குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சீர்திருத்தக் கவிஞர்” உடுமலை நாராயணகவி பிறந்த நாள்- 25.9.1889

25.09.2018-முடை நாற்றமெடுக்கும் மூடநம்பிக்கைக் கொள்கைகளை நகைச்சுவையின் மூலம் துவைத்து எடுத்தவர் கலைவாணர் என்.எசு.கிருச்ணன் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரது பகுத்தறிவுப் பாடலுக்குப் பின்னே கவித்துவம் ஒன்று மறைந்தே முழக்கமிட்டது. அதன் சொந்தக்காரர் உடுமலை நாராயணகவி என்பது பலருக்கும் தெரியாது.

அன்றைக்கு பகுத்தறிவுக் கொள்கையை வீரியத்தோடு பறைசாற்றிய கவிஞருள் முதன்மையானவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் என்றால் அதே சமகாலத்தில் வாழ்ந்த மற்றொருவர் கவிஞர் உடுமலை நாராயணகவி என்பதில் ஐயமில்லை.

தமிழிசை உலகம், தமிழ் நாடக உலகம், தமிழ்த் திரையுலகம் ஆகிய மூன்று உலகத்திலும் கால்பதித்து கிட்டத்தட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் புனைந்து தமிழர்களை எழுச்சி கொள்ளச் செய்தவரே உடுமலை நாராயணகவி.

இவர் 1899ஆம் ஆண்டு செப்டெம்பர் 25ஆம் நாளில் உடுமலைப் பேட்டை வட்டம் பூவிளையாடி (தற்போதைய பெயர் பூளவாடி) கிராமத்தில் கிருச்ணசாமி- முத்தம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பாடம் பயின்றார். தனது 12ஆம் வயதில் பெற்றோரை இழந்த நிலையில் கைத்தொழில், சிறு வியாபாரம் மூலமாகப் பிஞ்சு வயதிலேயே உழைப்பை அறிந்தார்.

நாராயணகவி வாலிப வயதை எட்டும் வரை வறுமைக்கு முகம் கொடுத்துக் கொண்டே தனது இசையார்வத்திற்கும் முகம் கொடுக்கலாயினார்.

சரபமுத்துச்சாமி கவிராயரிடம் மாணாக்கராக அறிமுகமாகி இசையின் ஊற்றுக் கண்ணை முழுவதும் கண்டு தேர்ச்சியடைந்தார். அத்தோடு அவரது ஆரியகானச் சபையில் சேர்ந்து நாடகக் கலையையும் கற்றுத் தெளிந்தார். அன்றிலிருந்து ‘முத்துச்சாமி சீடன்’ என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டார். அதன் பிறகு தனது குருவின் பரிந்துரையின் பேரில் தவத்திரு.சங்கரதாஸ் சுவாமிகளிடம் சேர்ந்து நாடகக் கலையின் பரிமாணங்களைத் தெரிந்து கொண்டார்.

கலைவாணர் என்.எசு.கிருச்ணன் அவர்களோடு பழக்கம் ஏற்பட்ட பிறகு அவரின் பெரும்பான்மையான படங்களுக்கு நாராயணகவி தான் சீர்திருத்தப் பாடல்களை எழுதினார். அவர் மூலமே திராவிட இயக்கத் தலைவர்களோடும் நெருக்கம் கொண்டார்.

அண்ணா எழுதிய ‘நல்ல தம்பி’ படத்திலே ‘ரயிலே’ எனத்தொடங்கும் கதாகாலட்சேபம் பாடலை எழுதி புகழின் உச்சிக்குச் சென்றார். அப்படத்தில் கலைவாணர் கிருஷ்ணன் அவர்கள் கிந்தனார் கதாகாலட்சேபம் நடத்துவார். கிந்தன் பள்ளிக்குச் செல்லும் போது தொடர்வண்டியைக் கண்டு பரவசமடைவான். ஐயரென்றும் பள்ளரென்றும் சாதி பார்க்காமல் அனைவரையும் சமமாக அமர்த்திக் கொண்டு புறப்படும் தொடர்வண்டியைப் பாடியவாறு சாதிச் சழக்கருக்கு சவுக்கடி கொடுப்பான்.

அதே போல், டாக்டர் சாவித்திரி படத்தில்,

“காசிக்குப் போன கருவுண்டாகுமென்ற காலம் மாறிப் போச்சு-

இப்ப ஊசியப் போட்ட உண்டாகுமென்ற உண்மை தெரிஞ்சு போச்சு”

-பாடல் மூலம் மூடப் பழக்க வழக்கங்களை தகர்த்து எறிந்தார்.

தொடக்கத்தில் பாரதிதாசன் போலவே ஆன்மிகப்பாடல்களை எழுதி வந்த நாராயணகவியார் பாரதிதாசனுடைய தோழமை கிடைத்தவுடன் அவரைப் போலவே சமுதாய சீர்திருத்தப் பாடல்களை எழுதத் தொடங்கினார்

சமூக கால மாறுதலுக்கேற்ப நாராயண கவியின் சிந்தனையிலும் சீர்திருத்தத் தாக்கம் வெளிக்கிளம்பின. இயக்குநர் நாராயணன் மூலமாக வெள்ளித் திரையில் மின்னத் தொடங்கிய நாராயண கவியார் இளங்கோவன் எழுதிய கண்ணகி, மகாமாயா, கிருஷ்ணபக்தி, ஓர் இரவு, நல்ல தம்பி, பராசக்தி, மனோகரா, சொர்க்க வாசல், தூக்குத்தூக்கி, தெய்வப்பிறவி, இரத்தக்கண்ணீர் ஆகிய எண்ணற்ற படங்களுக்கு பாடல்களை எழுதி தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா முத்திரை பதித்தார்.

காதல், தத்துவம், சீர்திருத்தம், அரசியல் போன்ற பல்வேறு தளங்களில் பன்முகத் தன்மையை நாராயணகவி வெளிக்காட்டிய போதிலும் பெண்ணடிமைச் சிந்தனைக்கு ஆதரவாக இவர் பாடல் எழுதியது பலரையும் அதிர்ச்சியடைய வைக்கும்.

1954இல் வெளிவந்த ‘தூக்குத் தூக்கி’ படத்தில்,

பெண்களை நம்பாதே! கண்களே, பெண்களை நம்பாதே!

கண்டவரோடு கண்ணால் பேசிக் காமுறும் மாது இந்தப்பூமியின் கொண்ட கணவன் தன்னைக் கழுத்தறுப்பாள்!

காரிகை ரூபத்தில் காணும் பிசாசு

என்றும்,

இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே!

மானம் நாணம் பெண்களுக்கு ஆடை அல்லவோ?

பெண்கள் காரியத்தை ஆம்பிளை பார்க்கிறான் வீட்டுலே

என்றும்,

வேறொரு படத்திலே ஆணாதிக்கக் கருத்தியலை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார். திரைப்படத்தின் கதைக்கேற்ப அமைக்கப்பட்ட பாடல் என்ற போதிலும் இது போன்ற பாடல்கள் அவரது முற்போக்கு எண்ணக் கடலில் விழுந்த நச்சு மழையென்றே கருதிடுவோம்!

தனது வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் தான் பிறந்த ஊருக்குச் சென்று மண்வாசம் புரிந்திட்ட நாராயணகவி 1981ஆம் ஆண்டில் தாய்மண்ணின் மடியிலே உயிர் துறந்தார். தன்னை ஈன்ற உடுமலை என்கிற தாயை மறக்காமல், தனது பெயருடன் இணைத்து தமிழகம் முழுவதும் அறிமுகம் செய்த இந்த மகா கவிஞனை இந்நாளில் நினைவு கூறுவது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்!