இத்தகைய ஒற்றுமை அரசியல் கட்சிகளிடமும், இயக்கங்களிடமும் உருவாகாமல் இருந்ததற்கான, இருப்பதற்கான காரணம் இதுதான் : தமது எதிர்கால தேர்தல் வெற்றிக்கான சாத்தியங்களை, ஈழமக்களின் பிரச்சினையை வைத்து உருவாக்குவதும், அந்த முன்னுரிமைக்காக ஈழமக்களின் பிரச்சினைகளைக் காவு கொடுப்பதுமான நிலைபாட்டைத்தான் தமிழ் தேசிய அரசியலைப் பேசிய, ஈழத் தமிழர் ஆதரவு பேசிய கட்சிகள் கொண்டிருந்தன. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் இயக்கம், பாட்டாளி மக்கள் கட்சி என, ஈழ விடுதலையைப் பேசிய இக்கட்சிகள் அனைத்தும் இத்தகைய நோக்கையே கொண்டிருந்தன.
தாம் தேர்தல் கூட்டணிக்காகத் தேடித் திரிகிற திமுக-அதிமுக கட்சிகளின் ‘மனம் நோகாமல்’ ஈழ அரசியலை இக்கட்சிகள் பேச நினைத்தன. இந்த ஒற்றுமை உருவாக்கத்ற்கான பிற இரண்டு காரணங்களில் ஒன்று, இந்தக் கட்சி அரசியல் தலைவர்களின் தன்மூப்பு. பிற காரணம், தமிழகத்தின் அடுத்த முதலமைச்ர் பதவி நோக்கிய இவர்தம் கனவுகள், அதை நோக்கிய அரசியல் நகர்வுகள்.
முள்ளாய்க்கால் பேரழிவின் முன்பும், அதன்போதும், அதன் பின்னும் விடுதலைச் சிறுத்தைகள் எவருடன் தேர்தல் உடன்பாடு கொண்டிருந்தார்கள் என்பது தமிழக மக்களைப் பொறுத்து ஒரு பகிரங்க ரகசியம். திமுக, காங்கிரஸ் கூட்டணியில்தான் அவர்கள் அங்கம் வகித்தார்கள். அதனது அரசியல் பகுதியாகத்தான் கனிமொழி துரைமுருகனுடன் இணைந்து திருமாவளவன் இலங்கை சென்று ராஜபக்சேவுடன் கைகுலுக்கி வந்தார். ராஜபக்சே படுகேவலமாக விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனை அவமானப்படுத்தவும் செய்தார்.
விடுதலைச் சிறுத்தைகளின் ‘மார்க்சீயம் கடந்த’ கோட்பாட்டாளரான ரவிக்குமார் இடதுசாரிகளைப் பற்றி விமர்சிக்கும்போது, வெறும் குறியீட்டுத்தன்மை வாய்ந்த, சடங்காச்சாரம் போன்ற, விளைவுகளை ஏற்படுத்தாததாக அவர்களது ஆர்ப்பாட்டங்கள் நின்று போனதைச் சுட்டிக்காட்டியவர். துரதிருஷ்டவசமாக, திமுக காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்தபடி, ஈழப்பிரச்சினைக்கு ஆதரவாக அவர்கள் நிகழ்த்திய பல்வேறு ஆரப்பாட்டங்கள் இதே வகையிலான சடங்காச்சாரமும், விளைவுகளை உருவாக்காத தன்மையும் கொண்ட, வெறும் ஆர்ப்பாட்டங்களாகவே இறுதியில் எஞ்சின என்பது நினைவிலாடும் வரலாறு.
குறிப்பிட்ட ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பான, மூவர் மரணதண்டனைக்கு எதிரான பிரச்சினையில் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான இந்த முரண்பாடு ஸ்தூலமாக வெளிப்பட்டிருக்கிறது. இந்த முரண்பாட்டின் சாதக பாதக அம்சங்களைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால், ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகத் தமிழகத்தில் நடந்த சில அரசியல் திருப்பங்களையும் அதனது படிப்பினைகளையும் மீள்நோக்கிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.
முள்ளிவாய்க்கால் பேரழிவுப் பிரச்சின உச்சத்தில் இருந்தபோது முத்துக்குமார் தன்னை எரியூட்டிக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளுக்கு வெளியில் அந்த எழுச்சியினைக் கட்சிசாரா மாணவர்களும் இளைஞர்களும் தமது கைகளில் எடுத்துக் கொண்டார்கள். தொடர்ந்து தமிழகத்தில் ஆங்காங்கு மாணவர்களும் இளைஞர்களும் போராடத் துவங்கினார்கள். முத்துக்குமாரின் மரண ஊர்வலத்தை முன்வைத்து தமிழகம் தழுவிய அளவிலான ஒரு இயக்கத்தை, அந்த ஊர்வலத்தை முதலில் முன்னின்று நடத்திய மாணவர்களும் இளைஞர்களும் திட்டமிட்டனர். வைகோ, திருமாவளவன், பழ.நெடுமாறன் போன்றவர்கள் பின்னர் அந்த அரங்குக்குள் வந்தனர்.
அந்த ஊர்வலத்தின் திசைவழியும் நோக்கும் தொடர்பான காரசாரமான விவாதங்கள் கட்சித் தலைவர்களுக்கும் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையில் முறுகல் நிலையைத் தோற்றுவித்தன. விடுதலைச் சிறுத்தைகள் அந்த ஊர்வலத்தைத் தமது கையில் எடுத்துக் கொண்டு, அதனை திமுக அரசின் திட்டத்திற்குச் சார்பானதாகத் திசைமாற்றினர். சமவேளையில் திமுக தலைவர் கருணாநிதியின் அரசு போராட்டம் தமிழகம் எங்கும் பரவுவதைத் தடுப்பதற்கெனத் திட்டமிட்டு பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் அவ்வாரத்தில் விடுமுறை அளித்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் வலிமையான மாணவர் சக்தியை எப்படிக் கேவலமாகவும் சிதறடிக்க முடியும் என்பதைக் கலைஞர் நடைமுறையில் செய்து காட்டினார். முத்துக்குமார் ஊர்வலத்தில் விடுதலைச் சிறுத்தைகளும் மற்றவர்களும் நடந்து கொண்ட விதம் குறித்து ‘கற்றது தமிழ்’ திரைப்பட இயக்குனர் ராமின் கட்டுரை இன்னும் விரிவாகப் பேசுகிறது.
இந்தப் பின்னணியிலிருந்து மூவர் மரணதண்டனைக்கு எதிரான பிரச்சினைக்கு வருவோம். நடைமுறையில் மூவர் மரணதண்டனைக்கு எதிரான செயல்பாடுகள் என்பது இரண்டு முனைகளில் முன்னெடுக்கப்படுகிறது. ஓன்று சட்டமுறைமைகளின் மூலமான நீதிமன்னறப் போராட்டம். பிறிதொன்று தமிழக முதலமைச்சரால் முன்னெடுக்கப்படக் கூடிய தமிழக அமைச்சரவையினால் தீ;மானிக்கப்படக் கூடிய, பிற்பாடு தமிழகத்தின் ஆளுனர் முடிவெடுத்துத் தடுக்கப்படக் கூடிய இறுதியான மரணதண்டனை நிறுத்தம் எனும் அரசியல் செயல்பாடு.
இந்த இரண்டு முனைகளிலும், முதன்மையபக இடைக்காலகட்டமாக நீதிமன்றத்தில் எட்டுவார காலத்திற்கு மரணதண்டனைத் தடை வாங்கப்பட்டிருக்கிறது. இந்தச் செயல்பாட்டில் பிரதான அங்கம் வகித்தவர் வைகோ மற்றும் நெடுமாறன் என்புது தெளிவானது. நீண்ட காலங்களாக ராம் ஜெத்மலானி போன்றவர்களுடன் தொடர்பு கொண்டு, வழக்கறிஞர் புகழேந்தி மூலம் இதனை வைகோ சாதித்திருக்கிறார். இரண்டாவதான ஜெயலிலதா அரசு மீதான சட்டமன்றம் மூலமான அரசியல் அழுத்தத்திற்கு தமிழகச் சிவில் உரிமைக் கழகம், சீமான், நெடுமாறன், தியாகு, மணியரசன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சாரந்தவர்கள், குறிப்பாக தில்லியிலிருந்து டி.ராஜா போன்றவர்கள் முக்கியமான பங்கை வழங்கியிருக்கிறார்கள். இதுன்றி சேவ் தமிழ் இயக்கம், மரண தண்டனைக்கு எதிரான இயக்கம் போன்ற குடிமைச் சமூக அமைப்புக்கள் மிகப்பெரும் பாத்திரம் வகித்திருக்கின்றன.
இதே காலகட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகளும், பாட்டாளி மக்கள் கட்சியினரும் இணைந்து மரணதண்டனை எதிர்ப்பு மாநாட்டையும் நடத்தினார்கள். இந்த நிகழ்வுகள் அனைத்தையும் கவனித்து வந்திருப்பவர்கள் ஒன்றைச் சாதாரணமாக உணர முடியும். முள்ளிவாக்கால் பேரழிவின் போது அரசியல் கட்சிகளிடம் செயல்பட்ட அதே தேர்தல் அரசியல் இலாப மனப்பான்மை இந்த நிகழ்வுகளின் போதும் செயல்பட்டது.
விதிவிலக்காக அமைந்த உணர்ச்சிகரமான நிகழ்வு செங்கொடி தன்னை எரியூட்டிக் கொண்ட நிகழ்வு. இந்த ஒரு நிகழ்வு தவிர பெரும்பாலுமான நிகழ்வுகள் தனித்தனியான கட்சிகளின் நிகழ்வுகளாகவே இருந்தன.
பாட்டாளி மக்கள் கட்சியும் விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்து அவர்களது எதிர்காலத் தேர்தல் கூட்டணி இலாப அரசியலின் பகுதியாக மூவர் மரணதண்டனை எதிர்ப்பு இயக்கங்களை அவர்கள் நடத்தினார்கள். வைகோவின் மதிமுகாவும், சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனித்தனியே நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தன. நெடுமாறன், தியாகு, பெரியார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொளத்தூர் மணி மற்றும் விடுதலை ராசேந்திரன் போன்றோருடன் பழ.நெடுமாறன் போன்ற கட்சி அரசியல் அல்லது தேர்தல் இலாப அரசியல் சாராதவர்கள் தொடர்ந்து ஒற்றுமை அரசியலுக்கு முனைந்து கொண்டேயிருந்தார்கள்.
இதுவே மூவர் மரணதண்டனைக்கு எதிரான இயக்கத்தின் பன்முகத்தன்மையிலான, முரண்பாடுகள் நிறைந்த ஒரு அரசியல் சித்திரம்.
இந்நிலைமையில், ஈழ ஆதரவாளர்களான தேர்தல் அரசியல் கட்சிகளான மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் என இரண்டுக்கும் நாம்தமிழர் கட்சிக்கும் மிகப்பெரும் வித்தியாசம் இருக்கிறது. கடந்த தேர்தலிலும் சரி, வரப்போகும் தேர்தலிலும் சரி அரசியல் இலாபத்தை முன்னிறுத்தாத, முற்றிலும் ஈழத்தமிழர் ஆதரவுத் தார்மீகத்தை முன்னிறுத்திய ஒரு நிலைபாட்டை நாம் தமிழர் கட்சி எடுத்தது, எடுத்திருக்கிறது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிப்பது என்பது மட்டுமே நாம் தமிழர் கட்சியின் திட்டமாக இருந்தது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும், மூவர் மரணதண்டனை ஒழிப்பில் ஜெயலலிதா அமைச்சரவையைக் கூட்டி சாதகமான தீர்மானத்தைக் கொணர்வார் எனில், 40 பாராளுமன்ற இடங்களையும் அவருக்கே பெற்றத் தர உழைக்கப் போவதாக சீமான் தெரிவிக்கிறார்.
குறிப்பான இந்த இரண்டு நடவடிக்கைகளிலும் தெரிவது முழுமையான ஈழ ஆதரவுத் தார்மீகமே அல்லாது தேர்தல் இலாப நகர்வு இல்லை.
இன்று மூவர் மரணதண்டனை ஒழிப்பாளர்களுக்கு முன்னுள்ள தேர்வுகள் இரண்டுதான். ஓன்று நீதிமன்றப் போராட்டம். மற்றது சட்டமன்ற அமைச்ரவைத் தீர்மானம்; போராட்டம். முதலாவது இயல்பான தர்க்கமாக நடந்து செல்லும். இரண்டாவது போராட்டம் என்பது ஒரு அரசியல் தந்திரோபாய நகர்வு. அதனையே சீமான் செய்கிறார் எனவே கருத முடிகிறது.
இன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம், எம்.ஜி.ராமச்சந்திரன் விட்டுச் சென்றிருக்கிற ஒரு மரபு வெகுமக்கள் வாக்குறுதி அரசியல். இதனை பாப்புலிஸ்ட் அரசியல் எனலாம். வெகுமக்கள் ஆதரவைத் தமது அதிகாரநிலைப்புக்கு ஆதரவாகத் திருப்ப முடியுமானால், அந்த வெகுமக்களை மகிழ்ச்சியில் ஆழத்தும் பல வாக்குறுதிகளை இவர்கள் தருவார்கள், அதனை நிறைவேற்றவும் செய்வார்கள். இலவசங்கள் என்பதும் இதனது ஒரு பகுதி. இன்றைய தினம் தமிழகத்தில் தோன்றியிருக்கிற மூவர் மரணதண்டனை எதிர்ப்பு என்பது வெகுமக்களின் விருப்பமாக இருக்கிறது. தாம் முள்ளிவாய்க்கால் பேரழிவின் போது செய்யத்தவறிய கடமையின் நீட்சியாகத் இது வெகுமக்களுக்குத் தெரிகிறது. கட்சிகள் தாண்டிய,முழ தமிழக மக்களினதும் விருப்பமாக இது இருக்கிறது.
என்றாலும், இது நடைமுறைக்கு வர ஜெயலலிதாவுக்கு போதிய ஆதரவு மெய்ப்பிக்கப்பட வேண்டும். அழுத்தமும் இருக்க வேண்டும். நெடுhறன்,வைகோ,சீமான் போன்றவர்கள் ஜெயலலிதாவின் சட்டமன்றத் தீர்மானத்தைப் போற்றுவது இதற்காகத்தான். ஜெயலிலதா அமைச்சரவைத் தீர்மானத்திற்குச் செல்வதற்கு மிகுந்த அரசியல் தயக்கங்கள் இருக்கிறது. அவரது அரசியல் ஆலோசகர் சோ.ராமசாமி மரண தண்டனையை நிறைவேற்றக் கோருகிறவர். அவரது நட்புக் கட்சியான பிஜேபி மரண தண்டனை ஆதரவுக் கட்சி. அதனோடு அப்சல் குருவுக்கு ஆதரவாகத் தமிழகச் சட்டமன்றத் தீர்மானத்தை காஷ்மீர் அரசியல்வாதிகள் பாவிப்பது அவரது அரசியலுக்குத் தர்மசங்கடமானது. இச்சூழலில், ஜெயலலிதாவின் அமைச்சரவைத் தீர்மானத்தை எதிர்நோக்கி நிற்பவர்கள் செய்யமுடிகிற அரசியலைத்தான் சீமான் செய்கிறார்.
சீமானின் அரசியலில் இவ்வகையில் தேர்தல் அரசியல் இல்லை. மாறாக ஈழத்தமிழர் ஆதரவு அரசியலாகத்தான் இருக்கிறது.
இந்தச் சூழலில்தான் விடுதலைச் சிறுத்தைகளின் சீமான மீதான விமர்சன அறிக்கை வருகிறது. நீதிமன்ற இடைக்காலத் தடைக்குப் போராடிய வைகோவின் செயல்பாட்டை அங்கீகரித்துப் போற்றும் அந்த அறிக்கை, ஜெயலலிதாவின் சட்டமன்றத் தீர்மானத்திற்குச் சீமான் நன்றி தெரிவிப்பதை விமர்சிக்கிறது. ஜெயலலிதா செய்தது ஒன்றுமில்லை என்கிறது அந்த அறிக்கை.
இந்த அறிக்கை வெளியாகும் தருணத்தை முன்வைத்துத்தான் இந்த அறிக்கை மதிப்பீடு செய்யப்பட வேண்டும். கலைஞர் கருணாநிதி ராஜீவ்காந்தி இருந்திருந்தால்; மரணதண்டனையைக் குறைத்திருப்பார் என்கிறார். ஜெயலிலதா மரணதண்டனைக்கு ஆதரவானவர் எனும் தோற்றத்தை அவர் சித்திரிக்க முனைகிறார். மூவர் மரணதண்டனையை கவர்னருக்குப் பரிந்துரைத்தக் கொடூரமனம் படைத்த, சோனியாவின் தமிழக அதிகாரியாகச் செயல்பட்ட திமுக தலைவர் கருணாநிதி இப்பிரச்சினை குறித்து இன்று உதிர்க்கும் சொற்கள் அனைத்தும் சொற்ஜாலம் மட்டுமல்ல, அவை கலைஞர் கருணாநிதியின் வடிகட்டிய பொய்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆகவேதான் கருணாநிதியின் வரலாற்றுரீதியிலான வஞ்சக நாடகத்தை பழ.நெடுமாறன் விரிவாக முன்வைத்து அறிக்கை வெளியிடுகிறார். ஜெயலிலதாவை பழ. நெடுமாறன் வாழத்துகிறார். சீமானுக்கு எதிராக முன்நிறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் போற்றும் வைகோதான் ஜெயலலிதாவின் சட்;மன்றத் திர்மானம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்கிறார்.
சீமான் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பதனையிட்டு தார்மீகக் கோபம் தெறிக்க அறிக்கை விட்டிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, என்ன காரணத்தினால் கலைஞர் கருணாநிதியின் வஞ்சக எண்ணங்கள் குறித்து வாய்மூடி மௌனம் காக்கிறது? நிச்சயமாக விடுதலைச் சிறுத்தைகளின் அறிக்கை ஈழத்தமிர்களுக்கு ஆதரவானது இல்லை. ஆது கலைஞருக்கும் தமது தேர்தல் இலாப அரசியலுக்கும் ஆனது என்பது தெளிவாக இருக்கிறது.
இந்த இடத்தில் ஒன்றை நாம் ஞாபகமூட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது. முப்பதாண்டு கால ஈழப் போராட்டத்தை மட்முல்ல, முழுத் தமிழக அரசியலையும் நிரந்தரச் சாபம் போலக் கவிந்திருக்கும் ‘உணர்ச்சி அரசியல்’ பற்றி நாம் விழிப்புடன் ஞாபகம் கொள்ள வேண்டியிருக்கிறது. மரணதண்டனை மீதான நீதிமன்றத் தடை என்பது ஒரு இடைக்காலத் தீர்ப்பு. இந்தத் தீரப்புக்காக மதிமுக ஆர்வலர்கள் வேலூர் சிறை முன்னால் பட்டாசு வெடித்துக் கொண்டாடும் நடவடிக்கை ஒரு மிகை நாடகம். அதுபோலவே சீமானின் நாம் தமிழர் கட்சிப் பேச்சாளர்கள் முதலமைச்சர் ஜெயலிலதாவை 12 கோடி மக்களின் தாய் என்பதும், ஈழத்தாய் என்பதும், பேரறிவாளன், சாந்தன், முருகனின் உடல்கள் எனும் சொற்களை இன்று பொதுமேடையில் உணர்ச்சிகரமாக முன்வைப்பதும் மிகைநாடகம்.
நீதிமன்றத் தடை நிரந்தரமாக்கப் போராட வேண்டும். சட்மன்றத் தீர்மானம், அமைச்சரவைத் தீர்மானமாகி, கவர்னர் உத்தரவாகப் போராட வேண்டும். இதற்கு நிதானமான நோக்கும் நடைமுறையும்தான் வேண்டும். அனைத்துக்கும் மேலாக ஈழ ஆதரவு சக்திகளின் ஒற்றுமையே இதனது அச்சாணி. இவ்வகையில் விடுதலைச் சிறுத்தைகளின் சதுரங்க அரசியல் அறிக்கை இந்த ஒற்றுமையைப் பலவீனப்படுத்திவிடும் பண்பு கொண்டது என்பது மட்டும் திண்ணமாக இருக்கிறது.