குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

என்னாகப் போகிறது நம்மினம்? -கம்பவாரிதி இலங்கை யெயராச்-

12.09.2019  உளம் சோர்ந்து இக்கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன்.
அரசியல்க் கட்டுரைகளை இனி எழுதுவதில்லை என,
நானாக எனக்குள் மேற்கொண்ட விரதத்தை,
சூழ்நிலை காரணமாக மீறவேண்டியிருக்கிறது.
ஏன் இந்த விரதம் என்று கேட்பீர்கள்?
இனத்தின் மேற்கொண்ட அக்கறையால்,
கிடைத்தற்கருமையாய் இருக்கக் கூடிய எனது நேரத்தைச் செலவழித்து,
யோசித்து யோசித்து நான் எழுதிய கட்டுரைகளால்,
விளைந்த பயன் ஒன்றுமில்லை எனத் தெரிந்தபோது மனம் சோர்ந்தது.
அதனால்த்தான் இனி அரசியல்க் கட்டுரைகளை எழுதுவதில்லை எனும்,
விரதத்தை மேற்கொண்டேன
மற்றவர்களின் கருத்தைக் கேட்டு,
தங்கள் பாதையைச் செம்மைப் படுத்த,
நம் தலைவர்கள் யாரும் தயாராக இல்லை.
தாம் எதைச் செய்தாலும் தம்மைப் பின்பற்றும்,
ஆதரவாளச் செம்மறியாட்டுக் கூட்டங்கள்,
கேட்டுக் கேள்வியில்லாமல் தம் பின்னால் வரும் எனும் நம்பிக்கை அவர்களுக்கு.
அப்படியிருக்க, அவர்கள் ஏன் விமர்சனங்களை எதிர் கொள்ளப்போகிறார்கள்?
அவர்களின் குப்பைக்கூடைகளுக்குள் போகவா,
நான் கட்டுரைகள் எழுதுகிறேன்.
கேள்வி மனம் சுட நான் சோர்ந்து போனது இவ்விரதத்திற்கான ஒரு காரணம்.

✠✠✠✠✠✠

என் கட்டுரைகள் மக்களிடமாவது போய்ச் சேர்ந்தனவா?
சிந்தித்தால் கவலைதான் உண்டாகிறது.
நம்மவரில் பலருக்கு கட்டுரை படிப்பதென்பது வெறும் பொழுதுபோக்குத்தான்.
அதுகூட நூறில் ஒருவர்தான் படிக்கிறார்கள்.
அரசியல்க் கட்டுரைகளைப் படிப்பது,
வெளிநாட்டுத் தமிழர்களுக்கு ஊர்ப் புதினம் அறிந்து 'உளட்டுவதற்கான' ஓர் வழி.
'ஜெயராஜ் அவருக்கு நன்றாகக் கொடுத்தார்' என்றும்,
'இவருக்கேன் இந்த அரசியல்' என்றும்,
'இதனால்த்தான் இவரை புலிகள் முந்தி கலைச்சவன்கள்' என்றும்,
வீண்பேச்சுப் பேசுவதோடு அவர்களில் பலரும் தம் வேலையை முடித்துக் கொள்கின்றனர்.
'அடடா! இக்கட்டுரையில் இவர் கேட்பது நியாயமானது தானே,
இதற்கு ஏன் தலைவர்கள் பதில் சொல்கிறார்கள் இல்லை?
அப்படிப்பட்ட தலைவர்களுக்கு அடுத்த தேர்தலில் நல்ல பதில் அடி கொடுக்கவேண்டும்' என்று,
நினைப்பவர்கள் எவரையும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணவில்லை.
மக்களைப் பொறுத்தவரையில் கட்டுரைகளின் பயன் இவ்வளவுதான்.
தலைவர்களும் திருந்தப் போவதில்லை மக்களும் திருந்தப் போவதில்லை,
இந்நிலையில் கட்டுரை எழுதி காலத்தை வீணாக்குவது ஏன்? எனும் எண்ணமே,
அரசியல் கட்டுரை எழுதுவதில்லை எனும் விரதத்தை மேற்கொள்வதற்கான,
இரண்டாவது காரணமாயிற்று.

✠✠✠✠✠✠

அப்படியானால் விரதம் முறித்து மீண்டும் கட்டுரை எழுதுவதன் நோக்கம் என்ன?
தலைவர்கள் திருந்தத் தொடங்கிவிட்டார்களா?
அல்லது மக்கள் மாறத் தொடங்கிவிட்டார்களா?
கேட்பீர்கள்!
ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.
அப்படியாயின் எதற்காக இக்கட்டுரை?
சொல்கிறேன்.

✠✠✠✠✠✠

'சும்மா இரு' என்று சொன்னாலும் புத்தியும் கையும் பேனாவும்,
என்னைச் சும்மா இருக்கவிடமாட்டோம் என்கின்றன.
நம் இனமோ மிக இக்கட்டான காலகட்டத்தில் நிற்கிறது.
இந்நிலையில்,
தலைவர்கள் அல்லது மக்கள் விழித்தெழ தவறுவார்களேயானால்,
இன்னும் நூறு ஆண்டுகளுக்கு நம் இனத்தை,
தந்தை செல்வா சொன்ன கடவுளாலும் காப்பாற்ற முடியாது போல் தெரிகிறது.
அதனால்த்தான் என் விரத்தைத் தூக்கித் தூரப் போட்டுவிட்டு,
'அடிக்குமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்' எனும் நப்பாசையில்,
வெட்கத்தைவிட்டு இக்கட்டுரையை மீண்டும் எழுதத் தொடங்குகிறேன்.

✠✠✠✠✠✠

இராவணனைப் பற்றி கும்பகர்ணன் சொன்னதான ஒரு தொடர் நினைவில் வருகிறது.
'திருத்தலாம் ஆகிலன்றோ திருத்தலாம்' என்பதுவே அத்தொடராம்.
கிட்டத்தட்ட எங்கள் இனத்தின் நிலையும் அதுவேயாம்.
ஆசை யாரை விட்டது?
அது என்னையும் விட்டபாடில்லை.
அதிசயங்கள் ஏதும் நிகழ்ந்தேனும் எம்மக்கள் மத்தியில் மாற்றங்கள் நிகழலாம் எனும்,
ஆசை பற்றியே மீண்டும் இக்கட்டுரையை வரையத் தொடங்குகிறேன்.
'சாதனை செய்க பராசக்தி!'

✠✠✠✠✠✠

நம் இனத்தை அடிமைப்படுத்த நினைக்கும் எதிராளிகள்,
நாளுக்குநாள் பலம் பெற்றுக்கொண்டேயிருக்கிறார்கள்.
உலக அரங்கிலும் உள்ளூரிலும் அவர்களின் இராஜதந்திரம்,
தினம் தினம் வலிமை பெற்றுக் கொண்டேயிருக்கிறது.
அடுத்தடுத்து தமக்குள் பிரிவுகளை உண்டாக்கி,
நம் தலைவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் உட்பகைகள்,
நம் இனத்தின் எதிராளிகளுக்கு செங்கம்பளம் விரித்துக் கொண்டிருக்கின்றன.
உலக சமுதாயம் நமக்குக் கைதரும் என்ற கனவை தாமும் வளர்த்து,
அதனை  மக்களையும் நம்பச் செய்துகொண்டிருக்கிறார்கள் நம் தலைவர்கள்.
எல்லாம் கானல் நீர்தான்!
எதுவும் நடக்கப் போவதில்லை!

✠✠✠✠✠✠

எம் இனம் மீதான கருணையால்,
உலக அரங்கில் எந்த அரசியல் நகர்வுகளும் ஏற்படப் போவதில்லை.
வேற்று நாடுகள் தத்தம் இலாபம் நோக்கிப் போடும் கணக்குகளில்,
எச்சமாக எம்மினத்திற்கும் ஏதாவது விழுந்தால் சரி,
அதற்கான வாய்ப்புகளும் பெரும்பாலும் இருப்பதாய்த் தெரியவில்லை.
அத்தகு வாய்ப்புக்களை ஏற்படுத்தும் தீர்க்கதரிசன செயற்பாடுகளை,
எம் தலைவர்களிடம் கிஞ்சித்தும் காணமுடியவில்லை.
அது, இனத்தின் துரதிஷ்டம் இன்னும் முடியவில்லை என்பதை நிரூபித்து நிற்கிறது.
வேற்று நாடுகளின் அரசியல் நகர்வுகளால் இடையிடையே ஏற்படும் சிறு வெளிச்சங்களை,
எமக்கான விடுதலைச் சூரியன் உதித்துவிட்டது என்பதாய்,
பேசிப்பேசி ஏமாற்றுகிறார்கள் தலைவர்கள்.
அந்த பொய்மையான மின்மினி வெளிச்சத்திற்கும் யார் உரிமைக்காரர்கள்? என,
நம் தலைவர்கள் மத்தியில் அடிபிடி நடக்கிறது.
இனம், இனம் என்று வாய் கிளியப் பேசும் நம் தலைமைகள் அனைத்திற்கும்.
நம் இனம் பற்றிய கவலை துளியளவேனும் இருப்பதாய்த் தெரியவில்லை.
அவர்கள் அக்கறை முழுவதும் தம் கட்சிகள் மேலும் பதவிகள்மேலுந்தான்.

✠✠✠✠✠✠

மக்கள் நிலையும் கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கிறது.
மூன்று தசாப்தத்திற்கு மேலான யுத்தத்தின் கொடுமைகளை,
கண்ணால்ப் பார்த்து, நேரடியாக அனுபவித்துக் கடந்த பின்பும்
நம்மவர்களுக்கு இன்னும் உண்மைத் தேசப்பற்று உதித்ததாய்த் தெரியவில்லை.
தேசப்பற்று ஒருபக்கம் கிடக்கட்டும்.
தத்தமது இளைய தலைமுறையை மூடப்போகும்,
இழிவின் இருளைக் கூட அவர்கள் உணர்கிறார்கள் இல்லை.
தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளும் பொய்ம்மை நிலையில்த்தான் அவர்களும்.

✠✠✠✠✠✠

போர்க்காலத்திலேயே அப்படித்தான் அவர்கள் இருந்தார்கள்.
கூட்டத்தில் கூடி நின்று கூடிப்பிதற்றிவிட்டு,
நாட்டத்தில் கொள்ளாத நயவஞ்சகத்தனம்,
நம் மக்கள் மத்தியிலும் பெரும்பான்மையாய் பதிவாகத் தொடங்கிவிட்டது.
சுதந்திரம், போராட்டம், உரிமை என்பதெல்லாம்,
எம்மக்களைப் பொறுத்த அளவில் வார்த்தைச் சுகங்கள் தான்.
முன்பும் பலதரம் சொல்லியிருக்கிறேன்.
போர்க்காலத்தில், உள்ளூரிலும் வெளிநாடுகளிலும்,
தம்மைப் புலி ஆதரவாளர்களாய்க் காட்டிக் கொண்டவர்கள்,
புலிகளின் ஆட்சிப் பிரதேசத்திற்குள் நுழைய விரும்பாமல்,
தம் உறவுகளைக் கொழும்புக்கு அழைத்து பார்த்து விட்டுச் சென்ற அதிசயம் நிகழ்ந்தது.
தாம் ஆதரித்ததாய்க் காட்டிக் கொண்ட புலிகள்மீது நம்பிக்கை இல்லாமல்,
தாம் எதிர்ப்பதாய்க் காட்டிக் கொண்ட பேரினத்தாரின்மீது நம்பிக்கை வைத்து இயங்கிய,
நம்மவர்தம் செயலின் பொய்மையை என் சொல்ல?
தாம் தேசியத் தலைவர் என்று போற்றிய,
பிரபாகரனின் மரணம் அறிவிக்கப்பட்ட அன்றுகூட,
அதிர்ந்து அரற்றியவர்களின் தொகை இங்கு மிகக் குறைவேயாம்.
நிதானமாய் உண்டு, உறங்கியபின்,
இறந்தது அவர்தானா? என்று தமக்குள் பட்டிமண்டபங்கள் நடத்தியதோடு,
அவர்தம் தலைமைப்பற்று தளர்ந்து போயிற்று.
இதுவரை எமது போராட்டத்திற்காக,
தமிழ் நாட்டில் தீக்குளித்து இறந்தவர்களின் தொகை பலவாய் இருக்க,
நம்நாட்டில் அத்தகு தியாகம் செய்தவர்களைத் தேடிக் காணவேண்டிய
அளவிலேயே இருக்கின்றது.
சுதந்திரத்தை உணர்வாய்க் கொண்டவர்கள் அவர்கள்.
அதையும் புத்திசாலித்தனமாய்ப் பயன்படுத்துபவர்கள் நாங்கள்.
அதுதான் வித்தியாசம்.
போராடி அவர்களால் சுதந்திரம் பெறமுடிந்ததும்,
எங்களால் இதுவரை முடியாமல் இருப்பதுவும் அதனால்த்தான்.
கடுமையான போர்க்காலத்தில் திடீரென ஒருநாள் கொழும்புக்கான பாதை திறக்க,
தப்பினால் காணும் என்று ஓடியவர்களே பின்னர் அங்கு நின்று புரட்சிக் கொடி பிடித்தார்கள்.
நம்மவரின் ஆதரவுக்கும் காரணம் இல்லை.
எதிர்ப்புக்கும் காரணம் இல்லை.
எப்படி நம் இனம் உருப்படும்?

✠✠✠✠✠✠

போர் முடிந்துவிட்ட இன்றைய சூழ்நிலையிலும்,
பலரும் கடும் தேசப்பற்றைப் பற்றிப் பேசுகிறார்கள்.
புலிகளோடு முரண்பட்ட அத்தனை பேரையும்,
'துரோகிகள்' என்று முத்திரை குத்தி மகிழ்கிறார்கள்.
எந்தப் பேரினவாதக் கட்சிகள் எம்மை இதுவரை காலமும் அடக்கினவோ,
அந்தக் கட்சிகளின் சார்பாக இன்றும் நம்மவரில் சிலர்,
எம் மக்களின் வாக்குப்பலத்தோடு பாராளுமன்றில் நம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிற்பதும்,
அவர்கள் பின்னால் நம்மக்கள் தம் தேவைக்காக ஓடுவதுமே,
நம் இனத்தின் பொய்ம்மைச் சுதந்திரப் பற்றுக்காம்  சான்றுகள்.

✠✠✠✠✠✠

தலைவர்களும் பொய்ம்மையின் பிடியில்,
மக்களும் பொய்மையின் பிடியில்,
இந்நிலையில் எப்படி இனம் உருப்படும்?
பொய்மையிலிருந்து நன்மை எப்படி விளையும்?
நாம் மாறத் தயாராகாத வரையில், நம் அடிமைத்தனம் மாறப்போவதில்லை.
தலை, தலையாய் அடித்துப் பலதரமாய்ச் சொல்லிவிட்டேன்.
இன்றைய பிழைகளால் பாதிக்கப்படப்போவது நாளைய தலைமுறையே.
அதனால் நாளைய தலைமுறையேனும் தம் நிலைபற்றிக் கவலைப்படவேண்டாமா?
கவலைப்படுவார்கள் எனும் நம்பிக்கையில்த்தான் இத்தொடரை எழுதத் தொடங்குகிறேன்.

✠✠✠✠✠✠

ஜனாதிபதித் தேர்தல் வரப்போகிறது.
பேரினத்தார் மத்தியிலும் பிளவுகள் விரிவுற்று இருக்கின்றன.
ஐம்பது சதவீத வாக்கினைப் பெற,
வரப்போகும் எந்த ஜனாதிபதிக்கும்,
சிறுபான்மை இனத்தாரின் ஆதரவு தேவைப்படும் என,
அரசியல் அவதானிகள் அடித்துக் கூறுகின்றனர்.
நாம் திட்டமிடாமல், ராயதந்திரம் ஏதும் செய்யாமல்,
இறையருளால் 'வாய்ப்புப் பந்து' மீண்டும் ஒருதரம் நம் காலடிக்கு வருகிறது.
சந்தர்ப்பத்தை ஆண்டவன் எத்தனை தரம்தான் தருவான்.
திரும்பத் திரும்ப வாய்ப்புக்களைப் பயன்படுத்தாமல்,
மூடர்களாய் வரலாற்றில் முடங்கப் போகிறோமா?
அல்லது இம்முறையேனும் விழித்தெழப் போகிறோமா?
இதுதான் கேள்வி.
தலைமை, மக்கள் என இருசாராரையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.
தமிழர்களின் தலைமை தம்மிடம்தான் என்று உரைத்து நிற்கும்,
கட்சிகள் அனைத்திடமும் இக்கேள்வி சமர்ப்பணம்.

✠✠✠✠✠✠
அவர்கள் பதில் சொல்கிறார்களோ இல்லையோ அது அவர்களின் இஷ்டம்.
ஆனால் சில விடயங்கள் பற்றி நாம் ஆராயவேண்டியே இருக்கிறது.
இன்றைய நிலையில் நம் மத்தியில் ஊடாடும் கட்சிகளின் நிலை என்ன?
போர் முடிந்த கடந்த பத்தாண்டுகளில் அவர்களின் சாதனைகள் என்ன? சறுக்கல்கள் என்ன?
இனி அவர்களிடம் ஏற்படவேண்டிய மாற்றங்கள் என்ன?
இன நன்மை நோக்கி அவர்கள் முன்னெடுக்கவேண்டிய விடயங்கள் என்ன?
இவை பற்றியெல்லாம் மனதில் வரும் எண்ணங்களை எழுதலாம் என்று எண்ணியிருக்கிறேன்.
அடுத்தவாரம் என் ஆய்வு கூட்டமைப்பினரைப் பற்றியதாய் இருக்கும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.