குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

கட்டுரை எழுதுவது எப்படி? அறிக்கை எழுதும் முறை

25.10.2019- இன்றைய போட்டி பரீட்சைகளில் நுண்ணறிவு மற்றும் பொது அறிவுகளில் தேர்ச்சிப்பெறும் மாணவர்கள் தற்போது மொழித்திறனில் வரக்கூடிய கட்டுரை, சுருக்கம் போன்றவற்றில் சிரமப்படுகின்றார்கள். இந்நிலையில் கட்டுரை ஒன்றை எவ்வாறு எழுதுவது என இன்று பார்க்கலாம்.

01 கட்டுரை எழுதும் முறை

மாணவர்களே! இப்பகுதியில் கட்டுரை எழுதும் முறை பற்றிக் காண்போம். ஒருவர் தம் உள்ளக் கருத்துகளை வெளியிடும் வாயில்களாக அமைவன, அவர்தம் பேச்சும் எழுத்தும் ஆகும். இவற்றுள் எழுதுதல் என்பது, தனித்திறன். அவ் எழுத்து, கதையாகவோ, கட்டுரையாகவோ வெளிப்படலாம். கட்டுரை எழுதும் திறன் பற்றி இங்குக் காண்போம்.

‘ஒரு பொருளைப் பற்றி இலக்கண முறையில் கட்டுரைப்பது கட்டுரை.’ ‘கட்டுரையாவது வகைப்படுத்திக் கூறுதல்.’ உள்ளத்தில் தோன்றுவதைக் கட்டுரைப்பது கட்டுரை. ‘அழகு நிரம்பிய உரையைக் கட்டுரை என்கிறோம்’. இவ்வாறு, அறிஞர்கள் விளக்கம் தருகின்றனர்.

சுருக்கமாகக் கூறினால், குறிப்பிட்ட ஒரு பொருளைப் பற்றி, ஒரு கட்டுக்கோப்புடன் யாவரையும் ஈர்க்கும் முறையில் அமைக்கப்படுவதைக் ‘கட்டுரை’ எனலாம்.

02 கட்டுரை அமைப்பு


இனி, கட்டுரையின் அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் காண்போம். எந்தப் பொருளைப் பற்றிக் கட்டுரை எழுதினாலும் அது, முன்னுரை – பொருளுரை – முடிவுரை ஆகியவற்றைக் கொண்டு விளங்க வேண்டும்.


முன்னுரையும் முடிவுரையும் ஒவ்வொரு பத்திக்குள் அமைய வேண்டும்.


முன்னுரையானது, எழுதப் புகும் கருத்தை வகுத்துக் காட்டுவதாக இருக்க வேண்டும். முடிவுரையானது சொல்லப்பட்ட கருத்துகளைத் தொகுத்துக் கூறுவதாக அமைய வேண்டும். ஒரு கட்டுரையில் முன்னுரையையும் முடிவுரையையும் படித்தாலே கட்டுரையின் சிறப்புத் தன்மை விளங்க வேண்டும்.


பொருளுரையானது, எடுத்துக்கொண்ட கருத்தைப் பல வழிகளில் விளக்கிக் கூறும் பகுதி ஆகும். ஆதலின் அதைப் பல பத்திகளாகப் பிரித்து எழுதுதல் வேண்டும். எடுத்துக்கொள்ளும் பொருளுக்கு ஏற்ப, உள் தலைப்புகள் பலவற்றைக் கொண்டதாகப் பொருளுரை விளங்க வேண்டும்.


கட்டுரையானது, சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், நன்மொழி புணர்த்தல் முதலான அழகுகளைப் பெற்றிருக்க வேண்டும். கூறியது கூறல், மாறுகொளக் கூறல், மற்றொன்று விரித்தல் முதலான குற்றங்கள் இல்லாமல் எழுதப்பட வேண்டும். இனி, கட்டுரை எழுதுவோர் கருத்திற்கொள்ள வேண்டிய சில பொதுவிதிகளைக் காண்போம்.


1. செய்திகளைத் திரட்டுதல்

2. முறைப்படுத்துதல்

3. தலைப்புக் கொடுத்தலும் பத்தி அமைத்தலும்

4. மேற்கோள்கள் – பழமொழிகள் திரட்டுதல்

5. பல்வகை வாக்கியங்களில் எழுதுதல்

6. நடை அழகு

7. நிறுத்தக் குறியீடுகள் பயன்படுத்தி எழுதுதல்

8. நல்ல கருத்துகளை எடுத்தாளும் திறன்

9. மீள் பார்வை செய்தல்

10. நல்ல கையெழுத்தில் எழுதுதல்.


கட்டுரை எழுதும்பொழுது இவ்விதிகளை நினைவிற் கொண்டு கட்டுரை எழுதிட முயல்க.


03. கட்டுரை வகை


கட்டுரைகளை, 1. கதை இயல்புக் கட்டுரை, 2. விளக்கக் கட்டுரை, 3. சிந்தனைக் கட்டுரை, 4. வருணனைக் கட்டுரை, 5. கற்பனைக் கட்டுரை, 6. ஆய்வுக் கட்டுரை, 7. வரலாற்றுக் கட்டுரை, 8. தருக்கக் கட்டுரை, 9. அங்கதக் கட்டுரை, 10. பாராட்டுக் கட்டுரை, 11. பத்திரிக்கைக் கட்டுரை என்பனவாகப் பகுத்துக் காட்டுவர்.


மாணவர்களே! கட்டுரை வகை, எழுதுவதற்கான விதிகள், கட்டுரையின் அமைப்பு ஆகியவற்றைத் தெரிந்துகொண்ட நீங்கள், நல்ல கட்டுரை எழுதிப் பழகுக!


அறிக்கை எழுதும் முறை

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

தமிழ் வழிபக்கத்தை விரும்பு


அறிக்கை

ஒரு விடயம் / நிகழ்வு பற்றிய பல அம்சங்களையும் ஒழுங்காக நிரற்படுத்தி மேலதிகாரிக்கோ , சபையினருக்கோ சமர்ப்பிக்கும் பொருட்டு தெளிவாகவும் சுருக்கமாகவும் எழுதப்படுவது அறிக்கை எனப்படும்.

அறிக்கை எழுதப்படும் சந்தர்ப்பங்கள்

* வாசித்த புத்தகம் பற்றிய அறிக்கை

* இலக்கிய மன்றங்களின் கூட்டறிக்கை, ஆண்டறிக்கை

* பாடசாலை, சனசமூக நிலைய ஆண்டறிக்கை

* செயற்திட்டம், நிகழ்வு,நிகழ்ச்சி பற்றி சமர்ப்பிக்கப்படும் விசேட அறிக்கை

* பிரச்சினைகள் ,சூழ்நிலைகள்,வாய்ப்பு வசதிகள், எதிர்பாராத சம்பவங்கள் பற்றி ஆராய்ந்து சமர்ப்பிக்கப்படும் அறிக்கை

* அரச திணைக்களங்கள் / கூட்டுத்தாபங்கள் போன்றவற்றின் கருமக்கூறுகள் பற்றி திணைக்கள தலைவருக்கு சமர்ப்பிக்கப்படும் முன்னேற்ற அறிக்கை

* வெளிக்கள பயணங்கள் பற்றிய அறிக்கை

* பரிசோதனைகள் பற்றிய அறிக்கை

* வானொலி நிகழ்ச்சிகள் பற்றிய அறிக்கை

* சொற்பொழிவுகள் பற்றிய அறிக்கை


விதிமுறையாக எழுதப்படும் அறிக்கைகளில் காணப்படும் பொதுவான அம்சங்கள்

* அறிக்கை இன்னாருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது என்பது

* அறிக்கை எப்பொருள் பற்றியது என்பதைக் குறிக்கும் தலையங்கம்

* ஒரு விடயம் பற்றிய பல அம்சங்களையும் ஒழுங்காக நிரைப்படுத்தி எழுதுதல்

* அறிக்கை எழுதும் நோக்கத்திற்கேற்ப அவற்றை பந்தி பிரித்து தலைப்பிட்டு எழுதுதல்

* எழுதுபவரின் ஒப்பம்,பதவி,எழுதப்பட்ட இடம், திகதி ஆகியனவும் எழுதப்பட வேண்டும்


அறிக்கை எழுதப்படும் படிமுறை

1. தகவல் திரட்டுதல்

- விடயத்தை கலந்தாலோசித்தல்,செவிமடுத்தல்,செவ்வி காணல்,குறிப்பெடுத்தல்


2. தகவல்களை நிரற்படுத்தல்

- முக்கிய அம்சங்களை தேர்ந்தெடுத்தல்


3. அவற்றை ஒழுங்குபடுத்தி பரிசீலணை செய்தல்


4. அறிக்கை எழுதும் நோக்கத்திற்கேற்ப அவற்றை பந்தி பிரித்து வேண்டியவிடத்து உபதலைப்பிடல்


5. சுருக்கமாகத் தெளிவாக தர்க்கரீதியாக எழுதுதல்


6. இறுதியில் வேண்டிய தீர்வை சுட்டிக்காட்டல்

- அறிக்கை யாருக்கும்? யாரால் ? எப்போது? எதைப்பற்றி? எழுதப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட வேண்டும்.


அறிக்கை எழுதுவதனால் கிடைக்கும் நன்மைகள்

* கடந்த நிகழ்ச்சிகளை தொடர்புபடுத்தலுக்காக அறியத் தருவதற்கு பயன்படும்.

* குறிப்பிட்ட ஆண்டொன்றில் குறித்த நிறுவனமொன்று நிலைநாட்டிய சாதனையை தெரியப்படுத்துவதற்கு பயன்படும்

* செயற் திட்டம் ஒன்று எவ்வாறு எந்தளவிற்கு நிறைவேற்றப்பட்டது என்பதை அறிவதற்கு பயன்படும்

* பிரச்சினைகள்,சம்பவங்கள் பற்றிய காரணங்களை அறிவதற்கு பயன்படும்

* தரவுகளை இனங்காண்பதற்கு பயன்படும்


உதாரணம்

பாடசாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழா பற்றிய அறிக்கை சட்டகம்


சட்டகம்

¤ பிரதம அதிதிகள் அழைத்துவரப்படல்

¤ நிகழ்வுகள் ஆரம்பம்

¤ பாடசாலை அதிபரின் உரை

¤ நடைபெற்ற நிகழ்வுகள்

¤ பிரதம அதிதியின் உரை

¤ பரிசளிப்பு வைபவம்

¤ நன்றியுரை

¤ நிகழ்வுகள் நிறைவு

மாணவர்களே! கட்டுரை வகை, எழுதுவதற்கான விதிகள், கட்டுரையின் அமைப்பு ஆகியவற்றைத் தெரிந்துகொண்ட நீங்கள், நல்ல கட்டுரை எழுதிப் பழகுக! உம் படைப்பாற்றலையும் எழுத்தாற்றலையும் வெளிப்படுத்துக!