குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

பூநகரி - கல்முனைப் பகுதியில் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டதான தமிழர் குடியிருப்புகள் கண்டுபிடிப்பு

பூநகரி - கல்முனைப் பகுதியில் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டதான தமிழர் குடியிருப்புகள் கண்டுபிடிப்பு - Friday, 17 July 2009 -கலாநிதி புஸ்பரட்ணம் தலைமையில் - யாழ்.பல்கலைக்கழக தொல்லியற் துறை மாணவர்கள் 18 பேர் ஒன்றிணைந்த குழு- பூநகரிப் பகுதியில் தொல்லியல் ஆய்வினை மேற் கொண்டு வருகின்றது. இந்த ஆய்வின் ஒருபகுதியாக, பூநகரி வட்டாரத்திலுள்ள கல்முனைக் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது, 2300 வருடங்களுக்கு முற்பட்டவை என அறுதியிட்டுக் கூறத்தக்க தமிழரின் குடியிருப்புப் பகுதி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. 

முதலில் கல்முனை கிராமத்துக் காட்டுப்பகுதியில் 8x4 அடி நீள, அகலத்தில் அகழ்வினை மேற் கொண்ட இக்குழுவினர் - பண்டைய குடியிருப்புக்குரிய தடங்கள் பரந்து காணப்பட்டமையினால், அகழ்வுக்குரிய அகழ்வுக்குழியினை 16x14 அடி நீள, அகலங்களில் விரிவுபடுத்திக் கொண்டனர்.

இந்த அகழ்வுக் குழியில் - நான்கு வேறுபட்ட மண் அடுக்குகளிலிருந்து, பல்வேறுபட்ட தொல்லியல் சின்னங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மண்ணின் மேற்படையில் - பண்டைய பெண்தெய்வ உருவம் பொறித்த தமிழ் நாணயங்களும், வேறுபட்ட வடிவங்களில் செய்யப்பட்ட மட்பாண்டங்களும், அக்கால மக்கள் பயன்படுத்திய இரும்புக் கருவிகளும், மணிகள், கைவளையல்கள் போன்ற பல சின்னங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.

அவற்றுள் கண்டெடுக்கப்பட்ட நாணயங்களின் தோற்றக்காலம்- கி.மு 3 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையென நாணயவியல் அறிஞர்களால் வரையறை செய்யப்பட்டிருப்பதால், இந்நாணயங்கள் கண்டெடுக்ப்பட்ட கீழ்ப்படையிலுள்ள எச்சங்கள் - 2300 வருடங்களுக்கு முற்பட்டதெனக் கருதப்படுகிறது.

அவற்றின் ஒரு நாணயம்- அகழ்வாய்வு செய்யப்பட்ட குழிக்குள் இருந்து அகழ்வின்போது கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏனைய மூன்று மண்படைகளிலிருந்து பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய திராவிட மக்களின் கறுப்பு, சிவப்பு, நிற மட்பாண்டங்களும்- நரைநிற, தனிக்கறுப்பு, சிவப்பு நிறத்தாலான சட்டிகள், வட்டில்கள், பானைகள், குவளைகள், தட்டில்கள் போன்ற பொருட்களும், அக்கால மக்கள் பயன்படுத்திய இரும்புக் கருவிகளான கொழுகத்தி, ஊசி, மீன்பிடி ஊசி போன்றவையும் சங்கு, சிப்பி போன்ற பொருட்களும், தமிழ் நாடு ஆதிச்சிய நல்லூர் பெருங்கற்கால பண்பாட்டுக்குரிய வேல்வடிவங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாக - பல மட்பாண்டங்களில் குறியீடுகளுடன், 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய தமிழ் எழுத்துக்கள் கிடைக்கப்பட்டமையாகும். அவற்றுள் எழுதப்பட்ட பெயர்களுள் சில, தமிழில் ஆண்மகனைக் குறிக்கும் ||ஆன்|| என்ற விகுதியுடன் முடிவடைவதால், இங்கு வாழ்ந்த மக்கள் தமிழ்மொழி பேசிய மக்கள் என்பது உறுதியாகின்றது.

இந்த ஆய்வின்போது, கண்டுபிடிக்கப்பட்ட மிகமுக்கியமான மற்றுமொரு சான்று - நான்காவது மண்படையில், அதாவது இயற்கை மண்ணையடுத்து (Natural soial), குவாட்ஸ் (Quartz) எனப்படும் பளிங்கு போன்ற கல்லினால் வடிவமைக்கப்பட்ட கல்லாயுதமொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான கற்கருவிகள் - பூநகரியிலுள்ள மண்ணித்தலை, வெட்டுக்காடு, மண்டக்கல்லாறு போன்ற இடங்களிலும், மாதோட்டம், பலாங்கொட போன்ற இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் காலம் கி.மு.2800 ஆண்டுகள் எனவும், இப்பண்பாட்டுக்குரியவர் மகாவம்சத்தில் வரும் |நாக இன மக்கள்| எனவும் - சிரான் தெரணியகல என்ற தொல்லியல் அறிஞரால் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், தென்னிந்தியாவில் உணவு உற்பத்தியில் ஈடுபட்ட செம்புக்கால, பெருங்கற்கால, புதிய கற்கால பண்பாட்டுக்குரிய மக்களும், இவ்வாறன கருவிகளைப் பயன்படுத்தியமைக்கான சான்றுகள் இருப்பதனால், கல்முனையில் கண்டுபிடிக்கப்பட்ட இக்கருவிகள் எப்பண்பாட்டுக்குரியதெனத் திட்டவட்டமாகத் தற்போது கூறமுடியாதுள்ளதாகத் தெரிய வருகிறது.

ஆயினும், அகழ்வாய்வின்போது- முதன்முதலாகப் இப்பிரதேசத்தில் இக்கருவிகள் கண்டுபிடிக்கப் பட்டிருப்பது - தமிழ்ப்பிரதேசத்தின் தொன்மை பற்றிய ஆய்வில் ஒரு முக்கிய திருப்பம் என, ஆய்வினை மேற் கொண்டவர்கள் தெரிவித்தனர்.

யாழ்.பல்கலைக்கழக அனுசரணையுடன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வுகளுக்கு வேண்டிய நிதியுதவியை - யாழ். மாவட்ட அரச அதிபர் செ.பத்மநாதன்- இவ்வாண்டுக்குரிய பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவுத்திட்டத்திலிருந்து ஒதுக்கீடு செய்துள்ளார்.

ஆய்வுக்கு வேண்டிய போக்குவரத்து வாகன வசதிகளை - கிளி நொச்சி மாவட்ட அரச அதிபர் பி.இராயநாயகமும், சிரான் பணிப்பாளர் செல்வினும் வழங்கியிருந்தனர். இவ்வாய்வின்போது வயது, பால் வேறுபாடின்றி கல்முனை மண்ணித் தலை, வெட்டுக்காடு, வாழ் மக்கள் பெரும் ஆர்வத்துடன் பங்குகொண்டு, வேண்டிய பல உதவிகளைச் செய்துள்ளனர்.

தற்போது அகழ்வு செய்யப்பட்ட இடத்திற்கு மேற்கே, மேலும் இரு இடங்களில் பண்டைய குடியிருப்புக்களுக்குரிய சான்றுகள், தடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், அவ்விடங்களும் மழை காலத்திற்கு முன், அகழ்வு மேற்கொள்ளப்பட்டு, இவ்வாய்வின் முக்கியத்துவம் தொடர்பான அறிக்கை - உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும், இவ்வாய்வுக்கு தலைமை தாங்கிச் சென்ற கலாநிதி ப.புஸ்பரட்ணம் தெரிவித்தார்.