குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆனி(இரட்டை) 7 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

தமிழ் ஒரு சித்தாந்த பகுப்பாய்வு

10.06.2019-தமிழ் என்பது ஒரு மொழியைக் குறிக்கும் சொல். மொழி என்பது மனிதர்கள் தங்களின் கருத்தைத் தெரிவிக்கும் ஊடகம். தோராயமாக 1857ல் தமிழுக்கு, தமிழைச் சொல்லாகவும் மொழியாகவும் உரை எழுதியவர் திரு அருட்பிரகாச வள்ளலார். அந்த உரையில் தமிழ் என்ற சொல்லுக்கு சித்தாந்தப் பதவுரை எழுதியுள்ளார்.

வள்ளலார் ஒரு சித்தர். சித்தர்களுக்கு மொழிப் பாகுபாடு இல்லை. எனவே அவரது சித்தாந்தப் பதவுரையிலும் மற்றும் அவரது பாடல்களிலும் பல வடமொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. எனவே, தற்போது அவர் செய்த தமிழுக்கான உரையைப் புரிந்துகொள்வது மொழி வல்லுனர்களுக்கே சாத்தியம். எனவே இன்றைய தமிழ் மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும்படி, வள்ளலாரின் அடியொற்றி தமிழுக்கான சித்தாந்த விளக்க உரையை இச்சிறியவன் எழுதியுள்ளேன். அறிஞர்கள் பொறுத்தருள்க.

ஒரு ஆய்வு என்றால் முதலில் சில சொற்களுக்கு கருத்து விளக்கம் தரப்படவேண்டும். அப்பொழுதுதான் ஆய்வினைப் பிறரால் புரிந்துகொள்ள முடியும். எனவே, சில சொற்களுக்குச் சுருக்க விளக்கம் தருகிறேன். இதைக் கருதுகோள் என்றும் சொல்லலாம்.

சித்தாந்தம்: நிரூபிக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் சொல்லப்பட்ட கோட்பாடுகள் தெளிவாக விளங்குபவை.

வேதாந்தம்: அனுபவ அடிப்படையிலும், நம்பிக்கையிலும், அனுமானங்களும், புராணங்களின் அடிப்படையிலும் சொல்லப்படும் கோட்பாடுகள். சில நேரங்களில் புரிந்துகொள்வதற்கு அரிதானது.

சித்தாந்த உரை: ஒரு சொல்லுக்கோ, வாக்கியத்திற்கோ, பாடலுக்கோ சித்தாந்த அடிப்படையில் எழுதப்படும் விளக்கம் சித்தாந்த உரை. இங்கு ஆன்மீக சித்தாந்தத்தின் அடிப்படையில் விளக்கம் தரப்படுகிறது.

தாய்மொழி என்பது, பிறந்த குழந்தைக்கு, தாய் பேசும் மொழியில் கருத்தைப் பகிர்ந்தமையால் தாய்மொழியானது. குழ்ந்தையும் தனது தாய் பேசிய மொழியிலேயே அதன் கருத்தைப் பகிர்ந்தது. எனவே, அந்த மொழி தாய்மொழியானது.

தந்தை மொழி என்பது, தாய் என்ற ஒன்று இருந்தால் தந்தையும் இருந்தாகவேண்டும். இந்த வகையிலேயே தமிழ்மொழியின் எழுத்து, சொல், கருத்துகள் உலகின் அனைத்து மொழிகளிலும் பங்குபெறுவதால், தமிழ் தந்தை மொழியாக அறியப்படுகிறது. இக்கருத்தை வள்ளலார் தெரிவித்ததாக செய்திகள் உள்ளன. என்வே, சித்தர்கள் கோட்பாட்டின்படி, யாதும் ஊரே, யாவரும் கேளிர் ஆவர். மொழிபேதம் பேசுவது ஒருவகைத் தீண்டாமையாகும்.

தமிழ் என்ற சொல்லுக்கு எண்ணற்ற விளக்கங்கள் பலராலும் கொடுக்கப்பட்டு உள்ளது. ஒரு சொல் அல்லது வாக்கியம் அல்லது பாடலுக்கு விளக்கம் தருவதற்கு பதவுரை, பொழிப்புரை, கருத்துரை மற்றும் விரிவுரை ஆகிய உரைகள் உண்டு. இங்கு அவை அனைத்தையும் இணைத்து தமிழுக்குச் சித்தாந்த உரை காண்போம்.

தமிழ்=இனிமையானது.

தமிழ் என்ற சொல்லுக்கு நேரடியான பொருள் இனிமை என்பதாகும். தமிழ் மொழியில் கருத்துகள் பேசவும் எழுதவும் எளிமையாக ஓசைநயத்துடன் இனிமையாக உள்ளது. அடிவயிற்றிலோ முகத்திலோ தலையிலோ அழுத்தம் கொடுத்து இடர்பாடுடன் பேசவேண்டாம். கருத்துகளை இயல்பாக இனிமையாகப் பேசக்கூடிய மொழி.

தமிழ்- ஒப்பற்றது.

தமிழ் என்ற சொல்லை தமி+ழ் எனப் பிரிக்கலாம். தமி என்றால் ஒப்பற்றது என்று பொருள். சிறப்பு ழகரமான ழ் என்ற எழுத்தைக் கொண்டுள்ளதால் ஒப்பற்றது. ழ் என்பதை உச்சரிக்க நாவை மடித்து, மேல் அண்ணத்தைத் தொட்டு உள்ளே செலுத்தவேண்டும். இவ்விதம் செய்வதை யோக மார்க்கத்தில் கேசரி முத்திரை என்பார்கள். இத கேசரி முத்திரை மனிதர்களுக்கு மரணத்தை வெல்லும் சக்தியைத் தருகிறது. ஒரு மொழியின் பெயரே மரணத்தை வெல்லும் ஒப்பற்ற தன்மை கொண்டது. சிறப்பு ழகரம் பெற்ற மொழி. தமிழ் என்ற சொல்லே மரணத்தை வெல்லும் தகுதி பெற்றது. சித்தர்களின் சாகாக்கல்வி என்னும். தொழில்நுட்பம் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளதால் தமிழ் ஓப்பற்றது.

தமிழ்- ஓங்கார வடிவானதும் இறைவனுடன் ஒன்றும் மந்திர மொழி.

முதலில் ஓங்காரத்தின் அறிவியலைப் பார்ப்போம். இப்பிரபஞ்சம் ஓம் எனும் பெருவெடிப்பில் பிறந்தது என்றும் இந்த பெருவெடிப்பு ஒளியையும் ஓசையையும் உருவாக்கியது என்பதும் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்கள் கண்டுபிடித்தது. இதுவே இன்று பிக்பாங் என்ற பெருவெடிப்புக் கொள்கையாக பிரபஞ்ச உற்பத்திக் கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. இப்பெருவெடிப்பில் உருவான ஒலியே ஓங்காரம். இதுவே பூமியின் சுழற்சியில் உற்பத்தியாகும் ஒலி என்று இன்றைய அறிவியல் சொல்கிறது. ஓங்காரத்தைப் பிரித்தால் அ என ஆரம்பித்து ம் என் முடியும். அகரத்தையும் ‘ம்’ ஐயும் இணக்கும் ஓசை ‘உ’. என்வே, ஓம்= அ உ ம்.

இதுவே அனைத்து மந்திரங்களுக்கும் அடிப்படை மந்திரம். அ என்பது ஆறு நொடியும் உ என்பது இரண்டு நொடியும், ம் என்பது எட்டு நொடியும் தொடராக உச்சரிக்கவேண்டும். இந்த அ உ ம் ஓசை அலைவரிசை பூமியின் ஓசை அலைவரிசையுடன் இணைந்து ஒலிக்குவிப்பை ஏற்படுத்தி அளப்பரிய பிரபஞ்ச உயிர்சக்தியை ஈர்த்து நம் உடலுக்கும்நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் கொடுக்கிறது. இந்த ஓங்காரத்தைப் போன்றே தமிழென்பதை த்+அ=த என்று ஆறுநொடியும் ம்+இ=மி என இரண்டுநொடியும் ழ் என நாவை மடித்து எட்டு நொடிகளும் தொடர்ந்து உச்சரித்துப் பாருங்கள். இப்பொழுது ஓம் என்ற உச்சரிப்பு போன்றே த-மி-ழ் உச்சரிப்பு இருக்கும். எனவே ஓம் என்ற மந்திர மொழி ஆகும்.

தமிழ் என உச்சரிக்கும்போது நாக்கு மடிக்கப்பட்டு மூச்சுக்காற்று தலைக்குள் அதிர்வலைகளை உருவாக்கும். அப்பொழுது உள்நாக்கிற்குமேல் உள்ள பத்தாம் வாசல் திறக்க வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழ் உச்சரிப்பும் ஓம் உச்சரிப்பைப்போல் பூமியின் அதிர்வலைகளுடன் ஒன்றி அளப்பரிய பிரபஞ்ச சக்தியை நமக்கு ஈர்த்துக் கொடுக்கும். இளமையும் ஆயுளும் கூடும்.

எனவே தமிழ் ஓங்காரவடிவாக இறைவனுடன் ஒன்றும் உயிர்சக்தியைத் தருகிறது. இங்லிஷ், இந்தி மற்றும் பிறமொழி பெயர்களை உச்சரித்துப் பாருங்கள். ஓமின் உயிர்ப்பு ஓசை இருக்காது. இதுவே தமிழின் ஒப்பற்ற இறைசக்தி தன்மையாகும் எனவே தமிழ் இறைவனை அணுக சிறந்த மொழியாகும். ஆகையால், திருமூலர் திருமந்திரத்தில் “என்னை நன்றாய் இறைவன் படைத்தான், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என்றார்.

தமிழ்- அறிவியல்மொழி-

ஒப்பற்ற சாகாக்கல்வியை உலகிற்குத் தந்தது. மனிதன் பிறப்பிலேயே மரணிக்கும் தன்மை பெற்றவன். ஆனால் தமிழ் சித்தர்கள் மரணத்தை வெல்லவும் மரணத்தைத் தள்ளிப் போட்டு இளமையுடன் நீண்ட ஆயுளுடன், கூர்மையான அறிவுடன் வாழக்கூடிய சாகாக்கல்வி என்ற அறிவியலை தமிழ் சித்தர்கள் பல இலட்சம் பாடல்கள் மூலம் சொல்லி உள்ளார்கள். இதைத்தவிர வேதியியல்,பிரபஞ்சப்பயணம், யோகம், ஞானம் ஆகிய அறிவியல் முடிவுகளையும் பல இலட்சம் பாடல்களின் மூலம் சொல்லி உள்ளார்கள். இதைச் சித்தர் இலக்கியம் என்னும் தமிழ் அறிவியல் இலக்கியங்கள் விளக்குகின்றன.

இன்றைய விஞ்ஞான ஆய்வில் உள்ள பிரபஞ்ச உற்பத்தி என்ற பிக்பாங் கோட்பாடு கூறப்பட்டுள்ளது. ஸ்டேம் செல் கோட்பாடை நாதவிந்து எனவும் கிழவன் பாலன் ஆதல் எனவும் பதிவு செய்துள்ளார்கள். ஜீன் நோய்ளை கன்மம் எனவும், அதைப் போக்கும் முறை களையும் கூறி உள்ளார்கள் இது அறிவியலை மிஞ்சியதாகும். கவுனம் பாய்தல் என்ற பிரபஞ்ச பயணத்தை சொன்ன மொழி சித்த மருத்துவம், கப்பல் கட்டுதல், கட்டிட பொறியியல், மின்சார உற்பத்தி, வான ஊர்தி கட்டுதல், வானசாஸ்திரம், சோதிடம், அஸ்டகர்மம், சிற்பம், ஓவியம், நடனம் ஆகிய 64 கலைகளும் தமிழில் உள்ளது.. எனவே, தமிழானது அறிவியல் கருத்துகள் செறிந்த அறிவியல் மொழி. பிற வகை மருத்துவம், ஆன்மீகம், சட்டம் மற்றும் பல அறிவியல் நூல்கள் தமிழுக்கு அழகு செய்கின்றன. கணினிப்பொறியியல், தவிர பலநுட்ப அறிவியலும் தமிழுக்கு உயர் தகுதி தருகின்றன. தமிழ்பல்கைக்கழகம்,சித்த மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆகியவையும் தமிழுக்குத் தொண்டு செய்யும் பெரும்பேறு பெற்றவை. தற்போது ஊடக அறிவியலும், தொழில்நுட்பமும், அழகு சாதனம், நெகிழி, விண்வெளி எனப் பல துறைகளிலும் எண்ணிலா ஆய்வுகலும் புத்தகங்களும் தமிழின் இளமையைக் காட்டுபவை ஆகும்.

தமிழ், தொன்மையான அகம், புறம் சமயம், இயற்கை சார்ந்த இலக்கண இலக்கியங்கள் கொண்டமொழி:

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, முதல் சங்க காலத்தில் தமிழில் இலக்கணம் வகுத்தவர் முருகன். அதன்பின் அகத்தியரும் அதன்பின் தொல்காப்பியரும் பிறரும் இலக்கணம் செய்தனர். சாகாக்கல்வி என்ற சித்தர் இலக்கியம் படைத்தவர் முருகன். அதன்பின் பலவித இலக்கியங்கள், புராணங்கள்,இதிகாசங்கள், சைவ, வைணவ, சமண, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள் தோன்றின. இன்றைய ஹைக்கூ,, புதுக்கவிதைகள், நாட்டுப்புறப்படல்கள், திரைப்படப் பாடல்கள்வரை தமிழில் பலதரப்பட்ட இலக்கியங்கள் படைக்கப்பட்டு, செறிவூட்டப்பட்டப்பட்ட மொழி இங்கு சித்தாந்த உரை எழுத முற்பட்டதால் தமிழில் உள்ள நூல்கள் குறித்து சுருக்கமாகத் தொட்டுக்காட்டப்பட்டுள்ளது.

வையகம் வாழ தமிழ் வாழ்க!!

via RK Moorthy