குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

பல்லவ அரசர்களின் மாமல்லபுர ஐந்து தேர்கள்! வடமொழியை வடவர்கடவுளை தமிழ?ருக்குள் திணித்தவர்கள் இவரகளே!!

24.10.2019 மாமல்லையில் பஞ்ச பாண்டவர்கள் இரதம் என அழைக்கப்படும் இந்த ஐந்து இரதக்கோவில்கள் உண்மையில் மகாபாரத கதையின் தாக்கத்தில் எழுப்பப்பட்ட இரதங்கள் அல்ல. இதை ஏற்கனவே ஒரு பதிவில் நாம் விவாதித்திருக்கிறோம் எனினும் மீண்டுமொருமுறை நினைவுபடுத்த கடமைபட்டுள்ளேன். 1800களின் தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் இந்திய தொல்லியலின் மேல் ஆர்வம் கொண்டு கல்வெட்டுகளையும் கோவில்களையும் ஆவணபடுத்திக்கொண்டிருந்த நேரம் அவர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்து கல்வெட்டுகளை படித்து பொருள் தந்தது காவாலி சகோதரர்கள். காவாலி சகோதரர்களில் ஒருவர் தான் மாமல்லையை முதன் முதலில் ஆவணப்படுத்துகிறார். அவர் தான் மாமல்லையில் உள்ள அனைத்து வகையான கோவில்களையும் சிற்பங்களையும் மகாபாரதத்துடன் இணைத்து ஆவணப்படுத்துகிறார். ஆதலினாலேயே பகீரதன் தவசு இப்போதும் அர்யுனன் தவசு என்றே அழைக்கப்படுகிறது. ஐந்து இரதங்களுக்கும் பஞ்ச பாண்டவர்களின் பெயர்களும் வழங்கப்பட்டது. காவாலி சகோதரர்களின் காலத்தில் மகாபாரதம் தமிழகத்திலும் ஆந்திர பகுதிகளிலும் மிக பிரபலமான புராணமாக இருந்ததும் இப்பெயர் பெற காரணமாகவும் அமைந்தது.

அப்படியானால் ஐந்து இரதங்களின் சிறப்புகள் என்ன? எதற்காக கட்டப்பட்டது? என கேட்டால், இந்தியாவில் வேறெந்த கோவிலுக்கும் இல்லாத தனித்தன்மையான சிறப்பு இந்த ஐந்து இரதத்திற்கு உண்டு. அது இந்த ஐந்து இரதங்களும் ஒற்றை கல்லில் செதுக்கப்பட்டதே! அதுமட்டுமின்றி ஒவ்வொரு இரதமும் ஒவ்வொரு வகையான கட்டிடகலையுடன் விளங்குவதும் தான்.

இதே போன்றே கி.பி 6 ஆம் நூற்றாண்டிலேயே சாளுக்கியர்கள் செய்துவிட்டார்களே என்று கேட்டால், அவர்களது குடைவரைகள் Deccan Sandstone என சொல்லப்படும் சிகப்பு மணற்கல்லினால் ஆனது. மாமல்லை இரதங்கள் யாவும் கிரானைட் கற்களிலானது. பாதாமி குடைவரைகளை விட உறுதியானது.

பல்லவர்கள் மாமல்லையில் செதுக்கிய பின் தான் எல்லோராவில் கைலாசநாதர் ஆலயம் ஒற்றை கல்லினால் செதுக்கப்பட்டது. அதற்கு (எல்லோரா) முன்னோடியாக பாண்டியர்கள் கழுகுமலையில் செதுக்கிய வெட்டுவான் கோவிலுக்கும் பல்லவர்களின் மாமல்லை அடித்தளமாக அமைந்துள்ளது.

இந்த ஐந்து இரதங்களில் திரௌபதி இரதம் என சொல்லப்படும் முதல் இரதமானது மகிசனை அழித்த துர்க்கை என பின்னாளில் அழைக்கப்பட்ட கொற்றவைக்கானது. அடுத்ததாக இருக்கும் அர்யுனன் இரதமானது சிவனுக்கானது என சிலரும் , பிரம்மா அல்லது பிரம்ம சாசுதா என பல்லவர் காலத்தில் அழைக்கப்பட்ட முருகன் என்றும் சிலர் கருதுகிறார்கள்.

அடுத்துள்ள பீம இரதமானது திருமாலுக்கானது என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதற்கு காரணம் சாலை என சொல்லப்படும் படகை கவிழ்த்தது போன்ற நீண்ட விமானம். இதுபோன்ற விமானங்கள் திருமாலுக்கானது.

அதற்கு அடுத்துள்ள தர்மராயஇரதமானது சிவனுக்கானது. அதில் மேல் தளங்களில் ருத்திரனுக்கான சிற்பங்களும் காணப்படுகின்றன.

இவை நான்கு இரதத்திற்கும் எதிரில் தூங்கானை மாட வடிவில் அமைந்துள்ள நகுலன் சகாதேவன் இரதம் என சொல்லப்படக்கூடிய கோவிலானது சிவனுக்கானதாக இருக்க வேண்டும் என்பது பலரது கருத்து. ஏனெனில்தூங்கானை விமானமானது சிவனுக்கானதாக பின் வந்த காலங்களில் அமைந்திருக்கின்றன.

ஆக இரண்டாவது தேர்களும் அர்சுனன் இரதத்தை பிரம்மசாஸ்தாவிற்கானதாக கருதினால் ,

1.கொற்றவை  (தமிழ் மயம்)

2.பிரம்மசாசுதா

3. விச்ணு

4. உருத்ரன்

5. சிவன்

என இந்த ஐந்து இரதங்களும் அமைக்கப்பட்டிருக்கலாம்.