குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

வீரக்கல் அரிகண்டம் நவகண்டம்.

13.01.2020 அண்மையில் எயிற்பட்டினம் என்றழைப்பட்டிருந்த ம் தற்போதைய மரக்காணம் பூமீஸ்வரர் கோவிலுக்கு சென்றிருந்தபோது ,முகப்பிலேயே கொடிக்கம்பத்தில் அருகில் இருக்கும் வீரக்கல்லை அது பாதுகாப்பாக இருக்கிறதா என்று பார்த்தேன் .அந்த வீரக்கல்லை நான் சுமார் 10 ஆண்டுகளாக அந்தக்கோயிலுக்கு செல்லும் போதெல்லாம் முதலில் பார்ப்பது வழக்கம் .

இடது கையால் தலை முடியை இழுத்து ,பிடித்தபடி வலது கையால் தனது கையில் இருக்கும் கத்தியால் தனது தலையை தானே அரி ந்துகொள்ளும் அரிகண்டம் எனும் நவகண்டம் எனும் இந்த வீரக்கல்லில் பொதிந்திருக்கும் செய்தி என்னவாக இருக்கும், .அந்த வீரன் செய்யும் தியாகத்திற்கு காரணம் என்னவாக இருக்கும் ? என்று சிந்திக்கும் போது ,இத்தகைய வீரக்கல் பற்றிய அணைத்து முக்கிய செய்திகளையும் அறிந்தால் மட்டுமே இயலும் என்பது புரியும் .

நவகண்டம் என்பது தன்னுடைய உடலில் உள்ள ஒன்பது நாளங்களையோ, ஒன்பது உடல் பாகங்களையோ அறுத்து தன்னையே பலி கொடுத்துக் கொள்வதாகும். சங்ககாலம் தொட்டு தமிழகத்தில் 11 ஆம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டு வரையான காலகட்டங்களில் இந்த பலி கொடுத்துக் கொள்ளும் முறைஅதிகம் இருந்துள்ளது இத்தகைய இந்த நவகண்டப் பலியைப் பற்றி கோயில்களின் கல்வெட்டுகள், சிலப்பதிகாரம், கலிங்கத்துப் பரணி, தக்கயாக பரணி போன்ற இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன.

நவகண்டம் எனும் இந்தமுறை சித்தர்கள் வழியிலும் இருந்திருக்கிறது சித்தர்கள் சிலர் நவகண்டம் யோகம் எனும் சித்தினைக் கடைபிடித்துள்ளனர். நவகண்ட யோகம் என்பது தன்னுடைய உடல் பாகங்களை ஒன்பது துண்டுகளாக்கி யோகம் செய்வதாகும்பின்பு அவர்கள் தங்கள் உறுப்புக்களை மீண்டும் பூட்டிக்கொள்வார்கள் .இத்தகைய சித்து நவகண்டம் எனப்பட்டது

ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால், ஐம்புல கதவை அடைப்பதும் காட்டி என்று அவ்வை பிராட்டியார் விநாயகர் அகவலில் குறிப்பிட்டது இந்த நவகண்டம் பற்றி தான் போலும் .

கோவில்களில் இடப்பெற்றிருக்கும் இந்த மாதிரி நவகண்டம் கொடுப்பதற்குப் பல காரணங்கள் உண்டு:

வலிமையான‌ எதிரி நாட்டுடன் போர் புரிய நேரும் போது, வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்ற‌ தருணங்களில் தெய்வத்தின் அருள் நாடப்படுகிறது. கொற்றவைக்கு பலி கொடுத்தால் தெய்வத்தின் அருள் கிட்டும் என்ற நம்பிக்கையில் நவகண்டம் கொடுக்கப்பட்டது.

சில சமயங்களில் உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாகக் கிடக்கும் அரசனுக்கு, அவன் நலம் திரும்ப அவரது விசுவாசிகளால் நவகண்டம் கொடுக்கப்பட்டது. மன்னன் ஊத்தையாகாமல் தடுக்கவும் செய்யப்பட்டது .

நோயினால் சாவை எதிர் நோக்கி காத்திருக்கும் ஒருவன், நோயினால் சாக விரும்பாமல் வீர சொர்க்கம் அடைய விரும்பி நவகண்டம் கொடுத்துக் கொள்வது.

குற்றவாளி ஒருவன் தான் செய்த குற்றத்தினால் மரண தண்டனைக்கு உள்ளாகும்போது, அவ்வாறு மடியாமல் அரசன் அனுமதியுடன் நவகண்டம் கொடுத்துக் கொண்டு வீர சொர்க்கம் அடைவ‌து.

ஒருவன் போர்க்காயத்தினாலோ, நோயினாலோ சாகும் தறுவாயில் அவனுக்கு முடிக்க வேண்டிய கடமைகள் ஏதும் இருக்குமாயின் தனது இறப்பைத் தள்ளிப் போடுமாறு இறைவனிடம் வேண்டுவது. அப்படி நடக்கும் பட்சத்தில் அந்தக் கடமை நிறைவேறியதும் நவகண்டம் கொடுத்துக் கொள்வது.

ஒருவன் மிகப் பெரிய அவமானத்தைப் பெற்றபின் அதற்கு மேல் வாழ விரும்பாமல் சாக விரும்புகிறான். ஆனால் கோழை மாதிரி சாக விரும்பாமல், வீரச்சாவை விரும்பி நவகண்டம் கொடுத்துக் கொள்வது.

முன்பு சோழர்களுக்கு "வேளக்கார படைகள்" மற்றும் பாண்டியர்களுக்கு "தென்னவன் ஆபத்துதவிகள்" என்ற இருவிதமான

பாதுகாப்பு ப் படைகள் இருந்தன. தங்கள் கவனக் குறைவினாலோ, தங்களை மீறியோ, அரசர் உயிருக்கு அபாயம் நேர்ந்து விட்டால், துர்க்கையின் சந்நிதியில் தங்களுடைய தலையைத் தங்கள் கையினாலேயே வெட்டிக் கொண்டு பலியாவதாகச் சபதம் எடுத்துக் கொண்டவர்கள்.பொதுவாகவே அரிகண்டம் எனப்படும் தன்தலையை தானே அரிந்து கொள்ளும் வழக்கமே நவகண்டம் என்றும் அழைக்கப்பட்டது .

தமிழ் புலவர்களிடமும் தங்கள் புலமையை வெளிப்படுத்தும் விதமாக தங்கள் படைப்பை முதன்முதலில் வெளியிடும் போது அரிக்கண்டம் என்று தன்னை தியாகம் செய்யும் முறையும் இருந்து வந்திருக்கிறது .அது எமகண்டம் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது .

தமிழகத்தின் தொன்மையான அரிகண்ட - நவகண்டச் சிற்பங்களாக மாமல்லபுரம் திரெளபதி இரதம் (கொற்றவைக் கோயில்) மற்றும் ஆதி வராகர் குகைக் கோயிலில் காணப்படும் சிற்பங்களைச் சுட்டலாம்

கலிங்கத்துப் பரணியில் ஜெயங்கொண்டார் காண்பிக்கும் அரிகண்டம் காட்சியப் பாருங்கள்....

அடிக்கழுத்துடன் சிரத்தை அரிவராலோ

அரிந்த சிரம் அணங்கின் கை கொடுப்பராலோ

கொடுத்த சிரம் கொற்றவையைப் பரவுமாலோ.."

இத்தகையக்காரண ங்களில் மரக்காணம் பூமீஸ்வரர் ஆலயத்தில் அரிககண்டம் செய்துகொண்ட வீரனுக்கு என்ன காரணம் இருந்தது என்றது தெரியவில்லை .அந்த சிலையும் அடிப்பகுதி மண்ணுக்குள் புதைந்திருப்பதால் அந்த வீரனின் பெயரும் தெரியவில்லை .அந்த வீரனே விரைவில் தன்னை வெளிப்படுத்திக்கொள்வான் எனநம்புவோம் .#அண்ணாமலைசுகுமாரன் 11/1/2020

படம் மரக்காணம் பூமீஸ்வரர் கோவிலில் எடுக்கப்பட்டது