குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பைந்தமிழ் ஆசான்' கா.நமச்சிவாய முதலியார்-நினைவு நாள் -13.3.1936

13.03.2019- 1906ஆம் ஆண்டு வரை தமிழ்ப் பாடங்களை படிக்க ஆங்கில அறிஞர்கள் எழுதிய பாடங்க ளையே படிக்க வேண்டிய நிலை இருந்தது. அப்போது தமிழாசிரியர் ஒருவர் வேதனையுற்று, தம்மோடு பணியாற்றி வந்த எவரிடத்தும் பேச மறுத்து வந்தார்.அப்போது பள்ளித் தலைமையாசிரியராக இருந்த ஆங்கிலேயர் பேட்ஸ் என்பவரிடம் பள்ளியை விட்டு விலகப் போவதாக தெரிவித்தார். பதட்டமடைந்த தலைமையாசியர் பள்ளியை விட்டு விலகுவதா? ஏன் எதற்காக? எனக் கேட்டார்.

தமிழ் கற்கும் மாணவர்களுக்கு முறையான பாடநூல்கள் வெளி வரவில்லை, இல்லையெனச் சொல்லிக் கொண்டே இருப்பதில் பயன் இல்லை. எனவே பாடநுல்களை நானே உருவாக்கத் திட்டமிட்டுள்ளேன். ஆசிரியர் பணிபுரிபவர் பாடநூல்கள் எழுத தடை இருக்கிறது, எனவே ஆசிரியர் பணியை விட்டு விலகிட முடிவு எடுத்துள்ளேன். அதற்கு அனுமதி தாருங்கள் என்றார் நமச்சிவாயர்.

அதற்கு பேட்ஸ் மறுமொழியாக, "அறிவில் திறமும். அனுபவத்தில் உரமும் பெற்றுள்ள தங்களைப் போன்றவர்கள் மாணவர் பாட நூல்களை உருவாக்குவது தான் மிகச் சரியானது, ஆசிரியர் பணியில் இருந்து கொண்டே பாடநூல் உருவாக்குவதற்கு நான் அனுமதி வாங்கித் தருகிறேன்" என்றார்.

20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தமிழ்க்கற்க கீழ் வகுப்பு முதல் மேல் வகுப்பு வரை பாட நூல்களை உருவாக்கித் தந்த அந்த தமிழாசிரியரின் முயற்சி பெரும் வெற்றி பெற்றது. அப்பெருமகனார் எழுதிய பாடநூல்கள் அனைத்தும் அப்போது தமிழ் கற்ற பலராலும் ஒப்பற்ற நூலாக பாராட்டப் பெற்றன. கல்லூரிக்கும் அவரின் பாடத்திட்டம் வேண்டுமென குரல்கள் ஒலித்தன. தமிழ்ப்பாடத் திட்டத்தை உருவாக்கிய அந்த தமிழாசிரியர் வேறு யாருமல்ல, தமிழரெல்லாம் பொங்கல் திருநாளை தமிழர் திருநாளாக கொண்டாடக் காரணமான தமிழறிஞராகிய கா.நமச்சியவாய முதலியார் தான்!

வட ஆற்காடு மாவட்டம் காவேரிப்பாக்கம் எனும் ஊரில் இராமசாமி முதலியார் -அகிலாண்ட வல்லி இணையருக்கு மகனாக 20.2.1876இல் நமச்சிவாயர் பிறந்தார்.

இவரின் தந்தையார் நடத்தி வந்த திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வியை தொடங்கினார். அப்போதே நல்வழி, விவேக சிந்தாமணி, நன்னெறி, நீதி நெறி விளக்கம் முதலிய நூல்களை கற்றுத் தெளிந்தார். பின்னர் தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்றுத் தெளிவடைய மகாவித்துவான் மயிலை சண்முகம் பிள்ளை அவர்களிடம் மாணக்கராக சேர்ந்தார்.

பனிரண்டு வயது உள்ள போதே, தண்டையார் பேட்டையிலிருந்து மயிலாப்பூர் வரை நடந்தே சென்று கல்வி கற்பது இவரது வழக்கம்.

கல்வியில் தேர்ச்சி பெற்றபிறகு சிறிது காலம் சென்னை செயிண்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளியிலும், பிறகு இராயபுரம் நார்த்லிக் மகளிர் பாடசாலையிலும் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.

1902ஆம் ஆண்டு எஸ்.பி.ஜி. உயர்நிலைப்பள்ளியில் ( தற்போதைய பெயர் வேப்பேரி புனித பவுல் பள்ளி) பணியாற்றிய போதுதான் அவருக்கு பாடநூல் எழுதும் சிந்தனை துளிர் விட்டது. அப்போது தான் தலைமையாசிரியர் பேட்ஸ் என்ற ஆங்கிலேயரின் நட்பு இவருக்கு கிடைத்தது.

நமச்சிவாயருக்கு தாம் கொண்ட மன உறுதியும், பேட்ஸ் தந்த ஒத்துழைப்பும் ஒன்று சேர இணைந்து நூற்றுக்கணக்கான பாடநூல்களை எழுதும்படி தூண்டின. அப்போதே பேரும், புகழும் அவரை வந்தடைந்தன. "தமிழ்ப்பேராசான்" நமச்சிவாயர் என்று அனைவரும் அழைக்குமளவிற்கு அவர் பெயர் நிலைபெற்றது.

1906ஆம்ஆண்டில் சுந்தரம் அம்மையார் என்ற நங்கையை மணந்து இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்தார். அவர் திருத்தணிகை முருகன் மீது தீராப் பற்று கொண்டவர். தன் இரண்டு புதல்வர்களுக்கும் தணிகை வேல், தணிகை மணி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். மற்ற இரண்டு புதல்விகளுக்கு பட்டம்மாள், மங்கையர்க்கரசி என்று அழகிய தமிழில் பெயரிட்டார்.

நமச்சிவாயர் சென்னை சிங்கிலர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளரகப் பணியாற்றிய போது இராணி மேரி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டது. 1914ஆம் ஆண்டு இராணிமேரிக் கல்லூரி பெண்களுக்கென்று உருவாக்கப்பட்டது. தமிழ் பேராசிரியராக ஆண்கள் எவரும் பணியாற்ற முன்வராத நிலையில் இவர் துணிவோடு அங்கு பொறுப்பேற்று பணியாற்றியதை அனைவரும் பாராட்டினர்.

அக்காலத்தில் வடமொழி பயின்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுந்தான் சென்னைப்பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா நடத்தி சிறப்பித்து வந்தது.

மதுரைத் தமிழ்ச் சங்கமும், திருவையாற்று தமிழ்க்கல்லூரியும் தமிழில் தேர்வு நடத்திய போதிலும் அரசினரின் உரிய ஏற்பிசைவைத் தமிழ்ப் பயின்றவர்கள் பெறமுடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் 1920இல் சென்னைப் பல்கலை.யின் தமிழ்க்கல்வி குழுவிற்குத் தலைவராக நமச்சிவாயர் நியமிக்கப்பட்டார். வடமொழிக்கு வாழ்வும் தமிழ்மொழிக்கு தாழ்வும் கற்பிக்கும் இழிநிலை கண்டு நெஞ்சம் குமுறினார்.

தமிழ் பயின்றவர்களுக்கு அரசினரின் உரிய ஏற்பிசைவு தர முடிவு செய்தார். அதன்படி, "தமிழ் வித்துவான்" தேர்வு முறையை அறிமுகம் செய்து அதில் தேர்வெழுதி தேர்ச்சி பெறுபவர்களுக்கு பல்கலை.பட்டம் அளிக்கப்படும் என்றும், அத்தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு பள்ளிகளில் தமிழாசிரியர் பணி தர வேண்டும் என்றும், தமிழாசிரியர்களுக்கு ஊதியம் ரூபாய் 45 முதல் 75 வரை வழங்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.

வடமொழி பயின்று வந்த " பூணூல் திருமேனியருக்கு " நமச்சிவாயரின் பல்வேறு அறிவிப்புகள் பேரதிர்ச்சியைத் தந்தது. அங்கு பதினான்கு ஆண்டுகள் வரை தலைவராக இருந்து தமிழுக்குரிய இடத்தைப் பெறுவதில் விடாது போராடி வந்தார்.

1921இல் பச்சையப்பன் கல்லூரியில் மறைமலையடிகள் தலைமையில் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் திருவள்ளுவர் ஆண்டு தீர்மானிப்புக் கருத்தரங்கம்.நடைபெற்றது. அதில் பங்கேற்ற முதன்மையான ஏழு தமிழறிஞர்களுள் இவரும் ஒருவர். அக்கருத்தரங்க கூட்டத்தில் முன்னிலை வகித்து தைப் பிறப்பே தமிழர் ஆண்டு பிறப்பு என்று முழங்கினார்.

அறிவியல் நூல்களை தமிழில் வெளிக்கொணர வேண்டும் என்பதில் உறுதி கொண்ட நமச்சிவாயர் அக்கருத்தை (27.9.1930) கரந்தை தமிழ்ச்சங்கத்தில் உரையாகவும் ஆற்றினார். அது பின்வருமாறு:

"ஆங்கிலம் படிப்பவர்கள் விஞ்ஞான சாத்திரங்கள் முதலிய நூல்களை முயன்று.எழுதி வெளியிட வேண்டும். அவர்கள் தக்க தமிழராசிரியர்களைத் துணையாகக் கொள்ளுதலே சாலப் சிறப்பாகும். எனக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும், தமிழ் எழுத வராது என்று சொல்லி, காலம் கழிக்கின்ற ஆங்கில அறிஞர் பலர். சர்வகலாசாலை ஏற்பட்டு வெளிவந்த பட்டதாரிகள் ஐம்பதினாயிரவருக்கு மேலும் ஆவர், அவர்களில் ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த செய்தியைக் குறித்து ஒவ்வொரு சிறுநூல் செய்திருப்பின், ஐம்பதினாயிரம் நூல்கள் ஆகியிருக்குமே! ஒவ்வொருவரும் தம்தம் வயிற்றுப் பாட்டைப் பார்த்தனரே யன்றி, தம் தாய் மொழியின் வளர்ச்சியைக் கருதினாரில்லையே!"

நமச்சிவாயர் பாடநூல் ஆசிரியராகப் புகழ்பெற்ற காலத்திலேயே பதிப்புத்துறையிலும் புகழ்பெற்று விளங்கினார், தமிழ்ச் சிற்றிலக்கணம், ஆத்திசூடி முதலாகப் பல சிறிய நூல்களை உரையெழுதி வெளியிட்டார்.

தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் ஆகியவற்றை இளம்பூரணர் உரையுடன் வெளியிட்டார். தணிகைப் புராணம், தஞ்சைவாணன் கோவை, இறையனார் களவியல் முதலிய நூல்களை திருத்தப் பதிப்பாக வெளியிட்டு தமிழறிஞர்களின் பாராட்டைப் பெற்றார்.

தமது பதிப்பகத்திற்கு பாடநூல் எழுதித் தரும் தமிழாசிரியர்களுக்கு சிறப்புச் செய்திடும் வகையில் "தமிழர் திருநாள்" பெயரில் ஆண்டுதோறும் விழா நடத்திய முதல் தமிழர் என்ற பெருமை இவரையே சாரும்!

1934இல் தமிழர் திருநாள் கொண்டாடிய போது, தமிழைப் போற்றும் பாடல் இயற்றினார். அது பின்வருமாறு:

"தேனினும் இனிய செந்தமிழ் மொழியே!

தென்னாறு விளங்குற திகழுந்தென் மொழியே!

ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே!

உணர்வினுக் குணர்வாய் ஒளிர் தமிழ்மொழியே!

வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே!

மாந்தருக் கிருகணா வயங்கு தென்மொழியே!

தானியல் சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே!

தழைத்தினி ஓங்குவாய் தண்டமிழ் மொழியே!"

நமச்சிவாயர் செல்வந்தராக வாழ்வில் உயர்வு பெற்ற போதிலும் தன்னை ஏற்றிவிட்ட ஏணியாம் தமிழை மறக்கவில்லை. தாம் கட்டிய இல்லங்களுக்கு காவேரி அகம், கடல் அகம், குறிஞ்சி வீடு என்று அழகிய தமிழில் பெயர் சூட்டினார்.

பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர்களுக்கென நல்லாசிரியன் எனும் திங்களிதழை நடத்தி வந்தார். அதில் தமிழ், தமிழர் பெருமை கூறும் கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வந்தார். 1936ஆம் ஆண்டு பொங்கல் திருநாளின் போது திருவள்ளுவர் திருநாள் கழகத்தை தோற்றுவித்தார். அவ்வாண்டே அவருக்கு அறுபதாம் வயது மணிவிழா ஆண்டாக பிறந்தது. இதனையொட்டி மணிவிழா மலர் எழுதி வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் 13.3.1936இல் எழுதுவதை நிறுத்திக் கொண்டார். அப்போது தமிழ் மண்ணை விட்டு மறைந்து தமிழறிஞர்களின் நெஞ்சங்களில் நிறைந்திருந்தார்.

நமச்சிவாயர் புகழ் ஓங்குக!

- கதிர் நிலவன், மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள் நூலிலிருந்து.