குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, தை(சுறவம்) 29 ம் திகதி புதன் கிழமை .

மக்களை கருவறையில் அனுமதிப்பதில்லை ஏன், உள்ளே இருக்கும் மறைகருத்து (மர்மம்)..?

06.01.2018-சில மாதங்களுக்கு முன்பாக, திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் ஆலயத்தில், தொல்லியல் துறையினர் கோயிலின் கட்டமைப்புகளைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது,பத்து, இருபது பேர் பக்தர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டு, கோயிலில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற் கொள்ளக் கூடாது,அவர்கள் உடனே அந்தக் கோயிலை விட்டு வெளியேற வேண்டும், என்று ஆர்ப்பரித்தார்கள்.

அந்தத் தொல்லியல் ஆய்வாளர்கள், கோயிலை ஆய்வு செய்வது தான் அவர்கள் பணியே. அதற்காகத் தான் அவர்களுக்கென அரசாங்கத்தால் தொல்லியல் துறையும் ஒதுக்கப் பட்டிருக்கிறது.

அப்படி இருக்கும் போது அந்த பக்தர்கள் என்று சொல்பவர்கள், கோயிலின் துாய்மை கெட்டு விடும் என்று கூறுவது வேடிக்கையானது மட்டுமல்ல. விசமத்தனமானது.

யாரோ, அவர்களைத் தூண்டி விட்டிருக்கிறார்கள். தூண்டி விட்டவர்கள் நிச்சயம் அந்தக் கோயில் நிலத்தை அபகரித்தவர்களாகத் தான் இருப்பார்கள்.

ஏனென்றால், அறநிலையத்துறையில் உள்ள கோயில்கள் அனைத்தும், மிகப் பழமையானதும் பாரம்பரியமும் கொண்டவை.

அந்தப் பழமையான கோயில்களுக்கு எல்லாம், அந்தப் பகுதியை ஆண்ட மன்னர்களும், சிற்றரசர்களும், வசதி படைத்த வணிகர்களும், தங்களது அன்பளிப்பாக, ஏராளமான நிலங்களைக் கோயிலுக்கு வழங்கி இருக்கிறார்கள்.

அந்தக் காலத்தில், பத்திரப் பதிவெல்லாம் ஓலைச் சுவடியில் தான் இருந்தது. எதிர்காலத்தில், அவைகள் கரையானால் அரிக்கப்பட்டு விடும். மேலும், அந்த மாதிரியான ஓலைச் சுவடிகள் அழிந்து போகக் கூடியவை.

கயவர்கள், எளிதில் கோயில் சொத்துக்களை கொள்ளை அடித்து விடுவார்கள் என்று, முன்னெச்சரிக்கையாக அன்றே, தொலை நோக்குப் பார்வையில், இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும்,

அந்தக கோயிலுக்குத் தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் எந்தப் பகுதியில் எவ்வளவு .இருக்கிறது, என்ற விபரங்களைக் கோயிலில் கல்வெட்டுகளாகப் பொறித்து வைத்திருக்கிறார்கள்.

அதிலும் முக்கியமான சொத்துக்கள் பற்றிய குறிப்புகள் எல்லாம், கோயிலின் கருவரையைச் சுற்றிலும் கல்வெட்டுகளாக உள்ளன.

அந்தக் கல்வெட்டில், தானமாக வழங்கப்பட்ட நிலங்கள், அவற்றைக் கொடுத்தவர், கோயிலில் என்ன பணிக்காக அந்த நிலங்களைத் தானமாக வழங்கினார் போன்ற விபரங்கள் எல்லாம் அடங்கியிருக்கின்றன.

அவையெல்லாம் கோயிலுக்கு மட்டுமே உரித்தான சொத்துக்கள். அந்த மாதிரி நிலங்களைக் கொடுத்தவர்கள் தெய்வத்தை நம்பினார்கள்.

ஆனால்,மனிதர்களை நம்பவில்லை. சொத்துக்கு ஆசைப்பட்டு, யாரும் எதுவும் செய்து விடலாம் என்று முன்னெச்சரிக்கையாகவே கல்வெட்டை எழுதினார்கள்.

அப்படி எழுதும் போது, ஸ்ரீலஸ்ரீ….என்று ஆரம்பித்து, சொத்துக்களை கோயிலுக்கு தானமாக வழங்குபவர்களின் மெய்க் கீர்த்திகளை எழுதுவார்கள். வடவர்காலம் எழுத்தில்  கலப்பு வந்துவிட்டது.

அத்துடன், இந்தக் கோயில் சொத்துக்கள் எல்லாம், பூமியும், சந்திரனும் உள்ள வரை நிலைத்திருக்கும் என்ற வாசகமும் எழுதுவார்கள்.

இறுதியாக அந்தக் கல்வெட்டை முடிக்கும் போது, அவர்கள் பயன்படுத்திய வாசகங்கள், எந்தக் கல் நெஞ்சு படைத்த கயவர்களையும் யோசிக்க வைக்கும்.“இந்தக் கோயில் சொத்துக்களை அபகரிக்க நினைப்பவர்கள்,

கங்கையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்திற்கும், தனது தாய் தந்தையரை நிந்தித்த பாவத்திற்கும் ஆளாவார்கள்” என்று குறிப்பிட்டிருப்பார்கள்.

இன்னும் சில இடங்களில், மிக மோசமாக வார்த்தைகளைக் கல்வெட்டில் பிரயோகித்திருப்பார்கள்.

அதாவது, “ இந்தக் கோயில் சொத்தை எவன் அபகரிக்கிறானோ, அவன், தன் தாய்க்கே மணாளன் ஆவான்” என்று,

அந்தக் கோயில் சொத்துக்களைக் காப்பாற்றுவதற்காக, இந்த மாதிரியான கடுமையான வார்த்தைகளை எல்லாம் பிரயோகித்து, கல்வெட்டுக்களைப் பொறித்து, அதைக் காப்பாற்ற முனைந்தார்கள்.

ஆனால், தற்போது, அந்த மாதிரியான கோயில் சொத்துக்கள் பெரும்பான்மையானவை, நம் அரசியல்வாதிகளின் சொத்துக்களாக மாறி விட்டன.

அதனால் தான் பல கோயில்களில், கல்வெட்டுகளாகத் தெரியும் எழுத்துக்களைப் பூசி மறைத்து விடுகிறார்கள். அந்த மாதிரி எதுவும் நடைபெற்று விடக் கூடாது என்பதற்காகத் தான்,

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும், தொல்லியல் துறையினரிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே, அவர்கள் கூற்றுப் படியே, கல்வெட்டுகளைச் சேதப்படுத்தாமல்,

திருப்பணிகள் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது. இனி எந்தக் கோயில் சொத்துக்கள் எவ்வளவு கொள்ளை போயிருக்கின்றன, என்ற விபரத்தை மக்கள் அறிய முடியும்.