன என்பதை முன்னர் பார்த்தோம்.

தைமாத்தில் நோன்பிருந்து, வையை ஆற்றில் நீராடி, சிறந்த கணவர் வாய்க்ப்பபெற வேண்டும் என பெண்கள் வேண்டியதாகப் பரிபாடல் (பாடல் 11) கூறுகின்றது.

‘வையை நினைக்கு மடை வாய்த்தன்று

மையாடல் ஆடன் மழப்புலவர் மாறெழுந்து

பொய்யாடலாடும் புணர்ப்பி ரைவர்

தீயெரிப் பாலுஞ் செறிந்த முன் பூற்றியோ

தாயருகா நின்று  தவத் தைந்நீராடல்

நீயுரைத்தி வையை நதி’

பண்டைக்காலத்தில் நெற்பயிர்ச்செய்கை செழித்துச் சிறந்திருந்ததைப் பல இலக்கியங்கள் அழகாக எடுத்துக் கூறுகின்றன. உழவுத் தொழிலின் அனைத்துப் படிநிலைகளையும் சங்கப் பாடல்களில் காணலாம்.

சேற்றில் நாற்றை அழுத்தி நடுவதை, 'நீர்உறு செறுவின் நாறுமுடி அழுத்த

நடுநரொடு சேறி ஆயின்..." என நற்றிணை கூறுகின்றது.

'பைதுஅற விளைந்த பெருஞ்செந் நெல்லின் தூம்புடைத் திரள்தான் துமிந்த வினைஞர்" என அறுவடை செய்யும் உழவரைப் பற்றி பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது.

இவ்வாறு உழவைப் போற்றிய பண்டைத் தமிழர் அறுவடை விழாவைக் கொண்டாடியிருப்பர் என்பதை உறுதியாக நம்பலாம்.

புறநானூறு என்ற சங்க இலக்கியத்தின் 22வது பாடலில், குறுங்கோழியூர்க் கிழார் என்ற புலவர், 'அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல.." எனக் குறிப்பிடுகின்றார்.

அதாவது ~நெல்லோடு வேயப்பட்ட நெல்லந்தாள் கூரை வீடும், கருப்பஞ்சருகு வேய்ந்த கூரை வீடுகளும் தனித்தனியே விழாக் கொண்டாடப்பட்ட களம் போலப் பொலிவுடன் காட்சி தருகின்றன| என்று கூறுகின்றார். அறுவடைக்களங்களில் விழாக்கள் கொண்டாப்பட்டிருக்கின்றன என்ற செய்தி இதன் வாயிலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாற்சோறு செய்யும் வழக்கம் பழந்தமிழர் காலம் தொட்டே இருந்து வந்திருக்கின்றது. அதை புழுக்கல் என்றே இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன.

சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழாவின் துவக்கத்தில், காவல்பூதத்திற்கு, புழுக்கலும், நோடையும், விழுக்குடை மடையும், பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து வழிபட்டதாக, குறிப்பிடப்படுகிறது. இதில் புழுக்கல் என்பதுதான் பொங்கல். சம்பந்தர், தன் மயிலாப்பூர் பதிகத்தில், 'நெய்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம்' என, சுட்டுகிறார். சங்ககாலத்திலும், பக்தி இயக்க காலத்திலும், புழுக்கல் என்பது தான், பொங்கலாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது.

அடுத்து கிட்டத்தட்ட கி.பி 9ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த சீவக சிந்தாமணி என்னும் காப்பியத்திலும் பொங்கல் பற்றி குறிப்பிடும் போது,

‘மதுக்குலாம் அலங்கல் மாலை

மங்கையர் வளர்த்த செந்தீப்

புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்’

என கூறுவதன் வாயிலாக பொங்கல் என்ற சொல்லை முதல் தடவையாக இலக்கியத்தில் பதிவு செய்கின்றது.

சோழர்காலத்தில் புதியேடு பண்டிகை என்ற என்ற பெயரில் புதிய அரிசியிட்டுப் பொங்கும் விழா நடைபெற்றதாக திருவொற்றியூர் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. முதல் ராஜேந்திரனின், காளஹஸ்தி கல்வெட்டில், மகர சங்கராந்தி அன்று, பெரும் திருவமுது படைக்கப்பட்ட தகவலை, தொல்லியல் அறிஞர் கிருஷ்ணமூர்த்தி, வெளியிட்டுள்ளார். தை முதல்நாளான கதிரவனின் வட செலவு தொடங்கும் மகர சங்கராந்தி என்றே வட இந்தியர்கள் குறிப்பிடுகின்றனர். இங்கு படைக்கப்பட்ட திருவமுதை நாம் பொங்கலாகக் கொள்ளலாம்.

கண்டெடுக்கப்பட்ட மற்றுமொரு கல்வெட்டு கீழ்க்காணும் தகவலைத் தருகின்றது.

சோழர் காலத்தில் உத்தம சோழனுடைய இறுதி ஆட்சியாண்டில் அவனுடைய மனைவியருள் பட்டத்தரசியாக விளங்கியவவள். 'உரட்டை சரஅபயன்" எனப்படும் திரிபுவன மாதேவி கைலாசமுடைய மாகாதேவர் கற்கோவிலுக்கு ஒரு நிவந்தம் அளித்துள்ளாள்.

சங்கராந்தி நன்னாளில், கைலாசமுடைய மகாதேவருக்குத் திருமுழுக்கு (அபிஷேகம்) ஆட்டுவதற்கும், நந்தாவிளக்கு எரிப்பதற்கும், நூறு பிராமணர்களுக்குப் பொங்கல் சோறு அளிப்பதற்கும் தேவையான வருவாயை அளிக்கத் தக்க வகையில் நன்செய் நிலத்தை அக்கோயிலுக்கு அவ்வரசி தானமாகக் கொடுத்து இருக்கிறாள்.

இக்கல்வெட்டின் வாசகத்தில் 'உத்தராயண சங்கராந்தி" எனும் தொடரும், 'பொங்கல் சோறு" எனும் தொடரும் நம் கருத்தைக் கவருகின்றன. சமயப் போர்வையில் 'பொங்கல் விழா" கோயில்களில் கொண்டாடப்பட்டதற்கு இக்கல்வெட்டு சான்று பகருகிறது.

கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் அப்போ டூபாய் எனும் போத்துகல் நாட்டைச் சேர்ந்த பயணி இந்தியாவிற்கு வந்தார். அவர் தென்னிந்தியா முழுவதையும் சுற்றிப் பார்த்தார். இந்து மக்களிடையே அவர் கண்டவற்றையும் கேட்டவற்றையும் “இந்துக்களின் பழக்க வழக்கங்களும் வாழ்க்கை முறையும்" (ஆயnநெசள யனெ ஊரளவழஅள ழக வாந ர்iனெழழச) எனும் நூலை எழுதியுள்ளார்.

உழவர்களுடைய அறுவடைத் திருநாளாகவும் சங்கராந்திப் பண்டிகையாகவும் ஊர்கள் தோறும் எவ்வாறு அது கொண்டாடப்பட்டது என்பதை அவர் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

பொங்கல் விழா தொடங்குவதற்குப் பல நாட்களுக்கு முன்னரே அதற்குரிய ஏற்பாடுகள் ஆர்வத்தோடும் ஆரவாரத்தோடும் மக்கள் செய்ததாகவும் வீடுகளைப் பழுது பார்த்தல் குடிசைகளில் புதிய கூரை வேய்தல், வெள்ளையடித்தல், வண்ணம் தீட்டுதல், அலங்கரித்தல் போன்ற பணிகளில் மக்கள் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பொங்கல் நாளன்று சூரியனுக்குச் செய்யப்படும் வழிபாட்டையும், பொங்கல் படையலையும் அவர் பாராட்டியுள்ளார். மறுநாள் மாடுகளுக்குச் செய்யப்பட்ட அலங்காரங்களையும், ஊர்ப் பொது இடத்தை மக்கள் கூடி, அவற்றிற்கு வழிபாடு செய்ததையும் கூடக் குறிப்பிட்டிருக்கின்றார். மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த மக்கள் காளையாட்டுப் போட்டிகளிலும் 'மஞ்சு விரட்டு" போன்ற வீர விளையாட்டுகளிலும் பேரார்வத்தோடு ஈடுபட்டதை அவர் பதிவு செய்துள்ளார்.

இருபதாம் நூற்றாண்டில் தைப்பொங்கல்:

விசயநகரப் பேரரசு காலத்திலும் ஐரோப்பியர் காலத்திலும் தைப்பொங்கல்; பற்றிய செய்திகள் பரவலாக எங்கும் காணப்படவில்லை. எனினும் தொடர்ச்சியாக நாட்டார் வாழ்வியல் அழுத்தமானதோர் விழாவாக பொங்கல் நடைபெற்று வந்திருக்கின்றது. தமிழகக் கிராமங்களில் கொண்டாடப்படுகின்ற பொங்கல் விழாக்களை உற்று நோக்கினால் அதன் ஆழமான நீண்ட தொடர்ச்சியையும் செழுமையையும் உணர முடியும்.

தமிழினத்தவரிடையே இருபதாம் நூற்றாண்டில் தைப்பொங்கல் பெற்ற எழுச்சி அதற்கு முன்னான காலங்களில் இருக்கவில்லை என்பது உண்மையே. பொங்கல் பற்றிய பிந்திய இலக்கியப் பதிவாக நமக்குக் கிடைப்பது பாரதிதாசன் பாடல்களே.

தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள்

செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம்

பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய்

ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப்

பண்ணிலே பொங்கப் பண்ணித் தமிழர்

எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்!

தலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும் நாள்! என்கிறார் பாரதிதாசன்.

இக்காலத்தின் தோன்றிய திராவிட அமைப்புகளும் தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் ஊரக வாழ்வியலின் எல்லைகளுக்குள் மட்டுப்பட்டிருந்த பொங்கல் விழாவை தமிழ்த் தேசியத்தின் அடையாளமாக வெளிக்கொணர்ந்தனர். பொங்கல் விழாவினூடே விரவிக் கிடந்த தமிழரின் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்தி விழாவின் சிறப்பை உலகறிச் செய்தனர். அதுவே தமிழரின் புத்தாண்டு எனவும் அறிவி;த்தனர்.

இன்றைய நாட்களில் உலகத் தமிழர் அனைவரும் பொங்கல் திருநாளைத் தமது தனித்துவமான பண்பாட்டு விழாவாகவே கருதத் தலைப்பட்டுவிட்டனர். மெய்யியற் சமய வழிபாடுகளுக்கப்பால் பழந்தமிழர் வழிபாட்டு முறையான இயற்கை வழிபாட்டின் எச்சமாகவே பொங்கல் விழா திகழ்கின்றது. உண்மையும் உணர்வும் மிக்கதாக இருக்கின்றது.

பொங்கல் விழா வெளிப்படுத்தும் நுட்பமும் ஆழமும் மிக்க பண்பாட்டுக் கூறுகள் குறித்து மற்றுமொரு கட்டுரையில் காண்போம்.

உதவியவை:

பரிபாடல்

புறநானூறு

தமிரின் மரபுச் செல்வங்கள் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

http://valavu.blogspot.com/2007/01/blog-post.html

http://nedumpunal.blogspot.com/2015/01/blog-post_99.html

https://ta.wikipedia.org/wiki/தைப்பொங்கல்

http://www.errimalai.com/?p=10051

http://www.keetru.com/anaruna/jan08/poonkothai.php


 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.