குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஆடி(கடகம்) 13 ம் திகதி சனிக் கிழமை .

குறள் இருக்க வேதம் எதற்கு? தமிழ் இருக்க சமற்கிருதம் எதற்கு?

குறள் இருக்க வேதம் எதற்கு? தமிழ் இருக்க சமற்கிருதம் எதற்கு?

09.02.2017-எதிரிகள்/எதிரி இனம் இல்லாத மதம் உண்டா? எதிரிகளை வர்ணிக்காத ஒரு வேத நூல் உண்டா? எல்லைகள், கலாச்சாரம், இனம், குளம், இவற்றை எல்லாம் கடந்த ஒரு மதம் உண்டா?எல்லா மதங்களும் ஒரு கலாச்சாரத்தை, ஒரு நிலப்பரப்பை ஒரு இனக்குழுவை, ஒரு அரசியல் சூழலை/நிர்ப்பந்தத்தை அடிப்படையாக கொண்டு தான் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்படி எந்த ஒரு பிரிவுகளுக்குள்ளும் சிக்காமல், உலகம் தழுவிய ஒரு பார்வையை முன்வைத்த ஒரே நூல் திருக்குறள் தான்.

எல்லா மதங்களுக்கும் ஒரு சாத்தான், ஒரு தீண்டத்தகாதவன், தீண்டத்தகாதவள், அடிமை கூட்டம், எதிரி கூட்டம், சட்டம், கோட்பாடு, கட்டளைகள், குறியீடுகள் எல்லாம் தேவைப்படுகிறது. இவை இல்லாமல் எந்த மதமும் இல்லை.

ஆனால் இவை எதுவும் இல்லாமல், எந்த ஒரு அதிகாரத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள்ளும் சிக்காத ஒரு நூல் இருக்கிறதென்றால், அது நம் திருக்குறள் தான்.

இப்படி ஒரு உலகபொதுமறையை நம் வசம் வைத்து கொண்டு, நாம் ஏன் வேதத்தை நாட வேண்டும்?

இன்றைய தமிழ் சமூகத்தில் நாம் போற்றும் மத நல்லிணக்கம், பகுத்தறிவு, அறம், வீரம், அரசியல், பெண்ணியம் போன்ற அணைத்து சித்தாந்தங்களுடனும் ஒத்து போக கூடிய நூல் திருக்குறள். திருக்குறள் எல்லோரும் ஏற்று போற்ற கூடிய நூல்.

ஆனால் உங்கள் வேதங்கள் அப்படியா?

ஆரியத்தில் வேதம் இருக்கிறது.

தமிழில் திருக்குறள் இருக்கிறது.

குறள் இருக்க நமக்கு வேதம் எதற்கு?

குறள் : அனைவருக்குமான நூல்.

தமிழ் : மக்களின் மொழி.

ஆனால் சமற்கிருதம் அப்படியா?

சமற்கிருதம் எமக்கான மொழியா?

சமற்கிருதம் யாருக்கான மொழி?

சமற்கிருதம் ஒரு மதத்திற்கான மொழி!

அது ஆரிய பார்ப்பணியத்தின் அதிகார மொழி!

அது நம்மை அடிமைப்படுத்தி, அதிகாரத்தில் இருந்து நம்மை அந்நியப்படுத்திய மொழி!

அது நம்மைத் தாழ்த்தி உயர்ந்த மொழி!

அது நம்மைப் பிளவுபடுத்தி ஆண்ட மொழி!

அது நம்மை இழிவு படுத்தி வாழ்ந்த மொழி!

அது இன்று வசிக்க நாவற்று மாண்ட மொழி!

அதை மறுபடியும் உயிர்ப்பிக்கும் எந்த நடவடிக்கையும், நமக்கு எதிரான நடவடிக்கை தான் என்பதை தமிழர்கள் மறந்துவிடக்கூடாது. அதன் அதிகாரம் எங்கிருந்து வந்தது?

சமற்கிருதம் அனைவருக்குமான மொழியல்ல. நம்மை அடிமைப்படுத்தி தான் அது அதிகாரத்தை கைப்பற்றியது. சமற்கிருத இலக்கியங்கள் முன்னிறுத்தும் கலாச்சாரம், பண்பாடு, அறம், நெறி எல்லாமே நமக்கு முரணானது.

அந்த மொழி பேசியவர்கள் தெய்வங்களாக

நாம் அசுரர்கள் ஆனோம்!

அந்த மொழி பேசியவர்கள் அரசாள

நாம் அடிமையானோம்!

அப்படி பட்ட ஒரு மொழி நமக்கெதற்கு?

நம்மை உயர்த்திய தமிழ் இருக்க

நம்மை தாழ்த்திய சமசுகிருதம் எதற்கு?

- அருள்மொழி செழியன்

மனித வாழ்விற்கு தேவையானக் கூறுகளை உள்ளடக்கிய திருக்குறளே தமிழர்களின் துாய நூல்.

திருக்குறள் கற்போம், குறள்வழி நிற்போம்!

வழிப்பாட்டிற்குக் கூட தமிழைப் புறம்தள்ளும் சமற்கிருதம் நமக்கு வேண்டாம்.

தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்!