குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, புரட்டாசி(கன்னி) 19 ம் திகதி சனிக் கிழமை .

தமிழ் - பிராமியின் காலத்தைப் பின்னுக்குத் தள்ளும் கீழடியும் பொருந்தலும்

30.09.2019 கீழடியில் கிடைத்த ஒரு ஆதாரத்தை வைத்துக்கொண்டு தமிழ் பிராமியின் காலத்தை அசோகர் பிராமிக்குப் பின்னால் தள்ள முடியாது என்கிறார்கள். ஆனால், ஏற்கனவே பொருந்தலில் செய்யப்பட்ட ஆய்வில் தமிழ் பிராமியின் காலம் ஐந்தாம் நூற்றாண்டு என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆய்வையும் செய்தது அமெரிக்காவின் பீட்டா அனலிட்டிகல் லேப்தான்.

பொருந்தல் ஆய்வில் சொல்லப்பட்டது என்ன?

பழனியிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் இருக்கிறது பொருந்தல். அந்த இடத்தில் 2009ஆம் ஆண்டிலும் 2010ஆம் ஆண்டிலும் மே -ஜூன் மாதங்களில் அகழாய்வு நடத்தப்பட்டது. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர் கே. ராஜன் தலைமையில் 80க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் அதனை நடத்தினர். இந்த அகழாய்வில் மனிதர்கள் வாழ்ந்த இடங்களும் புதைத்த இடங்களும் கண்டறியப்பட்டு அகழாய்வு செய்யப்பட்டன.

இந்தப் பொருந்தல், பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையையும் சேர நாட்டின் துறைமுக நகரான முசிறியையும் இணைக்கும் வழித்தடத்தில் அமைந்திருந்ததாகக் கருதப்பட்டது. சங்ககாலப் புலவரான பொருந்தில் இளங்கீரனார் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்றே கருதப்படுகிறார்.

இங்கு நடத்தப்பட்ட ஆய்வில், 12,000 மணிகள், தமிழ் பிராமி எழுத்துகளுடன் மோதிரங்கள், இரும்பு வாட்கள், சங்ககாலத்தைச் சேர்ந்த காசுகள், தந்தத்தால் ஆன தாயக்கட்டைகள், டெரகோட்டா பொம்மைகள் என பெரும் எண்ணிக்கையில் தொல் பொருட்கள் கிடைத்தன. ஆனால், கிடைத்ததிலேயே மிக அரிதான பொருள், நெல்மணிகள். நான்கு கால்களைக் கொண்ட ஒரு ஜாடியில் ஒரு எலும்புக்கூட்டுடன் இரண்டு கிலோகிராம் நெல்மணிகள் காற்றுப்புகாத ஜாடியில் போட்டு மூடப்பட்டிருந்தன. இரண்டு ring-standகளும் கிடைத்தன. அதில் தமிழ் பிராமி எழுத்துகளில் va-y-ra (வைர) என எழுதப்பட்டிருந்தது.

இதற்கு முன்பாக இரும்புக் காலத்தைச் (கி.மு. 1000 முதல் கி.மு. 300 வரை) சேர்ந்த இடங்களில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் தானியங்கள் கிடைத்திருக்கின்றன என்றாலும் அவையெல்லாம், மானாவாரி தானியங்கள். ஆனால், நெல் விவசாயத்தின் மூலம் விளையும் பயிர்.

இங்கிருந்து கிடைத்த நெல்மணிகளை பேராசிரியர் ராஜன் அமெரிக்காவில் உள்ள பீட்டா அனலிட்டிகல் ஆய்வகத்திற்கு அனுப்பினார். அவை Accelerator Mass Spectrometry ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த ஆய்வில் அந்த நெல் மணிகள் கி.மு. 450ஆம் ஆண்டை ஒட்டியவை எனத் தெரியவந்தது.

இந்த நெல்மணிகள் கிடைத்த கல்லறையிலேயே இருந்த பானைகளில் தமிழ் பிராமி எழுத்துகளும் கிடைத்தன. பிராமி எழுத்துகளுடன் ஒரு அகழாய்வில் நெல் மணிகள் கிடைத்தது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை. ஆகவே, தமிழ் பிராமி எழுத்துகளின் காலமும் 5ஆம் நூற்றாண்டுக்குத் தள்ளப்பட்டது.

அசோகர் பிராமியின் காலம் மூன்றாம் நூற்றாண்டு எனக் கணிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழ் பிராமியின் எழுத்து இன்னும் இரண்டு நூற்றாண்டுகள் பழமையானது என்பது இந்த ஆய்வு முடிவுக்குப் பிறகே உணரப்பட்டது.

ஐராவதம் மகாதேவன், ஒய். சுப்பராயுலு ஆகியோர் தமிழ் பிராமி எழுத்துகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு வந்தவை எனச் சொல்லிவருகிறார்கள். ஆனால், ஆர்க்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியாவில் Director of Epigraphyஆக இருந்து ஓய்வுபெற்ற கே.வி. ரமேஷ், தமிழ் பிராமி, அசோக பிராமிக்கு முற்பட்டது எனக் கருதுகிறார்.

இந்த முடிவு வெளிவந்த காலத்தில் ஐராவதம் மகாதேவனிடம் இந்த முடிவுகள் குறித்து கேட்கப்பட்டது. இந்த முடிவுகள் ஆர்வமூட்டுபவை என்றாலும் இதனை உறுதிப்படுத்த பலமுறை கார்பன் டேட்டிங் செய்ய வேண்டுமென்றும் சொன்னார். “இம்மாதிரி பல இடங்களில் கிடைத்தால், வரலாற்றைத் திருத்தி எழுத வேண்டும்.

தற்போதுவரை, தென்னிலங்கையில் உள்ள திசமகாரமவில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துகள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதால், அதன் காலமே, தமிழ் பிராமியின் காலமாகக் கருதப்பட்டுவருகிறது” என்றார்.

அசோக பிராமியின் காலம் கி.மு. 250ஆகக் கருதப்படுகிறது. அசோகனின் தாத்தாவான சந்திரகுப்த மௌரியரின் அவைக்கு விசயம் செய்த கிரேக்கத்தூதர் மெகஸ்தனிஸிடம் எழுதத்த தெரியாததால், எல்லாவற்றையும் மனப்பாடம் செய்துவைக்க வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டார். ஆகவே சந்திரகுப்த மௌரியனின் காலத்தில் எழுத்துகள் இல்லை. மேலும், அசோகர் கால கல்வெட்டிற்கு முன்பான கல்வெட்டு ஏதும் இதுவரை கிடைக்கவில்லை.

மகாதேவனைப் பொறுத்தவரை, “ஒரே ஒரு கார்பன் டேட்டிங்கை வைத்துக்கொண்டு, சில நூற்றாண்டுகள் பின்னுக்குத் தள்ளுவது ஏற்க முடியாதது. அந்த நெல்மணிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம். தவறுகள் இருக்கலாம்” என்று குறிப்பிட்டார்.

ஆனால், கேம்ப்ரிட்ச் பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறை பேராசிரியரான திலீப் கே. சக்கரவர்த்தி இந்த பொருந்தல் கண்டுபிடிப்பை தமிழகத் தொல்லியல் துறை வரலாற்றில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியிருப்பதாகக் குறிப்பிட்டார். இவரைப் பொருத்தவரை தமிழ் பிராமி, அசோகர் பிராமிக்கு முந்தையது. An Oxford Companion to Indian Archaeology”, “India, an Archaeological History” ஆகிய இரண்டு நூல்களிலுமே தமிழ் பிராமியின் காலம் கி.மு. 500 என்றே இவர் குறிப்பிடுகிறார்.

ஐராவதம் மகாதேவன், சுப்பராயலு ஆகியோர் ஒரு ஆதாரம் போதாது என்று கூறிய நிலையில்தான் கீழடியில் இரண்டாவது ஆதாரம் கிடைத்திருக்கிறது. பிராமி எழுதப்பட்ட பானை ஓடுகள் கிடைத்த அதே மட்டத்தில் கிடைத்த கரிமப் பொருள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதில் அவற்றின் காலம் கி.மு. 580 எனத் தெரியவந்திருக்கிறது.

இப்போது ஐராவதம் மகாதேவன் இருந்திருந்தால் இந்த முடிவை ஏற்றுக்கொண்டிருக்கக்கூடும். ஆனால், இப்போதும் பலர் ஏற்க மறுக்கிறார்கள். ஆனால், போதுமான அளவு அறிவியல் ஆதாரங்கள் கிடைக்காதது அதற்குக் காரணம் அல்ல.

படங்கள்: 1. வயிர என எழுதப்பட்ட பானை ஓடும், கல்லறையும்; 2. பீட்டா லேபின் ஆய்வு முடிவுகள்; 3. கல்லறையில் கிடைத்த நெல்மணிகள்.

இது தொடர்பாக ஃப்ரண்ட்லைன் இதழிலும் தி ஹிந்துவிலும் வந்த செய்திகளின் இணைப்புகள் கீழே.