குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

மகிந்தவின் ஆணிவேரை அசைத்த சமந்தா பவர் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

இந்த நான்கு பெண்களிலும் மகிந்த ராஜபக்சவால் அதிகம் வெறுக்கப்பட்டவர் சமந்தா பவர் ஆவார். ‘வெள்ளைமாளிகையில் உள்ள மெல்லிய அந்தப் பெண்மணியே எனது எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணம்’ என மகிந்த ராஜபக்ச தனது அமைச்சர்களைச் சந்திக்கும் போது அடிக்கடி கூறுவார்.

இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

 

பத்தாண்டுகளாக சிறிலங்காவின் அதிபராகப் பணியாற்றிய மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தை நோக்கும் போது, அவர்  நான்கு பெண்களை அடியோடு வெறுத்தார் என்பது புலனாகும்.

 

இந்த நால்வரில் ஒருவர் சந்திரிகா குமாரதுங்க ஆவார். இரண்டாவது பெண் அமெரிக்காவின் ஐ.நாவுக்கான வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர். மூன்றாவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளை,  நான்காவதாக சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் மைக்கேல் ஜே.சிசன் ஆகியோர் காணப்படுகின்றனர்.

 

இந்த நான்கு பெண்களிலும் மகிந்த ராஜபக்சவால் அதிகம் வெறுக்கப்பட்டவர் சமந்தா பவர் ஆவார். ‘வெள்ளைமாளிகையில் உள்ள மெல்லிய அந்தப் பெண்மணியே எனது எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணம்’ என மகிந்த ராஜபக்ச தனது அமைச்சர்களைச் சந்திக்கும் போது அடிக்கடி கூறுவார்.

 

அப்போதைய அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கும் சமந்தா பவருக்கும் இடையில் முறுகலை ஏற்படுத்தி கிளின்ரனை வெற்றி பெறச் செய்வதற்கு மகிந்த ராஜபக்ச அதிகளவில் செலவிட்டிருந்தார்.

 

mahinda-samantha cartoon

 

2008ல் அமெரிக்க அதிபர் வேட்பாளர் தெரிவுக்கான பரப்புரையின் போது, ஹிலாரியை சமந்தா பவர் மிகவும் மோசமான ஒருவர் என விபரித்திருந்ததாகவும், இதனால் சமந்தாவுக்கும் ஹிலாரிக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டதாகவும் மகிந்தவிடம் அவரது வெளிவிவகார மற்றும் அனைத்துலக உறவுகளுக்கான ஆலோசகர்கள் தெரிவித்திருந்தனர்.

 

ஆகவே சமந்தா மற்றும் ஹிலாரி ஆகியோருக்கு இடையிலான முறுகல் நிலை முற்றி வெடிக்கும் என மகிந்த காத்திருந்தார். ஆனால் அது ஒருபோதும் இடம்பெறவில்லை.

 

இதன்பின்னர், ஹிலாரியை அடுத்து அவரது இடத்திற்கு நியமிக்கப்பட்ட ஜோன் கெரி மீது மகிந்த நம்பிக்கை கொண்டார்.

 

சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்காவானது போர்க் குற்றங்கள் தொடர்பாக அதிகளவில் அழுத்தம் கொடுத்தால், சீனாவுடன் சிறிலங்கா மிகவும் நெருக்கமான உறவை ஏற்படுத்தக் காரணமாக அமையும் என ஜோன் கெரி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான ஒரு நகர்வானது அமெரிக்காவின் நலன்களுக்கு தீங்குவிளைவிக்கும் எனவும் கெரி தெரிவித்திருந்தார்.

 

இந்தக் கருத்தினால்,, சமந்தா பவரின் அதிகாரங்களை கெரி கைப்பற்றிக் கொள்வார் என மகிந்த கருதினார். மகிந்த என்னதான் கனவு கண்டாலும், சமந்தா பவர் சிறிலங்கா மீதான தனது பிடியை தளர்த்துவதற்குத் தயாராக இருக்கவில்லை.

 

அந்த நேரத்தில் கொழும்பில் பணிபுரிந்த அமெரிக்காவின் தூதுவர் மைக்கேல் ஜே.சிசன், சமந்தா பவரின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்பவே செயற்பட்டிருந்தார்.

 

மகிந்தவின் இத்தகைய குழப்பநிலையை நன்கறிந்து கொண்ட மறைந்த சோபித தேரர் எதிரணிகளின் பொதுவேட்பாளராக ஒருவரை நிறுத்த வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டை உருவாக்கினார்.

 

இது தொடர்பாக மைக்கேல் ஜே.சிசன், சோபித தேரரைச் சந்திப்பதற்காக நாக விகாரைக்குச் சென்றார்.  இதன்மூலம் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனவை எதிரணியின் பொதுவேட்பாளராக நிறுத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது.

 

மகிந்த அதிபர் தேர்தலை நடத்தப் போவதாக அறிவித்த போது, மைக்கேல் ஜே.சிசன் கொழும்பை விட்டு அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார்.  இவர் தற்போது அமெரிக்காவின் ஐ.நாவுக்கான பிரதித் தூதுவராகச் செயற்படுகிறார்.

 

சமந்தா பவர் 2010ல் கொழும்பிற்கான தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த போது மகிந்தவைச் சந்தித்தார். நாட்டில் நிலவும் போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு மகிந்தவிடம் சமந்தா பவர் கோரியிருந்தார். இதிலிருந்தே மகிந்த இவரை வெறுக்க ஆரம்பித்தார்.

 

இதன்பின்னர், மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நாவில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை சீனா மற்றும் ரஸ்யா எதிர்த்திருந்தன. சிறிலங்காவுக்கு எதிரான போர்க் குற்றத் தீர்மானத்தின் மூலம் மகிந்த மேலும் பிரபலமடைவதாக அமெரிக்க வல்லுனர்கள் சுட்டிக்காட்டினர்.

 

இதனால் சமந்தா பவர், சிறிலங்கா தொடர்பான தனது நிகழ்ச்சி நிரலை மைக்கேல் ஜே.சிசன்  ஊடாக நிறைவேற்றினார்.

 

இந்தவாரம் சமந்தா பவர் சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொண்ட போது, மகிந்த, நாடாளுமன்றின் உறுப்பினராக மட்டுமே செயற்படுகிறார். இதற்கும் மேலாக, சமந்தா பவரின் வருகையின் போது, எட்டு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை சிறிலங்கா அரசாங்கம் நீக்கியுள்ளது.

 

தடைநீக்கப்பட்ட இந்த அமைப்புக்கள் கடந்த காலங்களில் சமந்தா பவருடன் தமது தொடர்புகளைப் பேணியிருந்தனர். உலகத் தமிழர் பேரவையின் தலைவராக உள்ள அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேலுக்கு நுழைவிசைவை வழங்குவதற்கு இந்திய மத்திய அரசாங்கம் மறுப்புத் தெரிவித்திருந்த நிலையிலேயே, ராஜபக்ச அரசாங்கத்தால் இவற்றின் மீதான தடை அறிவிக்கப்பட்டது.

 

எனினும், சிறிலங்காவில் இறுதியாக அதிபர் தேர்தல் இடம்பெறுவதற்கு இரண்டு மாதங்களின் முன்னர், உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் இந்தியாவுக்குப் பயணம் செய்திருந்தார். நரேந்திர மோடியின் பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னரே உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் இந்தியாவிற்கு வருவதற்கான அனுமதியை இந்தியா வழங்கியது.

 

மகிந்தவால் தடைசெய்யப்பட்ட புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மீதான தடையை மைத்திரி-ரணில் அரசாங்கம் நீக்கியமையானது சமந்த பவரின் நிகழ்ச்சி நிரலுக்கான ஒரு வெற்றியாகவே நோக்கப்படுகிறது.

 

சிறிலங்காவில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட போது, போரை நிறுத்த முடியாது அமெரிக்கா அமைதி காத்தது. அமெரிக்காவின் இத்தோல்வியை சமந்தா பவர் ஏற்கவேண்டியிருந்தது.

 

இருப்பினும் 2010ல், தோற்கடிக்கப்பட்ட ஒரு மனநிலையுடனேயே பவர் கொழும்பை வந்தடைந்திருந்தார். எனினும், இத்தடவை பவர் சிறிலங்காவுக்குப் பயணித்த போது வெற்றிப் புன்னகையுடனேயே கொழும்பை வந்தடைந்திருந்தார்.

 

மைத்திரி- கமரூன் சந்தித்துப் பேச்சு – 6.6 மில்லியன் பவுண்ட் நிதியுதவி வழங்க இணக்கம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ள பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனர்வாழ்வுப் பணிகளுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 6.6 மில்லியன் பவுண்டுகளை (சுமார் 1450 மில்லியன் ரூபா) வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

 

மோல்டாவில் நேற்று ஆரம்பமான கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டின் போதே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றதாக லண்டனில் இருந்து வெளியாகும் தி இன்டிபென்டன்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

 

போரினால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக இந்த நிதி, செலவிடப்படும்.

 

இந்தச் சந்திப்பின் போது, ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட பிரதான மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு உதவுமாறு சிறிலங்கா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

அதேவேளை, சிறிலங்காவின் இராணுவத்தை மறுசீரமைப்பதற்கு, பிரித்தானிய ஆயுதப்படைகள் பயிற்சியை வழங்குவதற்கும் டேவிட் கமரூன் இணங்கியுள்ளார்.

 

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், சிறிலங்காவில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டவர்களின் பக்கத்தில் நிற்பதற்கு பிரித்தானியா உறுதிபூண்டுள்ளது.

 

சிறிலங்காவின் உறுதிப்பாடு மற்றும் செழுமைக்கு உதவும் பிரித்தானியாவின் நீண்டகால உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகவே இந்த 6.6 மில்லியன் பவுண்ட் உதவி வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.