குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

உலக மக்கள் தொகை நாள் : அழிவின் விளிம்பில் ஈழத்தமிழினம்!

13.07.2019-உலக மக்கள் தொகை நாள் ( World Population Day 11-07-2019 ). மக்கள்தொகையால் வரக் கூடிய பிரச்சினைகள் குறித்து ஐநா மற்றும் மனிதவள அமைப்புக்கள் கவனம் செலுத்தும் இந்த நாளில் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும், ஈழத்தமிழர்களாகிய நாம் அழிவின் விளிம்பில் இருக்கிறோம் என்று..?

 

2009 பாரிய இனஅழிப்பை அடுத்து கொல்லப்பட்டவர்கள், ஊனமுற்றவர்கள், விதவைகள், அரைவிதவைகள் ( Half widows) என்று கிட்டத்தட்ட எமது இனம் முடங்கிவிட்டது.

தொடர்ந்து நடைபெறும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பில் எமது இனப்பரம்பலும் சனத்தொகையும் தான் சிங்களத்தால் நுட்பமாக குறிவைக்கப்பட்டுள்ளது.

இதற்காக இனஅழிப்பு அரசு கட்டாய கருத்தடை தொடக்கம் காணாமல்போனவர்கள் குறித்து எந்த பதிலும் தராது எமது இனப்பெண்களின் பெரும்பகுதியை "அரைவிதவைகள் " என்ற சமூகநிலைக்குள் வைத்து தொடர்ந்து பேணுவதால் எமது பிறப்பு வீதம் முற்றாக வீழ்ச்சியடைந்து வருகிறது.

யாழ் பல்கலையில் ‘தமிழரின் எதிர்காலம்: ஒரு குடித்தொகையியல் நோக்கு’ என்ற கருத்தரங்கில் உரையாற்றிய சமுதாய மருத்துவநிபுணர் வைத்தியகலாநிதி முரளி வல்லிபுரநாதன் இலங்கையில் தமிழினம் அழிவு அபாயத்தை எதிர் நோக்குவதாக கடந்தகால தமிழர் குடித்தொகை வளர்ச்சிவீதத்தையும் ஏனைய தரவுகளையும் அடிப்படையாகக்கொண்டு ஆதாரத்துடன் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

ஒரு இனத்தின் எதிர்காலம் அவர்களின் கருவளத்திலேயே பிரதானமாக தங்கி இருக்கிறது. ஒரு இனம் தன்னைதக்கவைத்துக்கொள்ள வேண்டுமெனின் அவ்வினத்தின் மொத்தகருவள வீதம் 2:1 இலும் அதிகமாக இருக்க வேண்டும். அதாவது சராசரியாக ஒரு பெண் 2 பிள்ளைகளுக்கு மேலாக 2:1 அளவில் பெற்றால் மாத்திரமே அதை மாற்றீடு செய்யும் கருவளவீதம் அதாவது குடித்தொகை குறையாமல் இருக்கும் ஒருநிலை என்று கூறமுடியும்.

ஏனெனில் ஒரு குறிப்பிட்ட இனத்தில் ஒரு சோடி பெற்றோர் 2 பிள்ளைகளுக்கு அதிகமாக பெறுவரெனில் மாத்திரமே இரு பிள்ளைகள் ஆவது இளம்வயதை அடைந்து குடித்தொகையை தக்கவைக்கமுடியும்.

ஆனால் தொடரும் சிங்களத்தின் கட்டமைக்கப்ட்ட இனஅழிப்பு இந்த சமநிலையை பேணவிடாது தடுத்து எமது இனப்பரம்பலின் சமநிலையை குலைக்கிறது.

அரசியல் தீர்வுகள் குறித்து நாம் விவாதிப்பதற்கு முன்னால் எமது இருப்பை உறுதி செய்ய வேண்டியது முக்கியம்.

இன்றைய நாளில் நாம் உணர வேண்டிய மிக முக்கியமான அம்சம் இதுதான்.

தமிழ் அரசியல்வாதிகள் அறிவுசார் சமூகத்தையும் சிவில் சமூகத்தையும் இணைத்து உடனடியாக மக்களுக்கு கட்டமைக்கப்பட்டஇனஅழிப்பு மற்றும் இன்பரம்பல் குறித்த புரிதல்களை பயிற்சிப்பட்டறைகள், கருத்தரங்குள் மூலம் தொடர்ச்சியாக தெளிவுபடுத்த வேண்டும்.

இல்லையேல் நமது அழிவுக்கு நாமே காரணமானவர்களாக இருந்தோம் என்ற வரலாறே எஞ்சும்.

சிந்திப்போம்.. செயற்படுவோம்..