குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 12 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

தமிழில் அயற்சொற்களைக் கலந்தால் தமிழ் வளரும் என்பவர்... தமிழ்நலம் கருதுபவராகார் என்பதே வெளிப்படை.

02.08.2019-கடகத்திங்கள் 17 .தி.ஆ 2050- தமிழில் அயற்சொற்களைக் கலந்தால் தமிழ் வளரும் என்பவர்... தமிழ்நலம் கருதுபவராகார் என்பதே வெளிப்படை.தமிழ்மொழிக் காப்பகத்தின் கலைச்சொல் ஆக்கம் குறித்து அன்பர் ஒருவர் அகப்பக்கம் ஒன்றிலும் முகநூலிலும் மிகவும் கவலைப்பட்டு அக்கறை கொண்டு ஒரு கருத்தைப் பதிவிட்டிருந்தார். இது பற்றி விளக்கம் சொல்ல வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு என்பதால் இவ்விளக்கத்தை இங்குத் தருகின்றேன்.  ( தமிழ்மொழிக் காப்பகம் தொடர்பான விளக்கக் கூட்டத்தில் இது பற்றி அவர் கேட்டாரா எனத் தெரியவில்லை. அங்குக் கேட்டிருக்க வேண்டிய ஐயங்களை பொதுவில் வைத்துள்ளார்.. )

“எடுத்துக்காட்டாக ‘கார்’ என்னும் சொல்லைப் பேச்சுமொழியில் ‘காடி’ என்றே பன்னெடுங்காலமாக மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆயினும் அச்சொல் தூய தமிழ்ச்சொல் அல்ல என்று அறிஞர்கள் கருதியதால் ‘மகிழுந்து’ என்னும் புதிய சொல் உருவாக்கப்பட்டது. பாட நூல்களிலும் அச்சொல் இன்று பயன்படுத்தப்படுகிறது. ‘உல்லாசமாக பயணம் செய்ய ஏற்ற ஊர்தி’ அல்லது ‘சொகுசான பயணம் செய்யத்தக்க வாகனம்’ என்ற பொருளைக் கொண்டுதான் ‘மகிழுந்து’ என்ற சொல் உருவாகியுள்ளது. ஆனால் ‘கார்’ எந்த வகையில் மகிழ்ச்சி என்ற மனித உணர்வோடு தொடர்புள்ளது என்பது குழப்பம். கார் பயணம் என்பது பிற வாகனப்பயணம் போலவே ஒரு தொழில்நுட்ப கண்டுபிடிப்பு. அதில் பயணம் செய்யும் மனிதனின் மகிழ்ச்சிக்கும் கவலைக்கும் அந்த வாகனம் எப்படி பொறுபாகிறது? அல்லது கார் பயணம் என்பதே மகிழ்ச்சியானதுதானா? ‘இறப்பு வீட்டுக்கு மகிழுந்தில் சென்றேன்’ என்றோ ‘ விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவனை மகிழுந்தில் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்’ என்றோ எழுதுவது எத்தனை முரண்?”

கார் என்பதற்குத் தமிழில் மகிழுந்து என அழைப்பது குறித்து நாசுக்கான பகடியை இவர் செய்துள்ளார் என அறிகின்றேன்.

முதலில் கார் எதற்குக் கண்டு பிடிக்கப் பட்டது. மாந்தனின் செல்கையை விரைவுபடுத்துவதற்காக 
மாந்தனால் உருவாக்கப்பட்ட ஓர் உந்து பொறியே காடி கார் என்பது. காடியும் காரும் தமிழல்ல என்பது அனைவரும் அறிந்தது. காடி காரை ஆங்கிலத்தில் pleasure car என்றே வழங்கினர். ஒருவர் சொகுசு வண்டி வைத்திருந்தால் அந்த வண்டியைத் துன்பியல் நிகழ்வுக்கு பயன்படுத்தக் கூடாது என ஏதும் விதி உண்டா. இறப்பு என்பது திட்டமிட்டு நிகழ்வதன்று.. மகிழ்ச்சியாக செல்பவர் மகிழ்ச்சியினிடையே கூட இறக்கலாம்.. அப்படியென்றால் மகிழ்ச்சியாக செயல்படக் கூடாது எனச் சொல்லிவிட முடியுமா?

Pleasure car என்பதையே மகிழுந்து எனத் தமிழறிஞர்கள் பெயர்சூட்டி அழைத்தனர். நோக்கம் ஏந்தாக இருக்க மகிழ்ச்சியாக செல்கை அமைதலுக்காகவே இவ்வகை உந்துகள் உருவாக்கப்பட்டன. 
அமரரூர்தி என இறந்தோர்க்காகச் சிறப்பாக ஓர் ஊர்தி உண்டு . அதனை யாரேனும் பொதுநிலையில் பயன்படுத்துவதில்லை. மருத்துவ ஊர்தியையும் யாரும் பொது நிலையில் பயன்படுத்துவதில்லை. அவற்றின் பயன்பாடு சிறப்புக்குரியன.

ஆனால் மகிழுந்து ஏந்துக்காக பயன்படுத்தப்படுவது. அதன் பயன்பாடு மகிழ்ச்சியும் ஏந்தும் சார்ந்ததாக இருப்பது. இதனைத் திட்டமிடப்படாத துன்பியல் நிகழ்ச்சிக்கு சடுத்தத் தேவை கருதியே பயன்படுத்துகிறோமே ஒழிய துன்ப நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இவ்வூர்தியை யாரும் பயன்படுத்துவதில்லை. 
எனவே மகிழுந்து எனப் பெயர் வைத்துக்கொண்டு துன்புணர்வின் போதும் பயன்படுத்துகிறார்களே என வினவுவதில் எந்த அறிவாளித்தனமுமில்லை.

இறப்பு வீட்டுக்கு உங்களிடம் இருக்கின்ற ஊர்தியை பயன்படுத்தித்தான் செல்ல வேண்டும். அதற்கென்று தனி ஊர்தியையா வீட்டில் வாங்கி வைத்துக்கொள்ள முடியும். இஃது இறப்பு வீட்டுக்கு மட்டும் செல்லும் இறப்புந்து எனப் பெயர் வைக்க முடியுமா?

பல்வேறு பயன்பாட்டுக்காக பல்வேறு ஊர்திகள் உந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது அந்தந்தத் தேவைகளின் அடிப்படையில்தான் பெயர் வைப்பர். எனவே மகிழ்ச்சியை நோக்கிய வாழ்வுப்பாதையில் ஆக்ககரமான உணர்வோடு மகிழுந்து எனச் சொல்லமைத்ததில் ஒரு பிழையுமில்லை.

தமிழில்மட்டும் பல்வேறு அறிவியல் சான்று விளக்கங்களை கேட்க விழையும் இவர் போன்ற அன்பர்கள் ஆங்கிலத்தில் இடப்பட்ட பெயரைப்பற்றி வாயே திறக்காதது ஏன்?

Mouse என்பதற்கு எலியன் என வைத்து விட்டனர் அது பொருந்ததாது.. எனக் கூறும் இவ்வன்பர் mouse என ஏன் ஆங்கிலத்தில் பெயர் வைத்தான் என்பது குறித்து வினா எழுப்பாதது ஏன்?

ஆங்கிலத்தில் வைக்கப்பட்டது இவர் வினாப் படி பொருத்தமா? பொருத்தமில்லையென்றால் ஆங்கிலத்தில் எந்தக் கேள்வியும் இல்லாமல் பயன்படுத்துகிறோமே...

எலியைப் போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்டதால் அந்தக் கருவியை ஆங்கிலன்தான் mouse எனப் பெயர் வைத்து அழைத்தான். இவர் சொல்லும் எந்த நுட்பச்சொல்லும் பயன்படுத்தப்படவில்லை.

ஒரு சொல்லை ஆராய்கின்ற வேளை அதன் வேர், மூலம் , வரலாறு முதலானவற்றை ஆராயத்தான் வேண்டும் . அப்படி ஆராய்ந்தால்தான் சொற்கள் அமைக்கப்பட்டதற்கான கரணியம் புரியும். ஆங்கிலத்தில் பொருத்தமே இல்லாமல் பல நுட்பவியல் சொற்கள் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். தமிழில் பெரும்பாலும் பொருத்தப்பாடு உடைய சொல்லாகவே இருக்கும். காலத் தேவை கருதி அமைக்கப்படும் ஒரு சொல் பிற்காலத்தில் மேலும் ஆராய்கையில் மாற்றப்படலாம். அல்லது அதே பொருள் தரும் மற்றொரு பொருத்தப்பாடுடைய சொல் அமைக்கப்படலாம். இப்படியான பல சொற்கள் உள.

வேர்ப்பொருள் அறிந்து வைக்கப்படும் பொழுது சொற்கள் மேலும் பொருத்தப்பாடுடையதாக விளங்கும்.

இவரின் மற்றொரு நச்சுக் கருத்து....

“இதேப் போன்று தமிழ் பண்பாட்டிற்கு வெளியே இருந்து வந்த பல சொற்களையும் தனித்தமிழ்ச் சொற்களில் குறிப்பிடும் முனைப்பும் அதிகம் காணப்படுகின்றது. தமிழ் பண்பாடு அறியா உணவுகளையும் உடைகளையும் மூலமொழியில் குறிப்பிடுவதே ஏற்பானதும் இலகுவானதுமாகும். உலக மொழிகள் எல்லாம் இந்த நடைமுறையையே பின்பற்றுகின்றன. அணிசல், இன்னட்டு, பனிக்கூழ் போன்ற அண்மையகால தனித்தமிழ்சொற்கள் தமிழை மக்களிடமிருந்து அன்னியப்படுத்துகின்றன. ஆகவே மக்கள் பேச்சுவழக்கில் பயன்படுத்தும் பிறமொழி சொற்களுக்கு மாற்றாக மெனக்கெட்டு சிந்தித்து உருவாக்கப்படும் தூய தமிழ்ச்சொற்கள் அனைத்தும் மிகப்பொருத்தமானவையாக அமைந்துவிடுவதில்லை என்பதையும் நாம் சிந்தனையில் கொள்வது நன்று.”

உலகத்தில் பல்வேறு இனமக்கள் வாழ்கின்றனர். பல்வேறு பண்பாட்டுத் தாக்கம் நிகழ்வது இயல்பு. மொழியில் இத்தகு பண்பாட்டு தாக்கம் ஏற்படுகின்ற வேளை அத்தகு பண்பாட்டுச் சொற்களைத் தமிழ்மொழி மரபுக்கு ஏற்ப மாற்றி அமைத்துக்கொள்வதுதான் மொழி நலத்திற்கு நன்றாகுமே ஒழிய அவற்றை அப்படியே ம தமிழில் எடுத்தாள்வது அதன் தூய்மையைத் தனித்தன்மையைக் கெடுக்கும் ; சீரழிக்கும் என்பது வெள்ளிடைமலையாகும்.

குதிரை, வான்கோழி, உருளைக்கிழங்கு, வேர்க்கடலை, சீனி முதலானவை தமிழகத்துப் பொருள்களல்ல. அவை அயகலகத்திலிருந்து வந்தவை. பண்டைய தமிழ்மக்கள் இவற்றை அப்படியே ஏற்காமல் தமிழ்மரபிற்கு ஏற்ப சொல்லமைத்து வழங்கினர்.

அதே தமிழ்மரபு காப்பு அடிப்படையிலேயே அயல்மொழி பண்பாட்டுப் பொருள்களை நாம் தமிழில் சொல்லமைத்து வழங்குகின்றோம். அதற்கு அயலவரின் பொருள் விளக்கங்களும் அந்தப் பொருள்களின் இயல்புத் தன்மைகளும் ஆராயப்பெற்றே சொல்லமைக்கப்பட்டுள்ளன. தமிழ்ப்பற்றுடையவராயின், தமிழ்நலம் கருதுபவராயின் தமிழில் சொல்லமைத்து அழைக்க வேண்டும் என்ற எண்ணமே கொள்வாரேயொழிய அயற்சொற்களை அப்படியே எடுத்தாள வேண்டும் என ஒரு போதும் சொல்லமாட்டார்.

இவ்வன்பர் கூறுவதுபோல் சொற்பொருத்தமில்லாது போனால் பொருத்தமான ஒரு சொல்லமைக்க வேண்டுமேயொழிய தமிழில் சொல்லமைக்கவே கூடாது என்பது இவர் போன்றோருக்கு தமிழ்ப்பற்றை விட அயல்பற்றே மிகுந்திருக்கின்றது என்பதையே காட்டுகின்றது.

இவரின் கூற்றில் இன்னொரு வேடிக்கை, பனிக்கூழ் , இன்னட்டு, அணிச்சல் முதலான தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துவதால் தமிழ்மொழியிலிருந்து தமிழ்மக்கள் அயன்மைப்பட்டு விடுவராம்.

இயல்பு மாந்தர் யாராவது இப்படிக் குறிப்பரா? பனிக்கூழ் தமிழா ice cream தமிழா? 
தமிழ்ச்சொல் தமிழர்க்கு அயலா? ஆங்கிலச்சொல் தமிழுக்கு அயலா? தமிழ்ச்சொல்லைத் தமிழர்க்கு அயன்மை என்பது பேதைமையிலும் பேதைமை அல்லவா? தமிழன் அயற்சொற்களைத் தமிழில் கலக்கக் கலக்க தமிழிலிருந்து அயன்மைப்பட்டுப் போவானே யொழிய நற்றமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துவதாலா அயன்மைப்பட்டுப்போவான்? 
என்ன கொடுமை?

“ஒரு மொழியின் இடர் என்பது அதில் கலந்துவரும் பிறமொழி சொற்களால் மட்டும் நிகழும் ஒன்றல்ல. வழக்கத்தில் உள்ள சொற்களை உரியமுறையில் உள்வாங்கிக் கொள்ளாமையும் ஒரு குறைதான். தக்கமுறையில் பிறமொழி சொற்களை உள்வாங்கும் மொழி எளிதில் தன்னை விரிவுபடுத்திக் கொள்கிறது. மக்களின் பயன்பாட்டில் கலந்துவிட்ட சொற்களை நீக்கி புதிய சொற்களைப் புகுத்துவதை மட்டும் தமிழ் மொழி கலைச்சொல் உருவாக்க பணியாக கொள்வது நன்மை பயக்காது. மொழித் தூய்மைவாதம் மொழி வளர்ச்சிக்கான செயல்பாடல்ல. ஆகவே மலேசியத் தமிழ் மொழிக் காப்பகம் புதிய கலைச்சொல் உருவாக்கத்துக்குப் பொறுப்பேற்கும் பட்சத்தில், தேவையான அறிவியல் கலைச்சொற்களை மட்டும் உருவாக்குவதோடு மக்களின் பேச்சுவழக்கில் நிலைபெற்றுவிட்ட பிற மொழிச் சொற்களை புதிய தமிழ்ச்சொற்களாக வடிவமைத்துக் கொள்ளும் இலக்கண முறைகளில் கவனம் செலுத்துதல் சிறப்பாகும்”.

இது இவரின் மற்றொரு வேடிக்கையான முரண்.....

“ஒரு மொழியின் இடர் என்பது அதில் கலந்துவரும் பிறமொழி சொற்களால் மட்டும் நிகழும் ஒன்றல்ல.”

பிறமொழி சொற்கள் கலந்தால் இடர்வரும் என்பது இங்குக் கருத்தாக வைக்கப்பட்டுள்ளது.

அப்படியென்றால் பிறமொழி கலக்கக் கூடாது என்பதுதானே பொருள். 
ஆனால் உடனே தாம் கூறிய அதே கருத்தை மறுக்கும் வகையில்

அதுமட்டுமல்ல. இடரல்ல...

“வழக்கத்தில் உள்ள சொற்களை உரியமுறையில் உள்வாங்கிக் கொள்ளாமையும் ஒரு குறைதான். “

எனக் குழப்பமான ஒரு சிந்தனையை முன்வைக்கிறார். வழக்கில் உள்ள பிறமொழிச் சொற்களை உள்வாங்கிக் கொண்டு தமிழில் பயன்படுத்த வேண்டும் என்பது இதன் பொருளாகும்.

அப்படியாயின் முதலில் பிறமொழிச்சொற்களை கலப்பதும் இடர்தான் எனக் கூறியது ஏன்? கலப்பதே இடரேயாயின் அதை எப்படி வழக்குச் சொல்லாகக் கருதி தமிழில் உள்வாங்கிக்கொள்ள முடியும்.

கலப்பதே இடராயின் எப்படி உள்வாங்கிக் கொள்ள முடியும்? மொழிக்கலப்பில் வழக்குச்சொல்லைக் கலக்கலாம் , வேறு சொற்களைக் கலக்கக் கூடாது என விதி உண்டா? கலப்பென்றால் எல்லாம் கலப்புதானே?

இப்படி எத்தனையோ அயற்சொற்களைப் பலப்பட்டறையாக கலந்துதானே இவர் போன்றோர் பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.

“ தக்கமுறையில் பிறமொழி சொற்களை உள்வாங்கும் மொழி எளிதில் தன்னை விரிவுபடுத்திக் கொள்கிறது.”

அது என்ன தக்க முறையில் உள்வாங்குவது? தகாத முறையில் உள்வாங்குவது? உள்வாங்குவதே பிழையென்றால் தக்க முறை என்று உண்டா? பிறமொழிக் கலப்பு தமிழ் போன்ற ஒரு மொழியைச் சிதைக்கும் என்பது வரலாறாய் இருக்கும் வேளை இதில் தக்க முறையிலான மொழிக் கலப்பு எப்படித் தமிழை விரிவுபடுத்தும்? 
இது ஒன்றுக்கும் உதவாத அடிப்படையில்லாத முடக்கருத்தாகும்.

ஆங்கிலத்தை கொலை மொழி என்றே தாய்மொழிக் காப்போர் இயக்கம் சொல்கின்றது. 
தாய்மொழி நாள் என ஒரு நாளை ஆண்டுதோறும் நிகழ்த்திக் கொண்டு மெல்ல நஞ்சேற்றலாம் என்பது போல தக்கவாறு மொழிக்கலப்பு செய்து தமிழைக் கொல்லலாம் என இவர் கூற வருகிறார் போலும்..,

முகநூல், புலனம், போலும் செயலிகள், தனிப்பெயர்களாயினும் தமிழ்மரபுக்கு ஏற்ப இவற்றுக்கும் தமிழ்ப்பெயர் அமைத்து வழங்குவதே தமிழுக்கு நலம் சேர்ப்பதாகும். அல்லாக்கால் இவைபோன்ற ஆயிரக்கணக்கான செயலிகள் தோன்றி தமிழைச் சிதைக்கும்; தமிழை அழிக்கும்.

தமிழ் போன்ற தொன்மை மிகுந்த இலக்கண இலக்கிய வளம் மிகுந்த மொழியில் எந்த வடிவிலும் அயற்சொற்கள் கலப்பதை உண்மை தமிழ்ப்பற்றாளரும் தமிழ்ச்சான்றோரும் ஏற்றுக்கொண்டதில்லை. தமிழ்மரபுக்கும் அது ஒவ்வாது. அவ்வாறு தமிழில் அயற்சொற்களைக் கலந்தால் தமிழ் வளரும் என்பவர்... தமிழ்நலம் கருதுபவராகார் என்பதே வெளிப்படை.

இரா . திருமாவளவன்.

தொடரும்...

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.