குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பிற இனத்தாரோடு தன்னை ஒப்பிட்டு, சுய கழிவிரக்கம் கொண்டு தாழ்வு மனப்பான்மையில் உழல்வது மற்றொரு முகமாக

பிற இனத்தாரோடு தன்னை ஒப்பிட்டு, சுய கழிவிரக்கம் கொண்டு தாழ்வு மனப்பான்மையில் உழல்வது மற்றொரு முகமாக

தகவல் - அரசியல் காலத்தில் தமிழ் (1/3)
 இடுகை வகை: ஆய்வுகள், கட்டுரைத் தொடர், ச.ராஜநாயகம், தமிழ்மொழி ஒருதலை
1)இது தகவல் யுகம் என்கிறார்கள். இங்கு வேகம் முக்கியம் என்கிறார்கள்.

 இந்த வேகத்திற்கு ஈடுகொடுக்கக்கூடிய விதத்தில் தமிழ் இல்லை என்று குறைபட்டுக் கொள்கிறார்கள். வேகத் தடையாக அமைந்திருப்பவை தலையாய தாகத் தமிழ் எழுத்துகளின் ‘நெடுங்கணக்கு’ எண்ணிக்கை மற்றும் ஒழுங்கற்ற வரிவடிவம் என்று சுட்டிக் காட்டுகிறார்கள். போதாதற்கு இறுகிப்போன இலக்கணம் வேறு என்று இடித்துரைக்கிறார்கள். 2)இது தகவல் யுகம் என்கிறார்கள். இங்கு ஆங்கிலம் முக்கியம் என்கிறார்கள். அறிவும் அறிவியலும் ஆங்கிலத்திற்கே சொந்தம் என்பதால் அவற்றை முறையாக இறக்குமதி செய்யக்கூடிய அளவுக்குக்கூடத் தமிழுக்குத் திராணி இல்லை என எள்ளி நகையாடு கிறார்கள். கடினமான மொழியாக்கம் மற்றும் கலைச்சொற்கள் படாத பாடுபடுத்தி விடுகின்றன என்று அலுத்துக் கொள்ளுகிறார்கள். ஆங்கிலப் பெயர்கள், இன்றியமையாக் கலைச்சொற்கள் முதலியவற்றை ஆங்கில மூலத்தில் உள்ளபடியே உச்சரிக்கக்கூடிய அளவுக்குத் தமிழில் ஒலிகள் இல்லை என்று அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்.

3)இது தகவல் யுகம் என்கிறார்கள். இங்குத் தமிழால் பிழைக்க முடியாது என்று சாபமிடுகிறார்கள். ‘கற்றது தமிழ்’ என்று வெள்ளித் திரையில் குத்திக் காட்டுகிறார்கள். உலகமய மாக்கல் சூழலில் உலகமொழியாகிய ஆங்கிலத்தால் மட்டுமே வாய்ப்புகளின் வாசல்கள் திறந்துவிடப்படுவதாக முரசு கொட்டுகிறார்கள். ஆங்கிலத்திற்கு இசைவாகத் தமிழை ‘பெண்டு’ நிமிர்த்தினால் மட்டுமே தமிழால் கொஞ்ச நஞ்சமாவது தாக்குப்பிடிக்க முடியும் என்று குறி சொல்லுகிறார்கள்.

மறுதலை
4)இது தகவல் யுகம் என்பதை நாம் மறுத்தற்கில்லை. எனினும், தகவல் தொழில் நுட்பத்திற்கும் (த.தொ) அரசியல் பண்பாட்டுக்கும் இடையில் ஒருவித இயங்கியல் ரீதியான உறவு இருப்பதைக் கவனிக்க வேண்டும். எந்த அரசியல் பண்பாடு தகவல்தொழில்நுட்பத்தின் மீது மேலாதிக்கம் செலுத்துகிறதோ அந்த அரசியல்_பண்பாட்டு மொழிக்கு ஏவல் செய்வதாகத் தகவல்தொழில்நுட்பம் மாறிவிடுகிறது.

5)இதன் மற்றொரு முகமாக, எந்த அரசியல் பண்பாடு தகவல்தொழில்நுட்பத்தின் ஆளுகையின் கீழ்ப்பட்டு, தன்னைத் தகவமைத்துக் கொள்ளத் தடுமாறிக் கையறு நிலையில் நிற்கிறதோ, அந்த அரசியல் பண்பாட்டின் மொழியும் அதே கையறு நிலைக்குத் தன்னைத் தள்ளிக் கொள்கிறது. எனவே, ‘மொழிக்கு வளையும் தகவல் தொழில்நுட்பமா? தகவல் தொழில் நுட்பத்திற்கு வளையும் மொழியா?’ என்ற வினா அரசியலோடு பின்னிப் பிணைந்துள்ள உண்மையைக் கண்டுகொள்ள வேண்டும். எனில், எதற்காக மொழியில் மாற்றம் ?

6)இது தகவல் யுகம் என்பதை நாம் மறுத்தற்கில்லை. எனினும், ஏறத்தாழ ஆறு கோடித் தமிழர்கள் வாழும் தமிழ் நாட்டில் (தமிழ் நாட்டில் வாழ்பவர்கள் எல்லாரும் தமிழர்கள் அல்ல) இந்தத் தகவல் யுகம் ‘புரட்சி’ யால் பயனடைபவர்கள் எத்தனை விழுக்காடு என்ற கேள்வியையும் கேட்டுவைக்க வேண்டியுள்ளது. இம் ‘மாபெரும் புரட்சி’ யுகத்தில் தமிழ் பேச மட்டுமே முடிந்த (எழுத்தறிவற்ற) தமிழர்கள் குறைந்தது 40 விழுக்காடு (இரண்டு கோடி) இருப்பார்கள் (இந்த 2.4 கோடிப் பேரும் தமிழ் எழுத்து சரியில்லை என்பதால் படிக்க மறுத்துவிட்டவர்கள் அல்லர்).

7)பள்ளி செல்லும் வயதிலுள்ள தமிழ்க் குழந்தைகளில் கணிசமானோர் முதுகில் குடும்பச் சுமை கொலுவீற்றிருக்கிறது. பள்ளி செல்வோரிலும் முக்காலே மூணு வீசம் பேர் அரசு/அரசுதவி பெறும் பள்ளிகளில், தகவல் யுகத்திற்கு வெகு தொலைவிலான தமிழ்வழிக் கல்வியில் தொலைந்து போயுள்ளார்கள். இதில் தேறிவந்து, கல்லூரி வாயிலை எட்டும் வெகு சிலரில் எத்தனை பேருக்கு இந்திய / தமிழக அளவில் முன்னணியில் இருக்கும் கல்லூரிகளின் வாயில் திறந்துவிடப்படுகிறது?

8)உள்ளே நுழையும் பேறுபெற்ற ஓரிருவரில் எத்தனை பேருக்குத் தகவல் தொழில் நுட்பப் தொடர்பான பாடங்களில் இடம் கிடைக்கிறது? ஆக, இந்தத் தகவல் தொழில்நுட்பப் புரட்சியால் இல்லாதவர்களுக்கும் இருப்பவர்களுக்குமான ‘அறிவு -_ இடைவெளி’ அதிகமாகிறதே தவிர குறைவதில்லை. எனவே, யாரை முன்வைத்து மொழியில் மாற்றம்?

9)இது தகவல் யுகம் என்பதை நாம் மறுத்தற்கில்லை. எனினும், முழுக்க முழுக்க ஆங்கிலவழிக் கல்வி பயின்ற அனைவருக்கும் இன்று தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்புக் காத்திருக்கவில்லை என்பதும் உண்மை. இந்த இருபத்தோராம் நூற்றாண்டின் ‘ஐ.டி.’ பரபரப்பைத் தாண்டி, பத்து பதினைந்து ஆண்டுகள் பின்னோக்கிப் பார்த்தால், தமிழ்வழிக் கற்றதாலேயே அவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு நழுவிச் சென்று விடவில்லை என்பது தெரியும். ஏன், இன்றைய சூழலில்கூடக் தமிழ்வழிப் பயின்றவர்களில் எத்தனையோ பேர் தகவல்தொழில்நுட்பத் துறைகளில் முத்திரை பதித்து வருகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கவியலாது.

விடுதலை
10)தகவல் யுகத்தின் ‘ஒருதலை’க்கும் ‘மறுதலை’க்கும் இடையில் இன்று ‘விடுதலை’’யை எதிர்நோக்கித் தடுமாறிக் கொண்டுள்ளது தமிழ். இத்தகைய சூழ்நிலையில், தமிழில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமா? அப்படி அவசியமானால், எத்தகைய மாற்றங்கள்? என்ற கேள்விகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது. அதற்கு உதவியாகச் சில தெளிவுகளை நாம் இங்கே தொகுத்துக் கொள்ளலாம். (2ஆம் பாகத்தில் தொடரும்..)
தகவல் - அரசியல் யுகத்தில் தமிழ் (2/3)
 
ஆய்வுகள், கட்டுரைத் தொடர், ச.ராயநாயகம், தமிழ்மொழி தமிழில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமா? அப்படி அவசியமானால், எத்தகைய மாற்றங்கள்? என்ற கேள்விகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது. அதற்கு உதவியாகச் சில தெளிவுகளை நாம் இங்கே தொகுத்துக் கொள்ளலாம்.

முதலாவது :

11)தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கோ ஆங்கில மொழிக்கோ நாம் எதிரிகள் அல்ல. எனினும் இவை இரண்டுமே அவற்றின் உண்மையான பயன்பாட்டுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்படுகின்றன என்பது நம் கருத்து. சில சமயங்களில், தேர்தல் காலங்களில் ஒரு கட்சிக்குச் சார்பாக ‘அலை’ வீசுவதைப் போலவே இந்தத் ‘தகவல் தொழில்நுட்ப _ ஆங்கில’ அலையும். அது அடங்கி ஓயுமா நீடித்துப் பாயுமா எனத் தெரியாமல், தற்சமயம் வீசும் அலையால் அடித்துச் செல்லப்பட்டு மொழியையும் அதற்கு அடகுவைப்பதைவிட, அந்த அலையின் நிலைதிறனை ஆய்வுக்குட் படுத்தி, அது செல்லும் திசையைத் தீர்க்கதரிசன மாய்க் கணித்து, தொலை நோக்குப் பார்வையுடன் மாற்றங்களைச் செய்வதையே நாம் வலியுறுத்துகிறோம். காற்றுள்ளபோதேதூற்றிக் கொள்ளலாம்தான். ஆனால், ஆடிப் பட்டம் தேடி விதைப்பது அதனினும் சாலச் சிறந்தது.

இரண்டாவது :
12)தகவல் தொழில்நுட்பத்திற்கு ஏற்பத் தமிழ் மொழியைச் செப்பனிட்டுவிட்டால் மட்டும் தற்போதுள்ள ஆங்கில ஆதிக்கமோ ஆங்கில மோகமோ குறையப் போவதில்லை. ஏனெனில், இது மொழியையும் கடந்த அனைத்துலகப் பொருளாதார அரசியல். உலகச் சந்தையைக் கட்டுப்படுத்தும் நாட்டின் மொழி உலக அரங்கில் கொடிகட்டிப் பறப்பதில் வியப்பில்லை. எனவே, இதைத் தமிழ் மொழிக்கான சவால் என்பதைவிட, தமிழினத்திற்கான சவாலாகவே காணவேண்டும். உலகச் சந்தையில் தமிழர்கள் சாதித்தால் உலக அரங்கில் தமிழ் மொழியும் சாதிக்கும்.

மூன்றாவது:

13)‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே....’ எனத் தொடங்கி மேடையிலே வீராவேசம் கொப்பளிக்க முழங்குவது தமிழரின் ஒரு முகம் என்றால், பிற இனத்தாரோடு தன்னை ஒப்பிட்டு, சுய கழிவிரக்கம் கொண்டு தாழ்வு மனப்பான்மையில் உழல்வது மற்றொரு முகமாக உள்ளது. இதன் விளைவுதான் ஆங்கிலத்திற்கு அபரிமிதமான முக்கியத்துவம் தந்து, எங்கே பந்தயத்தில் நாம் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் மொழியைக்கூட விட்டுக்கொடுக்கத் தயாராயிருக்கும் போக்கு.

 

14)இந்தக் கிடுக்கிப் பிடியிலிருந்து விடுபட வேண்டுமானால் நாம் கேட்க வேண்டிய தலையாய கேள்வி, “தமிழில் என்ன சீர்திருத்தங்களை மேற்கொள்ளலாம்?’’ என்பதல்ல, “உலக அறிவுக் கருவூலத்தில் எவற்றையெல்லாம் தமிழுக்குக் கொண்டு வந்துள்ளோம்?’’ என்பதே.

நான்காவது :
15)தமிழருக்குச் சொந்தமான நிலத்தில் தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் தமிழே ‘ஆட்சி’ மொழியாக நிலவவேண்டும் என்று கோரிக்கை வைத்தாலே ‘மொழி வெறியர்’ என்ற பட்டம் சூட்டப் பெறும் அவலம் வேறெந்தத் தேசிய இனத்திலும் காண முடியாதது. ஒரு மொழி எப்போது ‘ஆளும்’ என்றால், அம்மொழிவழிக் கற்றோருக்கு வேலைவாய்ப்பு உத்திரவாதம் தொடங்கி அனைத்துத் துறைகளிலும் முன்னுரிமை வழங்கப்படும்போது எனலாம்.
16)இதற்கென உறுதியான அரசியல் தீர்மானம் எடுத்து, அத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் திராணி ஒரு அரசுக்கு இல்லையென்றால், அந்த மொழி ‘ஆளுகிறது’ என்பதில் அர்த்தமில்லை. வாழாத, வாழவைக்காத மொழி ஆளுவது எப்படி? சோத்துக்கு உத்திரவாதம் தராத எந்த மொழியும் செத்துப் போகும்; செத்துத்தான் போக வேண்டும்.


ஐந்தாவது:
17)மாற்றத்தை விழையும் எந்தவொரு தேடலுக்கும் அடிநாதமாக விளங்குவது, ‘யாரை முன்வைத்து மாற்றம்?’ என்ற கேள்வி. ‘எத்தகைய மாற்றங்களால் தகவல் தொழில்நுட்ப புரட்சிக்குத் தமிழால் ஈடுகொடுக்க முடியும்?’ என்ற ஆர்வத்தைவிட, “தமிழ் எழுதப்படிக்கத் தெரியாத தமிழரின் எண்ணிக்கையைக் குறைக்க இதனால் முடியுமா? என்ற அக்கறையே நம்மை வழிநடத்தும் உந்துசக்தியாகத் திகழ வேண்டும். (3 ஆம் பாகத்தில் தொடரும்..)